அண்மையில் மாதேவி என்பவரின் வலைப் பூவுக்குப் போகக் கிட்டிற்று.மிக அரிதாகிக் கொண்டு போகும் ஈழத்தவரின் பாரம்பரியப் பொருட்களை கரிசனையோடு புகைப்படம் எடுத்து தன் வலைப்பூவில் பிரசுரித்திருந்தார்.
(http://maathevi.wordpress.com/)நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.
குறிப்பாக ஈழத்தில் போர் ஓய்ந்த பின் அங்கிருந்து வரும் செய்திகள் மகிழ்வூட்டுவனவாக இல்லை. அப்படியாக இருக்கின்ற போது இதனைப்போன்ற தகவல் சேகரிப்புகள் எதிர்கால சந்ததிக்கு மிகத் தேவையானவை.அது ஒரு காலத்தின் கட்டாயமுமாகும்.
என் சொந்தப் பாவனைக்கும் அது மிக உதவியாக இருக்கும் என்பதால் ஒரு சேகரிப்பு முயற்சியாகவும் இங்கே இவற்றை மீள பதிவு செய்து கொள்கிறேன்.
மிக்க நன்றி மாதேவி.
இது அரிக்கன் சட்டி.
இதனை அரிசி கிளையப் பயன்படுத்தியது ஒரு காலம்.அரிசிக்குள் இருக்கும் கற்களைக் களைய இது பயன் பட்டது.அரிசியைத் தண்னீர் ஊற்றிக் கழுவிய பின் ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக இதனை ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.
இப்போது கல்லில்லா அரிசியும் Rice cooker உம் வந்தபின் இதன் பயன்பாடு அருகி வருகிறது.
இது திரிகை.
தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.
இது அம்மி.
இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?
கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.
இது தயிர் கடையிற மத்து.
தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.
உரல்!
மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.
இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.
அடுப்பு!
பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.
ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல்.
இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’
பாக்கு வெட்டி!
பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!
சட்டியும் அகப்பையும்!
களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!
காம்புச் சத்தகம்!
இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.
ஆட்டுக் கல்!
வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!
சுளகும் இடியப்பத் தட்டும்!
சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.
இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!
திருவலகை!
இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!
வெத்திலத் தட்டம்!
வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.
இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.தேநீர் கோப்பி போன்றவை ஊற்ரிவைக்கப் பயன் பட்டதாக அவரது குறிப்புச் சொல்கிறது.
இதுக்குப் பேர் விசிறி.
பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இவ்வாறு நன்னாரி வேர் மற்றும் மயில் இறகுகளாலான விசிறிகளும் வழக்கில் இருந்தன.
இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.
விசிறி வேணுமோ?
விசேட நன்றி;மாதேவி.
(http://maathevi.wordpress.com/)
வெற்றிலை தட்டத்தை வெற்றிலை காளாஞ்சி என்போம். கூஜாவுக்கு பெயர் முந்திரி கூஜா. கல்லோடும் (அரவை இயந்திரங்கள்), மண்ணோடும் (பாத்திரங்கள்) கைப்பக்குவத்தோடும் வாழ்ந்த காலங்கள் மலையேறின... நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தெடுத்துக் கொண்டு.
ReplyDeleteகாம்புச் சத்தகம்! ஒரு classic அக்கா .. எனக்கு மிகவும் பயன்பட கூடிய தொகுப்பு .. நன்றி..
ReplyDeleteஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா.
ReplyDeleteநாம் காளாஞ்சி என்று சொல்வது கோயிலில் ஐயர் வெத்திலை,வாழைப்பழம் போன்ற பிரசாதம் வைத்துத் தரும் தட்டை.குத்துவிளக்கு மாதிரி நீண்ட தண்டும் மேல் புறம் சந்தனக் கும்பா மாதிரியும் இருக்கும்.
முந்திரிக் கூஜா - பெயர் அழகாக இருக்கிறதே! முந்திரிகைப் பழம் மாதிரி இருப்பதாலோ? அதற்கருகில் இரண்டு புரி இருக்கும். அதனால் மூடியைச் செம்போடு பூட்டியும் விடலாம்.இல்லையா?
கோயிலுக்குப் பூத்தட்டோடு மற்றக் கையில் இதற்குள் பால் கொண்டு போவர் எனவும் தாம் இதனைத் தூக்குச் சட்டி என அழைத்ததாகவும் அம்மா சொன்னா.
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய்...மாற்றங்கள்!
காம்புச் சத்தகம் மாத்திரமா குமரா? வேலி கட்டும் குத்தூசி,பெட்டகம், உமல்பை, பந்திப்பாய்.... இப்படி எத்தனை?
ReplyDeleteஇவற்றைப் படங்களோடும் பயன்பாட்டோடும் தொகுத்து எழுதிவைத்தால் மிக்கப் பயனுடயதாய் இருக்கும்.குறிப்பாக எதிர்கால சந்ததிக்கு. ourjaffna.com இல் நல்ல சில தொகுப்புகள் இருக்கின்றன
இன்னும் கொஞ்சம் நானும் சேர்த்து வைத்திருக்கிறேன்.வரும் காலங்களில் அது வெளிவரும்.நீங்களும் இவை பற்றிக் கொஞ்சம் எழுதுங்களேன்!
நன்றி குமரன். உங்கள் முயற்சிகளும் கைகூட வாழ்த்துக்கள்!
முந்திரிகைப் பழம் மாதிரி இருப்பதாலோ? //
ReplyDeleteசரியான அவதானிப்பு தோழி! வயல்வெளியில் வேலையாயிருக்கும் தந்தையார் தமையன்மாருக்கு காபி மற்றும் உணவுடனான தண்ணீருக்குமாக இவ்வகையான கூஜாக்கள் உபயோகமானது. இப்படியானவற்றுள் பொருந்துமாறு டம்ளர் போன்ற குவளையும் இருக்கும். ப்ளாஸ்க் வந்தபின் இவையெல்லாம் பரணில் கூட சில வீட்டிலில்லை. நீங்கள் சொல்வது போல் மூதாதையர் வாழ்நிலை பற்றிய நினைவுச்சின்னமாய் வரும் சந்ததியினருக்கு எடுத்து செல்லவாவது வேண்டும்.
மிக்க நன்றி நிலா.
ReplyDeleteகுறிப்பாக ஈழத்தமிழரிடம் வரலாற்றைப் பேணி வைக்கும் மரபு வழக்கில் இல்லாது போனதால் நம்முடய வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியத் தொடர்ச்சி இல்லை.இனியாவது நாம் அதனைச் செய்ய வேண்டும்.
சிங்கள மக்களிடம் அந்தத் தன்மை, நிறைய உண்டு. அவர்கள் தம்மையிட்டுப் பெருமிதம் கொள்வதற்கு அது ஒரு முக்கிய காரணம்.
தோழி, பாரதத்துக்கும் பாரதத்துத் தமிழ் பண்பாட்டுக்கும் மிக நீண்ட தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. ஆனாலும் இப்போது மின் தமிழ் வெறொரு கட்டத்துக்கு வரலாறையும் வாழ்க்கையையும் உயர்த்தி இருக்கிறது. எதிர்காலம் இனி கணனிக்குள் கட்டுண்டு கிடக்கப் போகிறது.
மாற்றங்களை அனுசரித்தும் ஏற்றுக் கொண்டும் போகும் அதே நேரம் வரலாறை பதிவு செய்து எதிர்காலத்துக்குக் கொடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியம். இல்லையா?
பாரதத்தவர்களும் இது போன்ற சேகரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இது ஒரு புதிய தளம், புதிய வாய்ப்புகள்!
அதனை நீங்கள் செய்தால் இன்னும் மகிழ்வேன் தோழி. பாரதத்துக்கு இல்லாத பாரம்பரியச் செல்வங்களா?