Saturday, January 7, 2017

அன்றய தமிழ் காதல்...

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

- பாரதியார் -



பாரதியின் உணர்வுகளை பொம்பே. ஜெயஸ்ரீ பாடுகிறார்.
...................................

நானும் அவளும்

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

பாரதி தாசன் கவிதை வரிகள் இவை.



பாடல் இடம் பெற்ற திரைப்படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: விஜய் ஜெசுதாஸ்
இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்.

இதை விட எவர் அழகாய் காதலைச் சொல்ல முடியும் சொல்லுங்கள்?




2 comments:

  1. அருமை... இரண்டு பாடலுமே அழகு.

    ReplyDelete
  2. அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்

    ReplyDelete