Friday, January 19, 2018

பூ அன்ரி......24.12.17. மதியம் கடந்த வேளை நமக்கு.....
குடியிருப்புகள் செறிந்த வீதி ஒன்றால் வந்து கொண்டிருந்த வேளை....
யாழ்ப்பாணத்தில் இருந்து செந்தி whatsapp இல்.....
ஓரமாய் வண்டியை நிறுத்தி விசாரிக்கிறேன்...
‘பூ அன்ரி மோசம் போட்டாவாம்’
’பூ அன்ரி மோட்சம் போட்டாவாம்’ என்று கேட்கிறது எனக்கு.......

பூ அன்ரி.......
தொழில் நுட்பம் எதுவும் தொட்டிராத வாழ்வொன்று இருந்தது அப்போது எங்களிடம். அது நாங்களும் அன்ரியின் குடும்பமும் அனுபவித்து வாழ்ந்த வாழ்வு. இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்வு. பாசாங்கில்லாத பாசங்கள் கொட்டிக் கிடந்த வாழ்வு....


வன்னிப் பெருநிலப்பரப்பில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி வரும் பிரதான வீதியில் 10 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம் எங்களது.

சேவல் கூவுமுன் மயில் அகவி விடியும் காலைகள்...

 நெல்மணிகள் விளையும் 5 ஏக்கர் நிலம். முன் பக்கம் யாழ் வீதியும் பின் பக்கம் ரயில் பாதையும் எல்லையாகக் கொண்ட பசுந்தரை. பெரிய கிணறு. மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கொய்யா, லாவுல் என பழமரங்கள். அவற்றைப் பறித்துண்ன வரும் குரங்குகள். அவற்றைக் கலைப்பதற்காக கல்விட்டெறிவதாகப் பாசாங்கு காட்டினால் தாமும் அவ்வாறு செய்து காட்டி இடம் விட்டு நகராதிருக்கும் புத்திசாலிக் குரங்குகள். அவற்றின் நடுவே கம்பீரமாய் பூமரங்கள் சூழ பிரதான வீடு. வீட்டுக்கு முன்னாலே சாணத்தால் மெழுகப்பட்ட நிலம். தென்னோலையால் வேயப்பட்ட கூரை, அதற்குள்ளே கூடு கட்டிக் குடியிருக்கும் சிட்டுக் குருவிகள். நெல்மூட்டைகளுக்குப் பின்னேயும்  வெளியில் உள்ள வைக்கோல் போருக்குள்ளேயும் ஒளித்துப் பிடித்து விளையாடும் நாங்கள். ஆடு,மாடு, கோழி,நாய், பூனை என இவை வேறு.

மழையால் நிறையும் குளத்தால் செழிக்கும் பூமி. பிள்ளையார் கோயில் மணி கேட்கும் மாலைகள். இரவுகளில் பின்புறக்காடுகளில் இருந்து வரும் பன்றி, மான், மரைகளோடு யானைகளும்...ஆனால் பகல் பொழுதுக் காடுகளை நமக்கவை விட்டுத் தரும். அங்கு பாலப்பழம் வீரப்பழம் என கொப்பு வெட்டி பறித்துண்ணும் நாங்கள்....

அவை மண்ணெண்ணை விளக்கில் நாம் படித்த வாழ்க்கைக் கோலங்கள்...
பஸ்ஸிற்குக் காத்திருந்து நடந்தே வீடு திரும்பிய சீருடைக் காலங்கள்....
விளாங்காயும் மாங்காயும்   அடித்தும் பறித்தும் தின்ற பருவங்கள்.....

எளிமையான இந்தச் சிறுவயது வாழ்வில், வாத்சல்யத்தால், பூரித்த புன்னகையால், வாரி வழங்கும் பரிசுகளால், அழகுறச் செய்து கொண்டுவரும் என் பிறந்த நாளுக்கான கேக்குகளால், கட்டி அணைத்துத் தரும் முத்தங்களால் என் சிறுவயது ஞாபகங்களை இனிய நினைவுகளாக நிறைத்தவர் பூ அன்ரி...

அன்ரி இருக்கும் இடமே எங்களுக்குப் பட்டிணம். போவதொன்றே குதூகலம்.
வவுனியாவில் இருக்கும் அவர் வீட்டில் தங்குவதே கொண்டாட்டம்.  அவர்களின் ’ஷங்கர்’ லொறி எங்கள் விளையாட்டுத் திடல்.

மாதம் ஒருதடவை வார இறுதியில் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் போடும் கறுப்பு வெள்ளைத் தமிழ் படம் பார்ப்பதற்குப் போவதற்கான விண்ணப்பம் மாத ஆரம்பத்திலேயே வீட்டில் ஆரம்பித்து விடும். அங்கு செல்வதற்காகவே போடப்படும் நிபந்தனைகளை எல்லாம் விறு விறு என்று செய்வதில் நமக்குள்ளே போட்டிகள் தொடங்கி விடும்.

படிப்புகள் மும்மரமாய் நடக்கும்; வீட்டு வேலைகள் சிணுங்கல்கள் இன்றி முடியும். ஒரு முறைக்கு ஒருவருக்கு மட்டுமே போக அனுமதி இருக்கும் என்பதால் நாம் எல்லோரும் போட்டி போட்டு நல்ல பிள்ளைகளாவோம்.

அங்கு செல்ல விரும்புவது படம் பார்க்க மாத்திரமல்ல; அவரன்பில் மூழ்குவதற்கும் தான். ஒரு பிள்ளை மீதான வாத்சல்யத்தை, சந்தோஷத்தை, விருந்தோம்பலை, பேரன்பாய் பொழிந்து மகிழும் அந்த அன்பு மிகப் பிரத்தியேகமானதும் தனித்துவமானதும் கூட...

பூ அன்ரி....

நீங்கள் ஓர் அபூர்வ பிறவி....ஆசீர்வாதங்களோடு பிறந்த ஆச்சரியம் நீங்கள்...கடவுளின் செல்லப்பிள்ளையாய் மலர்ந்தீர்கள். குணம் என்றொரு நறுமணம் பரப்பினீர்கள்.

என் சிறு வயது ஞாபகங்களை உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத பேரன்பால் நிறைத்தீர்கள்.....

இன்று நீங்கள் இல்லை; நம்மோடு....

இது எனக்கு ஒரு wake up call ம் கூட...

மத்திய வயதை எட்டி விட்ட இந் நாட்களில் நீண்ட வருடங்களின் பின் நடந்த முதல் இழப்பு இது. பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடும்  கற்றுக் கொண்ட பாடங்களினூடும் பொதுவான எங்கள் மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்......

 மத்திய வயதைத் தொட்டு அதாவது  மலையின் உச்சியைத் தொட்டு விட்டு கீழிறங்கிக் கொண்டு வருகிற பருவம். ஒவ்வொரு அடியையும் அர்த்தபுஷ்டியோடும் அனுபவித்த படியும் அவதானத்தோடும் வைத்து புல்லுக்கும் பழுது எதுவும் நேர்ந்து விடாத வண்ணம் கவனமாக அடி எடுத்து வைத்து வர வேண்டும் என்று தெரிகிறது.

ஆனால், எதை நோக்கி நகர வேண்டும்; எந்தப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே தெரியவில்லை.....

’கடவுளின் சவுக்கடியில் சத்தங்கள் கேட்பதில்லை’ என்கிறார்கள்.

இறப்புகளும் இழப்புகளும் எதையோ நமக்குச் சொல்ல வருகிறது. அது எது என்று மொழிபெயர்க்க இயலவில்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ‘எதையோ’ கற்றுக் கொள்ள வருகிறோம். ஒவ்வொருவருடய ‘விடைபெறுதலும்’ வாழ்க்கை நிரந்தரமில்லை என்ற ஓர் உண்மையை அறைந்து நமக்குச் சொல்லி விட்டுச் செல்கிறது.

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை
நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்

இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருகும் தீங்கினையெண்ணாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மததென்று தாமிருக்க தான்

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்
காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தேதான்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

 பூ அன்ரி........
7.1.18

2 comments:

  1. பூ அன்ரிக்கு அஞ்சலிகள்....சிலரின் இழப்புக்களை தாங்கி கொள்வது மிகவும் கடினமானது.

    ReplyDelete
  2. ஓம்... அவரை இழந்த 31ம் நாள் பதிவிட்டிருக்கிறீர்கள் புத்தன். கிரியைகள் அன்றய தினம் நடந்தேறின....
    நன்றி புத்தன்.

    ReplyDelete