இந்தப் பகிர்வு சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
அது ஒரு ஆபத்தும் சில கருத்துக்களும்.
இது ஒரு பகிர்வு மாத்திரமல்ல; உங்களிடம் இருந்து நான் அறிய விரும்புகின்ற எனக்குத் தெரியாத அல்லது நான் பார்க்காத - சில வேளைகளில் பார்க்க விரும்பாத பக்கங்களை உங்களிடம் இருந்து அறியும் பொருட்டும் தான்.
1. நம் நம்பிக்கைகள் ( பண்பாடு, சமயம், வாழ்க்கைமுறை, பாரம்பரியம், மரபு, பண்பாடு, சூழல் பரம்பரை அலகுகள்..எல்லாம் சேர்ந்ததான ’நான்’ என அறியப்படும் ’நான்’)
2. நம் மன ஓட்டங்கள் ( தனிப்பட்ட மனித மன இயல்பு; ஆளாளுக்கு அது வேறுபட்டு இயங்கும் அதன் தனித்துவம்)
3. உலகத்தில் இடம் பெறும் மாற்றங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.( எண்ணிம யுகத்துக்குள் நாம் பிரவேசித்திருக்கிற இத் தருணத்தில் கணணி வலைப்பின்னல்கள் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் புதிய பாதகளும் அதன் சாதக பாதக நிலைகளும்)
இவற்றினூடே நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டிய இடம் எது எங்கு எப்படி?
இவை சார்ந்தவை தான் இப்பகிர்வு!
(தொடர்ந்து வாசிக்க நேரமில்லாதவர்கள் இங்கிருந்து நேரடியாக கருத்துச் சொல்லச் செல்வீர்களாக! தொடர்ந்து வாசிக்க விரும்புகிறவர்கள் வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து செல்வீர்களாக.)
................
நாம் இந்த உலகத்தைப் பார்ப்பது கண்களால் அல்ல. மனங்களால்! அந்த மனம் பண்பாட்டினால்; மதங்களினால்; சமூக வலைப்பின்னல்களால் கட்டுண்டு கிடக்கின்றன.
இந்தச் சமூக வலைப்பின்னல்கள் நம்மைச் சுற்றியுள்ள சமூகமாக முன்னர் இருந்தது. அது மாற்றங்களின் சுழற்சியினால் இன்று கணணிகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றன. சமூகம் இப்போது உலகமாகச் சுருங்கி விட்டது. சமூக வலைத்தளங்கள் அந்த இடங்களைக் கைப்பற்ற நாகரிகங்கள் ஒன்றுகலந்து விட்டன. 24 மணித்தியாலமும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. உலக நட்பு வட்டம் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கின்ற வலை அமைப்புகள் ஊடாக பல பாதைகளை உருவாக்குகின்றன. சுயாதீனமான சுதந்திர கருத்துக்களும் அவற்றுக்கான வாய்ப்புகளும் அழைப்பிதழ்களும் அங்கு எண்ணிக்கையற்றுப் பரந்து விரிந்து போயுள்ளன. மேலைத்தேயச் சிந்தனைப் போக்கும் கீழைத்தேயச் சிந்தனைப் போக்கும் ஒன்றுகலந்து போயுள்ளன.
இந்தக் கலப்பில் குழம்பி இருக்கிற பிரதான விடயம் சிந்தனைப்போக்கு. இந்தச் சிந்தனைப்போக்குகளை ; வாழ்வின் அடைப்படை நாகரிகத்தை; பழக்கவழக்கத்தை; எதிர்காலப் பார்வையை கட்டமைத்தவையாக கல்வி, குடும்பம், குடும்பச் சூழல், நண்பர்கள், சார்ந்திருக்கிற சமயம், உறவுகள், வாழ்க்கை முறைகள் போன்ற பலவிடயங்கள் நிர்ணயிக்கின்ற போதும். கீழைத்தேயப் பண்பாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக அடுக்குகள், சாதி அமைப்பு முறைகள், ஆண்பெண் சுதந்திரம், பொருளாதாரம் போன்றனவும் வாழ்க்கை முறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.
உலகில் பிரதானமாக பின்பற்றப்படும் சமயங்களான இஸ்லாமிய, கிறீஸ்தவ, இந்து சமய அடிப்படைத் தத்துவங்களை எடுத்துப் பார்த்தால் அதன் அடிப்படை சித்தாந்தங்கள் எவ்வளவு வித்தியாசமான பார்வைகளை வாழ்க்கை சம்பந்தமாகக் கொண்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இஸ்லாமிய சமூக வாழ்வின் கட்டுக்கோப்புகள் மிக வேறானவை. மிகப்பலமான எல்லைகளை அவை வரையறை செய்து கொண்டுள்ளன. கிறீஸ்தவ சமூக வாழ்வு வாழும் இந்த வாழ்வை வழங்கப்பட்டிருக்கிற உடலை மையமாகக் கொண்டு வரையறை செய்து கொண்டுள்ளன. இந்து சமயம் உடலுக்கப்பால் இருக்கின்ற ஆண்மாவை நிரந்தரமானதாகக் கொண்டு இந்த உடல் கொண்டிருக்கிற வாழ்வை தற்காலிகமானதாக வரையறை செய்து கொண்டுள்ளன.
இத்தகைய அடைப்படைச் சிந்தனைப்போக்குகள் நடைமுறை வாழ்வில் வாழ்க்கை முறையில் பெரும் இடத்தை வகிக்கிற அதே நேரம் அவை எல்லாம் ஒன்றுகலக்கும் இடமாகவும் இணைய பரப்பு விளங்குகின்றது.
அதே நேரம், பெரும்பாலாக விளங்குகின்ற சாதாரண ஒரு மனித மனம் 20% தனக்கான பொறுப்புகளாலும், 20 % வருமானத்தை ஈட்ட வேண்டிய தொழிலிலும் மிகுதி 60% தேவையற்ற நினைவுகளாலும் நிரப்பப் பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ’நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுகிறாய்’ ( You are what you think ) என்பது உளவியல் சித்தாந்தம். அவ்வாறு இருக்கையில் தேவையற்ற நினைவுகளால் நிரப்பப் பட்டிருக்கிற மனம் உலாவித்திரிய சிறந்த இடமாக இணையப்பரப்பு விரல் நுனியில் கிடைக்கிறது. திறந்து விடப்பட்டிருக்கின்ற உலகக் கிராமத்து வாய்ப்புகள் மடை திறந்த வெள்ளமாக பெருக்கெடுத்தோடுவது வெறுமனே தேவையற்ற சிந்தனைக்கான மனதுக்கு அல்லது சுவாரிஷம் தேடி ஓடும் மனதுக்கு பெரு வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.
இந்த ஒன்றுகலத்தல்கள் ஏற்படுத்தி இருக்கிற குழப்பநிலை பல தனிப்பட்ட மனங்களை மேலும் அலைக்கழிக்கின்றன, குடும்ப அலகுகளை உறவுநிலைகளை வாழ்க்கை விழுமியங்களை விமர்சன நிலைக்கு இட்டுச் செல்கின்றன. பெருவாரியான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இடமாக இணைய வெளி செயல்படுவதாலும் சொல்லுக்கும் செயலுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே இருக்கக் கூடிய இடைவெளி புலப்படாமல் இருக்கின்ற அதன் இணையத் தன்மையினாலும் காயப்பட்ட மனம் ஒன்று மிகச் சுலபமாக வழிதவறிச் செல்லக்கூடிய வாய்ப்பினை அது கொடுத்து விடுகிறது. தேங்கி நிற்கிற தண்ணீர் அதிகமாகிற போது பலவீனமான பக்கம் ஒன்றால் அணை உடைத்துச் செல்லுதல் இயற்கையின் இயல்பு தானே?
பல மாதங்களின் முன்னர் கேரள பின்னணியைக் கொண்ட கணனிப் பொறியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அழகிய இளம் தாய் என் மனைக்கருகில் இருக்கும் பிரதான ரயில் நிலய ரயிலின் முன் தன் 3 வயதுக் குழந்தையுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள். (சிட்னியில்) அவள் தன் முகப் புத்தகத்தில் முதல் வாரம் தன் திருமணநிறைவு நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டாள் என்றும்; மிக மகிழ்வும் திருப்தியும் சந்தோஷமும் கொண்ட பெண்ணாகவே அவர் தன்னை தன் முகப்புத்தகத்தில் இனம் காட்டிக் கொண்டதாகவும் அவரின் நண்பர்கள் தொலைக்காட்சிச் செய்தியில் தெரிவித்தார்கள். தற்கொலைக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பது தான் ஒரு பெரும் சோகம்.
கடந்த வாரம் இடம் பெற்ற சுவாதியின் கொலைக்கு சமூக வலைப்பின்னலில் ஒன்றான முகப்புத்தகம் ஒரு பிரதான காரணம் என அண்மையச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. கொலை செய்ததாக நம்பப் படும் நபர் சுவாதியில் பேஸ்புக் நண்பர் எனவும் அதன் மூலமாகவே சுவாதியின் நட்பு தனக்குக் கிட்டியதாகவும் அதனூடாகவே அவரைத் தான் காதலிக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.
அடிப்படை எண்ணங்களில் இருக்கிற தீவிர நம்பிக்கைகள், தன்னைப் பற்றி ஒருவர் அறிந்திருக்கும் பிம்பத்திற்கும் உண்மையில் அவரைப் பற்றிச் சமூகம் கொண்டிருக்கும் பார்வைக்கும் இடையில் இருக்கிற இடைவெளி, அதனை அறிவதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிற மன முரண்பாடுகள், வாழ்க்கை ஏற்படுத்தி விடுகிற தடுமாற்றங்கள், எதிர் கொள்ளும் சவால்கள் - இவற்றுக்கு பெரும் தீர்வாக அல்லது ஒரு போக்கிடமாக அமைந்து விடுகிற எண்ணிமப் பெருவெளி அது தரும் வாய்ப்புகள் சாதாரண மனிதர்களுக்கு இலகுவான விடுதலையைக் கொடுத்து விடுகிறது. ஒரு மதுக்கோப்பையில் தப்பி விடும் சூட்சுமம் தேங்கி இருப்பதை ஒத்தது அது. தப்பி ஓட இலகுவாகக் கிட்டும் ஒரு தற்காலிக தீர்வாக அவ்வெளி தன்னை வெளிப்படுத்துகிறது.
தற்காலிகங்களும் மலிவு விலைப் பிரதிகளும் அங்கு தங்கத்தை விடப் பிரகாசிக்கின்றன. தாள் காசுகள் அமைதியாக இருக்க சில்லைறைக்காசுகள் போடும் சத்தம் அதிகரித்து விட்டது. அது வசீகரமாகிப் போய் விட்டது. தீச்சுடரை மலரென நம்பி விழுந்திறக்கும் ஈசல்களை நாளாந்தம் காண முடிகிறது. கவர்ச்சி பலவீனத்தை ஈர்த்துக் கொள்ளுகிறது. ( நண்பர்களே! இதன் நன்மைகள் பற்றி யாரேனும் பேசுங்களேன். எனக்கு அது குறித்துச் சொல்ல ஏதும் தெரியவில்லை.)
இந்த இடத்தில் தான் நம்முடய “இடத்தை” நாம் தீர்மானிக்க நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.
இந்த இடம் என்பது மிக முக்கியமானது. எங்கு எப்படி எவ்வாறு நாம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்; எங்கு எவ்வாறு எப்படி நாம் இருக்கிறோம் என்பதற்கிடையில் இருக்கிற இடைவெளியை நீக்குவதன் மூலம் இந்த சாத்தியத்தை நாம் எட்டலாம்.
உலகில் இரண்டு விதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு சாரார் சந்தர்ப்பங்களின் கைதிகள்; மறு சாரார் மனச் சாட்சியின் கைதிகள். நீங்கள் எந்த வகை?
’நான்’ என்பது பலவிதமான சரி பிழைகளாலும் நன்மை தீமைகளாலும் பலம் பலவீனங்களாலும் உருவாக்கப் பட்ட ஒன்று தான். எனக்கு வரும் எந்த ஒரு நன்மை தீமைக்கும் நானே தான் காரணம் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டு மறத்தலும் மன்னித்தலும் மன்னிப்புக் கோரலும் அடுத்தவரைக் கண்ணியத்தோடு நடத்தலும் அடுத்தவரது உணர்வுகளை எந்த வகையிலும் தாக்கி விடாமல் நடந்து கொள்ளுதலும் நவீன நாகரிக உலகில் பெரிதும் வேண்டப்படும் ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் அதனைக் கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமாகவும் நம்முடய ‘இடம்’ எதுவென அறிந்து அங்கு நிலைத்திருப்பதன் மூலமாகவும் அது சாத்தியப் படலாம்.
எண்ணிம சகாப்தம் தருகிற வாய்ப்புகள் எல்லாவற்றுக்கும் நாம் அவாப்பட்டு அவற்றில் எல்லாம் உள்நுழைத்து தேவையற்ற மன உளைச்சல்களை நாம் உழைத்துக் கொள்ளாமல் நமக்கு இது தேவையா? நமக்கு இது பொருத்தமா? அதனால் விளையக்கூடிய சாதக பாதக நிலைகள் என்ன? நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் அது எவ்விதமாகப் பாதிக்கக் கூடும்? என்பதை முன்கூட்டியே யோசித்து இறங்க வேண்டியது அவசியம்.
அது பெரும்பாலும் நம் சிந்தனை மரபு, நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், குடும்பப் பின்னணி, உறவுகள்,பெற்றோரின் மரபணு போன்ற பல காரணங்களால் நிர்ணயிக்கப் படுகிறது. ( பெற்றோர் ஒரு பிரச்சினைக்கு எப்படித் தீர்வு கண்டார்களோ அப்படியே பிள்ளைகளும் தீர்வு கான முயற்சிப்பார்கள் என ஒரு மேலைத் தேய ஆராய்ச்சி சொல்கிறது. )அதனால் முதலில் நம் சிந்தனைப் போக்கை மீள ஒரு முறை சரி பார்த்து அது சரியான பாதையில் செல்கிறதா என்பதை இன்னொருமுறை சரி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
அதன் தீர்மானத்திற்கேற்ப நிற்பது தான் அது எல்லாவற்றிலும் மிக அவசியம். “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக - அல்லவா?
அது நம் எல்லோரையும் அமைதியான திருப்தியாக நின்மதியான எல்லாவற்றுக்கும் மேலாக ஆபத்தற்ற வாழ்வின் பால் நம்மை நகர்த்திச் செல்லும் என்பது என் நம்பிக்கை.
நம் ஆழமான வேர்கள் நாம் அகலச் சிறகு விரிக்க சிறந்த வீரியத்தைத் தருவதாக!
அநியாயமாய் காவு கொள்ளப்பட்ட சுவாதிக்கு முன்னால் ஒரு பெரு சுபீட்ச வாழ்வும் மகிழ்ச்சி ஆனந்தம் பெருமிதம்.. என இவ்விதமான பல சந்தோஷப் எதிர்காலம் இருக்கத் தக்கதாக முன் பின் தெரியாத ஒருவரை நண்பராக்கிய அவளின் சிறியதொரு காரணத்தால் வாழ்வையே தொலைத்துப் போனாளே இந்த அப்பாவிப் பெண்ணுக்கு இப் பார்வைப் பகிர்வு சமர்ப்பணம்.
உலகம் இன்னும் அத்தனை சுத்தமாக ஆகவில்லைக் கண்ணே!
[quote]எண்ணிம சகாப்தம் தருகிற வாய்ப்புகள் எல்லாவற்றுக்கும் நாம் அவாப்பட்டு அவற்றில் எல்லாம் உள்நுழைத்து தேவையற்ற மன உளைச்சல்களை நாம் உழைத்துக் கொள்ளாமல் நமக்கு இது தேவையா? நமக்கு இது பொருத்தமா? அதனால் விளையக்கூடிய சாதக பாதக நிலைகள் என்ன? நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் அது எவ்விதமாகப் பாதிக்கக் கூடும்? என்பதை முன்கூட்டியே யோசித்து இறங்க வேண்டியது அவசியம்.[quote]
ReplyDeleteமனித மனம் அப்படி சிந்தித்தால் நல்லம் ஆனால் .....மனம் ஒரு குரங்கு என்று கவிஞரின் வரிகள் தான் ஞாபத்திற்கு வருகின்றது....
நீங்கள் கூறிய கடைசி வசனம் தான் உண்மை [உலகம் இன்னும் அத்தனை சுத்தமாக ஆகவில்லைக் கண்ணே!]....உலகம் இனியும் சுத்தமாகப்போவதில்லை ......
வருத்தத்துக்குரிய நிலை புத்தன்.
Deleteஇதற்குள் இருந்து பிள்ளைகளைச் சரியான பாதையில் வழி நடத்துவதென்பது பெற்றோருக்கு இருக்கிற பெரிய சவால்.
சுவாதியின் பெற்றோரை நினைத்துப் பார்க்கிறேன்.....
நல்ல பகிர்வு...
ReplyDeleteநன்றி குமார்.
Deleteவந்து போவது சந்தோஷம்...
அருமையான திறனாய்வுப் பார்வை
ReplyDeleteசுவாதிக்கு ஏற்பட்ட நிகழ்வு
ஏனையோருக்கும் நிகழாதிருக்க
எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்!
வணக்கம் நண்பரே!
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வானமளவு விரிந்திருக்கிறது உலகும் வாய்ப்புகளும். எதை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரவரைப் பொறுத்தது.எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுகிறோம். அவரவர் கைகளில் அவரவர் வாழ்வு!
சுவாதி போல பலர்... இருந்தனர் இருக்கின்றனர் இனியும் இருப்பர்....