Saturday, February 14, 2015

உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறது?

உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறது?
பொய்களை…................
களவுகளை………………….
ஏமாற்றுக்களை……………..
துரோகங்களை………………

மைக்கல் ஹில் ஜுவலர்ஸ் இற்கு வாருங்கள். கச்சிதமான விலையில் ஒப்பற்ற நகைகளைப் வாங்கிப் பரிசளியுங்கள்.

Happy valentine’s Day!


இது கடந்த சில தினங்களாகக் தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருக்கிற விளம்பரம்.

இன்று காதலர் தினம்! பரஸ்பர அன்பினை நிச்சயப்படுத்திக் கொள்ளும் ஒரு தருணம் எனலாமா இதை?

இங்கு வந்ததன் பின் அறிமுகமான சொல் இது. மேலைத்தேய பண்பாட்டின் உருவம் கொண்டது.

காதல் என்ற இச் சொல் இன்று எதனை உச்சாடனம் செய்கிறது? சுயநலம் என்ற சொல்லுக்குள் சிக்குண்டு போயிருக்கிறது அது. காரணங்களினால் அலங்காரப் படுத்தப்படுகிறது. அதே நேரம் காரணங்களுக்கான வேர்களோ எப்போதும் மன்னிப்பைக் கோரி நிற்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் இந் நாட்டை Free Country என்றார்கள். அதன் தாற்பரியம் புரிபட எனக்கு பல வருடங்கள்ஆயிற்று.

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு காலங்களுக்கும் ஒவ்வொரு இனங்களுக்கும் என்றிருந்த; என்றிருக்கிற பண்பாடுகள் புதினமானவையாக வியப்பூட்டுவனவாக இருக்கின்றன.

ஊரில் இருந்து பிறநாடு வந்த ஆரம்பத்தில் பெண்கள் பகிரங்கமாக புகைப்பதையும் மது அருந்துவதையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இதனை நம் ஊர்களில் நினைத்துப் பார்க்க முடியுமா?

அது மாதிரி என் ஆப்கானிஸ்தான் தோழி புனித யாத்திரைக்காக மக்கா போன போது அங்கு அவள் விடுதிக்கு வந்த இளம் முஸ்லீம் அழகி ஒருத்தி தன் ஆசைக் கணவனை இவள் திருமணம் செய்து கொள்ள  வேண்டும் என்று வற்புறுத்தினாளாம். ஏன் என்று கேட்ட போது தன் கணவனைப்போல திறமான கணவனை இந்த உலகிலேயே காண முடியாது. அவனுக்கு ஒரு குழந்தையை எனக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அவனுக்கு என்னால் கொடுக்கக் கூடிய அதி உன்னத பரிசு மார்க்கப் பற்று நிரம்பிய அழகி ஒருத்தி மாத்திரமே! நீ அதற்கு மிகத் தோதானவள் என்று அவள் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் தனக்கு முன்னாலும் பின்னாலுமே திரிந்தாளாம். நமக்கு நினைத்துப் பார்க்கக் கூடிய சங்கதியா அது?

’ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்த எனக்கு இதுவும் ஒரு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

மேலைத்தேயப் பண்பாட்டில் திருமணத்துக்கு முன்னரான பாலியல் உறவு மிகச் சாதாரணம். திருமணம் இல்லாமலே சேர்ந்து வாழுதல் அதை விடச் சாதாரணம். திருமணத்துக்குப் பின்னரான வேறு ஒருவருடனான பாலியல் உறவு கூட இங்கு இப்போது பொது நடைமுறையாகி வருகிறது. இவர்களால் (ஆணும் பெண்ணும்) காதலை வேறாகவும் காமத்தை வேறாகவும் பிரித்து பார்க்க முடிகிறது. காதலை ஓரிடத்திலும் காமத்தை வேறொரு இடத்திலும் தனித்தனியாக வைக்க இயலுகிறது.  இவை எல்லாவற்றுக்கும் சட்டப்பாதுகாப்பும் இருக்கின்றன. இவை எல்லாம் நம் பண்பாட்டுக்கு இன்னும் ஆச்சரியங்கள் தான்!

ஒழுக்கம்,சமயம்,பண்பாடு எல்லாம் நமக்கு நாம் போட்டுக் கொண்டவை தான் என்ற உண்மை என் 48வது வயதில் தான் என் முகத்தில் வந்து அறைகிறது. இந்தப் பழக்கப்பட்ட கருத்துக்களை;  நம்பிக்கைகளை; வாழ்க்கை முறைகளை குறிப்பிட்ட ஒரு காலத்துக்குப் பிறகு கடத்தல் என்பது இயலாதது அல்லது எவ்வளவு கடினமானது என்ற உண்மை அதை விட மோசமாய் மற்றொரு புறமாய் அறைகிறது.

இவை எல்லாம்  இடத்துக்கிடம் காலத்துக்குக் காலம் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுகின்ற போது நம்மால் ஏன் அவற்றை ஏற்றுக் கொள்ள இயலாது போராட நேர்கிறதென்று தெரியவில்லை.

நம் கருத்துக்களாலும் நம்பிக்கைகளாலும் நம் வாழ்வு கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது போலும். அதில் ஏற்படுகிற சிறு அசைவும் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கிறது.

ஆனாலும், பண்பாடுகள் சமயங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் விதமாக நம்மை நல்ல மனிதர்களாக வாழ வழிவகை செய்கின்றன என்று சொல்லுகிறார்கள். ஆனால் மதத்துக்காகவும் மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் எத்தனை ஆயிரமாயிரம் உயிர்களை அன்றிலிருந்து இன்று வரை  நாம் காவு கொடுத்து வருகிறோம்?

என்ன ஒரு முரண்நகை!

நாம் இறப்பு என்பதை ‘உடல் மறைதல்’ என்ற விதமாக அர்த்தப் படுத்தி வைத்திருக்கிறோம். அதை விட வலி தரும் இறப்பு என்பது நம்பிக்கை துரோகத்தை; ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை எதிர் கொள்ளும் தருணம் எனலாமா?

அன்புக்கு அப்படி ஒரு மரணமும் இருக்கிறது! சாதாரண இறப்பை விடக் கொடியது அது.

சரி, அது போகட்டும்.

சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாவிட்டால்; அடுத்தவருடய மனம் புண்படாத விதமாக நமக்கு வாழத்தெரியாவிட்டால்; அவர்கள் கடைப்பிடித்து ஒழுகுகிற சமயம்,பண்பாடு, ஒழுக்கம் இவை எல்லாம் இருந்து பயன் என்ன?

உண்மையாய் இருத்தலினதும் நேர்மையாய் இருத்தலினதும் ஒருவருக்கொருவர் விசுவாசமாய் இருத்தலினதும் பாற்பட்ட சாதாரண ஓர் அன்பு சார் அழகியல் வாழ்வைத் திருடிப்போனது எது?

சுயநலம் எனலாமா அதை? அப்படியெனில் உலகத்துப் பண்பாடுகள் சீர் செய்ய வேண்டிய எளிமையான சொல் இது.

நம்முடய பெற்றோர் பார்த்து பேசி செய்து வைக்கும் திருமனங்களைப் பார்த்து வியந்து வாயில் கைவைத்து ஆச்சரியம் கொள்ளும் வெளிநாட்டுத் தோழியரை நான் கொண்டிருக்கிறேன். ஒரு தடவை நம் வேலை நேர ஓய்வின் போது நம்முடய சமயங்களைப் பற்றிய பேச்சு வந்தது. என் தோழி ஒருத்தி என்னை இவ்வாறு அறிமுகப்படுத்தினாள். ’இவ மாடு, குரங்கு (ஆஞ்சநேயர்) எல்லாவற்றையும் வழிபடுபவள்’. அவள் சொன்ன விதம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது.

குடும்பத்தில் தம்பதியரிடையே  பிள்ளை இல்லை என்ற விடயத்திற்கு வருவோம். பிள்ளை இல்லை என்றால் இல்லை என்று ஒரு குறை மட்டும் தான். இருந்தால் எத்தனை குறைகள்; கவலைகள்? பிறந்ததில் இருந்து பேரப்பிள்ளை ஒன்று காணும் வரை பிரச்சினைகளினதும் குறைகளினதும் பட்டியல் நீண்டுகொண்டே போகுமில்லையா? பிள்ளை இல்லை என்றால் எத்தனை சுகம்? எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. சேர்த்து வைக்க வேண்டும் என்ற சுமை இல்லை. சோடிக்கிளிகளாய் வாழ்க்கையில் விரும்பியதை விரும்பியவாறு செய்யும் சுதந்திர சுவாசம் எத்தகைய ஒரு வரப்பிரசாதம்!

பிற நாட்டில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் பிள்ளை பெற்றுக் கொள்ள பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதில்லை. இதற்காக அரசாங்கம் பிள்ளை பெற்றுக் கொண்டால் தரவென்று பெரிய பரிசுத்தொகையை அறிவித்தும் பலன் பெரிதாய் கிட்டவில்லை. அது தம் சுகத்துக்கு இடைஞ்சல் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்திய தேசத்தில் அதற்கு முற்று முழுதாக மாறுபட்ட நிலை. பிள்ளை இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாதெனில் எத்தனை அநாதைக் குழந்தைகள் இந்த உலகில்? ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுக்க ஏன் மனம் வருகுதில்லை?

கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழும் மனநிலையை ஏன் நம் பண்பாடு நமக்குக் கற்பிக்கவில்லை?

மனங்கள் இன்னும் விரியட்டும்!.

உலகத்து மக்கள் எல்லோரும் “ அடுத்தவர் (அவர் எவராயும் இருக்கட்டும்) - சக மனிதனின் - மென் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வாழ்வதே என் பண்பாடு அல்லது என் சமயம் அல்லது என் வாழ்க்கை முறை என்று தன் வாழ்வை வரையறை செய்து கொண்டால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!?

காதலும் அன்பும் அதனைக் கொண்டிருக்கிற வாழ்வும் அர்த்தம் பெறும் தருணங்களாக அவை அமைந்து விடாதா?

Happy valentine’s Day!

15 comments:

  1. //நாம் இறப்பு என்பதை ‘உடல் மறைதல்’ என்ற விதமாக அர்த்தப் படுத்தி வைத்திருக்கிறோம். அதை விட வலி தரும் இறப்பு என்பது நம்பிக்கை துரோகத்தை; ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை எதிர் கொள்ளும் தருணம் எனலாமா?\\ அருமையான வரிகள்.

    ReplyDelete
  2. கலிங்க நகர் கவிப்பிரியருக்கு நமஸ்காரம்!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிப்பிரியரே.
    ஓம். கண்ணுக்குப் புலப்படுவதான எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி மெளனமாக நிகழும் அந்தக் கொலை!

    அதனை நீங்களும் உணர்ந்திருப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.

    மிக்க நன்றி. மீண்டும் வருக!

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ முறை அப்படிப்பட்ட கொலைக்குச் சமமான துக்கத்தை அனுபவித்திருக்கிறோம். அதுவும் நெருங்கிய உறவுகள், நட்புகளிடையே! அதனால்தான் அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. தங்களின் கருத்திற்கு நன்றி.

      Delete
    2. நன்றி கவிப்பிரியரே!
      கருத்தினால் ஒன்று பட்டோம்.

      Delete
  3. வணக்கம்
    100வீதம் உண்மையான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. [quote]சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாவிட்டால்; அடுத்தவருடய மனம் புண்படாத விதமாக நமக்கு வாழத்தெரியாவிட்டால்; அவர்கள் கடைப்பிடித்து ஒழுகுகிற சமயம்,பண்பாடு, ஒழுக்கம் இவை எல்லாம் இருந்து பயன் என்ன?[quote]
    சமயம்,மொழி,பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதநேயத்திற்க்கு மனிதன் கொடுப்பதில்லை.....பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள் புத்தன்.

    “மனித நேயமே என் மதம்” என உலக மனிதர்கள் நினைத்தால்; சக மனிதனின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் வாழ்வதே என் கொள்கை என நினைத்தால் இந்த உலகில் பண்பாட்டுக்கும் மதங்களுக்கும் இடமில்லாமல் அமைதி கொழிக்கும் பூமியாக இந்தப் பூகோளம் விளங்கும் போலும்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல ஆதரவு தர பரிவோடு வந்து விட்டீர்கள் குமார்.

      மகிழ்ச்சி.

      Delete
  7. அன்பின் வசப்பட்ட எந்த உள்ளத்தாலும் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு கொடிய தருணம் அன்பின் மரணம்! நம்பிக்கைத் துரோகமென்னும் சுழலில் சிக்கி தங்கள் வாழ்க்கையையே பறிகொடுத்து உழலும் மனங்களில் விதைக்கவேண்டிய சிந்தனைக் கரு. இன்றைய அவசர வாழ்வியலில் ஒவ்வொருவரும் மிக அவசியமாய் உணர்ந்தறிய வேண்டிய அலசல். நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி என் அன்பிற்கினிய தோழி!

    ReplyDelete
  9. //சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாவிட்டால்; அடுத்தவருடய மனம் புண்படாத விதமாக நமக்கு வாழத்தெரியாவிட்டால்; அவர்கள் கடைப்பிடித்து ஒழுகுகிற சமயம்,பண்பாடு, ஒழுக்கம் இவை எல்லாம் இருந்து பயன் என்ன?//

    நல்ல கேள்வி.....

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  10. :) மிக்க சந்தோஷம் வெங்கட்.

    ReplyDelete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : கோழி முட்டையும் வலைப்பூவும்

    ReplyDelete