Friday, March 25, 2016

கண்டறியாத கதைகள் - 2 - சிரட்டை அகப்பை

தேங்காய் சிரட்டையும் தடியும் கொண்டு ஆக்கப் படும் சமையல் செய்வதற்குப் பயன் படும் கருவி சிரட்டை அகப்பை ஆகும்.இதனைக் காம்பகப்பை அல்லது தடியகப்பை என அழைப்பாரும் உளர்.

தேங்காயயைப் பயன் படுத்திய பின் சிரட்டையைச் செதுக்கி வாகாக இரண்டு துளைகள் செய்து கச்சிதமாக எது வித நீக்கலும் (இடைவெளியும்) இல்லாத வண்ணமாக பக்குவமாக அதனுள் நன்கு சீவிய தடியை உட் செலுத்தி இவ் அகப்பையைத் தயார் செய்வார்கள்.

இலங்கையின் தென் பகுதியில் வாழும் சிங்கள மக்கள் இவற்றைச் செவ்வனே செய்வதில் சிறப்பு வாய்ந்தவர்கள்,சிறு தேக்கரண்டி அளவுகளில் இருந்து மேசைக்கரண்டி, கறி எடுக்கும் கரண்டி, மற்றும் பெரும் அளவிலான உணவுப் பொருட்கள் செய்யும் அகப்பை வரை அழகும் நுட்பமும் செய்திறனும் அழகுணர்வும் பொருந்த சிரட்டைகளில் அவர்களால் செய்யப் படும் அகப்பைகள் பல உள்ளூர் மக்களாலும் வெளி நாட்டு உல்லாசப் பயணிகளாலும் விரும்பி வாங்கிச் செல்லப் படுபவை.


கிழக்கு, தெற்கு பகுதிகளில் தென்னை மரம் அதிகம் நிற்பதாலும் அவற்றின் பாவனைகளும் அவற்றினால் செய்யப்படும் பொருட்கள் அதிகளவில் வரவேற்பைப் பெற மற்றுமொரு காரணமெனலாம்.

பொதுவாகப் படத்தில் காட்டப் பட்டுள்ள அகப்பைகள் பரிமாறப்படுவதற்கன்றி சமைப்பதற்கே பயன் பட்டு வந்தன: வருகின்றன. மேலும் வழுவழுப்பாக்கப் பட்டு கரிசனையோடும் அழகுணர்வோடும் தயாரிக்கப்பட்ட சிரட்டையிலான அகப்பைகள் விருந்தினரை உபசரிக்கும் உணவுக் கிண்ணங்களை அலங்கரிக்கவும் உணவினைப் பரிமாறவும் பயன் பட்டன.
இவையும் செலவதிகம் இல்லாத இயற்கையாகக் கிடைக்கும் மூலவளங்களைப் பயன் படுத்தி நடைபெற்று வந்த குடிசைக் கைத்தொழில் முயற்சியாகும்.இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமன்றி கீழைத் தேய நாடுகளிலும் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும்  இவ்வகைக் கரண்டிகள், அகப்பைகள் பல்வேறு விதமான அளவுகள் வண்ணங்கள்,வடிவங்களில் கற்பனை அழகு நயம் பொருந்த விற்கப் படுகின்றன.

தற்காலங்களில் இவற்றின் இடங்களை மரங்களினாலும் உலோகத்தினாலும் பிளாஸ்டிக்குகளினாலும் ஏனைய மூலக்கூறுகளினாலும் ஆக்கப் பட்ட செலவதிகமற்ற இலகுவாகப் பயன்படுத்தப்படக் கூடிய நவீன மோஸ்தரில் தயாரிக்கப்பட்ட வெவ்வேறு தேவைகளுக்கும் பாவிக்கக் கூடிய பாவனையோடு கூடிய அகப்பைகள், கரண்டிகள் வருவதனால் இவற்றின் பயன்பாடும் அருகி வருகிறது. 

அகப்பைகளின் பிள்ளைகள் எனச் சொல்லக் கூடியனவாக விளங்கியவை கரண்டிகள். அவை அளவில் சிறியனவாக இருப்பவை. வெளி நாடுகளில் சோறு கறி சாப்பிடவும் சப்பாத்தி கிழங்குக் கறி சாப்பிடவும் கூட கரண்டிகளும் கத்திகளும் முள்ளுக்கரண்டிகளும் பாவிக்கப்படுகின்ற இன்றய காலங்களில் வாழுகிற பிள்ளைகளுக்கு கரண்டி என்று ஒன்று பாவனைக்கு வந்திராத ஒரு காலத்தை அறிமுகப்படுத்துவதும் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் போலத் தோன்றுகிறது. 

அது சமையலறையில் குடும்பமாக எல்லோரும் பலகையில் உட்கார்ந்து தாயார் அகப்பையினால் எல்லோருக்கும் பரிமாற கைகளினால் குழைத்து சாப்பிட்ட காலம். அங்கு கரண்டி என்று ஒன்று பாவனைக்கு வேண்டி இருக்கவில்லை.

விறகடுப்பும்; களி மண்ணினால் ஆக்கப் பட்ட சட்டியும்; தேங்காய் சிரட்டையில் இணக்கிய அகப்பையும்; வாழையிலையில் வழங்கப்பட்ட சாப்பாடும்; கைகளினால் குழைத்து சாப்பிட்ட சுவையியலும்; இயற்கையோடு தமிழ் பண்பாடு எப்படி இணைந்திருந்தது என்பதைச் சொல்ல போதுமான எளிய உதாரணமாகும். 

கூழ் காச்சி அயலாரையும் விருந்துக்கழைத்து பிலா இலை கோலி சுடச்சுட சுவை பட கூடி இருந்து குடித்த கதை யாழ்ப்பாணத்தின் ஒரு கால கட்ட வாழ்வியல். அதனை சுமார் 1965, 1966ம் ஆண்டளவில் மகாகவி என்ற கவிஞர் இப்படிப் பாடுகிறார்.
‘ கூழ் பானையின் முன் கூடிக்
   குந்தி இருந்து, இலை கோலி,
                       கரம் தெரிந்து ஊற்றும் அவ்விருந்து...’ 
இதில் கரண்டிக்குப் பதிலாக  பலா இலை பாவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
படங்கள்: யசோதா.

இடம்: இலங்கை மக்களுக்கான நாளாந்தப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை
Seven hills N.S.W.2146.

4 comments:

 1. எங்கள் வீட்டிலும் இது போன்ற அகப்பை இருந்தது.

  ReplyDelete
 2. வணக்கம் குமார்.
  நலமா நீங்கள்? கன நாளுக்குப் பிறகு உங்களைக் கண்டதில் ஒரு வித மனநிறைவு.

  நம் ஊர்களில் நிச்சயம் இன்னும் இவற்றின் பயன்பாடு கொஞ்சமாகவேனும் இருக்கும் என நம்புகிறேன். சிங்கள மக்களினால் இன்னும் கலைத்துவமாக செய்யப்படும் அகப்பைகள் மிக பிரசித்தம். படங்கள் கிடைத்ததும் அவற்றையும் பதிவேற்றுகிறேன். இந்தியப் பண்பாட்டிலும் அவைகளுக்கு முக்கிய இடம் இருந்திருக்கும்.

  ReplyDelete
 3. நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவு இது என நினைக்கிறேன்...."ஏப்பை" என்றும் சொல்வார்கள் ஊரில்

  ReplyDelete
 4. ஓம் புத்தன். தங்கையிடம் சுவிற்சிலாந்து தேசம் போயிருந்தேன்.
  நீங்கள் கூட இலங்கைக்குப் போய் வந்த கதைகளை அச்சொட்டாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். குறிப்பாக மனநிலைகளைப் பிரதி பலிக்கின்ற விதமான பிராந்திய மன இயல்புகளை நீங்கள் விபரிக்கிற விதம் மிக தத்துரூபம். மணியோசை கேட்டு எழும் காலைகளும் திருமலை மக்களின் விருந்தோம்பல் மாண்பும் எளிய மனிதர்களுக்கு உதவும் பண்பும் ஊருக்குப் போகும் ஆசையையும் ‘அன்பேசிவம்’என்பதை உணரவும் வைக்கிறது.

  குறிப்பாக இப்படியான பதிவுகளை எழுதும் போதும் போகும் ஆசை மேலும் மிகையாகிறது.

  ஏப்பை என்பது அகப்பையின் மருவலாய் இருக்குமோ?

  ReplyDelete