அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.
அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும் மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....
அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம்,
’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.
அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள், கோமாளிகள் என்றொரு ந கைச்சுவை நாடகம்( அதில் மரிக்காராக ராமதாஸ், அப்புக்குட்டியாக ராஜகோபால்,............செல்வசேகரன்,போன்றவர்கள் பங்கேற்றிருந்தார்கள். மூன்று இனத்தவரையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருந்த அந் நாடகம் அவர்களின் பேச்சு வழக்கையும் வாழ்க்கை முறையையும் நகைச்சுவையூடாக சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.)
இவை போன்றவை எல்லாம் நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்எபத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,
..............
...............
மனையிலே மக்கள் குறைவிலா கல்வி
மான்களாய் வளர வழியெதென்கிறாய்.
கேள்வி அது தானே?
ஆமாம் அத்தானே!
மக்கள் வங்கியே நம் தோழன்
வழி புரிவான் கண்ணே!
...............
..................
சிறு தொகை தானே சேமிக்கின்றோம்
செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்
கேள்வி அது தானே?
ஆமாம் அத்தானே!
மக்கள் வங்கியே நம் தோழன்
வழிபுரிவான் கண்ணே!
பாடல் நினைவிருக்கிறதா?
இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........
இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!
அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.
இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.
வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.
அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.
இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் பூவேலைப்பாடுகள் செய்த விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.
இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.
இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.
என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.
இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.
அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.
கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.
வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.
அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.
பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.
இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.
மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
பிற் குறிப்பு;
ஈழத்து வழக்கில் முதுசம் என்பது ஆண் சந்ததி வழியாக கிடைக்கிற பரம்பரைச் சொத்து. சீதனம் என்பது பெண்வழியாகக் கிடைக்கிற பரம்பரைச் சொத்து.
படங்கள்; நன்றி; கூகுள்