Friday, April 19, 2013

Author Talk..........



நேற்றய தினம் மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரை “The Creative Seed" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர்  Lilian Wissink தன் புத்தகம் பற்றிப் பேசப்போகிறார் என்ற செய்தி சில வாரத்துக்கு முன்னரே என் தொழில் முகவரிக்கு வந்திருந்தது. Parramatta நூலகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பும் நோக்கமும் அழகாய் இருந்ததால் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன். கூடவே வருவார்கள் என்ற நம்பிக்கையில் இரு கலைஞர்களுடய பெயர்களையும் அவர்களைக் கேட்காமலே கொடுத்தும் விட்டிருந்தேன்.



நேற்றுக் காலை மற்ற இருவரும் தம் விருப்பமின்மையைத் தெரிவித்த போது மனது மெல்ல சோர்ந்து போனது. வாசிப்புப் பிரியை; கலைகளின் ரசிகை என்பதைத் தவிர என்னிடம் வேறு எந்த தகுதிகளும் இல்லை. கலை என்பது அழகுணர்ச்சியுடனான ஆக்க பூர்வ வெளிப்பாடுகளைக் கொண்டமைவது. அதில் ஈடுபடுகிறவர்கள் மிக சொற்பமானவர்களே. புதிதானவற்றைக் காண அறிய, பரீட்சிக்க, கலந்துரையாட அத் துறைகளில் ஈடுபடுபவர்களே ஏன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.



எனினும் நான் போனேன். கச்சிதமான மேல் மாடி அறை ஒன்றில் தேநீர், கோப்பி, கேக், பிஸ்கட் வகையறாக்களோடு 9.10 பேர் வந்திருந்தார்கள். சின்னதான ஒரு microphone ஓடு புத்தக ஆசிரியரும் புன்னகையோடு பிரசன்னமாயிருந்தார். அவரவர் தமக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களோடு கதிரைகளில் அமர, நூலகர் புத்தக ஆசிரியரை அறிமுகப் படுத்தி ஆசிரியரைப் பேச அழைத்தார்.

புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் அன்பும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் மிளிர மென்மையாக உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.



அதன் பின் கலந்துரையாடலுக்கான நேரம். பலருக்கும் பல விதமான கேள்விகள். சொற்பமான பேரே வந்திருந்த போதும் அவ்வளவு பேரும் ஈடுபாடும் தேவையும் விருப்பமும் உள்ளவர்களாகவும் நட்புணர்வும் அன்பும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்ததும் ஒரு ரம்யமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொருவருடய கேள்விகளும் மற்றவருக்கும் பயன் படும் விதமாகவும் உதவும் விதமாகவும் அமைந்திருந்தமை ஒரு கண்ணியமான கூட்டம் அது என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருந்தது.

அது முடிய நூலகர் வந்து அடுத்த மூன்று மாதத்திலும் என்னென்ன புத்தகங்கள் பேசப்பட இருக்கின்றன என்ற தகவலைக் கூறி நன்றி கூறி நிகழ்ச்சியை மிகச் சரியாக 2.00 மணிக்கு நிறைவு செய்தார்.

புத்தக ஆசிரியர் தம் முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி ஒரு சிறு பயிற்சித்தாளை நமக்குத் தந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த கேள்வித்தாள் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் என்று தோன்றுவதால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.

1.என் மகிழ்ச்சிக்காக எப்போதும் நான் செய்ய விரும்புகின்ற ஒன்று......

2.எனக்கு வேலைப்பழு இல்லாவிட்டால் நான் எப்பவும் செய்ய விரும்புகின்ற ஒன்று........

3.நான் சிறு பிள்ளையாக இருந்த போது நாம் எப்போதும் செய்து மகிழ்ந்த ஒன்று.......

4.என் புத்திளமைப் பருவத்தில் நான் மிக அனுபவித்துச் செய்த ஒன்று.......

5.என்னால் இப்போதும் செய்தால் மகிழ்வேன் என்று நான் கருதுகின்ற ஒன்று( படம், ஓவியம் வரைதல்,செதுக்கு வேலை, எழுத்து, கலைப்பொருட்கள் செய்தல், வாத்தியக் கருவி வாசித்தல், பாடுதல், ஆடுதல்.....)

6.எனக்கு விருப்பம்.........

7.காலங் கடந்து விட்டது, எனக்கு திறமை இல்லை என்ற நினைப்பை நான் கடந்து விட்டால் நான் செய்வேன் என்று நினைக்கின்ற ஒன்று.......

8.எனக்கு நான் அனுமதி தர நினைத்தால் தர விரும்பும் ஒன்று.......

9.எனக்கே எனக்கான நேரத்தை எனக்கென நான் ஒதுக்கும் போது நான் செய்ய நினைப்பது..............

10.என் இளமைக்கால என்னோடு நான் பேச நினைத்தால் நான் சொல்ல நினைப்பது.............................

11.இன்றில் இருந்து இன்னும் ஐந்து வருடத்துக்குள்.........

12.என்னுடய அடுத்த கட்ட நடவெடிக்கை.....................

புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை  எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி என்பது பற்றியது. அந்த ஆத்ம திருப்தியில் தொனிக்கும் தெய்வீகத்தை அது பேசுகிறது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. புத்தகத்துக்குள் போவதற்கு முன் என்ற பகுதியை மாத்திரம் இப்போது வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி”  பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.

தன்னைக் கண்டு பிடிக்கும் மார்க்கம் அங்கே புலப்படுகிறது.

இது நிற்க!

ஏன் நம்மவர்கள் இவற்றில் எல்லாம் ஈடுபாடே காட்ட மாட்டேன் என்கிறார்கள்? எம்முடய புத்தக வெளியீடுகளை ஒரு தடவை நினைத்துப் பார்க்கிறேன்...............அங்கே வியாபார யுக்திகளே மலிந்து கிடக்கின்றன.

கடையில் வாங்குகின்ற ஒரு புத்தகத்தைப் போலல்லாது ஆசிரியரின் கலந்துரையாடலுக்குப் பின்பான இப் புத்தகம் தனித்துவமான கட்புலனுக்கு உட்படாத ஏதோ ஒரு சிறப்பம்சத்தை தன்னுள் உள்ளடக்கி இருக்கிறது.  புத்தகத்தை அதன் அத்தனை பரிமானங்களோடும் அறிய புரிய ஆசிரியரது கையெழுத்தோடு உள்ள அவ்வுயிருள்ள சொத்தை ஸ்பரிசிக்கும் தோறும் எனக்கு மட்டுமேயான ஒரு முழுமை நிறைந்த உள்வாங்கலைக் கொண்ட ஒரு வஸ்துவாக அது பரினமிக்கிறது. அதன் முழுமையான அர்த்தங்களோடும் உள்வாங்கல்களோடும் அப்புத்தகம் புதியதொரு பரிமானத்தைத் தருகிறது.

நான் உயிரோடு இருக்கும் வரை இப் புத்தகத்துடனான என் உறவு மற்றெவருக்கும் கிட்டாத ஒரு சிறப்பு மிக்கதாய் இருக்கும். அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; உரையாடல்களுக்கு வழங்கிய பதில்களோடு; அந்தக் கையெழுத்தோடு மேலும் அன்றய தினத்தோடு அது பின்னிப் பிணைந்த வாறு இருக்கும்.

உயிரோடு எப்போதும் என்னோடு வாழப் போகும் அது எனக்கு மட்டுமேயாக எத்தனை பெரிய வாசலை பூரண மகிழ்வு நிறைந்த மனநிலையோடு அது எனக்காகத் திறந்து விடுகிறது.

பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் திகதியிட்ட கையெழுத்தோடும் பிரியங்களோடும் புத்தகத்துக்கான முழுப் பெறுமதியைக் கொடுத்து புத்தகத்தை பெற்றுக் கொள்ள  வேண்டும்.

கூடவே அந்த நிகழ்ச்சியும்  சலசலப்பெதுவுமில்லாமல் சொற்பமான தீவிர வாசிப்பு பிரியர்களோடு நிறைவு பெற வேண்டும்.

இதே மாதிரி.

4 comments:

  1. ரம்யமான சூழலை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. முன் சுருக்கம் பிரமாதம்...

    நன்றி...

    இதே போல் நிகழ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஏன் நம்மவர்கள் இவற்றில் எல்லாம் ஈடுபாடே காட்ட மாட்டேன் என்கிறார்கள்? எம்முடய புத்தக வெளியீடுகளை ஒரு தடவை நினைத்துப் பார்க்கிறேன்...............அங்கே வியாபார யுக்திகளே மலிந்து கிடக்கின்றன.

    உண்மையான வரிகள்...
    அந்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்... அருமையான பகிர்வு...

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி செந்தாமரைத் தோழி, தனபாலன் மற்றும் குமார்.உடனடியாக வந்து கருத்துத் தெரிவித்திருந்தமைக்கும் என் அன்பும் நன்றியும்.

    நேற்றய தினம் (20.4.13) முழு நாள் நிகழ்வாக எழுத்தாளர் விழாவும் நடந்தது இங்கு.புதிய சிந்தனைகள் பல முளை விடக் கண்டேன்.ஆனால் அவற்றைக் கேட்க இளம் வயதினர் தான் அதிகம் இல்லை. அது தான் சற்றே பயமுறுத்துகின்றது.

    ReplyDelete