Monday, October 12, 2015

தமயந்தி



தமிழ் சினிமாவிலே ஒரு பாடல் உண்டு. பெண்ணை தமிழகத்துக்கு தமிழின் எழிலோடும் அதன் பாரம்பரியப் பெருமைகளோடும்  வருணிக்கின்றதான ஒரு பாடல்.

கவிஞர் வாலி இயற்றிக் காட்டிய அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இப்பாடலுக்கு குரலால் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்தரராஜன். இசையால் அதனை இன்னொரு தளத்துக்கு உயர்த்தி மெருகேற்றியவர் எம்.எஸ். விஸ்வநாதன். பூவா தலையா என்ற திரைப்படத்தில் இப்பாடல் பிறந்த ஆண்டு 1969.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்தது.

பாடல் இது தான்.

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.



என்ன ஒரு அற்புதமான பாடல். பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக வைத்து எண்னத்தக்க  இப்பாடலை அண்மையில் கேட்ட போது நினைவுக்கு வந்தது நளவெண்பா நாயகி தமயந்தி.

அவள் நடந்து வருகிறாள்.

“நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு”

பாடல் இது தான்.

இதனை நான் உடைத்துப் பொருள் கூற விரும்பவில்லை. அவரவர் உங்களுக்கேற்ற மாதிரியாக உடைத்து உண்டு களியுங்கள்.

முற்றிய மாங்காயை மரத்திலே இருந்து உடனே பறித்து கல்லிலே குற்றி சாப்பிடுவது மாதிரி....

சுடச் சுடப் பதமாக வறுத்த நிலக்கடலையை நாமே உடைத்து அதற்குள்ளே இருக்கும் பருப்பின் மெல்லிய கோதை கசக்கி ஊதி அகற்றியபின் பருப்பை வாய்க்குள்ளே போட்டுக்கொள்வது மாதிரி....

அவரவர்க்கே உரித்தான சுவைகள்....

குழந்தைகள் மண்ணில் சோறுகறி சமைத்து ஆர்வம் கண்ணில் மின்ன கொண்டோடி வந்து தரும் போது, நீங்கள் அதனைச் சுவைப்பதாகப் பாவனை காட்டி விட்டால் தோன்றுமே அந்த முகத்தில் ஒரு சந்தோஷமும் பெருமிதமுமான ஒரு மின்னல்! அதைக் காணும் ஒரு சந்தோஷ தருணம்  மாதிரி....

ஒன்றை நீங்கள் உணர்வீர்கள்.

இந்தச் சுவைக்கு ஏது ஈடு இணை!

6 comments:

  1. வணக்கம்
    வர்ணனை அற்புதம் ஒரு பெண்னை அத்தனைக்கும் உவமை... தேடலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன். உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கூடவே.

    வருக!

    ReplyDelete
  3. பழங்கால இலக்கிய வடிவங்களை சாதாரண மக்களுக்கும் புரியும் படி எழுதிய கவிஞர்களில் வாலியும் ஒருவர் ..பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. ஆமாம் புத்தன். கண்ணதாசன் பிரபலமாகி விட்ட காரணத்தால் வாலியின் திறமையும் மாண்பும் அதிகம் வெளியே தெரியவராமல் போய் விட்டது.

    வாலியும் எம்.எஸ்.வியும் பொருத்தமான கூட்டு! அவர்கள் கூட்டில் மலர்ந்த பாடல்கள் எத்தனையோ ஒன்றை ஒன்று மெருகூட்டுவதாய் அமைந்திருக்கும். இசை கருத்தை அலங்கரிக்கும்; கருத்து இசையை அலங்கரிக்கும். அவர்கள் கூட்டில் இசைக்குள் பாடல் மூழ்கிப் போய் விடுவதில்லை. கருத்தில்லாத வசனங்கள் இசையைக் கொண்டாடுவதும் இல்லை. இன்றைகளைப் போல.

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புத்தன்.

    ReplyDelete
  5. சமீபத்தில் வானொலி நிகழ்ச்சிக்காக அரிச்சந்திரபுராணத்தில் சந்திரமதியை வர்ணிக்கும் வரிகளையும் திரையில் பெண்களை வர்ணிக்கும் சில பாடல்களையும் எடுத்துத் தொகுத்தேன். அவற்றுள் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள பாடலும் ஒன்று.. பெண்களை வர்ணிக்கையில் எப்படியெல்லாம் கவிஞர்களின் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது... தமயந்தி குறித்த வரிகளையும் பொருளுடைத்துப் புரிந்துகொள்ள நீங்கள் கொடுத்திருக்கும் உவமைகளையும் ரசித்தேன்... நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  6. ன்பு கீதா,

    அப்படியா.... அந்த அழகான இன்பமான இதத்தை நான் கேட்காமல் தவற விட்டு விட்டேன்.சந்திரமதியை வருணிக்கும் அந்தப் பாடலையும் நீங்கள் அதுக்கு தேர்ந்தெடுத்த பாடலையும் இங்கு வந்து பகிர்ந்து கொள்ளுங்களேன் கீதா...

    பிளீஸ்பா......

    அந்த இலக்கிய அழகை நானும் சேகரித்துக் கொள்ள வேண்டும் இங்கு நிரந்தரமாக.....

    ReplyDelete