Tuesday, September 22, 2015

இலக்கியச் சந்திப்பு - 24 -




மரங்களும் இலைகளும் பூக்களும் கையசைக்க முகிலுக்கு அப்பால் இருந்து சூரியன் புன்னகைக்கும் மாதம்!
வசந்த கால வாரம்!
வசந்தகால உற்சவங்களும் தெருவோரக் கொண்டாட்டங்களும் வார இறுதிகளில் களைகட்ட ஆரம்பித்து விட்டன.
நாங்களும் கொண்டாட வேண்டாமா?
கடந்த மாத சந்திப்பு இரு புதிய இளைஞர்களின் வருகையினால் புதுப் பார்வையை; விஸ்தீரனத்தை;வியப்பை; புதியதொரு வாசனையை சந்திப்புக்கு வழங்கி இருந்தது. ஆம், கார்த்திக் என்ற பெயர் கொண்ட பாரத இளைஞனும் பிரவீணன் என்ற நாமம் கொண்ட ஈழத்து இளைஞனும் சந்திப்புக்கு புது வாசம் சேர்த்தார்கள். 
வழக்கம் போல பானுவும் கமலாம்மாவும் ஆதரவு சேர்த்தார்கள்.
கீதா வர இயலாமையை முன் கூட்டியே தெரியப்படுத்தி இருந்தார். கார்த்திகா சுகயீனமுற்றிருந்திருந்தார் என்பதை நாம் முன் கூட்டியே அறிந்திருந்தோம்.
சிட்னியின் தென்பகுதியில் இருந்து சந்திப்பன்று காலை சீதா என்றொரு சகோதரி அழைப்பில் வந்து சந்திப்புக்கு வர முடியா ஆதங்கத்தை வெளிப்படுத்தி, சந்திப்பினை ஸ்கைப்பில் தர முடியுமா எனக் கேட்டிருந்தது மனதுக்குத் தனிப்பட்ட உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.
அது பற்றிய குறிப்புகளை எழுதி பதிவேற்றும் முன்னாடியே வந்து விட்டது அடுத்த சந்திப்பு!
இம்மாத சந்திப்பை தாவரவியல் பூங்காவில் வைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.வசந்த காலத்தின் இயற்கை அழகை ரசித்த படி புத்தக உலகத்துக்குள் போவது ஒரு ரம்யமான அனுபவமாய் இருக்கும் என்பது ஒரு காரணம்.
இன்னுமொன்றுண்டு.
இப்போதான பூக்களைப் போல பூத்திருக்கும் புத்தகங்களை நம் அங்கத்தவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
கீதா. மதிவாணன் ஹென்றி.லோஷன் என்ற அவுஸ்திரேலிய செவ்வியல் படைப்பாளியின் கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு புது வண்ணம் சேர்த்திருக்கிறார்.
கார்த்திகா. கணேசர் ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றதொரு புத்தகத்தை புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய பார்வைகளோடு அளித்திருக்கிறார்.
பிரவீணன். மகேந்திரராஜா - விஞ்ஞானக் கதைகளை ‘ஏலியன் கதைகள்’ என் ற தலைப்பில் தந்து தமிழுக்கு விஞ்ஞான வண்ணம் தீட்டி இருக்கிறார்.
ஜே.கே என்பார் ‘கொல்லைப் புறத்துக் காதலிகளை’ நம்மூடாக அறிமுகம் செய்ய ஆவல் பட்டிருந்தார்.
கன்பராக் கவிஞை ஆழியாழில் கருநாவு கவிதைத் தொகுதி உள்ளடக்கம் சார்ந்து மிகக் கனதியானது.
இவைகள் எல்லாம் எந்த சத்தமும் இல்லாமல் முழுமையான பரிபூரண குழந்தைகளாக தமிழ் தாய் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கின்றன.
அவைகளைப் பரந்து பட்ட தமிழ் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமையாகும். 
அவற்றின் பயன்பாட்டுப் பார்வையில் இருந்து அவற்றை திறம் காணுதலும் அதன் வரலாற்றுப் பெறுமதியை உலகறியச் செய்யவும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவைகள் பற்றிய கலந்துரையாடலாக இம்மாத சந்திப்பு வசந்த கால உற்சவத்தோடு சித்திக்கிறது.
ஆர்வலர்கள் மரங்களினதும் பூக்களினதும் புன்னகைகளுக்கு தலையசைத்து விட்டு அவற்றின் முற்றலில்அமைந்திருக்கும் கூடாரத்தில் பூத்திருக்கின்ற புத்தகப் பூக்கள் பற்றி கலந்துரையாடவும் செயற்பாட்டுத் தார்ப்பரியங்களைப் பேசவும் வாருங்கள்.
ஊர் கூடித் தேரிழுப்போம்.
இம்மாதம் 26.9.15 சனிக்கிழமை என்பதும் மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிறது என்பதும் உங்கள் மேலதிக கவனத்திற்கு!
சந்திப்போம்; தமிழால் இணைந்திருப்போம்!!

4 comments:

  1. கடல் கடந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழின் மாண்புகளை மறக்காமல் தமிழர்கள் ஒன்றுகூடி இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்புள்ள யசோதா வணக்கம். தாங்கள் ஏற்பாடு செய்துள்ள வசந்த கால சந்திப்பு மிகவும் பயனுடையாக இருக்கும் என நம்புகின்றேன். படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கும் வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தவும் இதுபோன்ற சந்திப்புகள் அவசியம். சிட்னியில் திருநந்தகுமார் அவர்களும் அவருடன் இணைந்த பல அன்பர்களும் அங்கு தமிழ் கற்பித்தலில் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அதனால் அங்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக பயிலும் மாணவர்கள் மற்றும் சிட்னி வாழ் கலை, இலக்கியவாதிகள் ஒன்றுகூடும் சந்திப்பு கலந்துரையாடலையும் நீங்களும் உங்களுடன் இணைந்து இலக்கிய சந்திப்புகளுக்கு ஆதரவு வழங்குபவர்களும் எதிர்காலத்தில் நடத்தினால் பயனுடையதாக இருக்கும் என கருதுகின்றேன்.

    தொடர்பாடலும் இன்றைய எமது சமூகத்திற்கு - அதிலும் இலக்கியவாதிகள் - ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு அவசியம் எனவும் கருதுகின்றேன்.

    முயற்சி செய்யுங்கள். முடியாதது ஒன்றும் இல்லை.

    அன்புடன்

    மெல்பனிலிருந்து முருகபூபதி

    ReplyDelete
  3. உங்கள் உற்சாகத்தை ஊட்டும் சிரத்தையான பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி. முதலில் அதற்கு என் மனமார்ந்த நன்றி.

    நீங்கள் சொன்ன கருத்துக்களை மனப்பூர்வத்தோடு கருத்தில் எடுத்துக் கொள்ளுகிறேன். உயர்திணை அங்கத்தவர்களும் சந்திப்பு பற்றிய கருத்துக்களை அளித்தால் பயனுடயதாக இருக்கும்.
    குறிப்பாக அடுத்த சந்ததியை சேர்க்க வேண்டிய கடப்பாடும் கட்டாயமும் நமக்குண்டு. அதனைத் தமிழ் பாடசாலைகளை விட ‘கம்பன் கழகம்’ ( எனக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கின்ற போதும்) அமைதியான முறையில் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இன்னும் ஒரு 5, 10 வருடங்களில் விருட்சமாய் தமிழ் இளம் சந்ததியின் நாவில் அதன் பண்பாட்டு விழுமியங்களோடு நர்த்தனமிடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.அது அவர்களின் அமைதியான தூர நோக்குக் கொண்ட சமூகப் பணி!
    நாமும் நம்மால் ஆனதைச் செய்வோம்.

    தமிழால் இணைந்திருப்போம்.
    அன்புடன் யசோதா.
    உயர்திணை இலக்கிய சந்திப்பின் சார்பாக.

    ReplyDelete