Rain | Forward this Picture
இங்குள்ள தொலைக்காட்சியில் சில காலங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாயிற்று.2,3 வயதளவான பெண் குழந்தை ஒன்று சுயாதீனமாகத் தாயின் அறைக்குச் சென்று முக ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து தன்னை ஒப்பனை செய்து கொள்கிறது.சம வயதான காரை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையன் அவளைப் பார்த்து விட்டு இயல்பாக அவனது கார் கைநழுவிப் போக அப்பெண்குழந்தையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது.முதல் காதல் என்ற படி முடிகிறது முக ஒப்பனை ஒன்றுக்கான விளம்பரம்.
அது போல கோடியல் ஒன்றுக்கான விளம்பரம் ஒன்று இப்படியாக அமைந்திருந்தது. பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.தாகம் எடுக்கிறது. எல்லோருமாக சமையலறைக்குள் ஓடி வருகிறார்கள்.எல்லோரும் 10,12 வயது மதிக்கத்தக்க குழந்தைகள். ஆண்பிள்ளை ஓடி வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு குவளையில் கோடியலில் கொஞ்சத்தையும் தண்ணீரையும் கலந்து மட மடவெண்று குடித்து விட்டு ஓடி விடுகிறான். பெண்குழந்தை வருகிறது. குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கிறது. கோடியலை எடுத்து குவளைக்குள் ஊற்றுகிறது. தண்ணீரை விட்டுச் சரி பார்க்கிறது. நிறத்தில்/ கலவையில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் சற்றே கோடியலை அதற்குள் கலந்து கரண்டியால் கலக்கி மேசையில் வைத்துக் குனிந்து சரிபார்த்து பின்னர் குடித்து விட்டு விளையாட ஓடுகிறது.
இவ்வேறுபாடு இயற்கையாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் பல காலங்களாக உண்டு.உண்மையில் ஆணும் பெண்ணும் சமமாக வாழ முடியுமா என்ற கேள்வியும் ஆணும் பெண்ணும் தனித்தனியாகத் தாங்கும் சுமைகளும் வலிகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும் இயல்பு நிலைகளில் இருக்கும் அடிப்படை வேறு பாடுகளும் இயற்கை இரு பாலாருக்கும் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளும் ஆணையும் பெண்ணையும் இரு வேறு முனைகளிலேயே வைத்திருக்கின்றனவா என்பது தான் அப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம்.
அதாவது பெண்ணினுடய இயல்பும் உடல் தோற்ற அமைப்பும் பெண்ணுக்கென சில இயற்கையாக இருக்கின்ற கடைமைகளும் போல அடிப்படை குண இயல்பும் இரு பாலாருக்கும் வேறுபட்டனவாக இருக்கிறதா?
சரி அப்படி இருக்கிறதென வைத்துக் கொண்டால் அந்த அடிப்படையில் இருந்து பெண்ணுக்கு வழங்கப் படக்கூடிய உரிமைகள் தகுதிகள் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது.குடும்ப அமைப்பும் அது சார்பான வினாக்களும் இன்னொரு தளத்தில் இருந்து பார்க்கப் படவேண்டியவை.வேலைக்குப் போவதா? வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்ப்பதா? தன் சுயத்தை அடையாளம் காண்பதா? தன்னை வளர்த்துக் கொள்வதா? எதை இழக்கிறோம் எதைப் பெறுகிறோம் என்பதெல்லாம் அவரவர் தேவைகளை/விருப்பத்தைப் பொறுத்தது.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு பெண் சுயமரியாதையோடும் கண்னியத்தோடும் உலகத்தால்/சமூகத்தால் சகமனிதனால் நடத்தப் படுகிறாளா? அவளுக்கு மனிதனாக வாழக்கூடிய அவளுக்கான கெளரவம் சமூகத்தால் வழங்கப் படுகிறதா என்பது தான் நம் முன்னால் இப்போதுள்ள கேள்வி. ஈழத்துத் தமிழ் பெண்கள் இராணுவத்தால் பெண் என்ற காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டார்கள்; மானபங்கப்படுத்தப்பட்டார்கள்;தண்டிக்கப் பட்டார்கள்;இறுதியில் சாகடிக்கப்பட்டார்கள்.அது ஒரு புறமாக நிகழ,விதவைகளாகவும் தனியாகவும் வாழுகின்ற பெண்கள் மீதான சமூக வக்கிரங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமாகத் தான் உள்ளன.
அவளுக்கு கொடுக்க மறுக்கப்பட்டவை எல்லாம் சாதாரண ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சாதாரண மனித உரிமைகள் இல்லையா?
life time living என்றொரு புத்தகம் ’மனைவிகள் கவனிக்க’ என்ற தலைப்பில் மனைவிமாருக்கு கீழ்வரும் அறிவுரையை வழங்கி இருக்கிறது.
ஒவ்வொரு மனைவியும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஐந்து விடயங்கள்:
1.கணவரின் எடையை அடிக்கடி கவனியுங்கள்.எடை அளவுக்கு மீறும் போது சமையலைத் தக்கபடி மாற்றுங்கள்.
2.ஒவ்வொரு வருடமும் கணவரின் உடல் நிலையை காலோடு தலைவரை பரிசோதிக்கச் சொல்லுங்கள்.
3.ஏதேனும் கோளாறு தென்பட்டால் டாக்டர் கொடுக்கும் மருந்துகளை வேளை தவறாமல் சாப்பிடும் படி கவனித்துக் கொள்ளுங்கள்.
4.அலுவலகத்தில் தன் வேலையைச் செய்து முன்னேறுவதற்கு ஊக்குவியுங்கள்.ஆனால் முதுகு ஒடிய வேலை செய்யும் படி நச்சரிக்காதீர்கள்.
5.கணவன் வீட்டுக்கு வருவது மன அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, ஓய்வுக்காக.அவற்றை அவருக்குக் கொடுங்கள்.
பங்களாதேஷ் கவிஞரும் நாவலாசிரியருமான தஸ்லீமா நஸ்ரின் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர்.அதனால் பழைமை வாதிகளின் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.’லஜ்ஜை’(வெட்கம்)என்ற அவரது புத்தகத்தில் அவர் இப்படி எழுதி இருக்கிறார்.
“’அவர்கள்’ தங்கள் காலின் கீழே உனக்கு இடமளித்திருக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னைப் சமையல் அறைக்குத் துரத்துகிறார்கள்.அவர்கள்’ உன்னை படுக்கை அறைக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.பிறகு அவர்கள் உன்னை படுக்கையில் இருந்து கீழே தள்ளுகிறார்கள்.’அவர்கள்’ உனக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள்.அவசியமான போது ‘அவர்கள்’ பாதுகாப்பை அகற்றி விடுகிறார்கள்.’அவர்கள்’ உன்னைக் காலால் உதைக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னை அடிக்கிறார்கள். ‘அவர்கள்’ மனிதப் பிறவிகள் அல்ல; ஆண்கள்” என்று அவர் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
சரி, இதனால் இதிலிருந்து விடுபட பெண்ணுக்குக் கல்வி அறிவு அவசியம் என்ற கருத்து மேலோங்கியது.அவளுக்குத் தன்னுடய பலம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதன் ஒரு குரலாக ஒரு முறை தந்தை பெரியார் கூறியது இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.ஆறு முழம் சேலையையும் மூன்று மணி நேரச் சமையலையும் அவர்களிடம்(பெண்களிடம்) இருந்து அப்புறப்படுத்துங்கள். கறண்டிக்குப் பதிலாக ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் புத்தகங்களையும் ஆறு முழச் சேலைக்குப் பதிலாக இலகுவாக அணியத்தக்க ஆடைகளையும் கொடுங்கள் என்றார்.
நம்முடய பண்பாட்டுப் பின்னணியிலோ எனில் அது இன்னும் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.போர் தொடுத்து வைத்த ஆண்களின் இழப்பு/பற்றாக்குறை,திருமணமான ஆண்களின் இழப்பினால் ஏற்பட்ட இளம் விதவைகளின் அதிகரிப்பு என்பவற்றுக்கப்பாலும் பெண்கள் படிக்கவே செய்தனர்.நல்ல உத்தியோகங்களிலும் அமர்ந்து சுய பொருளாதார மேம்பாட்டை அடைந்தும் விட்டனர்.அவ்வாறு இருக்கின்ற பட்சத்திலும் இவ்வாறு ‘வளர்ந்திருக்கிற’ பெண்ணை மணமுடிக்கத் ஆண்கள் தயங்குகின்றனர்.
இவ்வாறான பெண் ஒன்று மிக அதிக அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறாள்.இரண்டு ஆணுக்கு சாதாரண வீட்டையும் குடும்பத்தையும் பார்க்கிற பெண் - மேலும் ‘அடங்கி’ நடக்கிற பெண் தான் அவர்களின் விருப்பத் தேவையாக இருக்கிறாள். இன்னும் ஆண்களுக்கு சுயத்தோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற பெண் தம் வாழ்வை ‘பயமுறுத்துகிற’ ஒருத்தியாகவே தெரிகிறாள்.
இந்த விதத்தில் நம் நாட்டுப் பெண்கள் பல பக்கங்களாலும் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கிறாள் என்றே தோன்றுகிறது. மேலும் அது எதிர்காலத்தில் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாக அது வடிவெடுக்கும் அபாயமும் உள்ளது என்பது என் அனுமானம்.இதற்கு இப்போதிருந்தே சமூக ஆர்வலர்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.
வெளி நாடுகளில் அத்தகைய நாகரிகமும் பண்பாடும் வந்தாயிற்று. கல்வியறிவும் உரிமைகள் பலவும் வழங்கப்பட்டாயிற்று என்பதையும் ஒத்துக் கொள்ளவே வேண்டும்.அரசாங்கம் பல சலுகைகளைப் பெண்களுக்குச் சட்டப்படி வழங்குகிறது.என்றாலும் 8ம் திகதி பெண்கள் தினத்தன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்ற தொழில் மற்றும் கல்வி ரீதியாக வெற்றிகளை ஈட்டிய அவுஸ்திரேலியப் பெண்ணிடம் பெண்கள் தினம் பற்றிக் கேட்கப் பட்ட போது அவர்களது பதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதெல்லை இயற்கையால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வித மன நெருக்கடிக்குத் தான் ஆளாகி இருப்பதாகவும்;வெளியே ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பொருத்தமான gentle men வெளியே இல்லை என்பது அவரது பதிலாக இருந்தது. கூடவே பொருத்தமான சோடியை இனம் கண்டு திருமணமாகி பிள்ளைகளைப் பெற்ற தம்பதியினர் பலர் - தோழிகள் - தற்போது விவாக ரத்தாகி இன்னும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர் கூறிய மேலதிக தகவலாகும்.
எங்கு தவறு நேர்கிறது? குடும்ப அமைப்பிலா? ஆண்பெண் உறவிலா? மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதியை மறந்து அல்லது அதற்கேற்ப இசைந்து கொடுக்கமுடியாது போனதாலா? பெண் வளர்ந்ததற்கேற்ப ஆண் வளராமல் அல்லது மாறாமல் போன காரணமா? அல்லது அன்பென்ற இழை அறுந்து பணமும் பதவியும் சுயநலமும் மேலோங்கிப் போன காரணமா?
அண்மையில் இணையத் தேடல் ஒன்றில் ஒரு சகோதரி (www.sandanamullai.blogspot.com.au)ஒரு குழந்தைக்கான முதற்பெயரில் ஏன் தந்தையினுடய பெயர் மட்டும் பொறிக்கப் படுகிறது? தாயாருடய பெயரின் முதல் எழுத்தினையும் சேர்க்கலாமே என்று கேட்டிருந்தார்.
அதனைப் பார்த்ததும் உடனே எனக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது.திருமணத்தின் போது பெண்ணுக்கு திலகமிடுகிறார்கள். தாலி கட்டுகிறார்கள்.திருமணமானவள் என அடையாளப்படுத்துகிறார்கள்.ஆனால்,ஆணுக்கு தெரியத்தக்கதாக - திருமணமானவர் எனப் புரிந்து கொள்ளத் தக்கதாக - என்ன இருக்கிறது? இருந்ததென்றால் எவ்வாறு அது இல்லாமல் போயிற்று?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!
Welcome | Forward this Picture
படித்த பெண்கள் கூட செய்தித் தாள் வாசிக்கவும் தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கவும் நேரம் இல்லாமலும் ஆர்வம் இல்லாமலும் குடும்ப நிலவரங்கள் குறித்து கவலைப்படுவதோடு முடங்கி விடுகிறார்கள்.
ReplyDeleteமதம் சார்ந்த விடயங்கள், புடவை,நகை போன்ற ஆடம்பரங்களில் இருந்து கவனத்தைத் தவிர்த்து பொது விடயங்களில் அக்கறை காட்ட பெண்கள் தங்களைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.ஆண்களைப் போல பெண்களும் வெளியிடங்களுக்குச் சென்று பல விடயங்களைக் கற்க வேண்டும்.வெளியிடங்களுக்குப் போவதென்றால் கோயிலுக்குப் போவதல்ல.நூலகங்களுக்குச் செல்லுதல்,இலக்கியம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்,விழாக்களைத் தாங்களே நடத்துதல் என்று பொது வேலைகளில் தம் ஆழுமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- வழக்கறிஞர்.அருள்மொழி - ஆனந்த விகடன்.14.3.12. பக் 36
சாமியாரில் இருந்து சக நண்பன் வரை எளிதாக ஏமாந்து விடும் அளவுக்கு பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள்.
ReplyDelete- தமிழச்சி. தங்க பாண்டியன் -
சாமரம் வீசிய பெண்கள் முதல் சங்க காலப் புலவர்கள் வரை பெண்கள் புத்திசாலிகளாக, அறிவாளிகளாக பணிசெய்பவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.எனவே பெண்கள் முதலில் வரலாற்றறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஒருவகையில் பார்த்தால் படிக்காத பெண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்த போதுமான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.கிராமத்துக் குடும்பச் சண்டையில் ஒரு கிராமத்துப் பெண் ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி விடுவாள்.ஆனால் நகரத்துப் பெண்களுக்கு அத்தகைய தைரியம் இல்லை.
எனவே நகரத்துப் பெண்களுக்குத் தைரியமும் கிராமத்துப் பெண்களுக்குக் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் இன்றைய தேவை.
மனநல மருத்துவர். சாலினி.
பாடத்திட்டத்தில் பெண்ணியக்கல்வி என்ற பாடப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.’இந்தச் சமூகம் ஆரம்பத்தில் தாய் வழிச் சமூகமாகத் தான் இருந்தது.பிறகு தான் அது தந்தை வழி ஆணாதிக்க சமூகமாக மாறியது என்கிற வரலாற்றுண்மைகளைப் புரிந்து கொள்வதற்கே நமக்கு 20 வயதுக்கு மேல் ஆகி விடுகிறது.அதிலும் அரசியல் உணர்வுடய ஆண்களும் பெண்களும் தான் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
ReplyDeleteஇப்போது முனைவர் பட்டப்படிப்பு அளவில் தான் பெண்னியச் சிந்தனைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.இதை மாற்றி பதின் பருவத்திலேயே பெண் என்பவள் சக மனுஷி;அவள் ஆணுக்குச் சமமாக மதிக்கப் பட வேண்டியவள் என்று கற்பிக்கும் முறை வந்தால் ஆண்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும்.
இரண்டாவதாக சினிமா மாயையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும்.அரசியலுக்கு வந்த சினிமாக்காரர்கள் பெண்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர்ந்து தம் பாதையை ஒழுங்கு படுத்திக் கொள்ள பெண்கள் முன்வர வேண்டும்.
_கவிஞர்.நிர்மலா.கொற்றவை.
வீட்டு வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆண்களை வலியுறுத்த வேண்டும்....காரணம் பெண்களைக் கட்டுப்பாடாக வளர்க்கும் சமூகம் ஆண்குழந்தைகளுக்கு அத்தகைய கட்டுப்பாட்டை விதிப்பதில்லை.....’
ReplyDeleteஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஆண்கள் பெண்களைப் பின்னுக்குத் தள்ளுவதும் பெண்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதுமான நிலை மாற வேண்டும்.
பெண்கள் ஆண்களின் வெற்றிக்காக உழைப்பதை விட்டுவிட்டு தங்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
பாடகி.சின்மயி.
பெண்கள் தாங்கள் தனி நபர்கள் இல்லை ஒரு இனம் என்பதை உணர்ந்து அமைப்பாக வேண்டும்.அத்தகைய அரசியல் உணர்வும் அமைப்பாவதும் இன்றய தேவை.
ReplyDelete-ஓவியா. பெண்னியச் செயற்பாட்டாளர்.
அழகான உடை நகை என்று தன்னை அழகுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தும் பெண்ணாக இல்லாமல் மனதைத் திடமாக வைத்திருக்கும் பெண் தான் இன்றய தேவை.
ReplyDelete-வெளிச்சம் ஷெரின்.சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்.
பெண் விடுதலைக் கல்வியும் அதில் நம்பிக்கை கொண்ட மாற்றத்தை ஏற்படுத்தவல்ல பெண் அரசியல் ஆழுமைகளும் உருவாகவேண்டும்.
ReplyDeleteஅது தான் இன்றய தேவை.
கவிதா.முரளிதரன்.பத்திரிகையாளர்.
பெண் விடுதலைக் கல்வியும் பெண் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்ட மாற்றத்தை ஏற்படுத்த வல்ல பெண் அரசியல் ஆழுமைகளும் உருவாக வேண்டும்.
ReplyDeleteஅது தான் இன்றய தேவை.
கவிதா.முரளீதரன். பத்திரிகையாளர்.
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய என் அன்புக்குரிய இலக்கிய தோழி கீத மஞ்சரிக்கும் கரிசனையோடு இங்கு வந்து வாழ்த்தும் பகிவும் தந்து போன ரூபன் மற்றும் செந்தாமரைத் தோழிக்கும் என் அன்பும் நன்றியும்.
ReplyDeleteபெண்களாகிய நாம் கடக்க இன்னும் இருக்கிறது பெரும் தூரம். நமக்கு நாமே போட்டு வைத்திருக்கிற பண்பாட்டுத் தடைகளை / தளைகளையும் கூடவே சேர்த்த படி......