Thursday, January 28, 2016

கண்டறியாத கதைகள் - 1 - திருகணி

என் தோழி நாட்டியக் கலாநிதி. கார்த்திகா அவர்களோடு ஓர் உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு நாள் தன் கணவர் விஞ்ஞான சஞ்சிகை ஒன்றை கொழும்பில் இருந்து வெளியிட்டு வந்தார் என்றும், அந் நாளில் எல்லாம் உலக விடயங்கள் பற்றிக் கதைக்க எந் நாளும் தம் வீட்டில் அறிஞர் பெருமக்கள் கூடி இருப்பர் என்றும், அவ்வாறு ஆரம்பித்த சம்பாசனையில் உதித்து வெளியிட தொடங்கியது தான் அந்த விஞ்ஞான சஞ்சிகை என்றும்; அதன் கடசிப்பக்கத்தில் தன் கணவர் “ கண்டறியாத கதை” என்று ஒரு பக்க வடிவில் சிறிய விஞ்ஞான தொழில் நுட்பம் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்று ( ஒரு ரோச் லட் எப்படி ஒளியை உமிழ்கிறது என்பது மாதிரி) எழுதி வந்தார் என்று குறிப்பிட்டார்.

“கண்டறியாத கதை” என்பது ஒரு அழகான சொற்பதமாக எனக்குத் தோன்றியது. ஈழத்துப் பேச்சு வழக்கில் இச் சொற்பதத்தை ஒரு அபிப்பிராயத்தை மறுத்துப் பேச பயன் படுத்துவார்கள்.’கண்டறியாத கதையெல்லே கதைக்கிறியள்’ என்று சொன்னால் ‘நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை’ என்று அர்த்தமாகும்.

அதனை இலங்கையைச் சார்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தம் பேச்சு வழக்கில் இன்னும் அழகாக ‘இத்துப் போன கதையில்லியா கதைக்கிறீங்க நீங்க’ என்று சொல்லுவார்கள். பிரயோசனமில்லாத கதை என்பது அதன் பொருளாகும்.

ஆனால் இங்கு அது அதன் நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நாங்கள் அறிந்த அடுத்த சந்ததி அறியாத கதைகள் என்று வைத்துக் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர்ந்த பிறகும் தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பின்பும் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் ’உலகப்பண்பாடு’ ஒன்றை கட்டமைத்துக் கொண்டுள்ளன.

பல விடயங்கள் வழக்கொழிந்து போயுள்ளன. இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு அது பற்றிய எந்த தகவலும் வாழ்வியலும் தெரியாமலே இருக்கிறது. தெரியாமல் போய் விடக்கூடாது என்பது என் ஆவல்.அது அவர்களது பக்க வேர்.அதனால், இன்றய சந்ததிக்கு அதனை அறியப்படுத்துவதும் ஆவணப்படுத்துவதும் இரு பரம்பரையிலும் காலூன்றி இருக்கும் நமது கடமையாக இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் ஒருவித உத்வேகத்தோடு அவற்றைப் பட்டியலிடவும் பகிர்ந்து கொள்ளவும் தொடங்கி பாதியில் அது நின்றுபோய் விட்டது.

இன்று ஏற்கனவே சேகரித்து வைத்த அதன் சில விடயங்களை படிப்படியாக வெளியிடலாம் என்று தோன்றியது.

அதன் முதல் பதிவே இந்தத் திருகணை.
..................................................

சட்டி, பானை, குடம் போன்ற வளைவான அடிப்புறங்களைக் கொண்ட பாத்திரங்கள் அசையாமல் இருக்கும் பொருட்டும் விழாதிருக்கும் பொருட்டும்  வட்ட வடிவில் திரணையாக அல்லது உருளையாக இணக்கப்பட்ட வடிவத்தை திருகணி என்பர்.

இதன் முக்கிய பயன் சூட்டினைப் பொறுத்தலும் பாத்திரத்தை விழாது தாங்குதலும் ஆகும்.

பாரமான பொருட்களைத் தலையில் சுமந்து செல்வோரும் இதனை ஒத்த பொருளொன்றை தலைக்கு வைத்து அதன் மேல் சுமையை வைத்து சுமந்து செல்வது வழக்கு. அதனைச் சும்மாடு என அழைப்பது இந்திய மரபு.ஆயினும் அது துணியை ஒத்த பொருளினால் மென்மையானதாக இணக்கப் பட்டிருக்கும்.

திருகணை அல்லது திருகணி என பேச்சு வழக்கில் வழங்கி வரும் இச் சொல் பொருளை அணைத்து ஆதரவு கொடுத்தவாறிருப்பதால்  திருகணை அல்லது திருகணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். அடிப்புறம் வளவாக இருக்கின்ற பாத்திரத்தை எவ்வாறு சரித்து வைத்தாலும் அது அப்பாத்திரத்தைத் தாங்கி விழாது வைத்திருக்கும் தன்மை அதன் சிறப்பம்சமாகும்.






குறிப்பாக 20ம் நூற்றாண்டின் கீழைத் தேய நாடுகளின் சமையல் அறைகளில் இத்தகைய திருகணிகள் அவர்களின் நாளாந்த சமையல் வேலைகளில் சூடான பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கும் உறியில் பானைகளை வைப்பதற்கும் தோதாகப் பயன் பட்டன. 

இந்து சமய மரபில் நேத்திக் கடன் கழிக்கும் பொருட்டு கற்பூரச் சட்டி தலையில் ஏந்தி வருவோர் தீச் சூட்டினைத் தாங்கும் பொருட்டும் சட்டி தலையில் விழாதிருக்கும் பொருட்டும் திருகணை வடிவிலான மென்மையான துணியினால் இணக்கப்பட்ட திருகணைகளை பாவித்தலை காணலாம். இப்போதும் கிராமப் புறங்களில் இவற்றின் பாவனை அளவில் சிறிதாகவேனும் இருந்தவாறே இருக்கின்றது.



இதன் பயன் பாட்டினை கலைவடிவத்துக்கும் எடுத்துச் சென்றது இந்திய அழகியல்.கரகாட்டம் என அழைக்கப்படும் இந்திய மரபு வழி ஆட்டமான கரகாட்ட கூத்து மரபில் சுமார் ஒன்றிலிருந்து 3,5,7,...என பானைகளை ஒரு திருகணையின் மேலே  கூத்தினை ஆடிய படியே ஒன்றொன்றாகப் பானைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அவற்றை அதன் சமநிலைகெடாத வண்ணம் தலைமேல் வைத்து ஆடும் கரகாட்டம் நவீன யுக இளைஞர் யுவதிகளாலும் வியந்து பார்க்கப்படுகிறது. திருகணையின் பயன்பாட்டை  கலை வடிவத்துக்குள் கொண்டு வந்ததில் இவ் ஆட்டம் இந்திய எளிய அழகியல் மரபில் ஓர் பண்பாட்டுப் புன்னகை!

கடந்த வருடம் சிட்னிமாநகரில் பரமற்ரா நகரில் இடம் பெற்ற பராமசாலா என்ற 3 நாட்கள் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை இந்திய சுற்றுலாத் துறையும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் உள்ளூர் வரத்தக நிறுவனங்களோடு இணைந்து நடாத்தி இருந்தது. அதற்காக வரவளைக்கப்பட்ட கிராமிய அரங்கியல் ஆட்டக் கலைஞர்களில் கரகாட்டக் கலைஞர்களும் அடங்கி இருந்தனர். அங்கு போகக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் முதன் முதலாக எனக்கும் கரகாட்டம் பார்க்கக் கிட்டியது. 25.10.15 அன்று பார்க்கக் கிடைத்த போது எடுத்த படம் கீழே வருவது.


( தலைக்கும் பானக்கும் இடையில் திருகணி / திருகணை பாவிக்கப்படிருப்பதைக் காண்க)


திருகணைகள் அவ் அவ் இடங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து  ஆக்கப் படுகின்றது. இலங்கையின் வட பகுதி பனை மரத்துக்குப் பெயர் போன பிரதேசமாக விளங்கியதால் அங்கு திருகணைகள் பனைப் பொருட்களைக் கொண்டு ஆக்கப் பட்டன. அடவியன் என அழைக்கப்படும் பனை நாரினால் வட்டமாய் அவை இணக்கப்பட்டு பனை ஈர்க்கும் மேலும் கொஞ்ச அடவியனும் சேர்த்துச் பின்னிச் சுற்றி இறுகக் கட்டி அவை அவிழாத வண்ணமாக முடிச்சிட்டு பாவித்தார்கள். 

இவை சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்னர் குடிசைக் கைத்தொழிலாக மக்கள் தம் வீடுகளில் இவற்றைச் செய்து கிழைமைச் சந்தைகளிலும் கடைகளிலும்  விற்று வருமானத்தை பெற்று வந்தனர்.

இலங்கயின் தெற்கு கிழக்கு கரையோரங்களிலோ எனில் தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் மக்கள் தும்பினால் செய்து கயிறு திரித்து கயிறினால் அத் திரளையினை இறுகச் சுற்றிக் கட்டி அவற்றைத் தம் நாளாந்த பாவனைக்கு உபயோகித்து  வந்தார்கள்.

சமையல் அறையில் பயன்படுத்தப்படும் இத் திருகணை இந்தியப்பண்பாட்டில் வேறு பெயர் கொண்டு வழங்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இதனை quickiwiki.com கீழ்கண்டவாறு சொல்கிறது. அதனை அவர்கள் பரணை அல்லது பிரிமனை என அழைக்கிறார்கள்.

”பரணை அல்லது பிரிமணை என்பது பெரிய பாத்திரங்கள் நிலைகுலையாமலும், வைக்கப்படும் இடம் பாதிக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் அடியில் வைக்கப் பயன்படும். பொதுவாக வட்ட வடிவலான தாங்கி ஆகும். தமிழ்நாட்டில் இதைப் பொதுவாக வாழைநாரில் அல்லது மூங்கில் சீவலில் இருந்தும் செய்வார்கள்”. அவ்வாறு செய்யப்பட்ட திருகணை ஒன்றையும் அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப்படம் நன்றியுடன் அவர்களிடமிருந்து இங்கும் பிரசுரமாகிறது.




களிமண்ணினால் செய்யப்பட்ட சட்டி பானைகளும் விறகு வைத்து தீமூட்டி சமையல் செய்யும் வழக்கமுமிருந்த  அக் காலங்களில் கிடைத்த இயற்கை மூலக் கூறுகளில் இருந்து செய்யப் பட்ட திருகணைகளும்  மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன. 

இன்றய உலகமயமாதல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்  போன்ற மாற்றங்கள் சமையலறையிலும் தன் புரட்சியைக் கொண்டுவந்து சேர்த்த காரணத்தால் கரியை வெளித்தள்ளாத அடுப்புகளும் தட்டையான இலகுவான சூட்டை வெளிவிடாத பாத்திரங்களும் இன்ன பிற வசதிகளும் வந்து விட்ட காரணத்தால் குடிசைக் கைத்தொழிலாக முளைவிட்டிருந்த இத் திருகணிகளும் முறையான வரவேற்பின்மையால் மிக மந்த கதியிலேயே பாவனையில் இருக்கின்றன.

அந்த இடத்தை தற்போது சில்வர் தாங்கிகள், ரப்பர் விரிப்புகள், மூங்கிலால் மற்றும் ஈர்க்கிலால் செய்யப் பட்ட சிறு விரிப்புகள் என்பன பெற்றுக் கொண்டன. இவற்றின் இலகுப் பாவனை, நீண்ட உழைப்பு, மலிவான விலை, அழகு,வண்ணம், கவர்ச்சியான வடிவம், நாகரிகம்போன்ற காரணங்கள் மக்கள் இவற்றை நோக்கி ஈர்க்கப் பட பிரதான காரணியாக விளங்குகிறது.


படங்கள்: யசோதா: 30.10.2012

இடம்: இலங்கை மக்களின் நாளாந்த பாவனைப் பொருட்கள் விற்கும் கடை, 
Seven hills, N.S.W. 2146.

(தெரிந்தால் சொல்லுங்கள்: 
சில நாட்கள் நான் இங்கு வரவில்லை. இப்போது வந்து பார்த்தால் சுமார் 5 பேர் தம் விருப்பப் பக்கத்தில் இருந்து துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள். ஒண்ணுமே புரியல்ல உலகத்தில:)






4 comments:

  1. "அட‌வியன்" நீண்ட நாட்களுக்கு பின்பு இந்த சொல்லை வாசிக்கின்றேன்....முற்றம் கூட்டுவதற்கும் இந்த அட‌வியன் ஊரில பாவிப்பார்கள்...திருகணி இந்தியாவில் எவர்சில்வரில் 30 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம்.. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. வணக்கம் புத்தன்.
    கன நாளைக்குப் பிறகு உங்களை கண்டு கொண்டதில் மிக்க சந்தோஷம். முதலில் வருகைக்கும் இந்த சொற்பத்தினூடான பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நாங்கள் ஒரு காலத்தில் எப்படி இயற்கையோடும் இயற்கை சார்ந்த பொருள்களோடும் அன்னியோன்னியமாக வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டு இருந்திருக்கிறோம் ஒரு காலத்தில் என்பது சந்தோஷமான சுகம் இல்லையா புத்தன். நீங்கள் சொன்ன இந்த அடவியன் என்பதும் அது போலத்தான். சொல்லை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எத்தனை சொற்களும் அது சார்ந்த பயன் பாடுகளும் நம்மிடம் இருந்து மறைந்தே போயின்! உங்களுக்குத் தெரிந்த இது மாதிரியான பொருள்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் புத்தன்.

    அது மிக்க பயனுடயதாக இருக்கும்.

    என் அன்பான நன்றிகள். மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது உங்கள் பயன் கருதிய பின்னூட்டம்.

    ReplyDelete
  3. பழம்பொருட்களின் பயன்பாட்டுத் தொகுப்பு அடுத்துவரும் தலைமுறைக்கு மிகவும் அவசியமானதொன்று. தொடர முனைந்திருப்பதற்குப் பாராட்டுகள் தோழி. திருகணை என்ற சொல் எனக்கும் புதியது. பிரிமணை என்பதுதான் பழக்கம். வைக்கோற்பிரிகளால் ஆன மனை என்று பொருள். பின்னாளில் அது வைக்கோல் மாத்திரம் அல்லாது மரம், உலோகம் போன்றவற்றாலும் உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் இப்போதைய பாத்திரங்கள் பெரும்பாலும் தட்டையான அடிப்பாகம் கொண்டிருப்பதால் பிரிமணையின் தேவையும் தேவைப்படாமல் போய்விட்டது. மேசைகளில் சூடேறாமல் இருக்கும் பொருட்டு அலங்கார வேலைப்பாடுகளுடனான தட்டுகள் அல்லது தட்டிகள் வைக்கப்படுகின்றன. தொடர்ந்து வரவிருக்கும் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பதிவுக்குப் பொருத்தமானப் படங்களைத் தேடியெடுத்துப் பகிர்ந்திருப்பதற்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி கீதா. மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    வரும்; வரும். மேலும் சில இருக்கின்றன விரைவில் பதிவேற்றுகிறேன்.

    ReplyDelete