Monday, February 23, 2015

அழகு, சுதந்திரம், கம்பீரம் - மற்றும் ஒரு மயில்


அந்தப் பூங்காவுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்துப் போது காதில் விழுந்த சத்தம் மாயோ மாயோ என்றொரு அகவல் ஒலி. இது மயிலின் சத்தம் என அறிய பெரிதாக அனுமானங்கள் எதுவும் வேண்டி இருக்கவில்லை. 

உள்ளே ஒரு மரக்கிளையில் தோகையோடு  சுதந்திரமாய் கம்பீரமாய் கழுத்தை உயர்த்தி அது இருக்கக் கண்டோம். அதை உடனடியாகப் பார்க்கும் ஆவல் இருந்த போதும் பூக்களையும் பூங்காவையும் பார்க்கும் வழியில் அவரைக் காண்போம் என சமாதனப் படுத்திக் கொண்டு  பூங்கா சுற்றி வந்த பின்னால் அவரைக் காணோம்.

நாம் ஒரு பாட்டம் சுற்றிவிட்டுக் களைப்பாற நிழலான ஒரு மர இருக்கையில் 
( மர இருக்கை - கீதமஞ்சரியின் மொழிபெயர்ப்பில் பொறுக்கியது) அமர்ந்தோம்.

இம்மயில் எங்கிருந்தோ வந்தது. நம்மைச் சுற்றிச் சுற்றி இரண்டு பாட்டம் நடந்தது. தன் அழகினை வலமும் புறமுமாக மேலும் கீழுமாக நடந்து காட்டியது. அது ஒரு அழகுராணிப் போட்டியில் அல்லது புத்தாடை அணிவகுப்பு மகளிரின் நடை ஊர்வலத்தை ஒத்திருந்தது.
பின்னர் என்ன நினைத்ததுவோ எதுவும் சொல்லாமலே நடந்து போய் விட்டது.

அழகு; சுதந்திரம்; கம்பீரம் என்றால் என்ன என்ற பாடத்தை அது மெளனமாய் கற்றுத் தந்து சென்றது.

ஏனோ அதனை ஆண் என்றழைக்க மனம் கூடுதில்லை!






























Monday, February 16, 2015

மர மாண்மியம்


அண்மையில் நம் வீட்டில் இருந்து 10 நிமிட வாகன தூரத்தில் இருக்கும் ஒரு சிறு பூங்காவுக்குப் போயிருந்தோம். கோடை காலம் என்பதால் தட்ப வெப்ப நிலை சற்றே ஏறுக்கு மாறாக இருந்தது. மதியம் வேறு. மதிய நேரம் 29 பாகை வெப்பநிலையில் எடுத்தவை இவை.

இந்த மர வேரைப் பார்த்த போது எத்தனை அழுத்தமாய் உறுதியாய் நிலத்தைப் பற்றிப் பிடித்த படி இருக்கிறது எனத் தோன்றியது. பறவைகளின் கால் அலகுகளை மாதிரியும் இருக்கிறதில்லையா?


இவ தான் அந்த வேர் கொண்டிருக்கிற கிளை. அகன்று விரிந்து பரந்து கிளை பரப்பி நிற்கக் காரணம் அந்த உறுதியான வேரின் பிடி தான்.


இது ஒரு சாதி பச்சோந்தி மரம் மாதிரி. மரத்தில ஒரு மரம். இலையால மரத்தை பிடிச்சுக் கொண்டு கொஞ்சம் வித்தியாசமா.....


இது பந்தல் இலைகள் ஒழுக விட்ட வெளிச்ச வட்டங்கள். அதுவும் போடுது கோலம்!


குட்டி இன நாய்களுக்கு இங்கு இப்படித்தான் மயிர் வெட்டி ரிபனும் கட்டி விடுவார்கள். விசித்திர இலைகள்!


மயிரிலைகள் தன் ‘கிளை’களோடு!


மரத்துக்கு மனித வலு சேர்த்த வண்ணம்! 

பாதைக்கு நிழல் தந்த வண்ணமாக!

உறவுகளோடு இலைக் குடும்பம்!


நீரருகே வாழும் மரங்கள்.

மரம் பூக்குது ஒரு பெரும் பூ!


வெய்யிலினால் படம் தெளிவாய் தெரியவில்லை. மூன்று வித பச்சையில் மூன்று வித இலை வடிவங்களில் அருகருகே. சிநேகிதர்களாக்கும்!


பாறைக்குள்ளும் முளைக்கும் தாவரங்கள். அவை பூக்கவும் செய்யும் அதிசயம்!


இவையும் அவையே!


மர மான்மியம் இவ்வளவு தான். அங்கு ஒரு மயிலும் சுதந்திரமாய் இம்மரங்களுக்குள்ளே மாயோ மாயோ என்று அகவிய படி இருந்தது.

அவை அடுத்த பதிவில் வரும்.

(Auburn Botanical Garden 12.2.15)

(ஆனால் அடுத்த பதிவு எப்ப வரும் எனத் தெரியாது. ஏனென்றால் விடுமுறை முடிந்து நாளை வேலை ஆரம்பம்.) 
















Saturday, February 14, 2015

உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறது?

உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறது?
பொய்களை…................
களவுகளை………………….
ஏமாற்றுக்களை……………..
துரோகங்களை………………

மைக்கல் ஹில் ஜுவலர்ஸ் இற்கு வாருங்கள். கச்சிதமான விலையில் ஒப்பற்ற நகைகளைப் வாங்கிப் பரிசளியுங்கள்.

Happy valentine’s Day!


இது கடந்த சில தினங்களாகக் தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருக்கிற விளம்பரம்.

இன்று காதலர் தினம்! பரஸ்பர அன்பினை நிச்சயப்படுத்திக் கொள்ளும் ஒரு தருணம் எனலாமா இதை?

இங்கு வந்ததன் பின் அறிமுகமான சொல் இது. மேலைத்தேய பண்பாட்டின் உருவம் கொண்டது.

காதல் என்ற இச் சொல் இன்று எதனை உச்சாடனம் செய்கிறது? சுயநலம் என்ற சொல்லுக்குள் சிக்குண்டு போயிருக்கிறது அது. காரணங்களினால் அலங்காரப் படுத்தப்படுகிறது. அதே நேரம் காரணங்களுக்கான வேர்களோ எப்போதும் மன்னிப்பைக் கோரி நிற்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் இந் நாட்டை Free Country என்றார்கள். அதன் தாற்பரியம் புரிபட எனக்கு பல வருடங்கள்ஆயிற்று.

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு காலங்களுக்கும் ஒவ்வொரு இனங்களுக்கும் என்றிருந்த; என்றிருக்கிற பண்பாடுகள் புதினமானவையாக வியப்பூட்டுவனவாக இருக்கின்றன.

ஊரில் இருந்து பிறநாடு வந்த ஆரம்பத்தில் பெண்கள் பகிரங்கமாக புகைப்பதையும் மது அருந்துவதையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இதனை நம் ஊர்களில் நினைத்துப் பார்க்க முடியுமா?

அது மாதிரி என் ஆப்கானிஸ்தான் தோழி புனித யாத்திரைக்காக மக்கா போன போது அங்கு அவள் விடுதிக்கு வந்த இளம் முஸ்லீம் அழகி ஒருத்தி தன் ஆசைக் கணவனை இவள் திருமணம் செய்து கொள்ள  வேண்டும் என்று வற்புறுத்தினாளாம். ஏன் என்று கேட்ட போது தன் கணவனைப்போல திறமான கணவனை இந்த உலகிலேயே காண முடியாது. அவனுக்கு ஒரு குழந்தையை எனக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அவனுக்கு என்னால் கொடுக்கக் கூடிய அதி உன்னத பரிசு மார்க்கப் பற்று நிரம்பிய அழகி ஒருத்தி மாத்திரமே! நீ அதற்கு மிகத் தோதானவள் என்று அவள் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் தனக்கு முன்னாலும் பின்னாலுமே திரிந்தாளாம். நமக்கு நினைத்துப் பார்க்கக் கூடிய சங்கதியா அது?

’ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்த எனக்கு இதுவும் ஒரு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

மேலைத்தேயப் பண்பாட்டில் திருமணத்துக்கு முன்னரான பாலியல் உறவு மிகச் சாதாரணம். திருமணம் இல்லாமலே சேர்ந்து வாழுதல் அதை விடச் சாதாரணம். திருமணத்துக்குப் பின்னரான வேறு ஒருவருடனான பாலியல் உறவு கூட இங்கு இப்போது பொது நடைமுறையாகி வருகிறது. இவர்களால் (ஆணும் பெண்ணும்) காதலை வேறாகவும் காமத்தை வேறாகவும் பிரித்து பார்க்க முடிகிறது. காதலை ஓரிடத்திலும் காமத்தை வேறொரு இடத்திலும் தனித்தனியாக வைக்க இயலுகிறது.  இவை எல்லாவற்றுக்கும் சட்டப்பாதுகாப்பும் இருக்கின்றன. இவை எல்லாம் நம் பண்பாட்டுக்கு இன்னும் ஆச்சரியங்கள் தான்!

ஒழுக்கம்,சமயம்,பண்பாடு எல்லாம் நமக்கு நாம் போட்டுக் கொண்டவை தான் என்ற உண்மை என் 48வது வயதில் தான் என் முகத்தில் வந்து அறைகிறது. இந்தப் பழக்கப்பட்ட கருத்துக்களை;  நம்பிக்கைகளை; வாழ்க்கை முறைகளை குறிப்பிட்ட ஒரு காலத்துக்குப் பிறகு கடத்தல் என்பது இயலாதது அல்லது எவ்வளவு கடினமானது என்ற உண்மை அதை விட மோசமாய் மற்றொரு புறமாய் அறைகிறது.

இவை எல்லாம்  இடத்துக்கிடம் காலத்துக்குக் காலம் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுகின்ற போது நம்மால் ஏன் அவற்றை ஏற்றுக் கொள்ள இயலாது போராட நேர்கிறதென்று தெரியவில்லை.

நம் கருத்துக்களாலும் நம்பிக்கைகளாலும் நம் வாழ்வு கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது போலும். அதில் ஏற்படுகிற சிறு அசைவும் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கிறது.

ஆனாலும், பண்பாடுகள் சமயங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் விதமாக நம்மை நல்ல மனிதர்களாக வாழ வழிவகை செய்கின்றன என்று சொல்லுகிறார்கள். ஆனால் மதத்துக்காகவும் மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் எத்தனை ஆயிரமாயிரம் உயிர்களை அன்றிலிருந்து இன்று வரை  நாம் காவு கொடுத்து வருகிறோம்?

என்ன ஒரு முரண்நகை!

நாம் இறப்பு என்பதை ‘உடல் மறைதல்’ என்ற விதமாக அர்த்தப் படுத்தி வைத்திருக்கிறோம். அதை விட வலி தரும் இறப்பு என்பது நம்பிக்கை துரோகத்தை; ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை எதிர் கொள்ளும் தருணம் எனலாமா?

அன்புக்கு அப்படி ஒரு மரணமும் இருக்கிறது! சாதாரண இறப்பை விடக் கொடியது அது.

சரி, அது போகட்டும்.

சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாவிட்டால்; அடுத்தவருடய மனம் புண்படாத விதமாக நமக்கு வாழத்தெரியாவிட்டால்; அவர்கள் கடைப்பிடித்து ஒழுகுகிற சமயம்,பண்பாடு, ஒழுக்கம் இவை எல்லாம் இருந்து பயன் என்ன?

உண்மையாய் இருத்தலினதும் நேர்மையாய் இருத்தலினதும் ஒருவருக்கொருவர் விசுவாசமாய் இருத்தலினதும் பாற்பட்ட சாதாரண ஓர் அன்பு சார் அழகியல் வாழ்வைத் திருடிப்போனது எது?

சுயநலம் எனலாமா அதை? அப்படியெனில் உலகத்துப் பண்பாடுகள் சீர் செய்ய வேண்டிய எளிமையான சொல் இது.

நம்முடய பெற்றோர் பார்த்து பேசி செய்து வைக்கும் திருமனங்களைப் பார்த்து வியந்து வாயில் கைவைத்து ஆச்சரியம் கொள்ளும் வெளிநாட்டுத் தோழியரை நான் கொண்டிருக்கிறேன். ஒரு தடவை நம் வேலை நேர ஓய்வின் போது நம்முடய சமயங்களைப் பற்றிய பேச்சு வந்தது. என் தோழி ஒருத்தி என்னை இவ்வாறு அறிமுகப்படுத்தினாள். ’இவ மாடு, குரங்கு (ஆஞ்சநேயர்) எல்லாவற்றையும் வழிபடுபவள்’. அவள் சொன்ன விதம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது.

குடும்பத்தில் தம்பதியரிடையே  பிள்ளை இல்லை என்ற விடயத்திற்கு வருவோம். பிள்ளை இல்லை என்றால் இல்லை என்று ஒரு குறை மட்டும் தான். இருந்தால் எத்தனை குறைகள்; கவலைகள்? பிறந்ததில் இருந்து பேரப்பிள்ளை ஒன்று காணும் வரை பிரச்சினைகளினதும் குறைகளினதும் பட்டியல் நீண்டுகொண்டே போகுமில்லையா? பிள்ளை இல்லை என்றால் எத்தனை சுகம்? எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. சேர்த்து வைக்க வேண்டும் என்ற சுமை இல்லை. சோடிக்கிளிகளாய் வாழ்க்கையில் விரும்பியதை விரும்பியவாறு செய்யும் சுதந்திர சுவாசம் எத்தகைய ஒரு வரப்பிரசாதம்!

பிற நாட்டில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் பிள்ளை பெற்றுக் கொள்ள பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதில்லை. இதற்காக அரசாங்கம் பிள்ளை பெற்றுக் கொண்டால் தரவென்று பெரிய பரிசுத்தொகையை அறிவித்தும் பலன் பெரிதாய் கிட்டவில்லை. அது தம் சுகத்துக்கு இடைஞ்சல் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்திய தேசத்தில் அதற்கு முற்று முழுதாக மாறுபட்ட நிலை. பிள்ளை இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாதெனில் எத்தனை அநாதைக் குழந்தைகள் இந்த உலகில்? ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுக்க ஏன் மனம் வருகுதில்லை?

கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழும் மனநிலையை ஏன் நம் பண்பாடு நமக்குக் கற்பிக்கவில்லை?

மனங்கள் இன்னும் விரியட்டும்!.

உலகத்து மக்கள் எல்லோரும் “ அடுத்தவர் (அவர் எவராயும் இருக்கட்டும்) - சக மனிதனின் - மென் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வாழ்வதே என் பண்பாடு அல்லது என் சமயம் அல்லது என் வாழ்க்கை முறை என்று தன் வாழ்வை வரையறை செய்து கொண்டால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!?

காதலும் அன்பும் அதனைக் கொண்டிருக்கிற வாழ்வும் அர்த்தம் பெறும் தருணங்களாக அவை அமைந்து விடாதா?

Happy valentine’s Day!

Monday, February 9, 2015

கீதா. மதிவாணன் காட்டும் ஹென்றி லோஷன் -

அண்மையில் முல்லாவின் கதை ஒன்று வாசித்தேன். கதை இதுதான்.



முல்லா வாழ்ந்து வந்த தேசத்தின் மன்னருக்கு ஒரு கண் மட்டும் பார்வை தெரியும். ஒரு கை மணிக்கட்டும் அவருக்குக் கிடையாது. ஒரு காலும் முடமானவர். இருந்தும், சாமர்கண்ட் நகரத்தில் மயக்கும் அரண்மனைகளையும்; விண்ணை முட்டும் மாட மாளிகைகளையும்; அழகு மிகு கனவுத் தோட்டங்களையும்; ஆடம்பரமான வாசஸ்தலங்களையும் அம் மன்னர் ஸ்தாபித்தார்.

அம் மன்னருக்கு வரும் தலைமுறையினர் எல்லோரும் தான் யாரென்று தெரிந்து கொள்வதற்கு தனது சித்திரம் ஒன்றைத் தீட்டி வைக்க வேண்டுமென்ற தணியாத தாகம் இருந்தது.

காலத்தை வென்று தனது பிரதாபங்களை உலகத்துக்குத் தெரிவிக்கும் சித்திரம் ஒன்றை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மன்னனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அதற்காகச் சீன தேசத்தில் இருந்து ஓவியர் வரவழைக்கப்பட்டார். அவ் ஓவியர் முப்பது நாட்கள் அரும் பாடுபட்டு தனது திறமை எல்லாம் ஒன்றுகூட்டி மன்னரின் அச்சு அசலான பிம்பத்தைத் திரைச்சீலையில் வரைந்திருந்தார்.

மன்னரே உயிருடன் திரைச்சீலையில் இருந்து நம்மைப் பார்க்கிறாரோ என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்தது அவ் ஓவியம்.

முப்பத்து ஓராம் நாள் திரை விலக்கப்பட்டது.

மன்னர் அச் சித்திரத்தை உற்றுப் பார்த்தார்.

’படம் நிஜமாய் இருக்கிறது; ஆனால் அவலட்சணமாய் இருக்கிறது. அந்தப் புழுவை வெளியே தூக்கிப் போட்டு அவன் தலையைக் கொய்து நான் காலூன்றுவதற்கு திரும்ப எடுத்து வாருங்கள்’ என்றார் அரசர்.

அடுத்த ஓவியர் வரவழைக்கப்பட்டார்.

அவரும் கடும் முயற்சியுடன் படம் வரைந்து நடுங்கும் கரங்களுடன் அதை அரசர் முன் சமர்ப்பித்தார்.

அரசர் அச் சித்திரத்தை வியப்புடன் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தனது தீர்மானத்தைச் சொன்னார்.

‘இந்தப் பிம்பம் அழகாய் இருக்கிறது. ஆனால் நிஜமாய் இல்லை. வெளியே அவனைச் சிரச்சேதம் செய்து தலையை அவன் காலடியில் போடுங்கள் ‘

மூன்றாவது முறை யாரும் தைரியமாக படம் வரைய முன் வரவில்லை.

வழக்கம் போல முல்லா அரசவைக்கு அழைக்கப்பட்டார். வாளுக்கு இரையாகப்போகிறாரா அல்லது தூரிகையைத் தொடப்போகிறாரா, இதில் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு முல்லாவுக்கு ஆணை இடப்பட்டது.

முல்லா தூரிகையைத் தேர்ந்தெடுத்தார். வெளியே பெயர் தெரியாத சில சித்திரக்காரர்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் உதவியுடன் படத்தை வரைந்து முடித்துக் கொண்டார் முல்லா.

படத்திறப்பு விழாவை மேலும் தாமதப்படுத்த முடியாத கட்டம் நெருங்கியது.

அரசர் தன் கரங்களால் படச் சீலையை விலக்கினார்.

அரசர் ஓவியத்தைப் பார்த்தார். பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். புருவத்தை இறுக்கினார். தலையைச் சொறிந்தார். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். வானத்தைப் பார்த்தார். நீண்ட நேரம் ஸூக்காவைப் புகைத்தார். பின் ராஜகளை பொருந்திய தனது முகத்தில் புன்னகையைப் படரவிட்டார்.

’ரொம்ப மோசமில்லை. நான் அழகாய் தோன்றவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நான் முடமென்று யார் கவனித்துச் சொல்லி விட முடியும்?’

நான் அம்பெய்தும் காட்சியை இக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது எனக்கு ஒருகண் பார்வை மட்டும் இருப்பதையோ அல்லது என் மணிக்கட்டு ஊனத்தையோ யாரும் கவனிக்க முடியாது.

இந்த வேடிக்கையான ஓவியக்காரரை தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்.

'அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது’ என்று சந்தோஷமாகக் கூத்தாடினார் அரசர்.

( நன்றி: ‘என்றார் முல்லா’முல்லா நஸ்ருதீன் கதைகள்; மொழிபெயர்ப்பு; சஃபி; டிசம்பர் 2009, உயிர்மை பதிப்பகம்; பக் 191 - 192.)

இந்தக் கதையை வாசித்து முடித்த போது என் மனதில் சட்டென தோன்றிய ஒன்று அண்மையில் நான் படித்து முடித்திருந்த கீதா. மதிவாணனின் ”என்றாவது ஒரு நாள்” என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதி.



அவுஸ்திரேலிய செவ்வியல் புனைகதை எழுத்தாளரான ஹென்றி லோஷனின் (1867 - 1922) தமிழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய தொகுதி  ’என்றாவது ஒரு நாள்’ அகநாழிகை பதிப்பகத்தினால் 166 பக்கங்கள் கொண்டதாக டிசம்பர் 2014 வெளியிடப்பட்டிருக்கிறது.

கீதா. மதிவாணனின் கைவண்ணத்தில் ஹென்றி லோஷன் பற்றிய ஆச்சரியம் மிக்க வரலாற்றுக் குறிப்புகளுடனும் மொழிபெயர்ப்பாளரின் அறிமுகக்குறிப்புகளுடனும் எங்கிருந்து பெறப்பட்டது என்ற ஆவண விபரங்களோடும் சுமார் 22 கதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இக்கதைகளின் களம் ஒரு புதிய வாழ்க்கை முறையின் தொடக்கம் என்பது வரலாற்று உன்மை. இங்கிலாந்தில் ஜோர்ஜ் மன்னர்களின் காலணி ஆதிக்கம், பொருளாதாரச் சரிவு போன்றவற்றால் பெருகிய திருடர்களும் குற்றவாளிகளும் இடமில்லாக் காரணங்களால் நாடு கடத்தப் பட வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரனமாக அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு வந்திறங்கியோர் தான் இவரின் இக்கதை மாந்தர்கள்.

ஹென்றி லோஷனின் பாத்திரங்கள் கீதா சொல்லி இருப்பது போல காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும் அடிமட்டத் தொழிலாளிகளும் சுரங்கக் குழிகளுக்குள் தம் அதிஷ்டத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களும் தான். கதையின் ஓரிடத்தில் ” பெரிய பெரிய மீசையுடனும் கையில் துப்பாக்கியுடனுமான மனிதர்களை கலிஃபோனியாவில் கண்டிருக்கிறேன்.ஆனால் துளைக்கும் பார்வைக்குப் பின்னால் ஒரு இயல்பான பளிச்சிடும் புன்னகை இருக்கும் மனிதர்களை அவுஸ்திரேலியாவில் தான் பார்க்கிறேன். வெய்யிலால் கறுத்து மெலிந்த தோற்றமுடய இக்காடுறை மனிதர்கள் என்றாவது ஒரு நாள் தங்கள் காரியங்களை எளிய முறையில் ஆற்றுவார்கள். அன்று இந்த உலகம் பழைமையின் பிடியில் இருந்து விடுபட்டு நிமிர்ந்தமர்ந்து யோசிக்க ஆரம்பிக்கும்” என்கிறார்.(அவன் ஏன் அப்படிச் செய்தான்; பக்; 98)



உண்மை தான். இந்த மக்கள் ஜனவரி 26, 1788இல் 1500 பேரோடு இங்கு வந்து இறங்கிய போது பூர்வ குடியினரிடம் இருந்து தம்மைக் காக்க வேண்டிய தேவையும் குடியேற்றங்களை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடும் இவர்களுக்கு இருந்தது.

கைதிகள் நிலச்சுவாந்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாகினர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் குறைந்த கூலிக்கு இவர்கள் வேலையாட்களாக அமர்த்தப்பட்டனர். பெண்கள் பணிப்பெண்களாகவும் மனைவிகளாகவும் ஆசைநாயகிகளாகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்பட்டனர். ஓய்வற்ற பணியும் கால்வயிற்று உணவும் இவர்களை மேலும் கொள்ள்கைக்காரர்களாகவும் திருடர்களாகவும் முரடர்களாகவும் மாற்றியது. இவர்களது இந்த சட்ட விரோத காரியங்களால் இவர்கள் மேலும் காடுகளில் தலைமறைவு வாழ்க்கையை வாழ நிர்பந்தத்தைக் கொடுத்தது. என்ன செய்வதென்று தெரியாது தவித்த இவர்களின் வாழ்வுக்கான உந்துதல்களே ஹென்றி லோஷனின் கதைக்களம் நிகழும் கதை மாந்தர்.

ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவர்கள் இங்கு வந்திறங்கிய போது அபிரோஜினல் பழங்குடியினர் 500 க்குமதிகமான இனக்குழுக்களாகப் பிரிந்து பல்வேறு வகையான மொழிகளைப் பேசி வந்தாலும் அவர்கள் சுவர் சித்திரங்கள் ஊடாகவும் மரப்பட்டைகளில் வரைந்த ஓவியங்கள் மூலமாகவும் பேச்சு மொழியூடாகவுமே தம் பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் வாழ்க்கை முரைகளையும் அடுத்த சந்ததிக்கு கடத்தி வந்தனர். இதனால் அவுஸ்திரேலியாவின் படைப்பிலக்கியம் என்பது ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகான காலத்தில் இருந்தே உருப்பெற்றன.

அதன் காரணமாகவும் அவுஸ்திரேலிய வரலாற்றில் ஹென்றி லோஷனின் கதைகளுக்கு தனியிடமுண்டு.



இவருடய கதைகளில் உலா வருபவை எல்லாம் முற்றிலும் மாறுபட்ட சூழலும் சுற்றுப்புறமும் புதிரான மனிதர்களும் புதிய வாழ்க்கை முறையும் இது வரை அறிந்திராத உயிரினங்கள் பற்றிய பிரக்ஞையும்; பல தடவைகளாக வந்திறங்கிய பல்வேறு ஐரோப்பிய நாட்டு குடியேற்ற வாசிகளின் மொழிக்கலப்பும் பழங்குடி மக்களின் பேச்சு மொழியும்  சேர்ந்து உருவாக்கிய புதிய கொச்சை மொழி வழக்கும் சேர்ந்த ஒரு ஆங்கில பாசையும் கலந்த ஒரு மாறுபட்டதொரு இலக்கிய பின் புலமாகும்.

புதிய பண்பாடு ஒன்று எழுத்து வடிவம் தோன்றாத ஒரு பாரம்பரியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து முகிழ்ந்து தனக்கென ஒரு ஆழுமை மிக்க வடிவத்தை அவுஸ்திரேலிய ஆங்கில இலக்கியத்திற்கு கொடுத்ததென்ற வகையிலும் ஹென்றிலோஷன் சிறப்பிடம் பெறுகிறார்.

 ஹென்றி லோஷனின் தனிப்பட்ட வாழ்க்கையே மிக அல்லல் நிரம்பியதாக இருந்திருக்கிறது. செவிடராக இருந்தார். குடும்பவாழ்க்கை வெற்றிகரமானதாக அமைந்திருக்கவில்லை. வறுமையின் பிடியில் சிக்கி இருந்ததோடு பிள்ளைகளுக்கான ஜீவனாம்சத்தைக் கூட ஒழுங்காக வழங்க இயலாதவராக இருந்தார். பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததோடு கடுமையான மது பாவனைக்கும் உரியவராய் இருந்து மிகுதியான மன அழுத்தத்தோடு பிச்சை எடுப்பவராகவும் தன் வாழ்க்கையை நடாத்தி  தனது 55 வது வயதிலேயே உயிர் நீத்தார்.


இந்த இடத்தில் தான் ஹென்றி லோஷனின் கதை மாந்தர்கள் முக்கியம் பெறுகிறார்கள். அவர்கள் இவரின் உன்னிப்பான அவதானத்துக்கு ஆட்பட்டவர்களாக இருந்தார்கள். இவர் செவிடராக இருந்ததாலோ என்னவோ அவருடய கண்களின் தீட்சன்யம் அபரிதமானதாக விளங்கி இருந்தது. ஒரு பாத்திரத்தின் புறவயமான செயற்பாட்டை மாத்திரம் சித்திரிப்பவராக அல்லாது அப்பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை துல்லியமாக எடை போடக்கூடியவராகவும் அவர்களின் மனதுக்குள் சென்று அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒரு வித நகைச்சுவை இளையோட வெளியே கொண்டு வருபவராகவும் அவர் இருந்தார். அந்த பாத்திர வார்ப்பினூடே அவர் சித்திரிக்கின்ற வஸ்து  அல்லது ஒரு மனித உணர்வு அல்லது குணாம்சம் அதன் இயல்பு நிலை மாறாது மிளிரக் காணலாம். அவை உண்மைகளை விட்டு ஒரு போதும் தூரச் சென்றதில்லை; மிகையுணர்ச்சி வசப்படுவதில்லை; ஆர்ப்பாட்டமான அலங்காரங்களுக்கு அவை ஆட்பட்டனவுமல்ல. யதார்த்தத்தினை அவை எங்கெங்கனும் மிளிர விட்டனவாகவே அவரது ஒவ்வொரு சொற்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதனால் அப்பாத்திரங்கள் அலங்காரமற்ற நம் அக மனங்களில் பசுமரத்தாணி போல பாய்ந்து நிலைபெற்றிருக்கின்றன.

அதனை அவ்வாறு கொண்டு வந்ததில் கீதா. மதி வாணனின் மதி நுட்பமும் செயற்திறனும் தமிழ் மொழி வீச்சும் அவரின் தார்மீக குணாம்சமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன. சுட்டும் விழிச் சுடராய் மிளிர்கின்றன.  ஒரு படைப்பாளி ஒரு வாசகருக்கு வழங்கக் கூடிய அதிக பட்ச பரிசாக இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் விளங்குகின்றன.

முற்றிலும் வேறு பட்ட வாழ்வு; பண்பாடு; வாழ்க்கை முறை. புதுப்பண்பாடு ஒன்று முகிழும்  காலப்பகுதி. கொச்சை மொழிவழக்கும் புரியாத மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் வரி வடிவங்கள்! இத்தனைக்குள்ளாலும் நெளிந்து வளைந்து லாவகமாக  ஆங்கிலச் சொற்கள்  நுழையாத தலைப்பாகை கட்டிய தமிழ்! நுரை பொங்கப் பொங்க ஆறாகப் பெருகி வருகிறது! கீதாவின் மூலமாக ஹென்றி லோஷன் பால் மதிப்பும் மரியாதையும் மேலோங்குகின்றன. அவரை அப்படியே கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதில் - நம் மனதில் அவரைப் பதியச் செய்ததில் தெரிகிறது மொழிபெயர்ப்பின் கைவண்ணம்.


உதாரணத்துக்கு ”பண்ணையில் ஒரு நாள் “ என்ற ஒரு கதையை மாத்திரம்  எடுத்துக் கொள்வோம். கதையின் சாராம்சம் பிளைகளோடும் ஏழ்மையோடும் இடையறாத வேலைகளோடும் அன்றாடம் கஸ்ட ஜீவனம் நடத்தும் மனைவி. அது பற்றிய எண்ணங்கள் கரிசனைகள் ஏதுமற்று நண்பனோடு அதே வீட்டில் உலக செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் கணவன் மற்றும் அந்த நாள் ஒன்றின் நகர்வு.


கதாபாத்திரம் 1; விடலைச் சிறுவன்:-



கதையின் ஆரம்பத்தில் 15 வயது மதிக்கத் தக்க ஒரு விடலைச் சிறுவன் மாடுகளை ஓட்டி வருகிறான்.அவனின் குண இயல்பு பற்றிய பாத்திர வார்ப்பு இவ்வாறாக வளர்ந்து செல்கிறது.

” .... வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த களைத்துப் போன முகத்துடன் கூடிய பெண்மணி மலையடிவாரத்தின் பக்கம் பார்த்துக் கத்தினாள்.
” டா..ஆஅ...மீ..ஈ..ஈ..”
பதில் இல்லை. அவள் மூச்சைப் பலமாக உள்ளிழுத்து மீண்டும் கத்தினாள். ’டா..ஆஅ...மீ..ஈ..ஈ..”...
பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்து கத்தினாள்.
’டா...ஆ..மீ...’
என்ன...ம்..மாஆ? டாம் கீச்சிட்ட குரலில் கேட்டான்.
‘இன்றைக்குள் அந்தப் பசுக்களைக் கொண்டுவந்து சேர்க்கப்போவதில்லையா?
இதோ நான் வந்து கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

டாம் வேலியின் பக்கவாட்டில் பாய்ந்தோடி ஒரு கறவைப்பசுவின் மீது கழியை எறிந்தான். பசு கொஞ்சத் தூரம் முன்னால் ஓடி மரங்களுக்கிடையே புகுந்து நின்று கொண்டு மேய ஆரம்பித்த போது அவன் மற்றொரு கறவைப் பசுவை துரத்தி உள்ளே கொண்டு வந்தான். பசுக்களையும் கன்றுகளையும் அடக்கிக் கொண்டு வர ஒரு மணி நேரம் ஆகிப்போனது.

வளர்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியத் தலைமுறையைச் சார்ந்த நெடிய ஒடிசலான பதினைந்து வயது இளந்தாரி அவன். வீட்டுக்கு அடுத்தாற் போலிருந்தது தொழுவம். அதில் கணுக்கால் அளவுக்கு சேறாக இருந்தது. புழுதி படிந்து சோர்ந்து போயிருந்த பசுக்களில் ஒன்றை பட்டிக்குள் கொண்டு வந்து அடைத்தான். சிறு போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாய் அதன் பின்னங்காலை இழுத்துக் கட்டி பசுவை அசையாது நிற்கச் செய்தான்

அங்கு மொத்தம் பதினொரு பசுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைக்கூட பட்டியின் வெளியே வைத்து கறத்தல் எளிதன்று. காரணம் அவற்றின் பால் காம்புகள் ரணமாய் இருந்தன.......

பசுவை அசையாது நிறுத்திய பின் டாம் மிக எச்சரிக்கையுடன் பசுவின் மடிக்காம்புகளில் ரணம் குறைவாக உள்ள ஒரு காம்பைப் பிடித்து வெடுக்கென உருவிவிட்டு பசுவின் பின்னங்கால் தன் மேல் படாது சமர்த்தியமாய் நகர்ந்து கொள்வான். அவனுடய அழுக்கு கைவிரல்கள் நனையுமளவுக்கு ஓரளவு பால் வந்ததும் பால் காம்புகளை அந்தப் பாலாலேயே ஈரமாக்கி விட்டு பசுக்களுக்குச் சிரமமில்லாது கறப்பான்.

சோர்வு தரும் வழக்கமான இச் செயலில் இருந்து அவ்வப்போது விடுபடுவது போல பக்கத்துப் பட்டியில் அடைக்கப்பட்டு அரையுறக்கத்தில் இருக்கும் கன்றின் கண்களின் மீது பாலைப் பீச்சுவான். சில சமயங்களில் பாலை தன் வாய்க்குள் பீச்சிக் கொள்வான். பசு ஒவ்வொரு முறை காலை உதறும் போதும் குச்சி, புல், விதை போன்று ஏதாவது குப்பை பால் வாளிக்குள் விழுந்து விடும். சிறுவன் பாலை நேராக அதன் மீது பாச்சி அதைப் பாத்திரத்தின் அடியில் மூழ்கடித்து விடுவான். கண்னுக்குத் தெரியாத எதுவும் கருத்துக்கும் தெரியாது என்னும் கொள்கை விதிப்படி.

சில நேரங்களில் பசுவின் மடியில் தலையை முட்டி பால்காம்பில் வாயை வைத்து கிறக்கம் மேலிடப்  பாலை உறிஞ்சுவான். அவனுடய முழங்கால்களுக்கிடையில் இருக்கும் பால் வாளி கொஞ்சம் கொஞ்சமாக தழைந்து தரையைத் தொட்டுவிடும். அவனுடய தாய் ‘டாம், இன்றைக்குள் பால் கறந்து விடுவாயா?’ என்று கத்தும் வரையிலோ, அல்லது பசு காலை உதறி அவனை விழிக்கச் செய்யும் வரையிலோ அவன் அரை மயக்கத்தோடு பாலை உறிஞ்சிக்கொண்டிருப்பான்.

கன்று வந்து விட்டால் அதை எதிர் கொள்வது பெரும்பாடு. அவன் பசுவின் காம்பில் இருந்து தலையை எடுத்து விட்டு ஓடிச் சென்று கன்றினைப் பிடித்து வேறெங்காவது கட்டுவான். அது போன்ற சமயத்தில் பசுவின் கால்கட்டு தளர்ந்து  பசு தனது பின்னங்காலைப் பால் பாத்திரத்திற்குள் வைத்து விடுவதுமுண்டு. காலை வெளியே எடுக்கும் போது பாத்திரத்தைக் கவிழ்த்து விடாதிருக்க வேண்டுமே என்று பதறிய படி பட்டிக்கு ஓடி வருவான். சில நேரங்களில் அது நடந்து விடும். சில சமயம் நடக்காதிருக்கும். அது அந்தச் சிறுவனின் பலத்தையும் பட்டியின் வலிமையையும் பசுவின் நிலைப்பாட்டையும் பொறுத்தது. எப்பிடியிருந்தாலும் சிறுவன் கூர் பற்கள் உள்ள தோட்டத்து மண்வெட்டியால் பசுவுக்கு ஒரு அடி போட்டு விட்டு அடுத்ததைப் பிடித்துக் கட்டுவான் (பக்: 136 - 137)

பசு ஒன்று இரண்டு நாட்களாய் கானாமல் போயிருந்தது.அதனிடமிருந்து கிடைக்கவேண்டிய பால் கிடைக்காமல் இருந்தமையும் கூடுதல் வருத்தமளித்தது. சிறுவன் பசுக்களை மேச்சல் வெளிக்கு ஓட்டிவிட முயன்றான்.மேய்ச்சல் வெளிக்குச் செல்லும் பாதையில் இருந்த இரட்டைத்தடுப்பு கட்டை வேலியின் மேல் தடுப்புக் கட்டையை மட்டும் இறக்கினான். கீழ் தடுப்புக்கட்டை மிக இருக்கமாக இருந்தது.அதை இறக்க அதிக உழைப்பு தேவைப்பட்டது.அதனால் அதை அப்படியே விட்டு பசுக்கள் அதைத் தாண்டிச் செல்லும் படி செய்தான்.

அடுத்ததாய் குறுகிய காலத்தில் ஊட்டம் நிறுத்தப்பட்டு விட்ட கன்றுகளுக்கு கையால் பாலூட்டும் வேலையில் இறங்கினான். கறந்தெடுத்த பாலை ஒரு மண்ணெண்ணை டிரம்மிலோ அல்லது எண்ணை உருளையிலோ வைத்துக் கொண்டு தன் இடது கையால் கன்றின் கழுத்தை பாத்திரத்தினுள் அழுத்தி அழுக்குப் படிந்த தன் வலக்கை ஆட்காட்டி விரலை அதன் வாய்க்குள் செலுத்தினான். தாயின் காம்பென்று நினைத்து கன்று பாலை உறிஞ்சிக் குடித்தது. தாயிடம் குடிப்பதைப் போன்ற எண்ணம் எழவும் மடி முட்டும் தன் பழக்கத்தை மாறாமல் செய்து அவன் மணிக்கட்டை பாத்திரத்தின் விளிம்பில் வேகமாக மோதியது. அதன் தாடையில் ஒரு அடியும் வயிற்றில் ஒரு உதையும் விட்டதோடு  அதைப் பாலுக்குள் அழுத்தி மூச்சுத் திணறச் செய்தான். முடிவில் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அடுத்த கன்றைக் கொண்டு வந்தான். வேலைக்குப் பின் கைகள் பிசு பிசுப்புடனும் பாலூட்டிய ஒற்றை விரல் மட்டும் சுத்தமாகவும் இருப்பதைப் பார்க்கும் போது அவன் ஒரு வழுவழுப்பான கையுறை அணிந்திருப்பதைப் போன்றும் அந்தக் கையுறையில் ஒற்றை விரலுக்குரிய பகுதி மட்டும்கிழிந்திருப்பதைப் போலும் தோன்றியது.(பக்;139)

 கதா பாத்திரம் 2படுத்திருக்கிற மாடு:-




“மாடு அசை போட்டுக்கொண்டிருந்தது.அதனுடய மூக்கு மேலும் கீழுமாய் அசைந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடி இருந்தன. அது தன் கீழ் தாடையை கீழே இறக்கி, ஒரு பக்கமாக நகர்த்தியது. மீண்டும் மேலேற்றி பழைய இடத்துக்கு கொண்டு வந்தது. பார்ப்பதற்கு சுருள் வில் ஒன்று இழு பட்டு மீண்டும் பழைய நிலையை வந்தடைவது போன்றிருந்தது. பிறகு கொஞ்ச நேரம் தாடையை அசையாது வைத்திருந்தது. அது அசை போடுவதை நிறுத்தி விட்டது போலும் என்று  நினைப்போம். ஆனால் இருக்காது. இப்போதுஅதன் வாய்க்குள்ளிருந்து மெலியதாய் ஒரு கவளம் அதன் சுத்தமான வெண்ணிறத் தொண்டை வழியாக உள்ளிறங்கி மறைவதைக் காண முடியும். அது மறுபடியும் அசை போட்டது. கொஞ்ச நேரத்தில் அது சுயநிலை இழந்து அசை போடுவதையும் மறந்து போகும்.அது ஒரு போதும் கண்களைத் திறவாது. அது இளமையாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தது. போதுமான அளவு உண்டிருந்தது. வெய்யில் உணக்கையாக இருந்திருக்க வேண்டும். ஒரு விலங்கு உண்மையில் மகிழ்வாக இருக்க முடியுமென்றால் அன்று அந்தப் பசுவுக்கு அது மிகவும் பொருந்தும்.” - (பண்னையில் ஒரு நாள்; பக்: 139 -140)

வீட்டு நிலை:-

அவர்கள் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஏராளமான நல்ல நார் பட்டைகள் கிடைத்த போதிலும், பால் சேகரிக்கும் அறையின் பக்கவாட்டுச் சுவர்களாயிருந்த மக்கிப் போன மரப்பட்டைகள் மாற்றுவாரின்றி இருந்தன. கொட்டகை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழக்கூடிய நிலையில், ஒரு பக்கமாய் சாய்ந்திருந்தது. மேலும் சாய்ந்து விடாமல், மூன்று வளைந்த கம்பங்களால் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு கூடுதலாய் சில கம்பங்களின் தேவை விரைவிலேயே தேவை என்பதை கொட்டகை உணர்த்திக் கொண்டிருந்தது.

மண்னெண்ணை உருளைகள் பாதியாக வெட்டப்பட்டு அவை பால் சேகரிக்கும் பாத்திரங்களாகப் பயன் பட்டு வந்தன. அவை அறையிலிருந்த மரப்பட்டையாலான அடுக்குத் தட்டுக்களில் சுவரையொட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. மரத்தட்டு சம தளமாக இல்லாத காரணத்தால் பாத்திரங்களின் அடியில் மரப்பட்டைத் துகளோ, மரச்செதிலோ செருகி வைக்கப் பட்டிருந்தன. பாத்திரங்களின் மேல் சிறு குச்சிகளைக் குறுக்காக வைத்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு அழுக்குப் படிந்த செய்தித்தாளைப் போட்டு மூடியிருந்தனர். அந்தப் பாதுகாப்பு தேவைதான்.

ஏனெனில் கூரையின் மரப்பட்டைகள் விரிசலுற்றும் உளுத்துக் கொட்டிக் கொண்டும் இருந்தன. கூரையில் கோழிகள் அடைவதும் ஒரு காரணம்....”(பக்;137)

கணவரும் நண்பரும்:-

இந்தப் பண்ணையின் முதலாளியான விவசாயியும் அடுத்த வீட்டுக் காரரும் வேலியருகில் பக்கம் பக்கமாய் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். விவசாயியின் கைகள் கட்டை வேலியின் மேல் தடுப்பின் மேல் ஊன்றப்பட்டிருந்தன. தாடை அவருடய கைகளின் மேல் ஊன்ரப்பட்டிருந்தது. விரல்களுக்கு நடுவில் புகைக்குளாய் (சுங்கான்?) வீற்றிருந்தது. பார்வை வேலிக்கப்பால் அமர்ந்து (படுத்து?)அசை போட்டுக்கொண்டிருந்த வெள்ளைப்பசுவின் மேல் படிந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் கைகளும் மேல் தடுப்பின் மேல் ஊன்றப்பட்டிருந்தது. அவருடய தாடையும் அவருடய கைகளின் மேல் ஊன்றப்பட்டிருந்தது. அவர் விரல்களுக்கு நடுவிலும் புகைக்குளாய் வீற்றிருந்தது. அவருடய பார்வையும் வெள்ளைப்பசுவின் மீது படிந்திருந்தது. அவர்கள் அந்தப் பசுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த மூன்று மணி நேரமாக அவர்கள் அதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.(பக்;139)

இப்போது அவர்கள் இருவரும் வேலியை விட்டு விலகி தங்கள் புகைக்குளாயை நிரப்பிக் கொண்டு பலன் கருதி ஊன்றப்பட்டிருந்த சில மரக்குச்சிகளின் பக்கம் சென்று பார்வையிடலாயினர். விவ்சாயி அந்தக் குச்சிகளைப் பழ மரங்கள் என்றார். அந்த இடத்தை தோப்பு என்றார்.அவர்கள் இலக்கின்றி அந்தக் குச்சிகளைச் சுற்றி சுற்றி வந்தனர். மதிய உணவுக்கான நேரம் வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர் தான் தன் வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். ‘இங்கேயே இருந்து கொஞ்சம் சாப்பிடு; அடக்கடவுளே! இதற்காகவா போகிறாய்? எங்கள் வீட்டிலேயே சாப்பிடு’ விவசாயி சொன்னார். நண்பர் ஏற்றார். (பக் 140)

சாப்பாட்டுக்கு முன்பான சூழல்:-


விவசாயியின் மனைவி அவளுடய தட்டைக் கொண்டுவந்து மேசையின் தலைமாட்டில் வைத்தாள். கூடவே கோழிகளை விரட்டியடிக்க ஒரு விளக்குமாறையும் கொண்டுவந்து வைத்தாள். உரையாடலுக்கு மத்தியில் அவள் ஷ்ஷூ, ஷ்ஷூ என்று கோழிகளை விரட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தாள். ”டாமி...கோழிகள் மேய்வது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? விரட்டிவிடு அதை”

கோழிகள் பெரும்பாண்மையான நேரத்தை அந்த வீட்டினுள் தான் கழித்துக் கொண்டிருந்தன. விளக்குமாற்றின் சுற்றெல்லையை அறிந்து வைத்துக் கொண்டு கவனமாக அதிலிருந்து இரண்டு மூன்று அங்குலங்கள் தள்ளியே நடமாடின. சமையலறை மேசையின் மீது பீங்கான் பாத்திரங்களுக்கு மத்தியில் ஒரு கோழியைப் பார்த்தால் அது எந்தப் பாத்திரத்தையும் கீழே உருட்டி விடாத படி கவனமாக அதை விரட்ட வேண்டும்.

உணவு உட்கொண்டு கொண்டு இருக்கும் போது இரண்டு காளைகள் கட்டை வேலியின் தடுப்புக் கட்டை உடைந்திருந்த பக்கம் பரப்பட்டைகளால் அடைக்கப்பட்டிருந்த இடத்தைப் பொத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் கோதுமை வயலில் நுழைந்து விட்டன. ஒன்றிரண்டு கன்றுகள் திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. விவசாயத்தைப் பற்றி அவ்வளவாக ஏதும் அறிந்திராத; எந்தக் கவலையும் இல்லாத ஆஸ்திரேலிய விவசாயி வேலித்தடுப்புக் கட்டைகளைச் சீராக்கும் எண்ணமின்றி, நல்லதாய் ஒரு வீட்டைக்கட்ட வேண்டும் என்ற நினைப்புமின்றி தான் படித்து அறிந்த அன்றய சமூக மற்றும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்.

சாப்பாட்டு நேரத்து உரையாடல்:-




பாத்திரங்கள்: விவசாயி, அவர் மனைவி, பக்கத்து வீட்டுக்காரரும் விவசாயியின் நண்பருமான கார்னி,ஜார்ஜ்,சிறுவர்களான டாமி, ஜேக்கி மற்றும் சில சின்னக் குழந்தைகள். அவர்களுடய உரையாடலுக்கு கோழிகளாலும் குழந்தைகளாலும் தடங்கல்கள் நேருகின்றன.

கார்னி ஜார்ஜ் (உரையாடலைத் தொடர்கிறார்) ; ஆனால் ’முன்னேற்றமும் வறுமையும்’ பற்றிச் சொல்லும் போது  ஹென்றி ஜார்ஜ் சொல்கிறார்...”
விவசாயியின் மனைவி: (கோழிகளைப் பார்த்து) ஷ்ஷூ ஷ்ஷூ
நண்பர்: ‘அவர் சொல்கிறார்”
டாம்: அம்மா ஜேக்கைப் பாருங்கள்
விவசாயியின் மனைவி: (ஜேக்கிடம்) உன்னால் ஒழுங்காக இருக்க முடியவில்லை என்றால் மேசையை விட்டு எழுந்ந்து போ.
நண்பர்: ’அவர் சொல்கிறார் முன்னேற்றமும் ..’
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ
நண்பர்: ‘பின்னோக்கிப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். முதலில் என்ன நடந்ததென்றால்..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ..டாம் அந்தக் கோழி உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?
நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்றால் சீஸ்ரின் கால கட்டத்தில் ..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ.
விவசாயி: பிரெஞ்சுக்கலகத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.
நண்பர்: ஹென்றி ஜோர்ஜ் என்ன சொல்கிறார் என்றால்
டாம்: அம்மா! நான் ஒரு பெரிய கங்காரு அந்தப் பக்கம் போவதைப் பார்த்தேன்.
விவசாயியின் மனைவி: வாயை மூடு. நாக்கை அடக்கிக் கொண்டு உண்பதை மட்டும் செய். இங்கே பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற அறிவில்லையா உனக்கு?
விவசாயி: ’அந்தப் பெரெஞ்சு..’
விவசாயியின் மனைவி: (கோழிகளை நோக்கி) ஷ்ஷூ ஷ் ஷூ. (சட்டென்று ஜேக்கின் பக்கம் திரும்பி) சக்கரை டப்பாவில் இருந்து உன் விரல்களை வெளியிலெடு. இல்லையென்றால் விளாசி விடுவேன்.
நண்பர்: ”ஆனால் பின்னோக்கிப் பார்க்கையில்..”
விவசாயியின் மனைவி: ‘பார்த்தாயா டாம்! தேநீரை சிந்தி விடுவாயென்று நான் தான் சொன்னேனே? மேசையை விட்டு விலகிப் போ”
விவசாயி:’சீஸரின் காலகட்டம் தான் இயற்கையான ஒரே..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ. அவள் பொறுமையிழந்து எழுந்தாள். விளக்குமாற்றை வீசி ஓர் இளஞ்சேவலை விரட்டினாள். அது பறந்து போய் மேய்ச்சல் களத்தில் தலைகுப்புற விழுந்தது. எழுந்து மறுபடியும் வீட்டை நோக்கி வரத்தொடங்கியது.

                     இப்போது உரையாடல் டீமிங்கின் பக்கம் திரும்பியது.

விவசாயி: சந்தேகமேயில்லை.அவனொரு பைத்தியம் தான்.
விவசாயியின் மனைவி: ‘டீமிங் வின்ஸரின் அந்தப் பாவி!எனக்கு மட்டும் அதிகாரமிருந்திருந்தால் நான் அந்த ஆளை உயிரோடு உலையிலிட்டிருப்பேன். அவன் என்ன செய்தானென்று அவனுக்கே தெரிந்திருக்காது என்று என்னிடம் சொல்லாதீர்கள். நான் அவனை ..”
நண்பர்: ‘ஆனால் அம்மா நீங்கள்...
விவசாயியின் மனிவி: (கோழிகளை நோக்கி) ’ஷ்ஷூ ஷ்ஷூ’
.........
( டீமிங்  - பற்றி தான் தனிப்பட சேகரித்த வரலாற்றுக் குறிப்பை கீதா. மதி வாணன் பிற்குறிப்பாகத் தந்திருக்கிறார்.) 


மொழி பெயர்ப்புக்கு என்று இருக்கும் தார்மீக பொறுப்புகளுடனான கீதாவின் மொழிபெயர்ப்பாற்றலைப் பற்றி சொல்லவும் இவையே போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அடி ஆழம் வரை சென்று உண்மையின் வேர்களையும் மண்செழுமை மாறா வண்ணம் யதார்த்த நிலையோடு பெயர்த்து தமிழுக்கு தரும் சிறப்பு கீதாவுக்கு கைவந்திருக்கிறது.

அவர்கள் அவுஸ்திரேலியாவின் ஆரம்ப கால குடியேற்ற வாசிகள். விரக்தியும் வெறுமையும் பஞ்சமும் பட்டினியும் . பண்ணை வேலைகளும் மந்தை மேய்ப்பும் குதிரையோட்டமும் தெரிந்த வந்தேறுகுடிகள். வளர்ந்த நாடுகளுக்குள் ஒன்ராக இன்று அவுஸ்திரேலியா மிளிர தம் அத்திவாரத்தை போட்டு விட்டுப் போனவர்கள்.

ஹென்றி லோஷன் காட்டுகிற தனித்துவமான குணாம்சங்கள் கொண்ட கதை மாந்தர்களின் இயல்புகளை இன்றய அவுஸ்திரேலியர்களிடம் இன்றும் துல்லியமாக அடையாளம் காணலாம். குடியும் குதிரைப்பந்தயமும் அவர்களிடம் இன்றும் இருக்கும் தனித்துவமான பண்புகள். அவுஸ்திரேலியர்களுக்கேயான கொச்சை ஆங்கிலம் ஐரோப்பிய பாஷைகளும் பழங்குடி மக்களின் பேச்சுகளும்  தழுவிய கலவை தான். குறிப்பாக இளைஞர்களிடம் இருக்கும் தற்துணிவும் பயமற்ற தன்மையும் முரட்டுத்தனமான போக்கும் மக்கள் தம்மோடு கொண்டிருக்கும் எளிமையும் உதவும் மனப்பாண்மையும் கூட அதன் பாற் பட்டதே.

இவற்றை வாசித்து முடித்த போது குறும் படங்கள் பார்த்ததைப் போல; ஒரு கலைப்படத்தை  பார்த்ததை போல; ஒரு செறிவு சார்ந்த பல் வகை கதை மாந்தர்களைச் சந்தித்ததைப் போல; ஒரு காலகட்டத்துக்குள் வாழ்ந்து முடித்ததைப் போல ஒரு திருப்தி.ஹென்றி லோஷனோடு ஒரு ஆத்மார்த்தமான மதிப்பு சார்ந்த நட்பு ஒன்று மலர்ந்திருக்கிறது.

கீதா இவற்றைத் தமிழுக்குத் தந்த போது எனக்கு சற்றே வெற்றிடமாகத் தோன்றிய இடம் ஒன்று உண்டென்றால் அவை படங்கள்!. - கறுப்பு வெள்ளைப் படங்களாகவேனும் சில பாத்திரங்களை; இருப்பிடங்களை; தோற்றப்பாடுகளை ; செயற்பாடுகளைத் தந்திருந்தால் அப்பாத்திரங்கள் மனதில் உயிர் பெற்றே அதே தோற்றப் பொலிவுடன்  நடமாடியிருப்பார்களோ என்று தோன்றிற்று.

கூடவே புத்தகத்தில் கீதா குறிப்பிட்டிருந்தது போல அவுஸ்திரேலிய 10 டொலர் நோட்டில் அவர் உருவப்படம் பொறிக்கப்பட்ட டொலர் நோட்டின்  படம், அவர் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையின்  படம் இவற்றை யும் பிரசுரித்து அவரின் வரலாற்றுப் பெறுமதியையும் அதன் கனம் குறையாமல் படப்பிரசுரம் மூலமாகக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தோன்றிற்று.

கூடவே பாத்திரங்கள், மற்றும் இடங்களைக் குறிப்பிடும் போது வருகிற தமிழ் சொல்லாடல் பற்றிய சிக்கல். உதாரணமாக இலங்கையர் Australia வை ஒஸ்றேலியா என்பார்கள்.இந்தியர் ஆஸ்திரேலியா என்பார்கள். Henry Lawson இலங்கையர் வாயில் நுழைந்து வரும் போது ஹென்றி லோஷன் ஆக இருப்பார். அவரே இந்திய உதடுகளால் உச்சரித்து வெளிவரும் போது ஹென்றி லாஸன் ஆகி விடுவார்.  Tom என்ற பெயரை இலங்கையர் ரொம் என்பர். இந்தியர் டாம் என்பர். இவை உதாரணங்கள் தான். இவ்வாறான உச்சரிப்புச் சிக்கல் வருகின்ற போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயரைப் போடுதல் உசிதமோ என்று தோன்றிற்று. அது நாம் கதையோடு கூடுதல் நெருக்கத்தை தரும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

மேலும் இறுதியாக, அட்டைப் படத்தில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி இருக்கலாமோ என்றும் தோன்றிற்று. குறைந்த பட்சம் அவருடய பெயர் சொல்லும் வீதிகள் சிட்னி மாநகரில் உண்டு. குறைந்த பட்சம் வீதியைச் சுட்டி நிற்கும் அந்தப் பெயர் பலகையை வீதியோடு சேர்த்தெடுத்து கூட முகப்பை அலங்கரித்திருக்கலாம். அன்றேல் அவரது உருவச் சிலை!.......

இவற்றை அவரின் அடுத்த புத்தகத்துக்கான என் அபிப்பிராயங்கள் என கீதா எடுத்துக் கொள்வார் என்பதில் எனக்கையமில்லை.

இருந்த போதும் முதல் சொன்ன முல்லாவின் கதையில் வந்த முல்லாவின் ‘உண்மையைக் காட்டும் திறன்’ அந்த சாதுர்யம் கீதாவுக்கும் அப்படியே வாய்த்திருக்கின்றது.

முல்லாவுக்கு அரசன் சொன்னது போலவே ”கீதா மதிவாணனையும் தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்”.

’அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது.’

மேலும் மேலும் அவரிடம் இருந்து அவுஸ்திரேலிய புதினங்கள் அதன் வாசம் கெடாமல் தமிழுக்கு அணி சேர்க்கட்டும்!!



அவருடய புத்தகத்தை  இணையத்தினூடாக வாங்க
http://aganazhigaibookstore.com செல்லுங்கள்.

நீங்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் ஏமாற்றப்பட மாட்டீர்கள் என்பதற்கும் ஹென்றி லோஷனை உங்கள் ஆத்மார்த்த நண்பனாய் சுவீகரித்துக்கொள்வீர்கள்  என்பதற்கும்  நான் உத்தரவாதம் தருகிறேன்.