Monday, April 22, 2013

தாய் Land ன் ஸ்வர்ண பூமியில் இருந்து......1....இந்தப் புது வருடம் எங்களுக்கு தாய்லாந்தில் அமைந்திருந்தது.

எதிர் பாராத சம்பவங்களால் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பயணம் நல்லதொரு உதாரணம். உண்மையில் என் திட்டப்படி கொழும்பில் நடைபெற இருக்கும் ஆவண மாநாட்டுக்குசெல்வது என்பது தான் என் நோக்கம். அதற்காக என் ஆய்வுக் கட்டுரையின் முன் வரைபுகள் அனுப்பி வைக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கான கால நேரத்தையும் அவர்கள் அனுப்பியிருந்தார்கள்.எனக்கு ஒரே ஒரு வேலை தான் மிச்சமிருந்தது. அது யாழ்ப்பாணம் சென்று சில புகைப்பட ஆவணங்களை கட்டுரையோடு இணைக்க வேண்டும். அதனால் மாநாட்டுக்கு முன்னர் வட பகுதி சென்று அவற்றை எடுத்து கட்டுரையோடு இணைப்பது என் பிரதான நோக்கம்.

அதற்காக ஏற்கனவே வேலைத்தலத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்து நண்பர்கள் உறவினர்களுக்கான பரிசுப்பொருட்களையும் நேரம் இருக்கிற நேரங்களில் வாங்கி பெட்டியை நிரப்பி இருக்கின்ற நேரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்க அறிவித்தல் ஒன்று தன் பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை அதிலும் குறிப்பாக வடபகுதிக்குச் செல்வதை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவ்வாறு அவர்கள் செல்லும் பட்சத்தில் அவர்களது பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்ற அறிவித்தல் வானொலிவழியாக வீடு வந்து சேர்ந்ததில் குடும்பம் குழம்பியதோடல்லாது போக வேண்டாம் என்ற தடையுத்தரவையும் பிறப்பித்து விட்டது.எனக்கும் சற்றுப் பயமாக இருந்ததென்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.2004 ந் பின் கால் வைக்கவில்லை.

நூலக நிறுவனத்தாரோடு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிய போது அவர்கள் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டதுடன் படங்கள் எடுப்பித்துத் தருவதற்கான உதவிகளைத் தம் தொண்டர்கள் மூலமாக தம்மால் செய்து தர முடியும் என்றும் கட்டுரையைத் தங்களுக்கு அனுபுமாறும் அவர்கள் தெரிவித்தது  மனதுக்கு பெருத்த நிறைவினை அளித்தது.

அந்த ஆய்வுக் கட்டுரை அவர்களால் உருவாகியது. அவர்களுக்கே அது உரித்தாகும்.என்றேனும் ஒரு விரைவு நாளொன்றில் அவர்கள் மூலம் பிரசுரமாகி உங்கள் பார்வைக்கும் அது கிட்டக் கூடும்.

இப்போது எனக்கு முன்னால் இருந்த பெரிய பிரச்சினை இந்த விடுமுறையை - எடுத்த விடுமுறையை என்ன செய்வது என்பதாகும். பெரிய விடுமுறையை வேறு எடுத்து விட்டிருந்தேன். அதில் நீண்ட சேவைக்கான விடுமுறையும் அதில் அடக்கம். சரி ஒரு 4 நாட்களுக்கு தாய்லாந்துக்குப் போகலாம் என்று பல நாடுகள் பட்டியலில் இருந்து தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.

வாருங்கள் என்னோடு. பயணம் 11.4.13.

இப்போது நாங்கள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்துக்குப் போகப் போகிறோம். ஸ்வர்ண பூமி 
( தாய்நிலம்: Thailand. - தங்க பூமி Suvarnabhumi )கீழே இருக்கின்ற படங்கள் விமான நிலையத்தின் உள்ளே விமானத்தில் இருந்து இறங்கி வருகின்ற உள்ளகப் பாதை. சுவரோரங்களில் தென்பட்ட  சித்திரக்காட்சிகளில் சில.
இந்த உருவ அமைப்பு பாதை நடுவில் செய்யப்பட்டிருக்கிறது. விளையாடுகின்ற இந்தச் சிறுவர்களைப் பார்த்த போது பிராமணச் சிறுவர்களை அது நினைவுறுத்தியது.
இது அந் நாட்டு வாடகைக் கார்.பல வண்ணங்களில் அவை ஓடுகின்றன. பெரும்பாலானவை ரொயோட்டா கார்கள் தான்.இந்தக் காருக்குள் ஏறிய போது மல்லிகைப் பூ வாசம் குப்பென்று வீசியது.இந்தப் பாமர கார் ஓட்டுனருக்கு அத்தனை கடவுள் பக்தி. பலவிதமான சுவாமிப் படங்களும் தாயத்துக்களும் சில்லறைக்காசுகள் ஒட்டப்பட்ட தன் படமுமாக விசித்திரமான ஒரு கார் காட்சி உள்ளே. ஆனால் மிகவும் அப்பாவி மனிதர்கள்.பாமர புன்னகையோடு அம்மனிதன் நம்முடய இருப்பிடம் கேட்டு காரைக் கிளப்பு முன்னும் இந்த மல்லிகைப்பூச்சரத்தோடு இருந்த பலவித சலங்கைகளோடு கூடிய ஒரு கூட்டம் சாமியரை வணங்கி காரைக் கிளப்பும் போது மனிதன் என் மனதில் எங்கோ போய் விட்டார்.


ஊர் புதுசு தானே நமக்கும் என்று சற்றே பேச்சுக் கொடுத்தால் மனிதருக்கு துப்பரவாக ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் அவருடய சிரிப்பு சற்றே புதினமாக இருந்தது. 


இந்த இடங்களால் திரும்புகின்ற போது ‘பட்டினம், பட்டினம்’ என்று சொல்லக் கேட்டேன். கவனியுங்கள் City என்பதற்கு அவர்கள் பாசையில் பட்டினம் என்று அர்த்தம். தமிழ்! தமிழ்!!

இரண்டு பாசைகளும் மோதிக் கொண்டதில் பொறுக்கிய விடயங்கள் எதற்கும் பேரம் பேசு. வாடகைக் கார்களை உன் ஹொட்டலில் இருந்து  முதலிலேயே கட்டனம் பேசி அமர்த்திக் கொள். என்பவைதான். 

எனக்கு அடக்க முடியாத ஒரு ஆர்வம் என்னவென்றால் ஏன் இந்த மனிதர் காரின் உட்புறம் முழுக்க பல நாட்டுக் காசுகளையும் காரின் உட்பகுதியின் மேற்புறமெல்லாம் பொலித்தீன் உறைகளில் பக்குவமாகப் போட்டு ஒட்டி வைத்திருக்கிரார் என்பது தான்.ஏற்கனவே எல்லோரும் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் களைத்துப் போயிருந்தார்கள். பயணக் களைப்போடு இந்த மனிதருக்கு ஒரு விடயத்தை விளங்கப் படுத்துவது பெரிய கடினமான காரியமாகப் பட்டது. எனக்கும் களைப்பாய் இருந்த போதும் ஆர்வம் அதை மிஞ்சி விட்டதால் ஏன் அவற்றை இங்கே ஒட்டி வைத்திருக்கிறாய் அப்பனே என்று கேட்டேன். அதற்கு நான் விளங்கிக் கொண்ட பதில் இத்தனை நாட்டவர்களையும் தான் ஏற்றி இறக்கி இருக்கிறாராம். அந்தந்த நாட்டுத் தாள் காசுகளை அவர்களின் நினைவாக தான் ஒட்டி வைத்திருக்கிறாராம். பார்! அவுஸ்திரேலியா நாட்டுக் காசு இங்கே இல்லை என்றார்.மிக்க மகிழ்ச்சியோடு ஒரு தாள் காசை எடுத்து நீட்டிய போது அந்த முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்! தான் அதனை முன் பக்கத்தில் இருக்கின்ற இடைவெளியில் ஒட்டப் போவதாக சொல்லி மகிழ்ந்தது அந்த பாமர நெஞ்சம். 

என் சினேகிதி நீ எதற்காக இரண்டு $100 அமெரிக்க டொலர்களை ஒட்டியிருக்கிறாய்? ஞாபகார்த்தத்துக்கு ஒன்று போதாதா என்ன ? மற்றதை உன் செலவுக்கு வைத்துக் கொள்ளலாமே சும்மா எதற்கு வீணாக்குகிறாய் என்று கேட்டாள். நோ நோ இதெல்லாம் என்ர collections அதனை என்ன காரணம் கொண்டும் நான் தொடமாட்டேன் என்று மிகத் தீவிரமாகச் சொன்னார். 

அத்தோடு 12.13.14 அவர்களுடய புது வருடம் என்ற செய்தி எமக்கு ஆச்சரியமாக இருந்தது. அடடா, நம்முடய புது வருடப் பிறப்பன்று தானா அவர்களுக்கும் புது வருடம் என்று வியந்த போது, வருடத்திலேயே இந்த மூன்று நாட்களும் தான் கடையடைப்புடனான பொது விடுமுறை நாட்கள் என்ற தகவல் நமக்கு புதிய செய்தியாக இருந்தது. பல கேள்விகள் நம்மிடம் இருந்த போதும் மொழிப் பிரச்சினையால் கேட்க முடிய வில்லை.

பிறகின்ற புது வருடம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கூறி சற்றே மேலதிகமாய் பணமும் கொடுத்து ஹொட்டேல் வாசலில் இறங்கிய போது நேரம் மாலை 6.30. 

பற்களை எல்லாம் பழுதாக்கியிருந்த போதும் தயங்காமல் சிரித்த படி பயணப்பொதிகள் யாவற்றையும் இறக்கி வாசலுக்குள்ளாக வைத்துவிட்டு நின்ற அந்த மனிதனின் முகம் இப்போதும் அந்த அழகிய பாமரப்  புன்னகையோடு மனதில் நிழலாடுகிறது.


இப்போது ஹொட்டேலுக்குள் வந்தாகி விட்டது.  

தொடரும்...............

5 comments:

 1. தொடருங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்....


  பெளத்தர்களினதும் ,இந்துக்களினதும் புதுவருடம் 12,13,14

  ReplyDelete
 2. மிக்க மகிழ்ச்சி புத்தன். உங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள்.பெளத்த இந்து புது வருடம் என்ற படியால் புத்தருக்கும் தானே!

  நான்கு நாட்களுக்குத் தான் போனோம். பெரிதாக எதையும் சொல்லி விட முடியாது என்றே தோன்றுகிறது.ஒரு ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்ரு தொடங்கினேன்.இது வரையில் பயணப் பதிவுகள் எதுவும் எழுதிய அனுபவமும் இல்லை. தவிரவும் இது பெண் பார்வை!:)

  என்றாலும் நீங்கள் வாசிப்பது மகிழ்ச்சி. உங்களது அபிப்பிராயங்களையும் அறியத்தந்தால் இன்னும் மகிழ்வேன்.

  வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. அன்புள்ள கீத மஞ்சரி,
  தயவு கூர்ந்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தவறுதலாக உங்கள் பின்னூட்டம் அழிக்கப்பட்டு விட்டது. மிகுந்த பிரயத்தனப்பட்டும் என்னால் அதனை மீட்டு வர முடியவில்லை.

  மிக்க மனவருத்தத்தை அது தருகிறது தோழி.

  என்னை மன்னிப்பீர்களாக!

  ReplyDelete
 4. அட அதனாலென்ன மணிமேகலா? சமயங்களில் இதுபோன்ற தவறு நேர்வது இயல்புதானே... பதிவு பற்றிய என் கருத்தை நீங்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா? அதுபோதும் எனக்கு. இதற்கெதற்கு மன்னிப்பெல்லாம்?

  ReplyDelete
 5. மிக்க ஆறுதல் கீதா.

  தாங்ஸ்மா.

  ReplyDelete