தமிழகத்துக் கவிப்பரப்பில் காள மேகப்புலவரின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எப்போதும் எனக்குண்டு.
இந்த கவிக்கிறுக்கன் ஒரு விதமான சுதந்திரப் போக்கன்! கட்டுமானங்களுக்குள் அகப்படாத ஒரு மனுஷன். பணம் இல்லாத போதும் அதை பகிடியாகவே பார்த்து திரிந்த ஒரு ஆத்மா. கடவுளையே கிண்டலடித்து வாழ்க்கையை சந்தோஷமாகத் தாண்டிப்போன ஒரு தற்துணிச்சல்காரன். தமிழாயுதத்தைக் கையிலேந்தியபடி அது ஒன்றையே தன் முழுச் சொத்தாகவும் கொண்டு இலக்கிய பரப்பில் ஒரு வித திமிரோடு இறுமாந்து திரிந்ததோடு தான் எப்படி பதியப்படுவேன் என்பதை அறிந்து ‘பதிஞ்சிட்டுப் போடா’ என்று சொல்லி விட்டுப் போன சுதந்திரப்புலவன். அந்த வித்துவச் செருக்கு அவனை வாழ்க்கை முழுக்க வழிநடத்தி இருக்கிறது.
அந்த ஒரு இறுமாப்புக்காகவே அம்மனிதனை எனக்கு நிரம்பப் பிடிக்கும். அந்த Guts! அது தான் அந்த மனிதன். ஒரு முறை அதி மதுரக் கவிராயர் இவரிடம் உமக்கு என்ன பெயர் எனக் கேட்கிறார். மனுஷன் உடனே பாட்டிலே எடுத்து விடுகிறார்.
“ இம்மென்னும் முன்னேஎழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனாயின்
பெரும் காளமேகம் பிளாய்!”
’....சும்மா தான் இருப்பன். எழும்பினன் எண்டா மழைநீரை ஆவியாக்கி நிறைத்து வைத்திருக்கிற; பொழியத் தயாராக சினைகொண்டிருக்கிற கருமுகில் கூட்டம் பிள்ள” என்று ‘பிளாய்’ என்பதில் ஒரு வித எக்காளம் ஒலிக்க சொல்லுவான். (காளமேகம்- பொழியத் தயாராக இருக்கும் கருமுகில் கூட்டம்) அதில் தான் எத்தனை தன்னம்பிக்கை! பெருமை!! ஒரு வித இறுமாப்பு!
’யாமார்க்கும் குடியல்லோம்’ என்று சொன்ன மாதிரி!
’எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங் கேள்’ என்று கடவுளுக்கே கட்டளை இட்டது மாதிரி ஒரு வித எழிலான திமிர்!
இப்போ நான் சொல்ல வந்தது என்னவென்றால் இந்த மனிதனைப் போல ஒரு மனிதனை ஈழத்துக் கவிப்பரப்பில் நாம் ஏன் காண முடியவில்லை என்பது தான். எனக்கு எப்போதும் இருக்கிற ஆதங்கம் இது.
சரி அது போகட்டும். இந்த ஆள் தன்னை ஒரு பொழியத் தயாராக இருக்கும் ஒரு கருக்கொண்ட மழைமுகில் கூட்டம் என்று சொல்லி விட்டுப் போனானே ஈழத்தில் ஒரு மழையே பொழிந்து விட்டுப் போயிருக்கிறது என்பதை அண்மையில் காணக் கிட்டியது.
ஈழத்து சோமசுந்தரப் புலவர் காட்டும் மழை வெள்ளம் அது. கொஞ்சம் கால் நனைப்போம் வாருங்கள்.
“ எஃகிய பஞ்சினைப் போலத் - தமிழ்
எல்லாளமன்னனிருதயம் போல
வெஃகிய வெண்முகிற்கூட்டம் - இந்து
வெண்டிரை மேயவே முந்திடுமன்றே”
எஃகிய- தளர்ந்து பொருமி இருக்கிற, வெஃகிய- வெண்மையான முகில் கூட்டம். தளர்ந்து பொருமி இருக்கிற வெண்பஞ்சினைப் போலவும் எல்லாள (தமிழ் மன்னன்) மன்னனின் இதயத்தினைப் போலவும் வெண்முகில் கூட்டம் கருக்கொண்டு மழை பொழிவதற்காக கடல் நீரைப் பருகி மேலே எழும். (எல்லாளன் துட்டகைமுனுப் போர் மகாவம்சத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் என்பதான ஒரு வரலாற்றுப் படிமம் பலசர்ச்சைகளையும் வாதப்பிரதி வாதங்களையும் புத்திஜீவிகள் மட்டத்தில் கிளப்பியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.)
இப்போது வெண்முகில் நீரைப் பருகி கருமுகிலாகி விட்டது. அது உருண்டு திரண்டு பொழியத் தயாராகி விட்டது. அந்தக் கருமுகில் கூட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? கற்றறியாதவர்களின் மனம் போலவும்; கடுகண்ணாவை (என்பது இலங்கையில் ஓரிடம். தொடருந்து மலை ஒன்றை ஊடுருவிச் செல்லும் குகையைக் கொண்ட ஓரிடம்) குகை வழியில் நிறைந்திருக்கிற இருளைப் போலவும்; பொறாமை கொண்டவர்களது மனதைப் போலவும் கறுத்து பெருத்து கர்ப்பமாகி நிற்கிறது அந்தக் கருமுகில் கூட்டம். அந்தப் பாடல் இது தான்.
“ கல்லா தவர் மனம் போல - அன்றிக்
கடுகணைக் குகைவரு கணையிருள் போல
அல்லா தழுக்காறு கொண்டோர் - மனம்
ஆமென வேயிருண்டங்கு சூல் கொண்டே”
இப்போது மின்னல் தெறிக்கிறது. கறுப்பு முகில் கூட்டத்தின் பின்னே மின்னி மின்னி மறைகிறது. கூடவே இடியோசையும் கேட்கிறது. அது எப்படி இருக்கிறது தெரியுமா? அது சூரியனைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்து போருக்குக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். ஒருவித எள்ளல் சிரிப்பு மின்னலுக்கும் போருக்கு அறைகூவல் விடுப்பது இடிமுழக்கத்துக்கும் என்னமாய் பொருந்திப் போகிறது பாருங்கள். அந்தப் பாடல் இது.
“ செங்கதிரோன் தனை யெள்ளி - நின்று
சிரிப்பது போல விடையிடை மின்னி
அங்கவனோடறை கூவி எதிர்த்
தார்ப்பது போல விடித்து முழக்கும்”
இப்போது மேகத்தின் உருவம் சித்தரிக்கப்படுகிறது. திரண்டு நிற்கும் அக் கருமேகம் எப்படி இருக்கிறது தெரியுமா? அது கையை உடைய மலையைப் போன்ற யானையைப் போலவும் கரும் கற்குன்றைப் போலவும் பெரிய காண்டாமிருகங்களின் கூட்டத்தைப் போலவும் கருமை மிக்க இராவணனுடய பெரிய போர் படையைப் போலவும் திரண்டு நிற்கிறது. இனி பாடலைப் பார்க்க வேண்டாமா?
“கைம்மலை கன்மலை போலப் - பெருங்
காண்டா மிருக நிரைகளைப் போல
மைம்மலி ராவணனேவும் - மூல
மாபலமென்னவும் வந்து குவிந்து”
திரண்டு நிற்கின்ற இந்தக் கருமேகக் கூட்டங்கள் இப்போது மழை பொழியத் தயாராகி விட்டன.அந்த மழை எப்படி இருக்கிறதென்றால்,
” கொடைமடம்படு குமண மன்னவன்
கூறு சித்திரப் புலவ னுக்கருள்
மடை திறந்திடுன்ஹ் கொடைவி தங்கள்போல்
வயிறு ளைந்துமா மழை சொரிந்ததுவே.
மழை சொரிகிறது. அது கொடைக் குணத்திலே சிறந்து விளங்கிய குமணமன்னன் பெருஞ்சித்தனார் என்னும் புலவருக்கு கருணையோடு வழங்கிய தானத்தைப் போல கருமுகில்கள் மழையைப் பொழிகிறது. புலவனுக்கும் கொடுத்த தானத்தைப் போல மழை! ஒரு மனுஷனுக்கு கற்பனை எப்படி எல்லாம் ஒப்பிடச் சொல்கிறது பாருங்கள்.
இப்போது வானில் இருந்து மழை பூமியை நோக்கிக் கீழிறங்குகிறது. எங்கெங்கெல்லாம் அக் கொடையைப் போன்ற மழை பொழிகிறது என்று பார்க்க வேண்டான்மா? அது இலங்கையில் உள்ள மூன்று பிரதான மலைகளின் மீது வந்து மோதிப் பொழிகிறது. அதிலொன்று சிவனொளிபாதமலை. மற்றது பேதுருதாலகாலமலை. மூன்றாவது கதிரமலை. இன்னொரு இடமும் ஒன்று உண்டு. உயர்வான மரங்கள் உள்ள வன்னிக்காடு. இதனை நான் சொல்லவில்லை. அவரே சொல்கிறார். இப்படி.
” பாத பங்கய மலையின் மீதினும்
பகரு பேதுரு மலையின் மீதினும்
ஓது கதிரைமா மலையின் மீதினும்
உயர்ந்த வன்னியா ரணிய மீதினும்”
பாத - சிவனொளிபாத; பங்கயம் - மலை.
இப்போது மலையில் இருந்து - பாத பங்கய மலையில் இருந்து அருவி பாய்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் புத்த பகவான் அருளிச் செய்த அருளுரையைப் போல பாய்கிறது பேராறு. இலங்கையில் உள்ள பெளத்த மக்களுக்கு சிவனொளிபாதமலை புனிதமான இடம். இந்துக்களுக்கு கதிரமலை மாதிரி. அதனால் தானோ என்னவோ பாத பங்கயத்திலிருந்து பாய்கிற அருவியை அவர் புத்த பகவானின் அருளுரைக்கு ஒப்புவமை சொல்கிறார்.இனி அந்தப் பாடலைக் காண்போம்.
“ அரசு நீழலிற் புத்த மாமுனி
ஆரு வற்சரம் பெற்ற யோகினைப்
பரவு பாரினுக் கருளு மாறுபோற்
பரவு பாரினுக் கருளுமாறு போற்
பாத பங்கயத் தருவி பாயுமே”
இனி பேதுருதாலகாலமலையின் மீது எப்படி அருவி பாய்ந்தோடி வருகிறது என்று பார்ப்போம். அது கல்வாரி மலையிலே இறைகுமாரனான யேசுபிரான் ஆற்றிய மலைப்பிரசங்கம் போல பெருகி வருகிறது. இங்கு பேதுருதாலகால மலையை யேசுபிரானின் மலைப்பிரசங்கத்தோடு ஒப்பிட்டமைக்கு ஏதேனும் விசேட காரணம் இருக்க வேண்டுமே? ஆம். இருக்கிறது. அது யேசுநாதரின் சீடர் ஒருவரின் பெயர் பேதுரு என்பது நினைவுக்கு வருகிறதா? இந்தப் பாடல் இதோ கீழே வருகிறது.
“ ஏசு வென்றிடும் ஞான பண்டிதன்
ஏறி மாமலை கூறு நீதி போற்
பேசு மாமுகில் சொரிய வாங்கியே
பேதுருமலை யருவி பாயுமே”
பேதுருமலையை கல்வாரி மலைக்கும் மழைநீரை மலைப்பிரசங்கத்துக்கும் ஒப்பிட்டு பேதுருதாலகால மலையை பேதுரு என்ற சீடனின் பெயராகக் கொண்டு கிறீஸ்தவத்துக்கும் ஒப்பிட்டுச் சொன்னது எத்துணை பொருத்தம்!
இப்போது நாங்கள் கதிர்காமம் போய் கதிரமலையைக் காணப்போகிறோம். இது இன்று வரை இந்துக்களின் புனித தலம். வள்ளியை முருகன் கண்டு காதல் கொண்ட இடம் என்பது இந்துக்களது ஐதீகம். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். சைவத்துக்கெதிராக கிறீஸ்தவ சமயம் பரவிக்கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நடைமுறைக்கெதிராக சைவமும் தமிழும் என்ற போர் கொடியைப் பிடித்துக் கொண்டு போராடக் களமிறங்கியவர் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். அவருடய பிரசாரங்கள் பிரசங்கங்கள் வரலாற்றுப் பரப்பில் வியந்து பேசப்படுவன. ஆறுமுகம் என்ற அவரது பெயருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டதே அவர் எத்துணை நா வல்லோனாகத் திகழ்ந்தார் என்பதற்கு சாட்சி சொல்லும்.
இப்போது நாங்கள் கதிரமலைக்கு வருவோம். அங்கு பெருகி வருகிற அருவி எப்படி இருக்கிறது தெரியுமா? அது நாவலரின் கண்டனப் பிரசங்கம் போல பாய்கிறது.அந்தப் பாடல் இதோ இது தான்.
“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லைவந்தருளு நாவலன்
கண் டனப் பிரசங்க மாமெனக்
கதிரைமாமலை யருவி பாயுமே”
இன்னும் பல பல பாடல்கள் எப்படி எங்கெங்கெல்லாம் மழை பெருகி ஓடியது அதன் விளைவுகள் என்னென்ன என்றெல்லாம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் அது என்னென்ன விளைவுகள ஏற்படுத்தியது என்பதை எல்லாம் சொல்லுகிற விதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் விரிக்கப் புகுந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நீங்கள் ஓடி விடுவீர்கள்.பதிவு ஏற்கனவே நீண்டும் தான் போய் விட்டது. அதனால் அவற்றை மிகச் சுருக்கி,மேற்கூறிய குறிஞ்சி நிலமான மலையில் இருந்து கீழிறங்குகின்ற மழை அருவி எப்படி இருக்கின்றது என்பதை மாத்திரம் பார்த்து, அப்பால் போவோம்.
“ பூங்குறிஞ்சி முகட்டினில் ஏறிப்
பொளிந்த தெள்ளமுதாகிய வெள்ளம்
பாங்கி லாதப ரத்தையை நாடிப்
படரு வேரிற் படர்ந்து பள்ளம்”
மலைகளில் இருந்து கீழிறங்குகின்ற வெள்ளம் பரத்தையர்களை நாடி போகின்றவர்களைப் போல கீழிறங்கி ஓடுகிறது. பாங்கிலாத பரத்தையர் - ஒழுக்கமில்லா விலைமாதர்.
இந்த இடத்தில் மீண்டும் ஏனோ அந்த காளமேகக் கிறுக்கன் நினைவுக்கு வந்து போகிறான்.அந்த மனுஷன் தான் பரத்தையிடம் போனதையும் பாடி வைத்துப் போயிருக்கிறான். ( பதிவு ஏற்கனவே நீண்டு தான் போய் விட்டது. எண்டாலும் கொஞ்சம் பொறுங்கோ. :)
இவர் - காளமேகத்துப் புலவன் போன பரத்தை ஒரு தெலுங்குக் காறி. அவர் அவவிட்ட பட்ட பாட்ட சொல்லுகிறார் நம்மட ஆள். இப்படி.
“ ஏமிரா ஓரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
தாமிராச் சொன்ன எல்லாம் தலைகடை - தெரிந்ததில்லை
போமிராச் சூழும் சோலை பொருக் கொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு நமன் கையில் பாடு தானே”
இந்த மனுஷனுக்கு தெலுங்கும் தெரிந்திருக்கிறது. ( திம்மி என்பது அவள் பெயர். ஏமிரா ஓரி - அடே என்னடா? எந்துண்டி வஸ்தி - எங்கிருந்து வருகிறாய்? ) அடே என்னடா? எங்கே இருந்து வருகிறாய் என்பாள்.நேற்றிரவு அவள் கதைச்சதில எது தொடக்கம் எது முடிவு எண்டு எதுவும் விளங்கயில்ல. ( ஐயா அவ்வளவு ‘தெளிவா’ இருந்திருக்கிறார்.) இருட்டான சோலையைப் போல ஒரு கொண்டை வச்சிருக்கிற அவளிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அது யமனிண்ட கையில நான் பாட பாடப்பா என்கிறார் மனுஷன்.செத்துப் பிழைச்சு வந்திருக்கிறார் மாப்பிள்ள. :)
ஆனாலும் இந்த புலவனின் வித்துவச் சிறப்பும் விடுகதைப் பாங்கும் சிலேடை நயமும் மிக்க பாடல்கள் இன்னும் இன்னும் நயந்தும் வியந்தும் வாசித்து இன்புறத் தக்கவை.
இப்போது மீண்டும் இலங்கைக்கு வருவோம். வெள்ளம் இப்போது கடலைச் சென்றடையப் போகின்றன. அதன் அறிகுறியாக மீன் கொத்திப்பறவைகளும் கொக்குகளும் நாரைகளும் கழிமுகத்திடையே தென்படுகின்றன.அங்கு இந்தப் பறவைகளுக்கும் துள்ளிக் குத்தித்து கொண்டாட்டமாக நீந்தித்திரியும் மீன்களுக்குமிடையே ‘வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்!’
“செப்பு மத்தளங் கொட்டும் கரம் போற்
சிறைய சைத்துச் சிரலினம் மேவும்
கொக்கு நாரையும் மீனினங் கொத்திக்
கொண்டெழுந்து விழுங்கி விக்கும் மே”
மத்தளம் அடிக்கின்ற கைகளைப் போல மீன் கொத்திப் பறவைகள் தம் சிறகுகளை அடித்துக் கொண்டு வெள்ளம் பாய்கிற இடங்களுக்கு வந்து சேருகின்றன.அதே நேரம் கொக்குகளும் நாரைகளும் மீன் வகைகளைக் கொத்திக் விழுங்கி விக்குகின்றன. சிரல் - மீன் கொத்திப் பறவை.
வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தின் இடையில் தானே இருக்கிறது திருமணம் என்றொரு தூண்டில்.அந்தத் தூண்டிலின் நுனியில் இருக்கும் சிறு துண்டு ருசியில் வந்து சிக்குகின்றன மீனினங்கள். அங்கு ஒரு கல்யாண ஆரவாரம்.
“ மங்கலந் திகழ் மாப்பிள்ளை மார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போற்
பொங்கு வெள்ளப் புதுமனை நீர் வரப்
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே”
திருமணத்திற்காக மங்கலம் நிறைந்த மாப்பிள்ளையும் அவர் சுற்றத்தாரும் மணமகள் வீடு நோக்கி வர, அவர்களைப் பெண் வீட்டாரும் அவர் சுற்றத்தாரும் (மாமன் பக்கம்)எதிர் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்லுதலைப் போல பொங்கிப் புரண்டு வருகிற புதிய ஆற்று வெள்ளத்தை புரளுகின்ற இயல்புள்ள மீன்கள் நிரை நிரையாக வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்றனவாம்.( மீனிரை) ஒரு மாப்பிள்ளை வரவேற்புக் காட்சி ஒன்று அங்கு அரங்கேறுமாற் போல...
இந்த மீனிரைகளுக்குப் பின்னாலே பரிசத்தோடு பரிவாரக் கூட்டம். யார் யாரெல்லாம் பரிசுப்பொருளோடு புது வெள்ளத்தை; புது மாப்பிள்ளையை எதிர்கொள்கிறார்கள்? அடுக்கடுக்காய் வரும் நண்டுகள் குடை பிடிக்கின்றன.திருக்கை (மீன்) ஆலவட்டம் எடுக்கிறது. அச்சத்தை வர வைக்கக் கூடியதான சுறா வாள் ஏந்தி வருகிறது. நல்ல குணமான கணவாய்களோ கவரி வீசுகின்றன.
இவர்களுக்கு முற்புறத்திலே ஆமைகள் பரிசப் (சீதனப்) பொருட்களைச் சுமந்து நிற்கின்றன.முரல் மீன்கள் குழல் ஊதி நிற்கின்றன.கடல் அலைகள் மத்தளம் கொட்டுகின்றன. (கொட்டுமேளம்) (அந்த சுபமுகூர்த்தத்தில் ) கடலானது நதியை ஏற்று ( வாரி அணைத்து ) பந்தத்தில் ஒன்றுகலக்கிறது.
அவ்விரு பாடல்களும் இவை தான்.
“ அடுக்கு ஞெண்டு குடைகள் பிடிக்க
ஆல வட்டந் திருக்கை எடுக்க
நடுக்குஞ் சுறவு நாந்தகமேந்த
நல்ல கணவாய் கவரியிரட்ட”
”முன்னே யாமை பரியஞ் சுமக்க
முரல்கள் சின்ன மூதி நிற்க
மன்னு திரைகள் முழவ மியம்ப
வாரி மணக்கும் நதியையே”
தமிழகத்துக் காள மேகத்துக்கு இடி முழக்கத்தோடு ஈழத்தில் ஒரு வெளளப் பெருக்கு......
(ஈழத்துப் பாடல்கள் ’தமிழ் இலக்கியம்’ என்ற புலவர் இளங்கோ அவர்கள் தொகுத்து ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையால் செப். 1996ல் வெளியிட்ட 10ம் 11ம் வகுப்புக்குரிய தொகுப்பில் இருந்து பெறப்பட்டது. மூலம்; தமிழ் அறிவகம், சிட்னி; 894.811)
என்னத்தை எழுத !! எப்படி இதைப் புகழ!!!!!!
ReplyDelete'' கொஞ்சம் கால் நனைப்போம் ''என்று சொல்லி வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்து விட்டீர்களே !
அப்பப்பா !! இந்த இலக்கிய வெள்ளத்திலே சொற்களெல்லாம் அடிபட்டுப் போய்விட்டனவே !
காளமேகமும் ஈழத்துப் புலவனுமே இந்தப் பெரு வெள்ளத்தில் அடிபட்டுப் போனார்களே!
சாமான்யர் நாம் மட்டும் தப்ப முடியுமா ?
பொங்கும் தமிழ் வெள்ளம் எங்கும் பெருகட்டும் !
வாழ்க நின் அழகு தமிழ்
பரா.சுந்தா.
This comment has been removed by the author.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி அம்மா.
ReplyDeleteஉங்களை நிரந்தரமாக இங்கு சேமித்துக் கொண்டதில் இன்னும் மகிழ்ச்சி.
இலக்கியத்தில் ஒரு வித இன்பம் உண்டு. அதை ஆழ்ந்து அனுபவிக்கப் பலருக்கு நேரமில்லை என்று ஓடி விடுகிறார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. இணையப் பரப்பில் இவைகளைச் சிறிய சிற்றுண்டி விருந்தாகக் கொடுக்க வேண்டும். 1 - 3 வரையான பாடல்கள் தான் உச்ச பட்ச எல்லை. இப்பதிவு சற்றே நீண்டுவிட்டது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். என்றாலும் இவை நுனிப்புல் மேய்வோருக்கானதல்ல என்பதிலும் ஈழத்துக் கவி வண்ணங்கள் இணையப்பரப்பில் அதிகம் இல்லை என எண்ணியதாலும் இது சற்றே பெருக்கெடுத்து ஓடி விட்டது. :)
நீங்கள் வந்ததும் தந்ததும் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.