Friday, March 22, 2019

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்

அமிழ்தத் தமிழ்மொழி

அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
அன்னை வாழ்க வாழ்கவே.

வைய கத்தில் இணையி லாத
வாழ்வு கண்ட தமிழ்மொழி
வான கத்தை நானி லத்தில்
வரவ ழைக்கும் தமிழ்மொழி
பொய்அ கந்தை புன்மை யாவும்
போக்க வல்ல தமிழ்மொழி
புண்ணி யத்தை இடைவி டாமல்
எண்ண வைக்கும் தமிழ்மொழி
மெய்வ குத்த வழியி லன்றி
மேவும் எந்தச் செல்வமும்
வேண்டி டாத தூய வாழ்வைத்
தூண்டு கின்ற தமிழ்மொழி
தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
தேடி தேடி ஆய்ந்தவர்
தெளிவு கண்ட ஞான வான்கள்
சேக ரித்த நன்மொழி.

உலகி லுள்ள மனிதர் யாரும்
ஒருகு டும்பம் என்னவே
ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
தொன்று தொட்டுச் சொன்னது;
கலக மற்ற உதவி மிக்க
சமுக வாழ்வு கண்டது;
கடமை கற்று உடைமை பெற்ற
கர்ம ஞானம் கொண்டது;
சலுகை யோடு பிறமொ ழிக்கும்
சரிச மானம் தருவது;
சகல தேச மக்க ளோடும்
சரச மாடி வருவது;
இலகும் எந்த வேற்று மைக்கும்
ஈசன் ஒன்றே என்பதை
இடைவி டாமல் காட்டும் எங்கள்
இனிமை யான தமிழ்மொழி.

கொலைம றுக்கும் வீர தீரக்
கொள்கை சொல்லும் பொன்மொழி;
கொடியவர்க்கும் நன்மை செய்யக்
கூறு கின்ற இன்மொழி;
அலைமி குந்த வறுமை வந்தே
அவதி யுற்ற நாளிலும்
ஐய மிட்டே உண்ணு கின்ற
அறிவு சொல்லும் தமிழ்மொழி;
கலைமி குந்த இன்ப வாழ்வின்
களிமி குந்த பொழுதிலும்
கருணை செய்தல் விட்டி டாத
கல்வி நல்கும் மொழியிது;
நிலைத ளர்ந்து மதிம யங்க
நேரு கின்ற போதெலாம்
நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
பாது காக்கும் தமிழ்மொழி.

அன்பு செய்தும், அருள் அறிந்தும்,
ஆற்றல் பெற்ற அறமொழி;
அறிவ றிந்து திறமை யுற்றே
அமைதி மிக்க திருமொழி;
இன்ப மென்ற உலக றிந்த
யாவு முள்ள கலைமொழி;
இறைவ னோடு தொடர்ப றாமல்
என்று முள்ள தென்றமிழ்.
துன்ப முற்ற யாவ ருக்கும்
துணையி ருக்கும் தாயவள்;
துடிது டித்தே எவ்வு யிர்க்கும்
நலம ளிக்கும் தூயவள்;
தென்பு தந்து தெளிவு சொல்லும்
தெய்வ மெங்கள் தமிழ்மொழி;
திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற
இசைப ரப்பச் செய்குவோம்.

பழிவ ளர்க்கும் கோப தாப
குரோத மற்ற பான்மையும்,
பகைவ ளர்க்கும் ஏக போக
ஆசை யற்ற மேன்மையும்,
அழிவு செய்யக் கருவி செய்யும்
ஆர்வ மற்ற எண்ணமும்,
அனைவ ருக்கும் நன்மை காணும்
வித்தை தேடும் திண்ணமும்
மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற
உண்மை கண்டு முந்தையோர்
முறைதெ ரிந்து சேர்த்த திந்த
நிறைமி குந்த முதுமொழி.
வழிய றிந்து நாமும் அந்த
வகைபு ரிந்து போற்றுவோம்;
வஞ்ச மிக்க உலக வாழ்வைக்
கொஞ்ச மேனும் மாற்றுவோம்.

2. தமிழ் மக்கள்

நிலைபெற்ற அறிவென்ற
நிதிமிக்க நல்கும்
நிறைவுற்ற அருள்கொண்ட
நிகரற்ற தெய்வம்
கலைமிக்க தமிழன்னை
கழல்கொண்டு பாடிக்
கனிவுற்ற மனமொத்த
களிகொண்டு கூடி
அலையற்ற கடலென்ன
அமைவுற்று நாளும்
அகிலத்தின் பலமக்கள்
அனைவைர்க்கும் உறவாய்த்
தலைபெற்ற புகழ்கொண்டு
தவமிக்க ராகித்
தயவொன்றிப் பயமின்றித்
தமிழ்மக்கள் வாழ்வோம் ;
தமிழ்மக்கள் வாழ்வோம்.


3.தமிழன் இதயம்

தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான் ;
மற்றவர்க் காகத் துயர்படுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான் ;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

4. இளந்தமிழனுக்கு

இளந்த மிழா! உன்னைக் காண
இன்ப மிகவும் பெருகுது!
இதுவ ரைக்கும் எனக்கி ருந்த
துன்பம் சற்றுக் குறையுது!
வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
வலிமை பேசி வந்தனை.
வறுமை மிக்க அடிமை நிற்கு
வந்த ஊக்கம் கண்டுநான்
தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
தைரி யங்கொண் டேனடா!
தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
தக்க காலம் வந்ததோ!
குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
குறைவி லாது நின்றுநீ
குற்ற மற்ற சேவை செய்து
கொற்ற மோங்கி வாழ்குவாய்!

பண்டி ருந்தார் சேர சோழ
பாண்டி மன்னர் நினைவெலாம்
பாயுமேடா உன்னை யின்று
பார்க்கும் போது நெஞ்சினில்!
கொண்ட கொள்கை அறம்வி டாமல்
உயிர்கொ டுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் வந்து குத்துமே!
மண்ட லத்தே இணையி லாத
வாழ்வு கண்ட தமிழகம்
மகிமை கெட்டே அடிமைப் பட்டு
மதிம யங்கி நிற்பதேன்?
செண்டெ ழந்தா லென்னப் பாய்ந்து
தேச முற்றும் சுற்றிநீ
தீர வீரம் நம்முள் மீளச்
சேரு மாறு சேவைசெய்.

அன்பி னோடும் அறிவு சேர்ந்த
ஆண்மை வேண்டும் நாட்டிலே;
அச்ச மற்ற தூய வாழ்வின்
ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
இன்ப மான வார்த்தை பேசி
ஏழை மக்கள் யாவரும்
எம்மு டன்பி றந்த பேர்கள்
என்ற எண்ணம் வேண்டுமே.
துன்ப மான கோடி கோடி
சூழ்ந்து விட்ட போதிலும்
சோறு தின்ன மானம் விற்கும்
துச்ச வாழ்வு தொட்டிடோம்!
என்ப தான் நீதி யாவும்
இந்த நாட்டில் எங்கணும்
இளந்த மிழா! என்றும் நின்றே
ஏடே டுத்துப் பாடுவாய்!

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பணிந்தி டாத மேன்மையும்
பயமுறுத்தல் என்ப தற்கே
பயந்திடாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
போற்று கின்ற கொள்கையும்
குற்ற முள்ளோர் யாரென் றாலும்
இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
கைவி டாத ஏற்றுமும்
இழிகு லத்தார் என்று சொல்லி
இகழ்த்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
தமிழ்மொ ழியால் ஓதிநீ
மாநி லத்தில் எவருங் கண்டு
மகிழு மாறு சேவைசெய்.
ஓடி ஓடி நாட்டி லெங்கும்
உண்மை யைப்ப ரப்புவாய்;
ஊன மான அடிமை வாழ்வை
உதறித் தள்ள ஓதுவாய்;
வாடி வாடி அறம்ம றந்து
வறுமைப் பட்ட தமிழரை
வாய்மை யோடு தூய்மை காட்டும்
வலிமை கொள்ளச் செய்குவாய்;
கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
செய்கை யற்ற யாரையும்
குப்பையோடு தள்ளி விட்டுக்
கொள்கை யோடு நின்றுநீ
பாடிப் பாடித் தமிழின் ஓசை
உலக மெங்கும் பரவவே
பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
பணியு மாறு சேவைசெய்.

தமிழ னென்ற பெருமை யோடு
தலைநி மிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையி லாஉன்
சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை
அண்ட முட்ட உலகெலாம்
அகில தேச மக்க ளுங்கண்
டாசை கொள்ளச் செய்துமேல்
கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற
நாட்டி லுள்ள கலையெலாம்
கட்டி வந்து தமிழர் வீட்டில்
கதவி டித்துக் கொட்டியே
நமது சொந்தம் இந்த நாடு
நானி லத்தில் மீளவும்
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
செய்து வாழ்க நீண்டநாள்!


நன்றி:நாமக்கல் கவிஞர் பாடல்கள்

No comments:

Post a Comment