ஒரு பெரிய வசனத்தை நிறுத்த ஒரு முற்றுப்புள்ளி போதும்.
பல முற்றுப்புள்ளிகள் சேர்ந்தால் அவ்வசனம் தொடர்கிறது என அர்த்தமாகும்.
இந்தக் கட்டுரை ஒரு முற்றுப்புள்ளி குறித்த கதை பற்றியது.
இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்த காலம் முதலாக முக்கியமாக இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர் தம் ஆர்வங்களைக் காட்டி வருகிறார்கள்.
1. தாயகத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல்.
2. இங்கு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
இவைகளில் ஈடுபடுவோர் அநேகமாக 50களைத் தாண்டியவர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இளையோர் சில நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தாலும் மிகப் பெரும்பாலானவர்கள் தம் வாழ்வை நிலை நிறுத்திய பிறகு கிடைக்கிற ஓய்வு நேரங்களில் மேற்கூறிய பணிகளைச் செய்து வருகிறார்கள்.
செய்வது நன்றே! நன்றி.
இவர்கள் சுமார் 25/ 30 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள். அவர்கள் புலம்பெயரும் போது எத்தகைய வாழ்க்கை முறைகள், கற்பித்தல் முறைகள் தாயகத்தில் இருந்தனவோ அவற்றை தம் வாழ்வாதாரமாகத் தம்மோடு எடுத்து வந்தவர்கள். அவைகளே உன்னதமான கற்பித்தல் முறைகள் என்பதை நம்புகிறவர்கள். இடையில் நிகழ்ந்த இந்த 30 வருட கால தகவல் தொழில் நுட்பப்புரட்சியும் புதியநாட்டு கற்பித்தல் முறை குறித்த அவதானிப்புகளும் அவர்களால் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.
இது ஒரு வித தேக்க நிலை.
இவர்கள் தமிழ் மீதான அதீத ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் போட்டிகளை ஒரே சீராக நடத்தி வருகிறார்கள். அவை மரபு நீதியானதாகவும் மாற்றங்களுக்கு உட்படாததாகவும் இருக்கிறது.
மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். பிரதான பாடசாலையில் மிக முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களையும் பல புதிய யுக்திகளையும் உபயோகிக்கத் தெரிந்தவர்களாகவும் அவற்றில் கைதேர்ந்தவர்களாகவும் விளங்குகிறார்கள். சுய ஆற்றல்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஊக்கமளிக்கும் கற்பித்தல் முறைகள் அவை
PowerPoint presentation லும் கைகளில் card வைத்து கதைப்பதையும், ஒரு விடயத்தை விளங்கி, அதனைத் தன் மொழியில் தன்னம்பிக்கையோடு பேசுதலையும் அங்கு ஊக்குவித்து, பிள்ளையில் ஆழுமைத்திறனையும் தலைமைத்துவப் பண்பினையும் மொழி ஆற்றலையும் ஆராய்ச்சி திறத்தையும் ஊக்குவிக்கிற; சொந்த கருத்தாக்கமும் தனித்துவமும் வெளித்தெரிவதை வளர்க்கிற ஒரு கல்விப்பின்னணியில் இருந்து அவர்கள் வருகிறார்கள்.
இந்த இரு தரப்பாருக்கும் இடையே இருக்கிற பெற்றோர் தன் பிள்ளை தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதிலும் போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலமாகவும் தன் பிள்ளை தன் மொழியையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீரா ஆர்வத்தையும் கொண்டவர்கள்.
அவர்களுக்கு முன்னே இருக்கிற option இது மட்டும் தான்.
இத்தகைய பின்னணி கொண்ட ஒரு சமூக மரபில் நாம் இன்று வாழ்கிறோம்.
அறிவுத்தேடலில் சுதந்திரம் கிடைக்கும் மாணவரிடம் இருந்து சமூகத்துக்குக் கிடைக்கும் அறிவுத்தார்ப்பரியங்கள் பல.
வெளிப்படைத்தன்மையும், பரந்த உலகப் பார்வையும், சுய ஆற்றல்களுக்கு; சுதந்திரமான சுயமுடிவுகளுக்கு களம் அமைக்கும் போட்டிகளும்; அதனை அளவீடு செய்ய அதற்கும் மேலான தகுதி வாய்ந்த நடுவர்களும் நம் இன்றய தேவை.
மாற்றங்களை ஏற்காத எந்த ஒரு சமூகமும் மேம்பட்டதில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழுக்குப் புதிதானதுமில்லை.
அண்மையில் சில தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை சென்று பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
இதில் பலவிதமான தரப்பினர் ஆர்வத்தோடு பங்கு கொள்ளுகின்றனர். இவைகளில் பங்கு பெறுபவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிற பொழுதிலும் அவர்கள் கற்கிற தமிழ் பாடசாலை சார்ந்து மூன்று பிரிவுகளில் அடங்குகின்றனர்.
1. ஹோம்புஷ் பாடசாலை மாணவர்கள்.
2.வெண்ட்வெர்த்வில் பாடசாலை மாணவர்கள்.
3. பாலர்பள்ளி பாடசாலை மாணவர்கள்.
4. தனிப்பட்ட பிள்ளைகள்.
நடத்தப்படும் போட்டிகள் பேச்சுப் போட்டிகள், மனனப் போட்டிகள் எனவாக அமைகின்றன. அப்போட்டிகளுக்கான பேச்சுக்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மனனத்துக்குரியவையும் ஏற்கனவே தெரிவுசெய்யப் பட்ட ஒன்றாக இருக்கின்றன.
இது ஏற்பாட்டாளர்களின் முழு சுதந்திரத்திற்குமுரியது என்பதை நான் மரியாதையோடு ஏற்றுக் கொள்ளுகின்ற அதே வேளை,அறிவுக்கான முதல் முட்டுக்கட்டை இங்கே இடப்படுகிறது என்ற என் மிகத் தாழ்மையான கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் தருவதையே பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டும் என்பது ஒரு வித சர்வாதிகாரமாகும்.
மாணவர்களுக்கு குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்து, குறிப்பிட்ட சொற்களுக்குட்பட்டதாக, உங்கள் பேச்சு அமைய வேண்டும் என்று கொடுப்பதன் மூலமும்; அதனை வெளிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் எதை வேண்டுமென்றாலும் அவர்கள் உபயோகப்படுத்தலாம் என்று சுதந்திரம் வழங்குவதன் மூலமாகவும்; அவர்களிடமிருந்து மிகச் சிறந்த பெறு பேற்றைப் பெறலாம் என்பது என் நம்பிக்கை.அவர்கள் எட்டி நிற்கும் சிகரங்களையும் அதன் வழி நாம் அடையாளம் காணலாம்.
குறிப்பிட்ட தலைப்பில் மிகச் சிறந்த கருவூலத்தை கொண்ட பேச்சினையும் பொருளினையும் கூட நாம் அதனூடே பெறலாம். கூடவே, பல்வேறுவிதமான ஆழுமை வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.
ஆனால் ஒரு போட்டியில் இவ்வாறு பேசிய ஒரு பிள்ளைக்கு புள்ளிகளே வழங்கப்படவில்லை என்பது எத்துணை வருத்தமானது!
இப் போட்டிகளில் மாணவர்கள் பேச்சினை ஒரு சீராக ஒப்புவிக்கிறார்கள். ஆனால் பேச்சுப் பாணியைப் பொறுத்தவரை இந் நான்கு வகைப்பட்ட மாணவர்களிடமும் நான்கு விதமான பேச்சுப்பாணி இருக்கிறது. வருகிற மாணவர்களும் இலங்கை இந்தியப் பின்னணி கொண்டவர்களாக மாத்திரமல்லாது இந்தியாவின் தமிழ் நாட்டை அண்டிய அயல் மாநிலப் பின்னணி கொண்ட மாணவர்களும் வருகிறார்கள்.
பிரதான முதலிரு பாடசாலைப் பின்னணிகளிலும் இருந்து வரும் மாணவர்களிடம் தனிப்பட்ட விதமான ஒரு பேச்சுப் பாணி பின்பற்றப்படுவதை தெளிவாகவும் பிரித்துணரவும் முடியும். ஆனால் பாலர் பள்ளியில் இருந்தும் தனிப்பட்ட பெற்றோரின் வழியாகவும் வருகிற மாணவர்களிடம் தனித்துவமான பேச்சுப் பாணி நிலவுகிறது.
அவர்கள் தரப்பட்டிருக்கிற பேச்சினை தமக்கானதாக ஆக்கி பேச்சின் உள்ளடக்கத்தை உணர்ந்து சொற்களுக்கு போதுமான அழுத்தம் கொடுத்து, ஏற்ற இறக்கங்களோடு; இயற்கலையின் அம்சங்கள் மிளிர, சொல்ல வல்லவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களின் மூல மண்ணின் அழகின் வழி வந்தது. பெற்றோரின் தனிப்பட்ட வழிநடத்தல் வழி நிகழ்ந்தது. அதன் அம்சமும் தனித்துவமும் வரலாற்றுப் பின்னணியும் வேறு.
ஆனால் போட்டிகளை நடாத்துவோரார் தாம் தரும் பேச்சில் வேறெந்த மாற்றங்களையும் செய்யக் கூடாதென்பதை வலியுறுத்துவதோடு; வரிகளை மீளச் சொல்லுதல், தான் விரும்புகிறபடிக்கு சபைக்கு வணக்கம் சொல்லுதல் போன்ற மாணவரின் சொந்த இயல்புகளுக்கு இடமில்லாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
இத்தகைய கட்டுப்பாடுகள் மாணவரின் எத்தகைய அம்சத்தை எடைபோட?
மாணவர்கள் மனனம் செய்து ஒப்புவிக்கும் இத்தகைய போட்டிகள் மூலமாக நாம் எதனை கொடுக்க முற்படுகிறோம் என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்க முடியும்? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க,
தீர்ப்பினை வழங்கும் நடுவர்கள் அந்தத் தீர்ப்பினை வழங்க எத்தகைய தகுதிப்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அநேக நடுவர்கள் நாலு பேருக்குத் தெரிந்தவர் என்ற பாணியிலேயே தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர பேச்சுக்கலை அதாவது இயற்கலை குறித்த அவர்களின் புலமைத்துவம் யாது? என்ற ஒரு கேள்வியைக் கேட்டால் அது புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
தமிழ் அன்னைக்கு முதல்வணக்கம் சொல்லி, சொற்களைக் கோலிக் கோலி, சுய அழகோடு, கவளம் கவளமாய் கேட்போருக்கு சந்தோஷமாக தமிழை அள்ளிக் கொடுத்து, புன்னகையோடு சென்றமர்ந்த சிறுவனுக்கு, முதலிடம் கிடைக்காமல்; கிளிப்பிள்ளை போல் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்த ஒரு சிறுவனுக்கு முதலிடம் கொடுத்த தீர்ப்பு என்னை பல நாட்கள் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
முளையிலேயே கிள்ளி விட்ட அரும்பு அது! ஒரு வசீகரமான வசனத்தை நிறுத்திவிட்ட ஒரு கரும் முற்றுப்புள்ளி அது!
அண்மையில் சென்று பார்க்கக் கிட்டிய அதன் பின்பான இன்னொரு பேச்சுப்போட்டியின் போது 3 நடுவர்களில் இரு நடுவர்கள் மாணவர்கள் பேசுகின்ற போது பேசும் மாணவரைப் பார்க்காது தமக்கு வழங்கப்பட்ட தாளினையே முற்றுமுழுதாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இவர்களிடம் இருந்து வருவது எத்தகையதான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்ற ஒரு தர்மாவேசம் ஏற்பட்டதை தவிர்க்க முடியாதிருந்தது. இயற்கலை குறித்த எந்த ஒரு தார்ப்பரியங்களும் அறியாத நடுவர்களால் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது என்ற நிகழ்ச்சி நடத்துவோரின் வாதங்கள் மேலும் சகிக்கவொண்ணாததாக இருந்தது.
ஒரு பேச்சுக்கலை என்பது கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது. ஏற்ற இறக்கங்களின் வழி மொழியின் அழகு மிளிர்வது, அறிவால் உணர்வது. உணர்வில் செறிவது. 70% nonverbal communication ஆல் சென்றடயும் ஒரு விடயம் அது! நிமிர்ந்து பிள்ளையைப் பார்க்கவே பார்க்காத நடுவர்களால் எவ்வாறான தீர்ப்பினை வழங்கி இருக்க முடியும்?
ஒரு குழந்தை போற்றப்படலாம். போஷிக்கப் படலாம்; பாராட்டப் படலாம். அது வேண்டியதே. ஆனால் ஒரு போற்றலுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரு குழந்தை புறக்கணிக்கப்படக் கூடாது.
தொடர்ந்து செல்ல வேண்டிய ஒரு வசனத்துக்கான முற்றுப் புள்ளியாக இந்தப் போட்டிகள் ஒரு பிள்ளைக்கு அமைந்து விடக்கூடாது. அவ்வாறு அது நடக்குமெனில்; ஒரு கரிசனை உள்ள சமூகப் பிரஜையாக அதை இலகுவாகக் கடந்து விட முடியாது என்பதைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்!
இவை தட்டியும் அதட்டியும் கேட்கப்பட வேண்டியவை!
நன்மை செய்யாது விடினும் தீமை செய்யாதிருக்கக் கடவீர்!
தமிழ்திருவடி சரணம்