Monday, February 19, 2018

காமம் செப்பாது கண்டது மொழிமோ.....

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

குறுந்தொகை - 2 - பாடியவர்: இறையனார்.

தேன் தேடும் வாழ்க்கையை இயல்பாகக் கொண்ட  அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் விருப்பினால் பக்க சார்பாக சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். மயில் தோகையின்  இயல்பைக் கொண்ட இவளின் கூந்தலின் வாசத்தைக் காட்டிலும் நல்ல வாசனையுள்ள பூக்கள் இருக்கின்றனவா?

இது பாடலின் பொருள்.

தமிழ் படிக்கும் தோறும் இன்பமும் பெருமையும் நல்குவதாக இருக்கிறது. இலக்கணங்களும் இலக்கியங்களும் அதில் பெருகிக் கிடக்கும் நுட்பமான சிந்தனைகளும் கற்பனைத் திறனும் வாழ்வியல் கோலங்களும் காணக்காண திகட்டாதவை.

இப்போது படித்துக் கொண்டிருக்கும் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்யில் அதாவது உடலில் தோன்றும் உணர்ச்சிகள் எட்டு வகை என்று சூத்திரம் சொல்லுகிறது. அச் சூத்திரம் இது.

‘நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடென்ப.

இதனை ‘செயிற்றியனார் என்ற நாடக நூலில்

‘உய்ப்போன் செய்தது. காண்போர்க்கெய்துதல்
மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே’

என்று கூறுகிறார். அதாவது ஒருவர் உடலில் நிகழும் மாற்றம் மற்றவருக்குப் புலப்படுமாறு தோன்றுவது மெய்ப்பாடு ஆகும். உடல் - மெய். அதனால் மெய்ப்பாடு ஆயிற்று.

இந்த எட்டும் எப்படிப் பிறக்கிறதெனில் நகை என்பது இகழ்ச்சியில் பிறப்பது. அழுகை என்பது அவலத்தில் பிறப்பது. இளிவரல் இழிப்பில் பிறப்பது.மருட்கை வியப்பில் பிறப்பது. அச்சம் அச்சம் தருவனவற்றால் பிறப்பது. பெருமிதம் வீரத்தில் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கனவற்றால் பிறப்பது. உவகை சிருங்காரத்தால் பிறப்பது என விளக்கம் தருகிறது தொல்காப்பியம்.

இதிலும் நகை நாலுவிதம்.

எள்ளல் இளமை பேதமை மடனென்று
உள்ளப்பட்ட நகைநான் கென்ப.

இழிவு நான்கு விதம்.

இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே.

இழிவரல் நான்கு விதம்.

மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

மருட்கை நான்கு விதம்.

புதுமெ பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.

அச்சம் நான்கு வகை.

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

பெருமிதத்திலும் நான்கு விதமான பெருமிதம்.

கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.

வெகுளி (கோபம்) இதிலும் நான்கு வகை.

உறுப்பரை குடிகோள் அலை கொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே.

உவகையிலும் தொல்காப்பியர்  நான்கு விதம் இருக்கிறதென்கிறார்.

செல்வம் புலனே புணர்விளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே.

‘அல்லல் நீத்த உவகை’ - அல்லல் இல்லாத சுத்தமான உவகை அது.

இறுதியாக உவகை என்பது எதில் எதில் இருந்தெல்லாம் வரும் என்பதற்கு அதனை என்னமாய் விரித்து செயிற்றியனார் கூறியிருக்கிறார் என்பதற்கு கீழுள்ள பாடல் சான்றாக உள்ளது.

(தொல்காப்பியம் பொருளதிகாரம்; மெய்ப்பாட்டியல்)

‘ ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனொடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளும் களி(னி?)யும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து
புதுப் புனல் பொய்கை பூம் புனல் என்றிவை
விருப்புறு மனத் தொடு விழந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம் பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந்துறைதலும்
கலம் பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன் பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே’

தமிழில் முதன் முதல் எழுந்த இலக்கண நூலெனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் இத்தனை நுட்பமாக விடயங்கள் கண்காணிக்கப்பட்டு கொத்து கொத்தாக கோர்வையாக இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் தான்.

( சமநிலை என்ற ஒன்பதாவது மெய்ப்பாடு இங்கு குறிக்கப்படாமைக்கு சமநிலை என்பது மனித உடலின் இயல்பு நிலை என்பதால் இங்கு குறிக்கப்படவில்லை என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.)

( தொல்காப்பியம்; பொருளதிகாரம், இளம் பூரணர் உரையுடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு,1961 ( பக்கங்கள் தமிழ் இலக்கத்தில் இடப்பட்டிருக்கின்றன).

அதனால் நாம் பெருமைப்படலாம் தானே?

காமம் செப்பாது கண்டது மொழிமோ?


No comments:

Post a Comment