Saturday, August 18, 2012

உயிர் நிழலில் காற்று சொல்லிச் செல்லும் கவிதை: - ஆழியாளின் “செவ்வரத்தம் பூ”

நேற்றய தினம்  ‘உயிர்நிழல்’ காலாண்டு சஞ்சிகை தபாலில் வந்து சேர்ந்தது.

கல்யாணச் சாப்பாட்டைக் கண்ட பிச்சைக்காரனைப்போல ஆவல் உந்த அன்றாட அவசரங்களுக்கிடையிலும் பக்கங்களைப் புரட்டினேன்.  தட்டத் தட்ட ஒரு ஓய்வுநேர மாலையும் மாதாந்த பில்லுகள் எல்லாம் கட்டி முடிந்த சஞ்சலமில்லா மனமும் சிரத்தையாகத் தயாரிக்கப் பட்ட தேனீரும் ஜன்னலோர சாய்வு நாற்காலிக்குமான ஒரு பொக்கிஷப்பொழுது எப்போது வாய்க்கும் என்ற ஏக்கம் மனதைக் கவ்வியது.

பக்கங்களின் நடுவே ஆழியாள்!  பெயர் தட்டுப்பட்டது. ஓடிய கண்கள் நிலைகுற்றிற்று. ஆழியாள் என்ற பெயரைக் கண்டால் வியப்புக் குறியிட்ட அந்தக் கவிதையும்; வானத்து வளைவோடு அவர் கேட்ட வட்ட வீடும் நினைவுக்கு வரும்.அடடா! நம்மூர் கன்பரா கவிஞையாச்சே என்பது அதைத் தொடர்ந்து பெருமையோடு நினைவு வரும். இப்போது என்ன எழுதி இருக்கிறார் என விழி தலைப்பில் நிலை கொண்டது.

தலைப்பு “செவ்வரத்தம்பூ”

இந்தப் பூவோடு நமக்கான சம்பந்தம் சமான்யமானதல்ல. அதனோடு நமக்கு ஒரு நெருக்க பந்தம் உண்டு. அதனால் எல்லாம் மறந்து சப்பாணி வெட்டி உட்கார்ந்து  மடியில் புத்தகத்தை இருத்தி முழுதாய் கவிதையை உள்வாங்கினேன்.

அது ஆத்மா பசியாறுகின்ற தருணம்!

அதன் பின் நான் ஒரு இயந்திர மனிதனைப் போலானேன்.போனேன்.வந்தேன்.
நம்புங்கள்! இன்றோடு  ஒரு நாள் என்னை முழுதாய் கடந்து போயிருக்கிறது. ஆனால் ’நான்’ இந்தக் கவிதைக்கப்பால் இன்னும் நகரவில்லை. புற வாழ்க்கை எல்லாம் நோமல் தான். நாளாந்த அலுவல்களும் நலமாயே நடந்தன; கார் அது பாட்டுக்கு சிக்னலில் நின்று பின் நகர்ந்து வேலைக்கு என்னை இட்டு வீட்டுக்கும் பாதுகாப்பாய் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறது. புற வாழ்க்கை என்பது ஒரு புறோக்கிறாம் செய்யப்பட்ட கொம்பியூட்டர் போல! அது தன் பாட்டில் நடக்கும்.அதை விடுங்கள்; நான் சொல்வது மனதை!

                                        செவ்வரத்தம் பூ!


இந்தச் செவ்வரத்தம்பூ என்ற சொல் ஈழத்தவருக்கு பல்வேறு நினைவுகளைக் கிளர்த்திச் செல்ல வல்லது. அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான ஞாபகங்களைக் கிளர்த்தும். கிணற்றடிச் செவ்வரத்தை, கொல்லைப்புறச் செவ்வரத்தை,மதிலோரச் செவ்வரத்தை, பாத்திகட்டி வளர்க்கப்பட்ட செவ்வரத்தை .... இப்படி பலவிதமான செவ்வரத்தஞ் செடிகள் அனேகமாக எல்லா இல்லங்களிலும் தனக்கான இடங்களைப் பிடித்திருக்கும். நம் ஊரில்!

தாத்தா பாட்டிமார் காலை வேளைகளில் ஊர் மரங்களின் நெட்டுகளை மதிலுக்கு அப்பால் நின்றபடி கொக்கைகளால் சவட்டி பூக்களைப் பிடுங்கிச் செல்லுதலும் அவர்கள் பாடிச்செல்லும் தேவாரங்களும் ; பாடசாலை செல்லும் பள்ளிப்பிள்ளைகளின் கட்டளையிடப்பட்ட காலைநேரப் பிரார்த்தனைப்பாடல்களோடும் சுவாமி அறைகளில் சாமிக்குடும்பங்களுக்கு  அவர்கள் வைக்கும் நேர்த்திக்கடன்களோடும் இப்பூக்களுக்கு நிறைய சம்பந்தங்கள் உண்டு. காலைகளின் ஆரவாரங்களுக்கிடையில் ஊதுபத்திப் புகைகளோடு உங்களுக்கும் அது  நினைவுக்கு வரலாம்.

இப்படி செவ்வரத்தம் பூக்களுக்கும் நித்தியகல்யாணிப் பூக்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடம் காலை நேரப்பொழுதுகளின் நினைவுகளுக்கு அழகு சேர்க்க வல்லன.

இளங்காலைக் காற்றும் அதைப் போலத்தான்.

ஒவ்வொரு நாளும் காய்ந்த பூமியிலும் தவறாமல் பூக்கும் இந்த இளம் பூக்களை சூரியப் பிரகாசத்தின் வெளிச்சத்தை ஏந்தியவாறு வருடிச் செல்லும் காற்றைப் போன்றவர்கள் கவிஞர்கள்.காற்றினை எப்படி ஒரு குடுவைக்குள் அடைத்து விட்டு காற்று இத்தன்மையது, இவ்வடிவம் கொண்டது, இவ்வண்ணத்தினது என்று அடையாளப்படுத்தி விட முடியாதோ அது போலத்தான் இந்தக் கவிஞர்களும்.சுதந்திரமானவர்கள்.

காற்று தன் இருப்பை  மரத்தின் அசைவில் சொல்லிச் செல்லும் பொழுதுகள் கவித்துவம் மிக்கவையும் கூட. அவைகள் சங்கத மொழிகளால் பரிபாஷிக்கின்றன. காற்று உஷ்... என்ற  ஒரு வித பாஷையில் பேச, மர இலைகள் தலையாட்டி தலையாட்டி மறுமொழி சொல்கின்றன. அந்த இயற்கை மொழிகள் பரவசமூட்டுபவை.

அந்தப் பொழுதுகளைப் போன்றவை சில கவிஞர்கள் செய்யும் கவிதைகள். கவிஞர்கள் மாத்திரமென்றுமில்லை. கலை இலக்கியத்தை யவ்வனப்படுத்தும் -  எழுத்துக்களைப் பொறுக்கி, சொற்களும் உணர்வும் உண்மையும் அழகுணர்வும் சேர்த்துக் குழைத்து குழைத்து  மெதுமையாக்கி உயிர் செய்யத் தெரிந்த எல்லாப் பிரமாக்களுக்கும் இது பொருந்தும். அவை அற்புத மாதிரிகளை தமிழுக்கு விட்டுச் செல்லுகின்றன.

இந்தக் கவிஞர்கள் இருக்கிறார்களே! ஒரு கட்டுக்குள் அடக்க முடியாதவர்கள்!!  அடக்கக் கூடாதவர்களும் /அடங்க கூடாதவர்களும் கூட. காற்றைப் போல. இந்த அடங்க மறுக்கும் தன்மையோடு உண்மையும் எதற்கும் யாருக்கும் அஞ்சா மனத்திறமும் மனிதம் பேசும் ஓர்மமும் சொல்லாளுமையும் சேர்ந்து விட்டால் அங்கு ஒரு உன்னதம் உருவாகிவிடும்.

அவனால் தான் வரலாறு எழுதப்படும்.

இலக்கியம் வரலாறைப் பேசும் அற்புத தருணங்கள் அவை. அவனது பேனா தூரிகையாகும்.துர்பாக்கியாகும், புகைப்படப் பிரதி போலாகும், சான்றொன்றை சாட்சியமாய் தர்மத்தின் காலடியில் ஈன்று விட்டுப் போகும்.

அது சமயா சமயங்களில் துக்கிக்கும், துவண்டு விழும், வேறொரு பொழுதில் வீறுகொண்டெழும், பின் விடுபட்டு தனியாய் நிற்கும், விம்மியழும், பாடம் புகட்டும், பரிந்துரைக்கும், சமயாசமயத்தில் பூவைப்போல மென் உணர்வைப் பேசும்; புலப்படாத கோணம் ஒன்றில் விஸ்வரூபம் எடுத்து உண்மையை யாருக்கும் அஞ்சாமல் உரத்தும் இடித்தும்  உரைக்கும். சுட்டு விரலால் குற்றம் சுமத்தும். கனமான உண்மையைக்  கவசமாய் போட்டிருக்கும் அது  உலகுக்கு அஞ்சாது தனியனாய் எப்போதும் உயிரோடும் உயிர்ப்போடும்  இருக்கும்.

ஜீவிதம் மிக்க அந்தத்தருணங்களை எல்லாராலும் உருப்படுத்தி விட முடியாது. முடிந்தாலும் மொழிக்குள் வசப்படுத்தி விட  முடியாது. இவை இரண்டும் சாத்தியப்பட்டு விட்டால் மட்டும்  போதுமா என்றால் இல்லை: போதாது. அதற்கு மிகுந்த மனத் திண்மையும் வேண்டும். மனத்திண்மை என்பது உண்மையின் பால் உறுதியாய் நிற்பது. சொல்லியே தீருவேன் என சோராது நிற்பது. அது தனிப்பட்ட ஆளுமை சார்ந்தது. கவிப் படுத்துவதில் இருந்து வித்தியாசப்பட்டது. ஆழியாளால் அது முடிந்திருக்கிறது. இந்தக் கவிதையில் அவை எல்லாம் ஒன்றுகூடி வசப்பட்டு நிற்கிறது.

உயிர் நிழலை வருடிச் செல்கிறது இந்தக் காற்று.

ஆழியாளின் இந்தக் கவிதை அத்தன்மையது. ’செந்’ தமிழின் ஈரம் இன்னும் உலராத  பவித்திரமான உயிரொன்றை உயிர்நிழல் தமிழ் கட்டிலில் சிசுவாக்கிக் கிடத்தியிருக்கிறது.

செவ்வரத்தம் பூ!!

இந்தச் செவ்வரத்தம் பூ என் பழைய நினைவுகள் எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்றிருக்கிறது. இந்தக் கவிதையை அது அந்த நினைவுகளின் வெற்றிடத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

ஆழியாள்  என்ன செய்து விட்டாய் என் செவ்வரத்தம் பூவை?

கவிதையை நான் சொல்லப் போவதில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள். ( இது பிற்சேர்க்கை: சிலவற்றுக்கு விலைகள் உண்டு. அதன் பொருட்டு நான் அதனை மலினப்படுத்த விரும்பவில்லை.)

சஞ்சிகை இலங்கையில் விற்பனைக்குக் கிட்டுகிறது. இணையத்தில் வெளிப்புறப் பார்வைக்குக் கிட்டுகிறது. உலகத்தமிழர் தொடர்பு கொண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

இணையத்தள முகவரி:

www.uyirnizhal.com




PARIS ARIVALAYAM
7 rue Perdonnet
75010 Paris
FRANCE
RAVEENDRAN BOOK LAB
Thirunelvely
Jaffna
SRI LANKA
மேலதிக தொடர்புகளிற்கு
UYIRNIZHAL, Ms. Luxmy, 27 rue Jean Moulin, 92400 Courbevoie, France
Tel:             0033 1 49 97 89 83       /             0033 6 09 24 96 99      
----------










7 comments:

  1. நல்ல அலசல்...
    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ஆஹா! ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டோமோ?

    மிக்க மகிழ்ச்சி தனபாலன். பிரசுரமான சொற்ப நிமிடத் துளிகளுக்குள் வந்து கைகுலுக்கிப் போகிறீர்கள். அது மகிழ்ச்சியை மனதில் மலர்த்திச் செல்கிறது.

    ReplyDelete
  3. காய்ந்த பூமியிலும் தவறாமல் பூக்கும் இந்த இளம் பூக்களை சூரியப் பிரகாசத்தின் வெளிச்சத்தை ஏந்தியவாறு வருடிச் செல்லும் காற்றைப் போன்றவர்கள் கவிஞர்கள்.

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. எங்கே என் செந்தாமரைத் தோழியைக் கன நாளாய் காணோம் என யோசித்தேன். திரு.தனபாலன் வந்த போது முன்னர் ஒரு தடவை நீங்களும் இவ்வாறு வந்து போனது நினைவுக்கு வர இதோ சற்று நேரத்தில் நீங்களும் இங்கு.

    மீண்டும் சந்தித்துக் கொண்டோம். இரட்டிப்பு மகிழ்ச்சி தோழி.உங்களைக் கண்டடைந்ததையும் சேர்த்து.அழகிய நிமிடங்கள்!நினைவில் நிற்கின்றன தருணங்கள்!!நல்லதொரு நாள் போலும்!!!

    ReplyDelete
  5. இப்படி செவ்வரத்தம் பூக்களுக்கும் நித்தியகல்யாணிப் பூக்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடம் காலை நேரப்பொழுதுகளின் நினைவுகளுக்கு அழகு சேர்க்க வல்லன.//

    இந்த அடங்க மறுக்கும் தன்மையோடு உண்மையும் எதற்கும் யாருக்கும் அஞ்சா மனத்திறமும் மனிதம் பேசும் ஓர்மமும் சொல்லாளுமையும் சேர்ந்து விட்டால் அங்கு ஒரு உன்னதம் உருவாகிவிடும்.

    அவனால் தான் வரலாறு எழுதப்படும்.//

    ஜீவிதம் மிக்க அந்தத்தருணங்களை எல்லாராலும் உருப்படுத்தி விட முடியாது. மொழிக்குள் வசப்படுத்தி விட முடியாது. ஆழியாளால் அது முடிந்திருக்கிறது.

    செம்ப‌ருத்திப் பூ கிள‌ர்த்தும் சிந்த‌னைக‌ள் விரிந்த‌ க‌விதை க‌ண்டுவிட்டு வ‌ருகிறேன் தோழி!

    ReplyDelete
  6. இணைய‌த‌ள‌த்தில் க‌விதை கிடைக்க‌வில்லையே தோழி... வ‌ழி புல‌ப்ப‌ட‌வில்லை என‌க்கு...

    ReplyDelete
  7. புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் நிலா!

    சற்றே ஈழத்து அரசியல் தூக்கலாய் இருந்தாலும் அது வெளிப்புற உலகம் நோக்கி விரிந்த பார்வையைக் கொண்டுள்ளது. அது உங்களை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துப் போகும்.

    ReplyDelete