Tuesday, May 31, 2011

பழ மரம்


”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயன்உடை யான் கண் படின்”

என்பது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறள்.அதன் பொருள் என்னவென்றால் உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் ஒரு அறிஞனிடம் பொருள் சேர்வது ஊரின் நடுவே இருக்கின்ற பழமரம் ஒன்று நன்கு கனிந்து பலருக்கும் பயன்படுவது போலவாகும் என்பதாகும்.

ஒரு மரம், தனி மரம், ஊரின் நடுவே நிற்கிறது.அது மழைநீரை உண்டு பொது நிலத்தில் விரிந்து நிற்கிறது.யாரும் பரிபாலிக்க வேண்டிய தேவை இல்லை.விடலைச் சிறுவரகள் வெய்யில் பொழுதில் அதன் நிழலில் தான் மாபிள் அடித்து விளையாடுகிறார்கள். மதியப் பொழுதில் வயதானவர்கள் அதன் நிழலில் குந்தியிருந்து ஊர் புதினம் பேசுகிறார்கள். பஞ்சாயத்துக் கூடுவதற்கும் அது தான் இடம்.இரவு நேரங்களில் காதலர் சந்தித்துக் கொள்ள தோதான இடமும் அது தான்.வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட அந்த பொது மரத்தை அடையாளம் வைத்தே இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்.இடம் காட்டும் வழிகாட்டிகள் கூட இடத்தைச் சரியாகச் சொல்ல அந்த மரத்தில் இருந்தே இடத்தைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.குருவிகளும் பறவைகளும் கூடுகளைக் கட்டுகின்றன.குடியும் குடித்தனமுமாய் அங்கேயே வசிக்கவும் செய்கின்றன.

அந்த மரத்திடம் நிறையப் பழங்கள். பூத்துக் காய்த்துப் பழுத்து இனியனவும் சுவை மிக்கதுமான கனிகளையும் அது அம்மக்களுக்குக் கொடுக்கிறது.அதன் மூலம் அம்மரம் பெறுவதென்ன? எதுவுமில்லை அல்லவா? பயன் கருதா சேவை; கைமாறு கருதா உதவி என்பன இவை தானே? ஒரு பழ மரம் எத்தனை பெரிய தத்துவத்தை நமக்குச் சொல்லிய வண்னம் நிற்கிறது.கீதையின் தத்துவமே அதுவாகியெல்லோ இருக்கிறது.அது போல ஒரு மனிதனும் சமூகத்துக்கு பயன்பாடு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது அக்குறளின் பொருள்.

இந்தப் பழமரம் போல ஒரு அரசன். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான்.அவன் பாரி மன்னன்.அம்மன்னனை கபிலர் நமக்குக் காட்டுகிறார்.புறநானூற்றின் 119வது பாடல் அது.பாரியினுடய வள்ளல்மையை கூறவந்த கபிலர்,’நிழல் இல் நீளிடைத் தனிமரம் போல’ இரந்து வருபவர்களுக்கு அதாவது, நிழல் இல்லாத நீண்ட வழியில் தனி மரம் ஒன்று இருந்து நிழலும் கனியும் வழங்குவதைப் போல வள்ளல் தன்மையுடயவனாக விளங்குகின்றான் பாரி என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பழமரம் போல யாரேனும் ஒருவரை நாம் இக்காலத்தில் காண முடியுமா?

ஒரு மரமாகக் கூடவா நம்மால் இருக்க முடியவில்லை?

இயற்கையை விட்டு அது சொல்லும் பாடங்களை எல்லாம் தவற விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோமோ?

(பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது சிறு மாற்றங்களுடன் copy & paste செய்யப் பட்டிருக்கிறது)

6 comments:

  1. ஒவ்வொரு ம‌னித‌னும் தாம் வாழும் ச‌மூக‌த்துக்கு ப‌ய‌ன‌ளிப்ப‌வ‌னாய் தான் இருக்க‌ வேண்டும் என்ப‌தை ம‌ற‌வாம‌லிருக்க‌ இய‌ற்கையின் நுட்ப‌வ‌ரைவிய‌லை உய்த்துண‌ர‌ச் செய்வ‌து க‌ற்ற‌றிந்த‌ சான்றோர்க‌ளின் க‌ட‌ப்பாடாகிற‌து. நினைவூட்ட‌லுக்கு ந‌ன்றி தோழி.

    ReplyDelete
  2. என்னைத் தேடி எப்போதும் வந்து உற்சாக வார்த்தை சொல்லிப் போகும் தோழியே!வருக!

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    ஒரு பழத்தோட்டத்திற்குள் நுழைந்தாற்போல உணர்ந்தேன்
    நல்ல பதிவுகள்
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி ரமணி.

    தொடர்ந்து உங்கள் வரவை எதிர்பார்த்திருக்கும் அக்ஷ்யபாத்ரம்.

    வரவுக்கும் உங்கள் பகிர்வுக்கும் என் அன்பார்ந்த நன்றி

    ReplyDelete
  5. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2241.html

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி மதி. கட்டாயமாக வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete