Saturday, December 3, 2011

திவ்ய தேசம்


அது SWITZERLAND.

அந்த ஊரைப் பார்த்து வந்ததில் இருந்து அந்த அனுபவத்தை எழுத்தில் வடிக்கும் பிரயத்தனம் எதுவும் பலன் தரவில்லை.

அழகு,செழிப்பு,மலைகள்,ஏரி,பசுமை,மக்கள்,பொருட்கள்,வீடுகள்......

இது பற்றி எதுவும் நான் சொல்லப் போவதில்லை.அவை எழுத்துக்கும் புகைப்படக் கருவிக்கும் அகப்படாதவை.

ஆனால் அங்கத்திய கல்வி முறை பற்றி சொல்ல ஆவல்.

அது ஒரு கிராமத்துப் பாடசாலை.அங்கு கல்வி ஐந்தாம் வகுப்பு வரை.அப்போ மேலே படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு அவர்கள் 3மைல் சைக்கிள் ஓடி அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டும்.

இந்தப் பாடசாலையில் எத்தனை பிள்ளைகள் என்று நினைக்கிறீர்கள்? ஐந்து வகுப்பையும் சேர்த்து மொத்தம் 47 பிள்ளைகள். ஒரு அற்புத அழகு வாய்ந்த பெரிய மணிக்கூட்டை முகப்பில் கொண்ட கட்டிடம்.ஒரே ஒரு கட்டிடம்.ஒரு ஆசிரியர்.ஒரு நாய்,மேலும் ஒரு கிராமக் குழு. இவ்வளவும் தான் அந்தப் பாடசாலையின் சொத்து.

பாடசாலை இரண்டு நேரம். மதியம் எல்லா மாணவர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று மதிய போசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாடசாலைக்குச் செல்வர்.ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒவ்வொரு நேரம் பாடசாலை முடிவடையும். சீருடை எதுவுமில்லா சுதந்திரம்.

எல்லா மாணவர்களுக்கும் எல்லாப் பெற்றோரையும் அவர் தம் வீடுகளையும் நன்றாகத் தெரியும்.பாடசாலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்குச் செல்லும் போதும் தாம் நடந்து பாடசாலை விட்டு போகும் போதும் தாம் நடந்து போகும் பாதையோரம் இருக்கிற நண்பர் குடும்பத்தோடு கைகாட்டிய படியும் புன்னகைத்த படியும் டொச் மொழியில் வாழ்த்துக்களைப் பரிமாறிய படியும் போகும் இளம் குருத்துக்கள்!! அவர் தம் முகங்களில் தான் எத்தனை முக மலர்ச்சி, செழிப்பு,மகிழ்ச்சி!!

துன்பங்களின்,மனித விகாரங்களின் வாசனையே அறியா அழகுகள்!

அது ஒரு விவசாயக் கிராமமும் கூட!இயற்கையான நீரோடைகளும் சோளக் கொல்லைகளும் விளையாட்டு மைதானங்களும் மேச்சல் நிலங்களும், முயல், பன்றி,ஆடு முக்கியமாக மாட்டுப் பண்ணைகளும் நிறைவாக உள்ள தேசம்.பிரதேசம்.இதனைச் சுற்றி பாதுகாத்தபடி நீல மலைத் தொடர்கள்.

கிராமங்கள் தான் எத்தனை அழகு!! இன்னும் மாசு படா வசீகரம்,ரம்மியமாய் வீசும் தென்றல்,சுடாத சூரியன்,பச்சை புல் வெளி,வித விதமான உயிரினங்கள் அவரவர் சுதந்திரத்தோடு,தான் தோன்றியாய் வீதியோரம் பழமரங்கள்,அழகழகாய் பராமரிக்கப் படும் வீடுகளுக்குள் தேசவாழ்வு தந்த நிறைவோடு சினேகமாய் வாழ்ந்த பூரணத்தோடு புன்னகைக்கும் வயோதிப புன்னகைகள்,புத்துணர்ச்சியோடு புன்னகைக்கும் வெள்ளைக் குழந்தைகள்,.....

இயற்கை அன்னை தன் முழு எழிலையும் ஒரு வித கம்பீரத்தோடு வெளிப்படுத்திய இடம் இது.




பொழுது சாயும் நேரங்கள் பிள்ளைகளை இந்த இடமெங்கும் காணலாம்.வயோதிபர் தம்பதி சமேதரராய் நாய்களோடு உலாவருவர்.அப்போதுகளில் அவர்கள் பரிசளிக்கும் வயோதிபரின் நிறைவான harmonious புன் முறுவல் கோடி பெறும்!!அவர்களின் வீடுகள் பூங்கன்றுகளால் பொலிந்திருக்கும்.குழந்தைகள் ஓடிச் சென்று கொஞ்சிக் குலாவுவர்.முயல்களுக்கு புல் பறித்துக் கொடுப்பர்.ஆடுகளின் செவிகளைச் சற்றே நீவி விடுவர்.ஓடைகளில் குதித்து கும்மாளமிடுவர்.
இதற்கெல்லாம் அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.

வஞ்சனை வாழ்க்கையின் வலிகள் எதுவுமற்ற உள்ளங்களின் குதூகலம்!!

நான் போயிருந்த நேரம் போகிற பாதைகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அப்பிள் மரங்களில் கொள்ளை கொள்ளையாய் பழங்கள்.செழித்த பச்சை இலை மரங்களுக்குள் சிவப்பு சிவப்பு பழங்கள்.மேலும் சில பச்சைப் பழங்கள்.பழுத்தும் கொட்டியும் பிஞ்டசும் பூவுமாய் ...அவை எக்கச்சக்கம்! அதனைச் சீண்டுவாரோ தேடுவாரோ இல்லை என்பது தான் என் ஒரே மன ஆதங்கம்.

பாடசாலையைப் பற்றிச் சொல்ல வந்து எங்கோ போய் விட்டேன்.அங்கு கற்கும் ஒவ்வொரு மேல் வகுப்பு (4,5ம்வகுப்பு) மாணவர்களுக்கும் கீழ்வகுப்பு மாணவர்களில் ஒருவரையோ இருவரையோ கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரால் வழங்கப் பட்டிருக்கும்.பொறுப்பு என்றால் அந்தச் சிறு வகுப்பு குழந்தைகள் தமக்கிடையே பிணக்குப் பட்டு நீதி தேவைப் பட்டால் அல்லது தம் தனிப்பட்ட பிரச்சினைகள் என்றால் விளையாட்டில் ஏதேனும் சண்டை நேர்ந்தால், படிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் ஆசிரியரிடம் போகத் தேவையில்லை. அவர்கள் தம் குறிப்பிட்ட சீனிய மாணவரிடம் சென்று தம் தேவைகளைச் சொல்லி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியிலும் இந்த நிலைமை அமுலில் இருக்கும்.அதாவது வெளியில் என்று சொல்லும் போது பொது அரங்க வெளிகளின் போது ஏனைய பாடசாலைகளோடு போட்டிக்குச் செல்லும் போது, மேலும் பாடசாலையால் விடுமுறை முகாம்களுக்குச் செல்லும் போது இது நடைமுறையில் இருக்கும்.

பாடசாலைக்கு ஒரு நாய் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதன் பெயர் லில்லி. பெண் பால் உயிரினம்.ஆசிரியர் வரும் போது அவவும் பாடசாலைக்கு வருவா. வகுபறை வாசல் புறம் காவல் இருப்பா.மாணவர்களோடு செல்லம் கொஞ்சுவா.அவவுக்கு உணவூட்ட மானவர்கள் தம் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் செல்வதும் அவ்வாறே!உணவு ஆசிரியருடய பொறுப்பு.

பாடசாலை முடிந்ததும் லில்லி தன் பாடசாலை உபாத்தியாயரோடு அவர் வீட்டுக்குச் செல்லும்.அவர் தான் அவவின் எஜமானன். விடுமுறை நாட்களில் லில்லியை தம் வீடுகளுக்குக் அழைத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு ஒரு பெரிய காத்திருப்புப் பட்டியல் உண்டு.அத்தனை பேருக்கும் அதில் அத்தனை ப்ரியம்.

அப்போ கல்வி, கற்பித்தல் எப்படி என்ற ஒரு வினா எழலாம்.அது இன்னொரு விதமான அழகு என்றே கூறலாம். தீவிர கல்வி முறை அங்கு நடைமுறையில் இல்லை. விளையாட்டு, கைவினை, மொழி, கணிதம்,கலை, பாடல்,இசைவாத்திய அறிமுகங்கள், முகாம்களுக்குச் சென்று தன் பாட்டில் சுயமாக வாழும் வழி வகைகளின் அறிமுகம், மனையியல்,அழகியல்,சமையல்,என இரு பாலாரும் கற்கவேண்டிய பாடத் திட்டங்களே அமுலில் உள்ளன.

தவணையில் ஒரு நாள் ஊர் சுத்தம் ஒரு பாடம். அதற்கு அவர்களுக்கு பாடசாலையில் ஒரு வாரம் பயிற்றுவித்தல் நடக்கும். பயிற்றுவித்தல் என்றால் வகுப்பு ரீதியாக மாணவர் குழுக்கள் பிரிக்கப் பட்டு அவரவர் பொறுப்புகள் அவ் அவவ் குழுக்களிடம் ஒப்புவிக்கப் படும்.ஒவ்வொரு கிராமத்து வீதியும் ஒவ்வொரு குழுக்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்.அவர்கள் அவ்வீதியில் இருக்கும் வீட்டுக் காரருக்கு கடிதங்கள் எழுதி - அதாவது இந்ந நாள் இந்ந திகதி இந்ந நேரத்துக்கும் இந்ந நேரத்துக்கும் இடையில் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். உங்கள் வீட்டில் தேவையற்ற பத்திரிகைகள், புத்தகங்கள் இருந்தால் அவற்றைக் கட்டி இந்ந திகதி உங்கள் வீட்டுக்கு வெளியே வைத்து விடுங்கள்.பாடசாலை மாணவர்களாகிய நாம் வந்து அவற்றை எடுத்துச் சென்று போட வேண்டிய பெரும் கழிவுக் கொள்கலனுக்குள் போட்டு விடுகிறோம் என்று எழுதப் பட்டிருக்கும்.

சொன்னவாறு அன்றைய திகதி அவர்கள் பாடசாலைக்குச் சென்று தம் குழுக்களோடு இணைந்து
அவர்கள் செல்லும் வீதியோரத்துக் குப்பைகளையும் மக்கள் வீடுகளின் வெளியே கட்டி வைத்திருக்கும் குப்பைகளையும் அகற்றுதல் தான் அன்றய நாள் பாடம். மாணவர்கள் மிக ஆர்வமாக இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.

வாழும் கலை,சகல உயிர்களையும் மதிக்கும் கலை,சமூகப் பொறுப்புணர்வு ஊட்டப் படும் முறை,சுத்தமான சூழலின் அவசியம்,நிறைய ஆர்வமூட்டும் இசை,பாடல், ஆடல், விளையாட்டுக்களும் கூடவே கொஞ்சமாய் பாடமும் - இது தான் அவர்கள் பாடசாலையில் கற்கும் கல்வி!

Isn't that nice?

பாலும் சொக்கிளேற்றும் மணிக்கூட்டோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பணக்கார நாடு!வளத்துக்கு குறைவேது அங்கு!!அதனால் தான் இத்தகைய கற்பித்தல் முறை போலும்!

அன்று தவணை ஒன்றின் முடிவு நாள்.மாலை நேரம்.அன்று பாடசாலையின் ஒன்று கூடல் நாளும் ஆகும்.பாட்டன் பாட்டி,பேரன் பேர்த்தி,குழந்தைகள்,பராமரிப்பாளர்கள், பரிசாரகர்கள்,அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள், காதல காதலியர், பழைய மாணவர் ... என்று ஒரே கூட்டம்.அந்தக் கிராமமே அங்கு திரண்டிருந்தது.

ஒரு பாடல் குழுவினரையும் அழைத்திருந்தார்கள்.அதனாலோ என்னவோ அது ஒரு கிராமக் கொண்டாட்டமாகவும் பரிமளித்திருந்தது.இம் மக்களுடய கொண்டாட்டம் என்பது இந்தப் பாடசாலையின் கொண்டாட்டம் தான்.எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் உறவாய் இருந்தனர்.மிக சரியான நேரத்துக்கு 5 நிமிடம் முன்னதாக எல்லோரும் அவரவர் இருக்கைகளில் வந்தமர பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

பல நிகழ்ச்சிகள் டொச்சில் நடந்தேறின. மக்கள் மிகப் பெரும் பாராட்டுக்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வழங்கிச் சிறப்பித்தனர்.இறுதியாக சீனிய மாணவர்களின் பாடல்.சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே.... என்ற ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடல் ஒன்றுண்டல்லவா? நினைவிருக்கிறதா? அந்தப் பாடலை ஆங்கிலத்திலும் டொச்சிலும் இம் மேல் வகுப்பு மாணவர்கள் தம் சொந்த இசை வாத்தியங்களோடு பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.



இது பிரபல மர்மப் பட மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்ஹாக் என்பவரின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாடல்

When I was just a little girl
I asked my mother what will I be
Will I be pretty will I be rich
Here's what she said to me

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows day after day
Here's what my sweetheart said

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

Now I have children of my own
They ask their mother what will I be
Will I be handsome will I be rich
I tell them tenderly

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be
Que Sera Sera
Category:
Music
Tags:
Doris Day Que Sera
License:
Standard YouTube License

கிராமம் ஒரு தாயாய் பெருமை கொண்டது!மக்கள் சொக்கிப் போயிருந்தனர்.பின்னர் எழுந்து நின்று கொடுத்த கரகோஷத்தோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் கூட்ட நெரிசலுக்குள் அப் பிள்ளைகள் துள்ளிக் குதித்தோடி தம் பாட்டிமார்களையும் தாத்தாமார்களையும் கண்டடைந்து கட்டி அணைத்துக் கொண்டது தான் இன்னும் மன நிறைவான காட்சியாகக் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது.

இனி எப்போதேனும் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தால் இந்தக் கிராமம், இந்தப் பாடசாலை, இந்த மானவர்கள் மேலும் மிக முக்கியமாக எழில் நிலாவைப் போல தோற்றம் தரும்,கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் முக மலர்ச்சியோடு ஆங்கில டொச் வடிவங்களில் ஆர்வத்தோடு உடனடியாகப் பாடிக்காட்டிய திவ்ய தேசத்தில் விளைந்த என் ஒன்பது வயது பெறாமகளும் அவளோடு கூட எல்லோரும்,எல்லாமும் நினைவுக்கு வரும்.

1957ம் ஆண்டு வெளியான ஆரவல்லி என்ற தமிழ் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். ஜிக்கியும் ராஜாவும் (?) பாடி இருந்தார்கள்.அது இப்பாடல்.



பெண்: சின்னப் பெண்ணான போதிலே!
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா
நீ சொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா - உன்
எண்ணம் போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னி என் ஆசைக் காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? - தோழி
நீ சொல் என்றேன்! (வெண்)

கண் ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல் நிலா! - என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்!

ஆண்: வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா! - உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

மறக்க முடியாத சித்திரத்தை வரைந்து சென்றிருக்கிறது இந்த திவ்ய தேசம்.

3 comments:

  1. அக்கா எழுத்து ஒரு தளத்தில் இருந்து கொண்டே அங்கேயும் இங்கேயும் தாவித்திரிவது எனக்கு பிடிக்கும்! தொடர்ந்தாப்போல் எழுதுங்கள்.

    நீங்கள் வாசித்த புத்தகங்களையும் அறிமுகப்படுத்தலாமே? பல குமரன்கள் உருவாகலாம்!

    வெயிட் வெயிட், "சின்ன பெண்ணாலே" பாடல் மருதகாசி என்று நினைக்கிறேன். பட்டுகோட்டை மொழிபெயர்ப்பை எழுதியிருப்பார் என்பதும் சந்தேகமா. என் தகவல் தவறாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  2. ஓம். அது ஜேகே யின் ஸ்டைல் அல்லவா?

    இதுவரை படித்த புத்தகங்களுக்குள் எனக்கு முழுமையாகப் பிடித்த புத்தகங்கள் என்று சொல்லத்தக்கவை 2 தான் குமரன். அவை உங்களுக்குப் பரிந்துரைக்கத் தக்கனவும் ஆகும்.

    1.வொல்காவில் இருந்து கங்கை வரை. ராகுல சங்கிருத்தியாயன் எழுதியது. பல லட்சம் வருடங்களை நாம் அவர் கதையூடாகக் கடந்து வரலாம். – ஒரு வரலாற்று நூல்.

    2.THE SCIENCE OF SELF – REALIZATION .ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தவருடயது. தமிழில் அழகாய் ஒரு பக்தர் அதனை மொழி பெயர்த்திருக்கிறார். அது ,’தன்னை அறியும் விஞ்ஞானம்’. - தத்துவம் சார்ந்தது.

    இவை இரண்டும் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டவை.
    இவை இரண்டையும் ஒரு சொல்லு அல்லது ஒரு எழுத்தையும் விடாமல் ஆதியோடந்தமாய் மிக ஆறுதலாக வாசிக்க வேண்டும்.ஒரு நாளுக்கு சில வேளை ஒரு பக்கமே அதிகப் படியாக இருக்கும்.அவற்றை வாசித்து கிரகித்து மூளை அதனை சமித்து அதன் சாரம் உடலில், மனதில் அதன் அடி ஆழத்தில் சுவறி ஊறினாற் பிறகு தான் அடுத்த பக்கத்துக்குப் போக வேண்டும் குமரா!

    உரிமையோடு அதனை வாசிக்குமாறு உங்களுக்குச் சொல்லலாம். வாசிச்சுப் பாருங்கோ குமரன்!

    ReplyDelete
  3. குமரா!
    /The future's not ours to see/

    /எண்ணம் போல் வாழ்விலே!
    இன்பம்தான்/

    பாடல் இரண்டிலும் சிறு முரண்!

    உத்தி ஒன்று தான். பெரும்பாலும் ஒற்றுமையாகவே மையக்கருவரை பாடல் பயணிக்கிறது. முக்கியமான இடத்தில் கருத்தையே மாற்றிவிட்டது பாடல்.

    அதனால் முதலில் மொழிபெயர்ப்பு என்று எழுதி விட்டு பின்னர் அதனை எடுத்து விட்டேன்.
    இசை பெயர்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்லலாமோ?

    நன்றி குமரா! வரவுக்கும் அன்பான பகிர்வுக்கும்.அடிக்கடி வாங்கோ!!

    ReplyDelete