Sunday, January 22, 2017

ஒலி வடிவில் ஒரு கலை வலம்

வருகிற வியாழக்கிழமை 26.1.17 அன்று மாலை யாழ்நிகழ்வரங்கில் கீதா.மதிவாணனின் ‘என்றாவது ஒரு நாள்’ - அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு வைக்கப் பட இருப்பது நீங்கள் அறிந்ததே!

இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரச ஊடக வானொலியில் (சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது) கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்தது.

அவ் ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.

கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)

ஒலிவாகனம் ஏறி அகிலமெல்லாம் ‘கலைவலம்’ செய்ய வைத்த கலைஞ உள்ளங்கள் அனைவருக்கும் நம் மனம் நெகிழ்வான நன்றிகளைச் சொரிந்து மகிழ்கிறோம்.........
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ciinnnttvnnninnn-aavi?language=ta

“சீனத்தவனின் ஆவி”

Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெரும் எழுத்தாளர். அவரின் உருவப்படத்தை ஆஸ்திரேலிய பணத்தில் அச்சிடுமளவு அவர்மீது இந்த தேசம் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது. Lawson எழுதிய சிறு கதைகளை தமிழில் மொழிபெயர்த்து என்றாவது ஒருநாள் என்ற தலைப்பில் எதிர்வரும் 26ம் திகதி புத்தகமாக வெளியிடுகிறார் கீதா மதிவாணன் அவர்கள். அந்தச் சிறுகதைகளில் சீனத்தவனின் ஆவி எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றேணுகா துரைசிங்கம்.

Saturday, January 7, 2017

அன்றய தமிழ் காதல்...

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

- பாரதியார் -



பாரதியின் உணர்வுகளை பொம்பே. ஜெயஸ்ரீ பாடுகிறார்.
...................................

நானும் அவளும்

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

பாரதி தாசன் கவிதை வரிகள் இவை.



பாடல் இடம் பெற்ற திரைப்படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: விஜய் ஜெசுதாஸ்
இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்.

இதை விட எவர் அழகாய் காதலைச் சொல்ல முடியும் சொல்லுங்கள்?




Tuesday, January 3, 2017

’மகா கவி’ உருத்திரமூர்த்தி (9.1.1927 – 20.6.1971)




                                             
’நல்லவர்களுக்கிது தான் நாடு – பொய்
நாகரிகத்துக்கப்பால் ஓடு!
முல்லை நடு! பக்கத்தில்
மூன்றறைகளோடு சிறு வீடு – போதும்
எடு ஏடு’
என்று ஏடெடுத்து எழுதத்தொடங்கிய மகாகவிக்கு இம் மாதம் 9ம் திகதி பிறந்த நாள். 1943ம் ஆண்டு தன் 16வது வயதில் எழுதிய ’மின்னல்’ என்ற கவிதை ஈழகேசரி நாளிதளில் வெளிவந்ததில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் இவரை ஆதர்ஷ கவிஞராகக் கொண்டு இன்று வரை ஒரு புதிய கவிஞ பரம்பரை நாட்டில் தோன்றியது வரை சென்றது. ஈழத்தின் நவீன கவிதையின் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர் மகாகவி. அதன் போக்கையும் பாடு பொருளையும் தனித்துவமான போக்கில் திசை திருப்பியவர் அவர். ஈழத்துத் தமிழ் கவிதைக்கான தனித்துவ அடையாளங்களை உருவாக்கியதில் இவர் கவிதைகளுக்குத் முக்கியமான இடம் உண்டு. இலங்கை அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்  ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.

இவரது கவிதைகள் யதார்த்த நெறி நிற்பவை. தனி மனிதனின் உணர்வுகளுக்கும், ஆற்றலுக்கும் அதிக அழுத்தம் கொடுப்பவை அவை. காட்சிப்படிமங்களோடு அதனைக் கவிதையில் வார்த்து இப்படிமங்களினூடு வாசகனை ஓர் உணர்வுச் சூழலுக்குள் கொண்டு போவது மகாகவியின் கவிதைப் பாணி. திட்ட வட்டமான நேரடியாகப் பொருள் புலப்படும் படியான தன்மை காரணமாக அவை வாசகனுடன் நேரடியாகப் பேசும் தன்மையைக் கொண்டிருந்தது. கவிதையைப் பரிமாற்ற சாதனமாக்குவதற்கு உண்மை, அன்றாட வாழ்வனுபவம், நாளாந்த வழக்கில் உள்ள மொழி இவற்றை அவர் பயன் படுத்தினார்.’இன்னவைதான் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர். சோலை,கடல், மின்னல்,முகில், தென்றலினை மறவுங்கள். இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று பேசியும் எழுதியும் வந்தவர் மகாகவி.

இவருடய கவிதைகளின் காலத்திலிருந்தே தமிழகக் கவிதைகளின் போக்கில் இருந்து ஈழத்துத் தமிழ் கவிதை மரபு தனக்கான தனித்துவ அடையாளங்களைப் பெற்று தனித்துவக் கூறாக பிரிந்து வளர்ந்து செல்ல ஆரம்பித்தது என்ற வகையிலும் மகா கவியின் கவிதைகள் தனி அடையாளம் பெறுகின்றன.

 மஹாகவி என்ற புனைபெயரில் மட்டுமல்ல புதுக்கம்பன், புதுநாப் புலவர்,மாபாடி, பண்டிதர், மகாலட்சுமி, பாணன், வாணன் போன்ற பெயர்களிலும் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.
கவிதைகள், கவிதைத் தொகுதிகள், காவியங்கள், குறும்பாக்கள், பா நாடகங்கள், வில்லுப் பாட்டு, நாடகங்கள், சிறுவர் பாடல், இசைப் பாடல், என அவர் ஈழத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவையும் அளித்தவையும் அநேகம். அவரது ‘வள்ளி’ என்ற முதல் கவிதைத் தொகுதி 1955ம் ஆண்டு வெளிவந்தது. அவரது கண்மணியாள் காதை என்ற வில்லுப் பாட்டு முதலில் வானொலியும் பின்னர் மேடையும் இறுதியில் அச்சும் ஏறியது. அதைத் தொடர்ந்து அவரது கோடை என்ற பா வடிவிலான நாடகம் நாடகத் துறை ஆழுமை தாசிசியஸ் அவர்களின் நெறியாழ்கையில் பல மேடைகளையும் அச்சில் பல பதிப்புகளையும் கண்டது. ‘ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தை’ 1971ம் ஆண்டு எழுதினார். கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்,சடங்கு,கல்லழகி,கண்மணியாள் காதை,தகனம் போன்ற காவியங்களும்; கோடை,புதியதொரு வீடு, முற்றிற்று போன்ற நாடகங்களும் மிகப் பிரபலமானவை. அவரது கவிதைகள் பல அரச பாடநூல்களில் சேர்க்கப் பட்டிருக்கின்றன.

தன் பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட மகாகவியின் பெரும்பாலான வாழ்க்கைக் காலம் தொழில் காரணமாக பிற மாகாணங்களிலேயே கழிய நேர்ந்தது. 19ம் வயதில் எழுது வினைஞராகப் பதவியேற்ற அவர், பல்வேறு அரச சேவைகளில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி 1971ல் அவரது 44 வது வயதில் இறக்கும் போது கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றிருந்தார்.

இந் நாளெல்லாம் எங்கள் வீட்டு
பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்
முல்லையும் அருகில் மல்லிகைக் கொடியும்
‘கொல்’என்று சிரிச்சுக் கொண்டிருக்குங்கள்
அல்லவோ?
என்றும்,
யாழ்ப்பானத்தை நான் அடையேனோ?
கூழ் பானையின் முன் கூடிக் குந்தி
இருந்திலை கோலி இடுப்பில் இட்டூட்டிய
கரம் தெரிதூற்றும் அவ் விருந்தருந்திலேனேல்..
என்றும்,
பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூறாதோ?
என்றும் பாடுகின்ற அவர் கவிதைகள் அவரின் வாழ்வனுபவங்களில் இருந்து பிறந்தவையே. தன் குறும்பா புத்தகத்தின் முன்னுரையில்

”சுவைஞரே!
கவிதை உலகளவு பரந்து
பல்வேறு பட்டது
கடவுளையும் காதலியையும் போற்றுவது
மட்டுமன்று அதன் பணி
கட்டித்த சிந்தனையுடைய
பண்டிதர்களும்
கோட்பாடுகளை விழுங்கி விட்டு
செமித்துக் கொள்ள முடியாதவர்களும்
மோப்பதற்கும்
மோந்து முணுமுணுப்பதற்குமாக
எழுதப் படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின்
பழுதுபடா உள்ளத்திற் பாயப்
பிறப்பது.
ஓய்வுக் கடமையின் ஒரு கூறே ஆகும்
எனது குறும்பாக்கள்
முற்றும் ஓய்வுக்குரியனவும் அன்று”

என்று சொன்னவர். சாதாரண மனிதர்களையும் அவர் பாடுகளையுமே அவர் தன் பாடு பொருளாய் எப்போதும் கையாண்டார். அதில் இயல்பான நடையும் ஓட்டமும் அவர் தமிழோடு கூடவே வந்தது.

இவரது சமகாலத்தவராகவும் அதே நேரம் இரண்டாம் தலைமுறைக் கவிஞர்கள் என இனங்கானப்பட்டவர்களுமான முருகையன், நீலாவாணன், வரதர், முருகானந்தன், நுஃமான்,போன்றோருடன் சிறந்த நட்பினைப் பேணியவராகவும் இவர் இருந்தார். இந் நட்பினை காவிச் சென்றனவாகவும் காட்சிப்படுத்தியவையாகவும் இவரது ‘தபாலட்டைக் கவிதைகள்’ சிறப்பிடம் பெறுகின்றன. இவர்கள் தமக்கிடையேயான உறவினையும் தொடர்பினையும் தபாலட்டைகள் வழியாக கவிதையாகவே பேணி வந்தனர். அவற்றை கொழும்புத் தமிழ் சங்கம் தன் ’ஓலை’ காலாண்டிதழ் சிறப்பு மலரில் 2003ம் ஆண்டு மகாகவி சிறப்பிதழாக அதை வெளிக்கொணர்ந்தது. அது அக்கால மக்களின் இன்னொரு பண்பாட்டு விழுமியத்தை வெளிக்கொணர்ந்த கவி வடிவமாகும்.

உதாரணமாக, ‘பாட்டெழுதச் சொல்லி படித்து விட்டுப் போற்றி அதை ஏட்டில் அழகாய் அச்சேற்றுவையே – கேட்டுக் கொள் என்னை எழுத்துத் துறையில் இறக்கி விட்ட உன்னை மறக்காதுலகு’ என்று அவரது முதலாவது கவிதைத்தொகுதி வெளியானதும் நன்றியறிதலோடு அவர் வரதருக்கு அனுப்பிய வெண்பா வடிவிலான தபாலட்டைக் கவிதை அவர்களுக்கிடையே இருந்த புரிதலையும் சமூக விழுமியத்தையும் தொழில் நுட்பம் வருமுன்பாக அவர்களிடையே இருந்த தபாலட்டையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவன.

அது போல யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வந்த சிறுவர் மாத இதழான’ வெற்றி மணி’ தனது 30வது இதழை (1971) மகாகவி சிறப்பிதழாக வெளியிட்டு அதுவரை வெளிவராதிருந்த அவரது சிறுவர் பாடல்கள் 11ஐ வெளியிட்டிருந்தது.

1966ல் வெளிவந்த இவரின் ‘பொருள் 100’ என்ற குறும்பா கவிதைகள் மூலம் குறும்பா வடிவத்தைத் தமிழுக்கு முதன் முதலில் ஆங்கில பா வடிவமான லிமெரிக் (limerick) வடிவத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் லிமெரிக்கின் பிதா மகரெனக் கொண்டாடப்படும் லியர் இயற்றிய

‘There was an old man of cape horn
Who wished he had never been bourn
So he sat on a chair
Till be died of despair
That dolorous man of Cape Horn’

என்ற பாவடிவையும் பொருளையும் மிக லாவகமாக கேலியும் சிந்தனையும் சிரிப்பும் புலப்படுமாறும் இயல்பான நாட்டுத் தமிழோடும் அதே நேரம் நடுத்தர வர்க்க அரச ஊழியர்கள் கலை இலக்கிய ரசனையோ வேறு பொழுது போக்குகளோ இல்லாது உழைப்பொன்றையே பிரதான வாழ்வாகக் கருதி உழைப்பதும் பென்ஷன் எடுத்து இளைப்பாறியதும் செய்ய ஏது வேலையும் இன்றி வெறுமையில் பஞ்சியே எமனாக மாறி விடுவதையும் தன் குறும்பாவில் இவ்விதமாகக் கொண்டு வருகிறார்.

‘பென்ஷனிலே வந்தழகக் கோனார்
பெருங் கதிரை மீதமர லானார்
ஐஞ்சாறு நாள் இருந்தார்
அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியினாலே இறந்து போனார்’

’கள்ளத் தோணி’ என்ற குறும்படத்தில் இவரது சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் என்ற கவிதை பாடலாக்கம் பெற்றிருக்கிறது.
அவரின் ’மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்ற பாடல் இன்றும் ஈழ நாட்டு வாழ்வைப் பாடுவதால் கலைஞர்கள் தம் இலக்கிய படைப்புகளுக்கு இன்றும் பயன் படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கும் என்றைக்கும் அவர் கவிதைகள் ஈழத்து மக்கள் வாழ்வோடும் வலிகளோடும் போராடும் மக்களுக்கு நம்பிக்கைக் கீற்றாய் இணைந்து குரல் கொடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

மப்பன்றிக்   காலமழை  காணா  மண்ணிலே
சப்பாத்தி   முள்ளும்  சரியாய்  விளையாது  ஏர்
ஏறாது   காளை   இழுக்காது  எனினும்  அந்தப்
பாறை   பிளந்து  பயன் விளைவிப்பான்  என்னூரான்
என்று தொடங்கும் ’மீண்டும்  தொடங்கும்  மிடுக்கு’ என்ற தலைப்பில் அமைந்த பாடல், பாடுபட்ட உழைப்பு மழையால் அழிந்து மடிந்து போன பின்னாலும் மண்வெட்டி கொண்டு மீண்டும் மண்கிளறப் போகும் மண்ணின் வாழ்வையும் நம்பிக்கையையும் மீண்டும்  தொடங்கும்  மிடுக்கு என்று சொல்லி முடிக்கும்.

அவரது கவிதைகளும் ஈழத் தமிழ் கவிதை மரபுக்கும் மக்களுக்கும் ஒரு வித மிடுக்கை தந்தவை என்றால் அது மிகையில்லை.

அவரது நேரடி வாரிசு அவரின் மகனார் கனடாவில் சேரன் என அறியப்படுகிறார். இன்னொரு பரிமாணத்தில் வளரும் கவிதைப் பாரம்பரியத்தின்; நில, பொருளாதார பின்னணி  வளம் கொண்டு வந்து சேர்த்த புதுப் பொலிவோடு தமிழ் முகிழும் ஆற்றை அவரது இப்பாடல் வழி காணலாம்.

http://thuliyam.com/?p=48296


( இக் கட்டுரையின் சுருக்க வடிவம் 1.1.2017இல் நம் தேசிய வானொலியான SBS இல் ‘தமிழ் தடம்’ என்ற தலைப்பில் ஒலிபரப்பானது. அதற்கும்; இப்படி ஒரு ஆக்கத்தை எழுதவும் மிக்க காரணராக இருந்தவர் என்றும் என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய SBS தமிழ் சேவையின் நிறைவேற்று இயக்குனராக இருக்கும் றைசெல் என நாம் அன்போடு அழைக்கும் திரு.றேமண்ட். செல்வராஜ்.

ஒலிபரப்பான ஒரு முழு நாளும் ஒரு இரவும் கழிந்துள்ள இந்த ஒன்றரை  நாட்களுக்குள் அது 500க்கு மேற்பட்ட லைக்குளைப் பெற்றதற்கு அதனை தன் அனுபவத்தோடும் தொழில் சார்ந்த புலமைத்துவத்தோடும் ஆர்வம் கலந்த அர்ப்பணிப்புணர்வோடும் அவர் அதை வடிவமைத்ததே முழுக்காரணம்.

அவருக்கு நான் இன்றும் என்றும் நன்றியுடையேன். உலகம் என்றொரு மாபெரும் கோட்டையின் தலை வாசலை என் பொருட்டு திறந்து விட்ட பெருமகனார் அவர்....

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tmilllt-tttm-kvinyr-mkaakvi?language=ta


வாசித்த புத்தகங்கள்:
வள்ளி’-மஹாகவி கவிதைகள்,
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்,
ஓலை,
குறும்பாக்கள் 100,
மற்றும் இணையத்தளங்கள்.