Saturday, October 17, 2015

நான் சொதப்பின கதை....17.10.15 மாலை 5.00 மணிக்கு பாஸ்கரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிதைத் தொகுப்பின் பெயர் “முடிவுறாத முகாரி”

இப்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சி முடிந்தது. வந்த கையோடு இங்கு உட்கார்ந்திருக்கிறேன்.

மனசுக்கு ஒரு விடிகால் வேண்டித்தான் இருக்கு! கொட்ட இது நல்ல தோதான இடம்! நன்றி மக்காள்!
......................

பாஸ்கரன்;

என் நல்ல நண்பன். நேர்மையான மனிதன். உண்மைக்கு எப்போதும் பக்கமாய் நிற்பவர். தனக்குச் சரியெனப்படுவதை துணிந்து சொல்ல தயங்காத உள்ளத்துக் காரன்.

‘தமிழ்முரசு அவுஸ்திரேலியா’ என்ற இணையத்தளத்தின் ஸ்தாபகன்; ஊடகவியலாளர்; நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக நெறியாழ்கையிலும் நடிப்பிலும் நாடகப்பிரதி ஆக்கத்திலும் தன் திறமையின் பெரும்பங்கு நேரத்தை கொடுத்து ஒஸ்தமிழ் நாடகத்துறைக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தன் ஆழமான பங்களிப்பைப் பதித்திருப்பவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். அன்பு, பண்பு, எளிமை, ஓர்மம் எல்லாம் கொண்டிருப்பவர்.

அவரது கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று.

இந்த மனிதன் தன் கவிதை ஒன்று பற்றி 3 நிமிடத் துளிகளுக்குள் நயப்புரை வழங்குமாறு கேட்டால் மறுக்க முடியுமா?

அங்கு தான் எனக்கு நாக்கில் சனி பகவான் குடியமர்ந்து விட்டார். அது தெரியாமல் ஓ.. அதுக்கென்ன, செய்கிறேனே என்று ஒரு மாதத்திற்கு முன்னரேயே சொல்லி விட்டேன்.

இன்று புரட்டாசிச் சனி கடசி நாள் என்றதையாவது யோசிச்சிருக்க வேணும் நான். ஆங்கிலேயரின் தின சோதிடக் குறிப்பில் இன்று புதிய கருமங்கள் ஆற்றுவதைத் தவிர்த்தல் நலம் என்ற கூற்றையாவது கொஞ்சம் கொன்சிடர் பண்ணி இருக்கலாம்.

நானும் புத்தகத்தை நன்றாகப் படித்து இந்தக் கவிதையை எடுக்கலாம் அந்தக்கவிதையை எடுக்கலாம் என்றெல்லாம் வலு சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு 2, 3, தரம் இது வேண்டாம் அது அது வேண்டாம் இது என்றெல்லாம் மாற்றி நேற்றைக்கு முதல் நாள் வேலையில் இருந்த மனிதருக்கு தொலைபேசியில் தொல்லை பண்ணி பெண் சம்பந்தப்பட்ட கவிதையை வேறு யாரும் நயப்புக்காக எடுத்திருக்கிறார்களா என்று கேட்டு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் அந்தக் கவிதையைப் பற்றிய நயப்புரையைச் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன்.

இப்போதே பாருங்களேன் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வராமல் சுத்தி சுத்திக் கொண்டே நிற்கிறேனே!

இதைத் தான் அங்கேயும் செய்தேன்.தலைமை தாங்கியவர் 2 தரம் வந்து விஷயத்துக்கு வாங்கோ விஷயத்துக்கு வாங்கோ என்று 2 தரம் வந்து விட்டார் என்றால் பாருங்களேன்.

என்ன ஒரு வெக்கக் கேடு என்பதற்கும் அப்பால் அந்த நல்ல மனிதனின் நிகழ்ச்சியை இப்படி நாசம் பண்ணி இருக்கக் கூடாது என்ற சுய பச்சாதாபம் தான் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

வரும் போது குடும்பத்தார்  தந்த நேர்மையான விமர்சனம் ஒன்று.

எல்லோரும் மெளனமாக வந்தது தான். ’கொடுமையான மெளனம்’ என்பதன் பரிபூரண அர்த்தத்தை விளங்கிக் கொண்ட கணம் / தருணம் அது!

கொஞ்ச நேரத்தால அம்மா மட்டும் மெல்ல முணுமுணுத்தா. உனக்கு நேரம் வேணுமெண்டா முதலில கேட்டெல்லோ இருக்க வேணும்? கவிதையப் பற்றிக் கதைக்கச் சொன்னா கவிதையை பற்றி 3 நிமிசம் கதைக்கிறது தானே!

என்ன பண்ணுறது நம்மால முடியாமல் போச்சே!

என் இனிய தோழி கீதா சொல்லும் விமர்சனமும் இது தான்.
”ஒரு விஷயம் என்றால் ஒரு விஷயத்துக்குள் நிற்கமுடியாமல் நிற்கிறீர்கள்.”

நான் என்ன செய்யட்டும்?

சொரி பாஸ்கரன். I'm truly sorry!!


( பாருங்களேன் இந்த ஒரு விஷயத்தச் சொல்லுறதே ஒரு பதிவின்ர நீளம் வந்திட்டுது.  இனி நான் எங்க விஷயத்துக்குப் போறது? கதச்ச விஷயம் அடுத்த பதிவில தொடரும். கட்டாயம் எனக்கு உங்கட விமர்சனம் வேண்டும். இதுக்கில்ல; அதுக்கு. :)

நன்றி மக்காள். விடிய வேலை. வேலையால வந்து அதப்பற்றிச் சொல்லுறன்.


4 comments:

 1. அன்பு மணிமேகலா...நல்லதொரு நண்பரின் கவித்துளியை நயப்புரை செய்யவிரும்பி அது சரிவர இயலாமையால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் நியாயமானதே...

  மேடைப்பேச்சு என்பது எல்லோருக்கும் வாய்க்கப்பெறும் கலையன்று... சிலர் பெருமளவில் தங்களைத் தயார்ப்படுத்தியிருந்தாலும் மேடையேறியதுமே கை கால்கள் உதறத் தொடங்கிவிடும். நானெல்லாம் இந்த வகையில்தான் வருவேன்.

  சிலருக்கு சொல்லவந்த விஷயத்தை விட்டு பேச்சு வேறுதிசை நோக்கிச் சென்றுவிடும். திருப்பினால் மறுபடி வரும்.. நீங்கள் இந்த வகை என்று தெரிகிறது. சிலர் இருக்கிறார்கள். பலமணிநேரம் பேசினாலும் சொல்லிக்கொள்வது போல் எந்த கருத்தும் இருக்காது.

  அப்படிப் பார்க்கையில் கருவை விட்டு விலகல் என்பது மனங்கொண்ட எண்ணப்பரப்பின் விரிவையே குறிக்கிறது. ஏராளமான செய்திகளைச் சொல்லத்துடிக்கும் மனத்துக்கு நேரம் பற்றிய கவனம் வருவதில்லை. அதுதான் பிரச்சனை..

  மற்றபடி உங்களிடமிருந்து நயப்புரை பெறுதல் என்பது ஒரு அழகான அனுபவம். அதில் பாசாங்கு இருக்காது. உண்மையான கருத்துகளின்.. அப்பட்டமான மனத்தின் வெளிப்பாடாகவே அமையும். கருத்துரையை அறிய நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

  சுணக்கம் வேண்டாம் தோழி.. பழகப்பழக மேடைப்பேச்சின் பக்குவம் பிடிபட்டுவிடும்.

  ReplyDelete
 2. சொத‌ப்பினதை உணர்ந்து அதைகட்டுரையாக வடித்தமையே பெரிய விடயம்......சிட்னி மக்கள் உந்த சொந்தப்பலுக்கு எல்லாம் பழக்கபட்டவர்கள் ... அவ‌ர்கள் மன்னித்துவிடுவார்கள்... ஆகவே நீங்கள் அடுத்த சொதப்பலுக்கு தயாராகுங்கள் ....

  ReplyDelete
 3. மிக ஆறுதலான வார்த்தைகள் கீதா.’வருடிச் செல்லும் வார்த்தைகள்....

  ReplyDelete
 4. வணக்கம் புத்தன்,
  வந்தீங்களோ நிகழ்ச்சிக்கு? /நீங்கள் அடுத்த சொதப்பலுக்கு தயாராகுங்கள் ..../ இனி அதெல்லாம் கஸ்டம்பா. பாவம் சிட்னி மக்கள் என்பதை விட என் நண்பனுக்கு இவ்வாறு ஒரு கஸ்டத்தைக் கொடுக்க முடியாது புத்தன். பிராயச்சித்தம் ஒன்று செய்தாக வேண்டும் என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  நீங்கள் இரண்டு பேரும் வந்ததும் பகிர்ந்து கொண்டதுமே எனக்கு பெரும் ஆறுதல்.
  நன்றி.

  ReplyDelete