Sunday, April 28, 2013

தாய் land - 3 -


வெளியே மழைக்கோலம். 

இராக்காலம்! சாப்பாட்டுக்கும் சுற்றுப்புறங்களைத் பரீட்சயப்படுத்திச் சற்றே இடங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் வெளியே புறப்பட்டோம்.

புன்னகை சுமந்த வண்ணம் ருக்ருக் வந்து நின்றது.


பொழுது சாய்ந்து இரவு நேரக் கடைகளின் ஆரவாரம்! திடீர் உணவுக்கடைகள் தெருவோரம் எங்கும். உடனே உடனே சமைத்து வருபவர்களுக்குக் கொடுக்கிறார்கள். மக்களும் தெருவோரமே நின்று சாப்பிட்டுச் செல்கிறார்கள். ஒரு தெருவோரக் கடை ஒன்றையே கீழே காண்கிறீர்கள். 


பெண்களும் ஆண்களும் கடும் உழைப்பாளிகளாகத் தென்படுகிறார்கள். சீனர்களைப் போலோ கொறியர்களைப் போலோ தீவிரமான அங்க அடையாளங்கள் இல்லாமல் ஆணும் பெண்ணும் மென்மையான தோற்றம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓரளவு கண்கள் அகலமாகவும் மூக்கு நீளமாகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆங்கிலம் அநேகமாக எவருக்கும் தெரியவில்லை. விலைகளைக் கேட்கின்ற போது கல்குலேட்டரில் விலையைப் போட்டுக் காட்டுகிறார்கள். நாங்கள் அதிலிருந்து பேரம் பேசத் தொடங்குகிறோம்.20 இலிருந்து 40 % க்கு விலைகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கிறது.


பலரும் தாய்லாந்தைப் பற்றிச் சொல்லும் போது உணவினைச் சிலாகித்துச் சொல்லக் கேட்கலாம்.தெருவோர உணவுக்கடைகள் பற்றி போய் வருகின்ற எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் போன இடம் பிழையோ அல்லது எங்களுடய ரசனையில் தான் குளறு படியோ தெரியாது அவ்வளவு நல்ல அனுபவங்கள் எங்களுக்குக் கிட்டவில்லை என்பதையும் அவசியம் சொல்லியாக வேண்டும்.

அனேகமான இந்தத் தெருவோரக்கடைகள் கால்வாய்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கின்றன. (நாங்கள் போனவை) கால்வாய்களின் நாற்றத்தை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தெருவோரக் கடைக்காரர்களும் தம் பாத்திரங்களை கடையின் கரையில் இருந்து கானுக்குள் பாத்திரங்களைக் கழுவிய தண்ணீரை அனுப்புகிறார்கள்.அந்தத் தேங்கிய நீரின் வாடையைச் சுமந்த வண்ணம் உணவுகளின் சுவை அமைந்திருந்தமை சத்தியமாக என் பிரமையல்ல.


இந்தக் கடைகளை எல்லாம் தாண்டி முகப்புக்கு வந்தால் ஜே ஜே என்று சனக்கூட்டம். கடைகள் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கின்றன. பெரிய கடைகள் பெட்டிக்கடைகள் என்று எந்த வேறுபாடும் கிடையாது. சனக்கூட்டம் போவதும் வருவதுமாக இருக்கிறது.

மாம்பழம், பலாப்பழம், பப்பாப்பழம், மங்குஸ்தான், றம்புட்டான், வேறும் தெரியாத தெரியாத பழ வர்க்கங்கள், கிழங்குகள் வகைகள் போன்றவை வெட்டியும் முழுதாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. முடக்குகள் தோறும் தாய் மசாஜ் என்ற பெயருள்ள கடைகள் கண்சிமிட்டுகின்றன. ஒளி உமிழ்கின்றன. இந்தக்கடைகள் இரவு பகலாக வேலை செய்கின்றன. பெண்கள் பாரம்பரிய உடையனிந்து வெளியே நின்று வாடிக்கையாளர்களை அழைக்கிறார்கள்.
நிறைய மேலை நாட்டவர் !ஆணும் ஆணும் ஜோடியாக கிழவனும் இளம் பெண்ணும் கைகோர்த்த படி அரைகுறை ஆடைகளோடு இளம் தாய் பெண்கள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்த படி, ...இப்படியாக ஜே ஜே என்று சனக்கூட்டம். சில பெண்பிள்ளைகள் பால்மனம் மாறா பருவத்தில் அப்பாவியாய் சிரித்தபடி வெள்ளைக்காரக் கிழவர்களோடு போவதைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. அவர்கள் நம்மைக் கடக்கின்ற போது நம்மைப் பார்த்து சினேகமாய் புன்னகைப்பது இன்னும் கொடுமை!

சொன்னால் நம்ப முடியுமா? அங்கே ஒரு பிள்ளையாரப்பா. அவர் தான் இங்கே கீழே உள்ள படத்தில் காட்சி தருகிறார். அவர் ஒரு சந்துக்குள் இப்படியாக நிமிர்ந்து கூரை எதுவும் இல்லாமல் நின்றபடி சிரிக்கிறார்.

இப்போது கொண்டு சென்ற கமரா தனக்கு சக்தி போதாது என எச்சரிக்கத் தொடங்கி விட்டது. கீழே இருப்பது ஒரு பெட்டிக் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்ற காட்சிப் பொருட்கள்.
இவற்றில் இராமர் சீதா கதைகள், அனுமான், இந்திரன், கடல்கன்னி, இராவனன், அருட்சுணன், லவகுசனோடு காட்டில் பழம்பறிக்கும் சீதா என பல படங்கள் அவர்களின் பாரம்பரிய கலைகளைப் பேசுவனவாக இருக்கின்றன.இன்றைக்கு அவ்வளவு தான். இனி நான் உயிர் பெற முடியாது என கமறா சொல்லி விட்டது.

நாமும் திரும்பி விட்டோம்.
நாளை பிளட்டினம் கடைத்தொகுதிக்குப் போவோம். வாருங்கள்!

தொடரும்...........................................
2 comments:

 1. தெருவோர கையேந்திபவன் அனுபவம் வருத்தமளிக்கும் செய்தி.நல்ல உணவாகவே இருந்தாலும் நாற்றமெடுக்கும் இடத்தில் யாரால்தான் நிம்மதியாய் உண்ண இயலும்?

  பிள்ளையார் ஜோரா இருக்கார். நம் இதிகாசப் பாத்திரங்களை அங்கும் காண மகிழ்ச்சி.

  \\சில பெண்பிள்ளைகள் பால்மனம் மாறா பருவத்தில் அப்பாவியாய் சிரித்தபடி வெள்ளைக்காரக் கிழவர்களோடு போவதைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. அவர்கள் நம்மைக் கடக்கின்ற போது நம்மைப் பார்த்து சினேகமாய் புன்னகைப்பது இன்னும் கொடுமை!\\

  மனத்தை மிகவும் கலங்கடிக்கிற உண்மை மணிமேகலா.

  அடுத்தப் பகுதியை எதிர்நோக்கியிருக்கிறேன்.

  ReplyDelete
 2. மிக்க சந்தோஷம் கீதா.

  உண்மையில் அழகான தன் நாட்டு அப்பாவிப் இளம் பெண் பிள்ளைகளை வைத்து நாடு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது கீதா. அந்த இள முகங்களும் நம்மைக் கண்டதும் சினேகிக்கும் பாங்கும் எனக்கேனோ கவலையையே வரவளைத்தன.

  அவர்கள் நிச்சயமாக இதை விட நல்ல வாழ்க்கை வாழவேண்டியவர்கள். கொண்டுபோகிறவர்கள் என்ன குணமோ? என்ன இயல்போ? என்ன பாடு படுத்தக் கூடும் என்று நினைக்கிற பொழுதுகளில் மனம் திகீர் என்று இருக்கிறது.

  ReplyDelete