”நேற்று; இன்று; நாளை” oz தமிழ் வரலாற்று ஆவணம்
ஒரு கவிதைக் குழந்தை இங்கு பிறந்திருக்கிறது. அதனைக் கொண்டாடும் முகமாக நாங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் என் அன்பார்ந்த பணிவான வணக்கம்.
இப்படி ஒரு இடத்தில் நிற்பதற்குப் பொதுவாக 2 ,3 தகுதிகள் வேண்டும். 1. தலைக்குள்ளே ஏதேனும் இருக்க வேண்டும். 2. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சிறப்பாகச் சொல்லுகின்ற மேடை ஆளுமை இருக்க வேண்டும். 3. உங்கள் நிமிடத் துளிகளுக்கு பயனுள்ளதாக ஒரு நியாயத்தை செய்யவேண்டும். மூன்றும் இல்லாத நான் உங்கள் 3 நிமிடங்களைத் திருடிக் கொள்ளப் போகிறேன். அதற்கு முதலிலே என்னையும் என் பொருட்டு பாஸ்கரனையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சரி விஷயத்துக்கு வாறன்.
பெண்ணைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றுபற்றி இன்று பேசலாம் என்று இருக்கிறேன்.
அதுக்கு முதல் தமிழ் நாட்டில பெண்ண எப்பிடிப் பாத்திருக்கினம் இலங்கையில பெண்ணை எப்பிடிப் பார்த்திருக்கினம் எண்டு பாக்கிறது பாஸ்கரன்ர கவிதையை விளங்கிக் கொள்ளுறதுக்கு கட்டாயம் தேவை எண்டு நினைக்கிறன்.
தமிழ் நாட்டில பெண்ண பார்த்த மாதிரி இலங்கையில பெண்ணை பாக்கயில்ல.
14ம் நூற்றாண்டளவில காளமேகப் புலவர் பாடின ஒரு பாட்டொண்டு பற்றிச் சொல்ல வேணும்.
“இந்திரையை மார்பில் வைத்தான்;ஈசன் உமையை இடத்து
அந்திபகல் அமைத்தான்; அம்புயத்தோன் – கந்தம் மிகு
வெந்தாமரை மயிலை வேண்டி வைத்தான் நாவில்; உலகு
உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்”
என்னெண்டா, உலகத்தையே சாப்பிட்டுட்டு கக்கின தாமரைக் கண்ணன் திருமால் இருக்கிறார் எல்லோ? அவர் தன் மனைவி திருமகளை நெஞ்சில / இதயத்தில இருத்திட்டார். சிவபெருமான் தன்ர உடம்பில பாதியையே தன்ர பொம்பிளைக்குக் குடுத்திட்டார். பிரம்மன் என்னடா எண்டா வெண்தாமரைக்கு மேல மயிலப்போல இருக்கிற கலைமகளுக்குத் தன்ர நாக்கில இடம் குடுத்திட்டாராம். அது தான் பாட்டின்ர பொருள்.
அவர் சொல்லாத ஒரு விஷயமும் இருக்கு. அது அடுத்த ஜெனரேசனை பற்றினது. மேல சொன்ன ஆக்கள் பெரிய ஆக்கள். படைத்தல் காத்தல் அழித்தல் வேலையைச் செய்யிறவை. அவை என்னெண்டா தங்கட உடம்பிலயே இடம் குடுத்திட்டினம். ஆனா பிறகு வந்த அவையின்ர அடுத்த சந்ததி; முருகன், பிள்ளையார், கண்ணன் இருக்கினமெல்லோ அவை அப்பிடி எல்லாம் குடுக்க ஏலாது எண்டுட்டினம். முருகன் எனக்கு வலது பக்கம் ஒண்டு இடது பக்கம் ஒண்டு வேணும் எண்டிட்டார். கிருஷ்னர் நப்பின்னை, ராதை எல்லாம் ஸ்பெஷலா இருந்தாலும் நான் கூத்தடிக்க எனக்கு கன பேர் வேணும் எண்டிட்டார். பாவம் பிள்லையார் ஓடி ஆடித் திரிய முடியேல்ல. அவர் ஆத்தங்கரை ஓரமா இருந்து கொண்டு ஆஅராவது அம்மா மாதிரி (பார்வதி) ஒரு பொம்பிளயக் கொண்டு வாங்கோ நான் இப்பிடி ஒரு கதையா இருக்கிறன் எண்டிட்டார்.
இத நாங்கள் எங்கட அன்றாட வாழ்க்கையிலயும் பொருத்திப் பாக்கலாம்.
தமிழகத்தில அதுக்குப் பிறகு பாரதி வந்தார் பெரியார் வந்தார். இப்ப அண்மையில ஆனந்த விகடனில கூட நல்ல ஒரு கவிதை பெண்ணைப்பற்றி வந்திருந்தது.
இப்ப இணைய வெளியள்ளில பெண்விடுதலையைபற்றி நல்ல சூடான வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கு. நான் அங்கை எல்லாம் போகையில்ல. சரி பிழை எல்லாம் அவரவர் நியாயங்களுக்கு உட்பட்ட்து தானே!
......
இப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.
இந்த போஸ்ட்காட் எண்டு ஒரு காட் முந்தி ஒருகாலத்தில இருந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ( தந்தி மாதிரி அது ஒரு விஷேஷமான சாமான். இது 2ஐயும் பற்றியே கனக்க கதைக்கலாம். அது எங்கட வாழ்க்கையோட எப்பிடி இணைஞ்சிருந்தது, தபால்காரர் எப்பிடி குடும்ப அங்கத்தவரா இருந்தார்.. ஈபிடி எல்லாம்) அப்படிப் போஸ்ட்காட்டுகளில கவிஞர்மார் கவிதைகளால கடிதம் எழுதி அனுப்பி இருக்கினம். கொழும்பில மகாகவி இருந்தார். மட்டக்களப்பில நீலாவாணன் இருந்தார். யாழ்ப்பாணத்தில முருகையன் இருந்தார். இவைக்குள்ள நல்ல நட்பிருந்தது. இவை கதைக்கிறது கவிதைகளாலயும் போஸ்ட்காட்டாலயும் தான்.
அப்பிடி 1958ம் ஆண்டு நீலாவாணனுக்கு மகாகவி ஒரு போஸ்ட்காட் அனுப்பி இருக்கிறார்.
“காடும் நகரும் கடந்து கடுகதியில் ஓடுவதும்;
பொங்கும் உவகையிலே பாடுவதும் - எல்லாம் இனிதே!
எனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன்றெமக்கு”
எண்டு யாழ்ப்பாணத்தில மனைவியை விட்டிட்டு கொழும்பில இருந்து எழுதின துண்டொண்டு கிட்டடியில கிடைச்சுது. இத விட அம்மாமாரைப் பற்றி; அவையின்ர சமையலப் பற்றி பாடி இருக்கினம் கனக்க.
‘தட்டைக் கரண்டி பிடிக்கிறாள்
சரியாய் பெரிய நிலவப் போல
வட்ட்த் தோசை சுடுகிறாள்
வடிவாய் தின்பீர் என்கிறாள்” எண்டும்
”அன்னை பழஞ்சோற்றுண்டி
கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால்
வாயூறாதோ? எண்டும் பாடி இருக்கினம் கனக்க.
“சொந்தத்தில கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இவ்வளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி” எண்டு ஒரு குறும்பா கூட வந்திருக்கு.
ஆனால் ஒரு பெண்ணை தனக்கு சமனா மதிச்சு அவளின்ர உணர்வுகளை; நியாய அநியாயங்கள; சரி பிழையள; நன்மை தீமையல; ஒரு நியாயமான வழிகாட்டல தந்த மாதிரி குறிப்பிடத் தக்க பாட்டுகள் எதுவும் வந்த்தா எனக்கு நினைவில்லை.
அல்லது எனக்குத் தெரியேல்ல.
ஆனால்,ஈழத்துப்பொப்பிளயள் எழுதி இருக்கினம்.போர்க் காலத்தில ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டிச்சினம் அது வேற.
போர் காலத்தைக் கடந்து வெளியில வந்தா அதாவது வெளிநாடெண்டு வந்தா ”குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்” நாங்கள் நாங்களே எங்களைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
விதை மாதிரி ஒரு நடந்த சம்பவம் ஒன்றை மட்டும் சொல்லுறன்.கல்லூரிக்கு போற மாணவி. தான் தமிழ் பையன கல்யானம் கட்டமாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. ஏனெண்டு கேட்டா பிள்ல சொல்லுது,’ இஞ்ச இருக்கிற ஒரு டெசபிளிட்டி ஆளே தனக்கான எல்லா வேலையையும் தானே செய்யிறார். ஏன் ஒரு தமிழ் பையனால தனக்கான ஒரு நேரத் தேத்தண்னியக் கூட போடத் தெரியுதில்ல?
நியாயமான கேள்வி தானே? அதோட,புலம்பெயர்ந்த நாட்டில தமிழ் பெண்கள் கொஞ்சம் எழுதி இருக்கினம். ஆழியாழ் இங்கு இருக்கிறா.’ வட்ட வீடொண்று வேண்டும்; வானத்து வளைவுடன் “எண்டு சொன்ன கவிதைக்குச் சொந்தக் காரி. பாமதி இருக்கிறா.”விழுந்து கிடந்தது காணும் எழும்பு” எண்டு பெண்ணை எழுப்பி விடுற கவிதையள் அவவின்ர.
இந்த ஒரு பின்னணியில தான் நான் பாஸ்கரன்ர கவிதையளப் பார்க்க விரும்பிறன்.
2டே பிள்ளைகள். இரண்டும் பெண்பிள்ளைகள். காதலித்து மணமுடித்த மனைவி. இந்தக் கவிதைக் குழந்தைக்கும் அவர் மனைவியே காரணதாரி என்று அவரது முகவுரை சொல்கிறது. எனவே பெண்களால் சூழப்பட்டவர் மாத்திரமில்லை; பெண்களால் அவர் திறமைகள் இன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல்லாம்.
அதனால் அவர் பெண்ணைப்பற்றி என்ன நினைக்கிறார்; எப்படி அவர்களை அவர் பார்க்கிறார் என்ற பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.
சற்றே பெரிய கவிதை. 3 பரம்பரை சார்ந்த்து. இதனுடய கருப்பொருள் ஒரு பெரிய விஷயம். புலம்பெயர்ந்த நாட்டில் பெண்சார்பாக குடும்பங்களுக்குள் நிகழும் மாற்றங்களை சிந்தனைப்புரட்சியை சமூக பார்வைகளைச் சொல்லுகிற விதத்தில்; அதனோடு கவிஞன் தோழமையோடும் ஆதரவோடும் பயணிக்கும் வகையில் இந்தக் கவிதையை ஒரு ‘ஒஸ் ரமிழ் வரலாற்று ஆவணம்” என்று சொல்வேன்.
( இது தான் கவிதை!
இந்த அழகுக் கவிதைக்கு நான் பொருள் விரித்து எந்த ஒரு விளக்கமும் நயமும் சொல்லத் தேவையே இல்லை.எளிய சொல்லும் சந்தமும் கருத்தும் காதினையும் கருத்தினையும் காந்தம் போல கவர்ந்திடவல்லவை.
இந்தத் தொகுதியின் ஒரு துளி தான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது.. இப்புத்தகத்தின் முழுக் கவிதைகளையும் படித்து முடித்தபின் ‘இவரொரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்” என்றொரு படிமம் உங்களுக்குள் அடையாளம் பெறும்.அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றியும் கூட.
கவிதைப்பிரியன், தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வலைத்தளத்துக்குச் சொந்தக்காரன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன், தேர்ந்த நாடகக் கலைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் உள்ள மனிதன்.
விழா நாயகனுக்கும் அவர் தன் குடும்பத்தாருக்கும் என் அன்பினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தமைக்கு நன்றியையும் கூறி அத்துடன் உங்கள் பெறுமதி மிக்க 3 நிமிட்த் துளிகளைத் தந்து என்னைத் தாங்கிக் கொண்டமைக்கு உங்களுக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். - இது நான் சொல்லாது விட்ட பகுதி )
இதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல போயிட்டுது. பிறகு கவிதைய வாசிக்க வெளிக்கிட்டு.... அது ஏற்கனவே ஒரு பட்டிமன்றக் கவிதை. அதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல வேணும்....
இந்தக் களபரத்துக்குள்ள இந்தக் கவிதை ஏன் முக்கியம் பெறுகிறது என்ற முக்கியமான பகுதியையும் தவற விட்டு.....( ஒரு ஆணின் பார்வையில்; புலம்பெயர் நாட்டில் 3 பரம்பரைகளுக்குள் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்டு; ஏற்பட்ட மாற்றங்கள எளிமையான தமிழில் சொல்லிய திறத்திலும் அதன் வரலாற்றுப் பெறுமதியிலும் இக்கவிதையைத் தாண்டி எவரும் போக முடியாது. ஒஸ்தமிழ் அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கிடையே பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள பற்றி அறிய வேணும் எண்டால் இக் கவிதைக்குள் பல முக்கியமான கருப்பொருள்கள் இருக்கின்றன ) வந்தமர்ந்தேன்.
கவிதையை தனியாய் அடுத்த பதிவில் போடுகிறேன்.
சட்டகத்துக்குள் நிற்காத சுயங்கள்!.................
கற்றுக் கொண்ட பாடங்கள்;
1. நேரத்தி்ற்குள் நிற்கவேண்டும். முடியவில்லை என்றால் மறுக்க வேண்டும். அது அந்த மனிதருக்கு நான் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.
2. விழாவின் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
3. என்னால் பேப்பரைப் பார்க்காமல் சுயமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது இந்த மேடை.
4. என்னை ரசிக்கவும் கேட்கவும் கிரகித்து சகித்துக் கொள்ளவும் ஆட்கள் இருந்தார்கள். (நெஞ்சை நிறத்த ஒரு விஷயம் இது.இதைப் பதியாமல் எல்லால் அகல இயலாது. கோவிந்தராஜன் என்ற ஐயா, இவரை அன்று தான் முதன் முதலில் கண்டேன். பஸ்கரனின் ஆத்மார்த்த மதிப்பிற்குரிய ஒருவர். முதல் பிரதி வாங்க அழைக்கப் பாட்டவர். பாஸ்கரனே அவரைப் பற்றி சிறப்பாக மேலையில் சிலாகித்து பெருமை கொண்டவர். நான் மேடையை விட்டு இரங்கிய கையோடு என்னை நெருங்கி, பெண்னைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். )
எப்படி ஒரு பெண் தன் கணவனால் பார்க்கப் படவேண்டும் என்பது பற்றியும் ஒரு ஆண் தன் குடும்பத் தலைவியால் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி சொன்னார்.”ஆண் தன் மகளை எப்படி நேசிக்கிறாரோ அது மாதிரி தன் மனைவியை நேசிக்க வேண்டும். பெண் எப்படி தன் மகனை நேசிக்கிறாரோ அது மாதிரி தன் கணவனை நேசிக்க வேண்டும்”
5.பிரபலமான ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. எனக்கு அவரை முன் பின் தெரியாது.தன்னை அறிமுகப்படுத்திய போது வியந்து போனேன். தன் அடையாள அட்டையையும் தந்து, “இன்றய நிகழ்வில் உங்களுடய பேச்சுத் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். மிக இரக்கமுடயவராக இருந்திருக்க வேண்டும். அவர் சொன்னது சரியோ பிழையோ நக்கலோ தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் எனக்கு அது ஆறுதலூட்டும் மருந்துச் சொல்லாக இருந்தது என்பதை கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இது தாங்க நடந்தது.........