Monday, December 14, 2015

உண்மையை எதிர் கொள்ளுதல்........’உண்மையை எதிர் கொள்ளுதல்’

இப்படி ஒரு வாசகத்தை அதன் முழுமையான அர்த்தங்களுடன் எப்போதேனும் நாம் உள்வாங்கி இருக்கிறோமா என்று கேட்டால் பலருக்கும் - நான் உட்பட - பலவிதமான பதில்கள் அல்லது மழுப்பல்கள் இருக்கும்.

காரணம் உண்மை என்ற ஒன்று தரும் ஒரு விதமான கசப்பு அல்லது அது தரும் சுளீர் என்ற ஒரு கசையடி.

உண்மை எப்போதும் ஜீரணிக்க முடியாததாகவும்; பொய்கள் நாவுக்கு நல்ல இனியவையாகவும் இருப்பதால் பலருக்கும் உண்மையைப் பேச முடியாமல் இருக்கிறது. எதிர்கொள்ள இயலாமல் இருக்கிறது. பொய்களோடு நின்றுவிடப் பிடிக்கிறது. உண்மையை பேசுவோர் மீது ஆத்திரம் வருகிறது.

இது எல்லா வழிகளிலும் நம்மைப் பீடித்திருக்கிறது. ‘(புலம்பெயர் நாடுகளில்) தமிழ் மெல்ல இனி சாகும்’ என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். எப்படி அது சாத்தியப்படும் என போர் கொடி தூக்கி பகீஸ்கரிப்புச் செய்து தனிப்பட ஒருவரைத் தாக்கி நம் ஆத்திரங்களுக்கு வடிகால் கண்டு கொள்ளுகிறோமே ஒழிய அதில் இருக்கும் சாத்திய அசாத்தியங்களை சீர்தூக்கிப் பார்க்கவோ அதிலிருக்கும் உண்மையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஆக்கபூர்வ வேலையை ஆரம்பிக்கவோ நாம் விரும்புவதுல்லை. தாயக பூமியில் இருந்து யாரேனும் வந்து ‘ஆஹா இங்குள்ல தமிழர் என்னமாய் வாழுகிறார்கள் இவர்களாலல்லவோ தமிழ் வாழ்கிறது “என்று சொன்னால் அடுத்த வருடம் அதே பேச்சாளர் இங்கு வருவது உறுதியாகி விடும். அதுவே அப் பேச்சாளருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் வேண்டி இருக்கும் பொய்யாக - இனிப்பான செய்தியாக இருக்கிறது.

உண்மையை சொன்னவர் எதிரியாகவும் ‘உறக்கத்துக்கு தாலாட்டுப் பாடுபவர்’  நல்லவராகவும் நமக்கு ஆகிப் போய் விடுகிறார்.

அண்மையில் இரண்டு மூன்று உண்மைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இரண்டும் இளவயது இறப்புகள்.

ஒன்று வேலைத் தலத்தில்.
இன்னொன்று சமூகத்தில்.

ஒருத்தி 4 இளம்பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வெளிநாட்டுக் காறி.
இன்னொரு பெண் 34 வயது திருமணமான தமிழ் பெண்.

புன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.

இந்த உண்மை என்ன தான் நமக்கு சொல்ல வருகிறது?

அண்மையில் ‘படலையில்’ ஒரு வசனம் என்னைக் கவர்ந்தது. “காதல் வசப்பட்டவனுக்கு புத்தி சொல்லப் போகாதீர்கள். - அவன் முடிவினை எடுத்து விட்டுத் தான் உங்கள் கருத்தைக் கேட்கத் தயாராக இருப்பான்” எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை அந்த காதல் வசப்பட்ட மனிதனுக்கு மட்டும் தெரியாமல் போய் விடும். அல்லது தெரிய விருப்பம் இல்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட இடங்களிலும் பொய் ரொம்ப அழகாகிப் போய் விடும். உண்மையைச் சொல்லப் பிரியப்படுவதில்லை யாரும்.அது அவரது உரிமை என்றொரு பட்டாடைக்குள் உண்மை ஒழிந்து கொள்ளுகிறது.

உண்மைக்கும் விதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதோ?

இப்போது எனக்கு இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள கஸ்டமாக இருக்கிறது.

உண்மையை எதிர் கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிந்தவர்கள் சொன்னால்.......

எதிர் கொள்ள கஸ்ரப்பட நேராதில்லையா......

6 comments:

 1. உண்மையை எதிர்கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்யவேண்டும்? அந்த சூட்சுமம் தெரிந்தால்தான் நாம் அனைவருமே உண்மையை தைரியமாக எதிர்கொள்ள இயலுமே...

  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்

  என்று பற்றினை விட்டால் அதனால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடமுடியுமென்று உரைக்கும் வள்ளுவரே இறுதியில்

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  என்று பற்றினை விடுவதற்கு பற்று அற்ற கடவுளின்மேல் பற்றுவைக்கச் சொல்கிறார்.

  வாழ்வின் மீதான பிடிப்பு இருக்கும்வரை வாழ்க்கை சுழற்றும் சவுக்கடிகளையும் வலியையும் எதிர்கொண்டேயாகவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது நமக்கு தோழி.

  ReplyDelete
  Replies
  1. அழகாகச் சொன்னீர்கள் கீதா.
   பற்றினை விட்டால் துன்பம் இல்லைத் தான். கூடவே சந்தோஷம் இல்லாத வெறுமையும் குடி கொண்டு விடாதா?

   /வாழ்வின் மீதான பிடிப்பு இருக்கும்வரை வாழ்க்கை சுழற்றும் சவுக்கடிகளையும் வலியையும் எதிர்கொண்டேயாகவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது / துன்பத்தில் உழலுதலும் இன்பத்தில் திளைத்தலுமாய்.....

   நன்றிம்மா. வந்ததும் தந்ததும் சிந்தைக்கு உணவாயின.

   Delete
 2. புன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.??

  நல்லவர்களாக நேர்மையாளராக இருக்க விழைபவர்களை அசைத்துப் பார்த்து விடுகிறதோ இப்படியான சூழல்கள்...?!
  மாறாதிருப்போம்... பிறவி இயல்புப்படி.

  ReplyDelete
 3. அன்பு நிலா!
  நலாமா? பலநாளாய் காணோமே? உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  ஓம் தோழி ஒருத்தி 37 வயது. 4 பிள்ளைகளின் தாய்.மார்பகப் புற்றுநோய் வந்து அதிலிருந்து மீண்டு வேலைக்கு வந்த அந்த இள அழகியை மீண்டும் அது எதிர்பாரா இடத்தில் ஆக்கிரோஷமாகத் தாக்கி போய் சேர்ந்தாள்.

  மற்றப் பெண் 34 வயது. மாற்று அறுவைச் சிகிச்சைக்கு காத்திருந்த வேளை வேறொரு நோய் காவு கொண்டு போய் விட்டது. திடீரென.

  இதில் நேர்மறை சிந்தனைகளோடு; நம்பிக்கைகளோடு; சந்தோஷங்களோடு; கைநிறையக் கனவுகளோடு வாழ்க்கையை இவர்கள் எதிர் கொண்டவர்கள் என்பதையும் நோயின் எந்த சாயல்களையும் தங்கள் அன்றாட வாழ்வில் இவர்கள் காட்டியதில்லை என்பதும் தான் என்னை இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.

  என்னதான் கடவுளின் திட்டம்...? வாழ்வும் பாதையும் பற்றிய குழப்பம் நீடித்துக் கொண்டே போகிறது.... இமயமலை ஆண்டிகளிடம் போய் கேட்கவேண்டும் போல இருக்கு. :)

  ReplyDelete
  Replies
  1. நோய் என்பது முன்வினைப் பயன் என அறிகிறோம். முன்னாளைய வினைப் பயனாகவும் கொள்ளலாம். முன் ஜென்ம வினைப் பயனாகவும் கொள்ளலாம்.

   நல்லவருக்கும் நேர்மையாளருக்கும் நோய் அண்டாது என்பது சாத்தியமற்றது தோழி. இழப்பின் துயரம் விரக்திக்கு இட்டுச் செல்கிறது தங்களை.

   நமக்கான நன்மைகளைத் தீர்மானிப்பவர்கள் நாம் மட்டுமல்ல. நம்மைப் படைத்த இறையாற்றலும் தான்.

   நமக்கான தீமைகளை விலக்கவும் ஒதுங்கிச் செல்லவும் நம்மால் முடியக் கூடும்.

   நல்லறிவு நிறைவற்றது. நல்லுணர்வு நிறைவுற்றது.

   சமாதானங்களால் பெரும்பாலும் நிரம்பி வழிகிறது வாழ்வியல்.

   விரையும் நாட்களின் பெரும்பகுதியும் சமையலறையும், வரவேற்பறையும், களைப்பைக் களைய நித்திரை வசப்பட்டும், திடீர்ப் பயணங்களும் கணினியையும் வலையுலகையும் அண்ட விடவில்லை என்பதைத் தவிர நலமே தோழி. கனிவான விசாரிப்பு பலம் தருகிறது, உற்சாகமும் கூட!

   Delete
 4. எழிலான நிலா,
  அழகான பதிலுரை! என்ன சொல்ல, காயத்துக்கு ஒத்தடம் தரும் மருந்து போன்றன இந்தச் சொற்கள்.

  தொடர்ந்து வருக தோழி.
  ஏதாவது எழுதவும் வேண்டும் நீங்கள்.தமிழில் கருத்தும் இனிமையுமான எழில் கொஞ்சி விளையாடுகிறது.

  ReplyDelete