Sunday, September 20, 2015

ஏன் நாங்கள் இப்படி ஆயிட்டம்?சனிக்கிழமை மாலை. எல்லோரும் ஓய்வாய் இருக்கும் ஓரு நாள்.

அது ஒரு மாலைநேர மழைநாளும் கூட. வின்ரர் பொழுது என்பதால் கணப்பும் மிதமாக இருப்பிடத்தைச் சூடேற்றிக் கொண்டிருந்தது.

தேநீரும் கொறிக்க சிலதுமாக சொகுசு நாற்காலியில் காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டு இருப்பதிலும் ஒரு செளகரிகம் உண்டு தானே!

 தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

BBC தயாரிப்பு.

உண்மைக்கும் தத்துரூபத்துக்கும் தரத்துக்கும் அணுகுமுறைக்கும் ஆற்றலுக்கும் ஒரு வரலாற்று உதாரணமாக உலகமே ஏற்றுக் கொண்ட உன்னதத்தின் பெயர் BBC.

 British Broadcasting Corporation!

அன்றும் அப்படியான ஒரு நிகழ்ச்சிதான். வனங்களில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றிய - குறிப்பாக புலியின் வாழ்க்கை வரலாறு.

மான்கள் துள்ளி ஓடுவதும் புலி துரத்துவதுமான ஒரு காட்சி. அதிலும் ஓர் இளமான் உயரமாயும் நீளமாயும் பாய்ந்தோடுகிறது. காட்டில் தானாக வளர்ந்த வாளிப்பு! ஒரு வித மதாளிப்பு! குருத்துப் பருவம்!அந்தரவெளியில் ஒரு துள்ளலுமாக ஒரு நீளப் பாச்சலோடு உறுதியாக புல் வெளியில் கால் பதித்து பின் அதே வேகத்தில் மீண்டும் மேலெழும்புகிறது. அதன் உயிர் தப்புவதற்கான ஓட்டம் புல் வெளியில் கால் பதிக்கிற முறையில் சிறப்பாகப் பதிவாகிறது.

 கமறா துல்லியமாய் மான்கூட்டத்தைப் பின் தொடர்கிறது. தப்பி ஓடிய மான்கூட்டத்துக்குள் புலியோ அந்த துள்ளி ஓடிய இளமானை குறி வைத்து என்னமாய் பின் தொடர்கிறது என்பதும் அது எவ்வாறு தன் இரையைக் கவ்விக் கொள்கிறதும் என்பதும் BBC தரத்தை மீண்டும் உறுதி செய்யப் போதுமானதாக இருந்தது.

என் குடும்பத்தோர் எல்லோரும் அதை ஆழ்ந்து ரசிக்கவும் ஒன்றிப் போகும் படியாகவும் இருக்க என்னால் மாத்திரம் அவ் இளமானின் இழப்பை; இறப்பை; அதன் கடசி நேரத் துடிப்பை; தாங்க முடியவில்லை.

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?

(கொஞ்ச நாளாய் நான் ஏன் இப்பிடி ஆயிட்டன் என்று நீங்கள் என்னைக் கேட்காமல் இருந்தால் சரி. :) உண்மையாகவே கொஞ்சநாளா என் பதிவுகள் எல்லாம் ஒரு திணுசாத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க!)

 வன்முறையை பார்த்து ரசிக்கும் வன்மம் மனித சமுதாயத்தில் எப்போது ஒட்டிக் கொண்டது?

‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே என்று தன் காதலன் மறைந்த பின்னால் பூத்த தன் கொல்லையின் முல்லையைப் பார்த்துக் கோவித்துக் கொண்ட காதலியைக் கொண்டிருந்த சமுதாயம்-

காவல் மரத்துக்கு எந்தத் தீங்கும் செய்து விடாதே மன்னா என்று எதிரி நாட்டு குடிமகன் போரிட வரும் நாட்டின் அரசனிடம் மரத்துக்காகவே தூது போன வரலாற்றைக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் -

உன்னுடய காதலுக்கு சாட்சி யாரடி எனக் கேட்க, ஒரு கொக்கு பார்த்துக் கொண்டிருந்ததே! அது தான் நம் காதலுக்குச் சாட்சி என -

பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் தமக்குச் சமமாகக் கொண்டாடிய ஒரு அன்பும் அறமும் சார்ந்த ஒரு பண்பாட்டின் வேரில் இருந்து கிளர்ந்த ஒரு செவ்விய பண்பாட்டின் லாவன்யத்துக்குச் சொந்தக்காரரான நாம் இன்று நிற்கின்ற இடம் எது?

கோழிகளைச் சண்டைக் கோழிகளாக வளர்த்து அவை இரத்தக் களரிகளாக ஆகுவதை - அந்த உயிர் வதையை பார்த்து ரசிப்பவர்களாக ஆகி விட்டோம்.

தேனீக்கள் பாடு பட்டு பூப்பூவாய் குந்தி துளி துளியாய் சேகரிக்கும் தேனை நெருப்பிட்டுக் கொழுத்தி அவற்றை கொன்று அல்லது துரத்தி தேனை எடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

தன் பிள்ளைக்கென தாய்பசு வைத்திருக்கும் பாலை கன்றினைக் கட்டிப் போட்டு விட்டு நாம் கறந்தெடுத்துக் கொள்ளுகிறோம்.

நம் ஆசைக்காக நன்றியும் சிநேகிதமும் கொண்டாடும் நாய்களின் ஆண்மையை / பெண்மையை வலிக்க வலிக்கப் பறித்து விட்டு இப்பிராணி என் செல்லம் எனக் கொஞ்சுகிறோம். மிருகங்களின் மிக குறைந்த பட்ச சந்தோஷமும் அதிகபட்ச வாழ்வின் இருப்பும் அது தானே என்பது எப்படி நமக்கு மறந்து போயிற்று?

கம்பீரமான எருதுகளின் மூக்கில் துளையிட்டு நாணயக் கயிறு மாட்டி இழுக்கிறோம். என்னமாய் அதுக்கு நோகும் என ஒரு பொழுதேனும் யோசித்திருக்கக் கூடுமா நாம்?

பட்டுப் பூச்சிகளின் கொலைகளில் அரங்கேறுகிறது பட்டுப் புடவைகளின் புன்னகை.

ஆண் யானைகளின் கொலைகளில் நடை பெறுவது வெறும் அதன் தந்தங்களில் செய்யப்படும் கலைப்பொருட்களுக்கான  கண்கவர் விருந்துகள். (கூட்டமாகவும் குடும்பங்களாகவும் வாழும் யானைகள் வெளியே வரும் போது மனிதர்களைக் கண்டால் ஆண்யானைகள் மாத்திரம் மரங்களின் பின்னால் மெல்ல ஒழிந்து கொள்கின்றனவாம் தாய்லாந்துக் காடுகளில். அவைகளுக்கு ஏன் தாம் கொலைசெய்யப் படுகிறோம் என்பது நன்கு தெரிந்திருக்கிறது)

முதலைகள் கொல்லப்படுவது அவற்றின் தோல்களில் தயாராகும்  கைப்பைகளுக்காகவும் சப்பாத்துக்களுக்காகவும் என்பது எத்தனை அல்பமானது!

இவற்றில் மட்டுமா? மனிதர்களைக் கூட சண்டை போட வைத்து ரத்தம் வழிவதைப் பார்த்து கைதட்டி ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத் தானே செய்கிறது குத்துச் சண்டைப் போட்டிகளில்.

இதில் அப்பாவி மிருகங்களை கொலை பண்ணி மனிதர்களாகிய நாம் உண்பது வெறும் வாய்க்கும் தொண்டைக்கும் மட்டுமான சொற்ப தூரத்துக்கானது என்பது இப்போதைக்கு ஒரு புறமாக இருக்கட்டும்.

இப்போது சீன உணவகங்களில் மீன்களும் நண்டுகளும்  உயிரோடு ஓடிக்கொண்டிருக்க நாம் குறிப்பிடும் உயிரினம் உங்கள் உத்தரவின் பேரில் தன் உயிரை உடனே  துறந்து உங்கள் பசிக்கு மருந்தாகும் இங்கு.

தனிப்பட்ட ஒருவர் ஏதோ ஒரு காரணம் நிமித்தம் உயிரொன்றைப் பறித்து விட்டால் ஆயுள் தண்டனை கொடுக்கும் அரசாங்கத்தில் இராணுவம் செய்தால் விருது கொடுத்து கெளரவிக்கும் ஓர் அரசின் ஆட்சியின் கீழ் -

கல்லிலே நம் காலைக் கொண்டு சென்று அடித்து விட்டு ‘கல்லடித்து விட்டது’ என்று முறைப்பாடு சொல்லும் கூட்டமல்லவா நாம்?

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?

6 comments:

 1. உணவுச்சங்கிலி இருந்தால்தான் உல‌கம் இயங்குமாம் என்றுதான் நாங்கள் ஆட்டை சாப்பிட ,ஆடு புல்லை சாப்பிட..... :) பதிவுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. :)
   உங்களின் இந்த எளிமையான விளக்கம் அழகாய் தான் இருக்கு.

   Delete
 2. என்ன இப்படி யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க? அதுதான் இயற்கை. ஒன்றின் இழப்பில்தான் இன்னொன்றின் உயிரோ அல்லது வளர்ச்சியோ இருக்கிறது.விளை நிலங்களும் அறுவடைக்கும் இது பொருந்தும்தானே. ஒன்றின் அழிவு மற்றவற்றிற்கு உணவு. இது உலக நியதி. ரொம்ப குழப்பிக்காதீங்க!

  ReplyDelete
  Replies
  1. இந்த உலக நியதியை அப்படியே ஏற்றுக் கொண்டு ....
   புத்தன் சொன்னது மாதிரி எல்லாத்தையும் சுகமா எளிமையா எடுத்துக் கொண்டு......

   வாழத் தெரியாத பிரச்சினை தான்.....:)

   Delete
 3. /கல்லிலே நம் காலைக் கொண்டு சென்று அடித்து விட்டு ‘கல்லடித்து விட்டது’ என்று முறைப்பாடு சொல்லும் கூட்டமல்லவா நாம்/

  இப்படியும் சிலர் ஆதங்கப்படுவதால்தான் மானிடம் வாழ்கிறது என்று ஆறுதல் படுத்திக் கொள்வோம்

  வன்முறை இன்று ரசனையாகி விட்டது
  சினிமாவும் துணை போகிறது

  பரா.சுந்தா.

  ReplyDelete
 4. வன்முறை இன்று ரசனையாகி விட்டது /எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள் அம்மா. மனதுக்கு மிக நிறைவாய் இருக்கிறது. ஒருவரேனும் அதனை சரியாக அடையாளம் கண்டிருக்கிறாரே என்பது மனதுக்குப் பெரும் மன நிறைவைத் தருகிறது. கருத்து ரீதியாக ஒன்று படுபவர்களோடு கூட இருப்பதும் கூடி இருப்பதும் ‘ வாழும் பொழுதுகள்’,

  அதனை எனக்கின்று தந்தீர்கள். இன்றய நாள் உங்களால் இனிதே மலர்ந்தது.

  ReplyDelete