இலக்கிய உள்ளங்களே!
எல்லோரும் நலம் தானா?
நீண்ட மாதங்களின் பின்பான சந்திப்பு.
மீண்டும் ஒரு வருடத்தைத் தாண்டி இருக்கிறோம். புதிய வருடம் ஒன்றின் ஆரம்பத்தில் நின்றபடி கடந்த வருடத்தைத் திரும்பிப் பார்க்கையில் சொல்லக்கூடிய நிகழ்வுகளாக பல புதிய முகங்களின் அறிமுகங்களையும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள் பற்றிய மேலதிக புரிதல்களையும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரை சந்திக்கின்ற வாய்ப்பும் தனித்துவமான உரையாடல் களங்களையும் வலுவான இலக்கியப் பிணைப்பையும் தந்த ஒரு வருடமாக கடந்த வருடம் அமைந்திருந்தது.அதிலும் குறிப்பாக தனபாலசிங்கம் ஐயா அவர்களின் பிரசன்னமும் அவர் எழுப்பிச் சென்ற அலைகளும் கடந்த வருடத்தின் முக்கிய பாகமாய் இருந்தன. சுமார் 25 பேருக்கு மேல் கலந்து கொண்ட திரு சத்தியநாதன் அவர்களின் பரிசு பெற்ற சிறுகதை பற்றிய விமர்சன சந்திப்பு பல எழுத்தாளர்களைச் சந்திக்கப் பண்ணிய வெற்றி நிகழ்வாகவும்; உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை வசீகரித்த நிகழ்வாகவும்;கடல்கடந்த; மாநிலம் கடந்த எழுத்தாளர்களை ஒன்றுகூட்டிய நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
ஒவ்வொரு மாதமும் கிரமமாக சந்திப்பினை நடத்த முடியாமல் போன இயலாமையையும் கட்டாயமாக இங்கு குறிப்பிடாக வேண்டும். அதிலும் குறிப்பாக இரண்டு இலக்கிய ஆளுமைகளை கடந்த வருட இறுதியில் நாம் இழந்திருந்தோம். ஒன்று காவலூர் இராசதுரை அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம். மற்றொன்று எஸ்போ ஐயா விட்டுச் சென்ற இடைவெளி.இவர்கள் விட்டுச் சென்றிருக்கிற இடைவெளிகள் பற்றிய; பங்களிப்புப் பற்றிய; இலக்கிய சாகரத்தில் அவர்கள் எழுப்பிச் சென்றிருக்கிற அலைகள் பற்றிய ஆளுமை அலசல்களும்; நமக்கு முன்னால் இருக்கிற கடமைகள் பற்றியும் நாம் கலந்துரையாடக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதே வேளை நம் கன்பராக் கவிஞை ஆழியாழ் கடுகு போல; ஒரு மிளகு போல கைக்கடக்கமான ’கருநாவு’ என்றொரு கனதியான கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். அது போல விண்வெளியியல் பற்றிய ஆராய்ச்சியில் கலாநிதிப் பட்டம் பெற்று சிட்னி பக்லலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராக மிளிரும் கலாநிதி.பிரவீனன் ’ஏலியன் கதைகள்’ என்ற விஞ்ஞானக்கதைகளை புத்தகமாக்கி தமிழுக்குத் தந்திருக்கிறார். பரத நாட்டியத்தில் மற்றய இனத்தவரின் ஆடல்கலைகளையும் ஏனைய நமக்கான ஆடல்கலைகளையும் வரலாற்று வடிவங்களையும் கலந்து நாட்டியக்கலையில் இன்னொரு பரிமானத்திற்கு நாட்டியத்தை நகர்த்திய நாட்டியக்கலாநிதி. கார்த்திகா கணேசர் இரண்டு நாட்டியக்கலைகள் சம்பந்தமான புத்தகங்களைத் தந்திருக்கிறார். தாவரவியலில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் ‘கறுத்தக் கொழும்பான்’ என்றொரு புத்தகத்தினூடாக புதிய இலக்கிய வகை ஒன்றைத் தமிழுக்கு பரீட்சயப்படுத்தி இருக்கிறார். இளம் எழுத்தாளராக இணைய உலகில் பிரபலமாகி வரும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருக்கும் ஜேகே அவர்கள் போராட்ட கால இளையோரின் ஒரு காலகட்ட வாழ்வை புனைவினூடே ஓர் வரலாற்றனுபவமாக நமக்கும் இனி வருவோருக்கும் ‘கொல்லைப்புறத்துக் காதலிகள்’ என்ற பெயரில் தனக்கே உரிய பாணியில் தனித்துவமாகத் தந்திருக்கிறார்.( 2012இன் தொடக்கத்தில் நம் சந்திப்பினை ஆரம்பித்த போது “உயர்திணை” என்ற பெயரை நம் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தவரும் அவரே.) கீத மஞ்சரி அவுஸ்திரேலிய நாட்டு பழங்குடியினரின் கதைகளை மொழிபெயர்த்து தமிழுக்கு புது மகுடம் சூட்டி இருக்கிறார்.
இவை அனைத்தும் கடந்த அரேவருட இறுதி அளவில் வெளிவந்திருக்கின்றன. இவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியத் தமிழர்கள். புலம்பெயர் இலக்கியத்துக்கும் கலைக்கும் வளம் சேர்த்திருக்கிற சிற்பிகள்.புதிய தலைமுறை எழுத்தாளுமை மிக்க கலைஅஞர்கள்.செதுக்கி செதுக்கி இவர்கள் தந்திருக்கிற கலைக்கருக்கள் நேர்மையோடும் அழுத்தமாகவும் விமர்சனத்தோடும் ஆழத்தோடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடும் அணுகப்பட்டு அதன் இருப்பு; அதற்கான சிம்மாசனம் கொடுக்கப்படுதல் நிச்சயிக்கப்பட வேண்டும்.அவை தமிழுக்கும் புலம்பெயர் இலக்கியத்திற்கும் புதுச் செழுமை சேர்ப்பவை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அவற்றிற்கு பரவலான அறிமுகம் கிடைக்க ஏற்றன செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொன்றும் தனித்துவமான தனித்தனி முத்துக்கள். தமிழின் பல்வேறு பக்கங்களை செழுமை செய்பவை.அழகூட்டுபவை.
புலப்பெயர்வின் அழகுகள்!
நமக்கு முன்னால் பல கடமைகளும் சுகமான சுமைகளும் அனுபவிக்கப்படக் காத்திருக்கின்றன.
புதிய வருடம் மலர்ந்திருக்கிறது. அதன் முதலாவது சந்திப்பை நாம் எல்லாம் சந்திக்கும் ஓர் ஒன்றுகூடலாகவும் அதே நேரம் இவ்வருடத்தை திட்டமிடும் ஒரு கலந்துரையாடலாகவும் அமைக்க எண்ணி உள்ளோம்.
ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்!
இம்மாத இறுதி நீண்ட வார விடுமுறையாக இருப்பதனால் பலரும் உங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ந்திருக்கப் பிரியப்படுவீர்கள். மேலதிகமாக ஒரு நாள் ஓய்வொன்றினையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அதனால் இம்மாத நம் சிற்றுண்டியோடு கூடிய ஒன்று கூடலையும் கலந்துரையாடலையும் திட்டமிடலையும் 25.1.1015 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 - 7.00 மணி வரை வழக்கமான நமது பரமற்ரா பூங்காவில் தேநீர் சாலைக்கு முன் புறம் அமைந்திருக்கின்ற கூடாரத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்க வருவீர்களாக!
உங்களது சந்திப்பு சந்தோஷமாக அமையட்டும்.
ReplyDeleteமகிழ்ச்சி குமார்.
ReplyDelete11.1.15 என்றிருந்த திகதி கால அவகாசம் போதாமையால் வழக்கமான நமது மாத இறுதிக்கே மாற்றப்பட்டிருக்கிறது குமார்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் அவ்வண்ணமே ஆகுக!
ReplyDeleteநன்றி குமார்.