Tuesday, September 3, 2019

சிட்னியில் தமிழ் போட்டிகளும் தீர்ப்புகளும்

ஒரு பெரிய வசனத்தை நிறுத்த ஒரு  முற்றுப்புள்ளி போதும்.
பல முற்றுப்புள்ளிகள் சேர்ந்தால் அவ்வசனம் தொடர்கிறது என அர்த்தமாகும்.

இந்தக் கட்டுரை ஒரு முற்றுப்புள்ளி குறித்த கதை பற்றியது.

இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்த காலம் முதலாக முக்கியமாக இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர் தம் ஆர்வங்களைக் காட்டி வருகிறார்கள்.

1. தாயகத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல்.
2. இங்கு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

இவைகளில் ஈடுபடுவோர் அநேகமாக 50களைத் தாண்டியவர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இளையோர் சில நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தாலும் மிகப் பெரும்பாலானவர்கள் தம் வாழ்வை நிலை நிறுத்திய பிறகு கிடைக்கிற ஓய்வு நேரங்களில் மேற்கூறிய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

செய்வது நன்றே! நன்றி.

இவர்கள் சுமார் 25/ 30 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள். அவர்கள் புலம்பெயரும் போது எத்தகைய வாழ்க்கை முறைகள், கற்பித்தல் முறைகள் தாயகத்தில் இருந்தனவோ அவற்றை தம் வாழ்வாதாரமாகத் தம்மோடு எடுத்து வந்தவர்கள். அவைகளே உன்னதமான கற்பித்தல் முறைகள் என்பதை நம்புகிறவர்கள். இடையில் நிகழ்ந்த இந்த 30 வருட கால தகவல் தொழில் நுட்பப்புரட்சியும் புதியநாட்டு கற்பித்தல் முறை குறித்த அவதானிப்புகளும் அவர்களால் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

இது ஒரு வித தேக்க நிலை.

இவர்கள் தமிழ் மீதான அதீத ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் போட்டிகளை ஒரே சீராக நடத்தி வருகிறார்கள். அவை மரபு நீதியானதாகவும் மாற்றங்களுக்கு உட்படாததாகவும் இருக்கிறது.

மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். பிரதான பாடசாலையில் மிக முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களையும் பல புதிய யுக்திகளையும் உபயோகிக்கத் தெரிந்தவர்களாகவும் அவற்றில் கைதேர்ந்தவர்களாகவும் விளங்குகிறார்கள். சுய ஆற்றல்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஊக்கமளிக்கும் கற்பித்தல் முறைகள் அவை

 PowerPoint presentation லும் கைகளில் card வைத்து கதைப்பதையும், ஒரு விடயத்தை விளங்கி, அதனைத் தன் மொழியில் தன்னம்பிக்கையோடு பேசுதலையும் அங்கு ஊக்குவித்து, பிள்ளையில் ஆழுமைத்திறனையும் தலைமைத்துவப் பண்பினையும் மொழி ஆற்றலையும் ஆராய்ச்சி திறத்தையும் ஊக்குவிக்கிற; சொந்த கருத்தாக்கமும் தனித்துவமும் வெளித்தெரிவதை  வளர்க்கிற ஒரு கல்விப்பின்னணியில் இருந்து அவர்கள் வருகிறார்கள்.

இந்த இரு தரப்பாருக்கும் இடையே இருக்கிற பெற்றோர் தன் பிள்ளை தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதிலும் போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலமாகவும் தன் பிள்ளை தன் மொழியையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீரா ஆர்வத்தையும் கொண்டவர்கள்.

அவர்களுக்கு முன்னே இருக்கிற option இது மட்டும் தான்.

இத்தகைய பின்னணி கொண்ட ஒரு சமூக மரபில் நாம் இன்று வாழ்கிறோம்.

அறிவுத்தேடலில் சுதந்திரம் கிடைக்கும் மாணவரிடம் இருந்து சமூகத்துக்குக் கிடைக்கும் அறிவுத்தார்ப்பரியங்கள் பல.

வெளிப்படைத்தன்மையும், பரந்த உலகப் பார்வையும், சுய ஆற்றல்களுக்கு; சுதந்திரமான சுயமுடிவுகளுக்கு களம் அமைக்கும் போட்டிகளும்; அதனை அளவீடு செய்ய அதற்கும் மேலான தகுதி வாய்ந்த நடுவர்களும் நம் இன்றய தேவை.

மாற்றங்களை ஏற்காத எந்த ஒரு சமூகமும் மேம்பட்டதில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழுக்குப் புதிதானதுமில்லை.

அண்மையில் சில தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை சென்று பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

இதில் பலவிதமான தரப்பினர் ஆர்வத்தோடு பங்கு கொள்ளுகின்றனர். இவைகளில் பங்கு பெறுபவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிற பொழுதிலும் அவர்கள் கற்கிற தமிழ் பாடசாலை சார்ந்து மூன்று பிரிவுகளில் அடங்குகின்றனர்.

1. ஹோம்புஷ் பாடசாலை மாணவர்கள்.
2.வெண்ட்வெர்த்வில் பாடசாலை மாணவர்கள்.
3. பாலர்பள்ளி பாடசாலை மாணவர்கள்.
4. தனிப்பட்ட பிள்ளைகள்.

நடத்தப்படும் போட்டிகள் பேச்சுப் போட்டிகள், மனனப் போட்டிகள் எனவாக  அமைகின்றன. அப்போட்டிகளுக்கான பேச்சுக்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மனனத்துக்குரியவையும் ஏற்கனவே தெரிவுசெய்யப் பட்ட ஒன்றாக இருக்கின்றன.

இது ஏற்பாட்டாளர்களின் முழு சுதந்திரத்திற்குமுரியது என்பதை நான் மரியாதையோடு ஏற்றுக் கொள்ளுகின்ற அதே வேளை,அறிவுக்கான முதல் முட்டுக்கட்டை இங்கே இடப்படுகிறது என்ற என்  மிகத் தாழ்மையான கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் தருவதையே பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டும் என்பது ஒரு வித சர்வாதிகாரமாகும்.

மாணவர்களுக்கு குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்து, குறிப்பிட்ட சொற்களுக்குட்பட்டதாக, உங்கள் பேச்சு அமைய வேண்டும் என்று கொடுப்பதன் மூலமும்; அதனை வெளிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் எதை வேண்டுமென்றாலும் அவர்கள் உபயோகப்படுத்தலாம் என்று சுதந்திரம் வழங்குவதன் மூலமாகவும்; அவர்களிடமிருந்து மிகச் சிறந்த பெறு பேற்றைப் பெறலாம் என்பது என் நம்பிக்கை.அவர்கள் எட்டி நிற்கும் சிகரங்களையும் அதன் வழி நாம் அடையாளம் காணலாம்.

குறிப்பிட்ட தலைப்பில் மிகச் சிறந்த கருவூலத்தை கொண்ட பேச்சினையும் பொருளினையும் கூட நாம் அதனூடே பெறலாம். கூடவே, பல்வேறுவிதமான ஆழுமை வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.

ஆனால் ஒரு போட்டியில் இவ்வாறு பேசிய ஒரு பிள்ளைக்கு புள்ளிகளே வழங்கப்படவில்லை என்பது எத்துணை வருத்தமானது!

இப் போட்டிகளில் மாணவர்கள் பேச்சினை ஒரு சீராக ஒப்புவிக்கிறார்கள். ஆனால் பேச்சுப் பாணியைப் பொறுத்தவரை இந் நான்கு வகைப்பட்ட மாணவர்களிடமும் நான்கு விதமான பேச்சுப்பாணி இருக்கிறது. வருகிற மாணவர்களும் இலங்கை இந்தியப் பின்னணி கொண்டவர்களாக மாத்திரமல்லாது இந்தியாவின் தமிழ் நாட்டை அண்டிய அயல் மாநிலப் பின்னணி கொண்ட மாணவர்களும் வருகிறார்கள்.

பிரதான முதலிரு பாடசாலைப் பின்னணிகளிலும் இருந்து வரும் மாணவர்களிடம் தனிப்பட்ட விதமான ஒரு பேச்சுப் பாணி பின்பற்றப்படுவதை தெளிவாகவும் பிரித்துணரவும் முடியும். ஆனால் பாலர் பள்ளியில் இருந்தும் தனிப்பட்ட பெற்றோரின் வழியாகவும் வருகிற மாணவர்களிடம் தனித்துவமான பேச்சுப் பாணி நிலவுகிறது.

அவர்கள் தரப்பட்டிருக்கிற பேச்சினை தமக்கானதாக ஆக்கி பேச்சின் உள்ளடக்கத்தை உணர்ந்து சொற்களுக்கு போதுமான அழுத்தம் கொடுத்து, ஏற்ற இறக்கங்களோடு; இயற்கலையின் அம்சங்கள் மிளிர, சொல்ல வல்லவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களின் மூல மண்ணின் அழகின் வழி வந்தது. பெற்றோரின் தனிப்பட்ட வழிநடத்தல் வழி நிகழ்ந்தது. அதன் அம்சமும் தனித்துவமும் வரலாற்றுப் பின்னணியும் வேறு.

ஆனால் போட்டிகளை நடாத்துவோரார் தாம் தரும் பேச்சில் வேறெந்த மாற்றங்களையும் செய்யக் கூடாதென்பதை வலியுறுத்துவதோடு; வரிகளை மீளச் சொல்லுதல், தான் விரும்புகிறபடிக்கு சபைக்கு வணக்கம் சொல்லுதல் போன்ற மாணவரின் சொந்த இயல்புகளுக்கு இடமில்லாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

இத்தகைய கட்டுப்பாடுகள் மாணவரின் எத்தகைய அம்சத்தை எடைபோட?

 மாணவர்கள் மனனம் செய்து ஒப்புவிக்கும் இத்தகைய போட்டிகள் மூலமாக நாம் எதனை கொடுக்க முற்படுகிறோம் என்ற கேள்விக்கு  என்ன பதில் இருக்க முடியும்? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க,

தீர்ப்பினை வழங்கும் நடுவர்கள் அந்தத் தீர்ப்பினை வழங்க எத்தகைய தகுதிப்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அநேக நடுவர்கள் நாலு பேருக்குத் தெரிந்தவர் என்ற பாணியிலேயே தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர பேச்சுக்கலை அதாவது இயற்கலை குறித்த அவர்களின் புலமைத்துவம் யாது? என்ற ஒரு கேள்வியைக் கேட்டால் அது புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ் அன்னைக்கு முதல்வணக்கம் சொல்லி, சொற்களைக் கோலிக் கோலி, சுய அழகோடு, கவளம் கவளமாய் கேட்போருக்கு சந்தோஷமாக தமிழை அள்ளிக் கொடுத்து, புன்னகையோடு சென்றமர்ந்த சிறுவனுக்கு, முதலிடம் கிடைக்காமல்; கிளிப்பிள்ளை போல் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்த ஒரு சிறுவனுக்கு முதலிடம் கொடுத்த தீர்ப்பு என்னை பல நாட்கள் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

முளையிலேயே கிள்ளி விட்ட அரும்பு அது! ஒரு வசீகரமான வசனத்தை நிறுத்திவிட்ட ஒரு கரும் முற்றுப்புள்ளி அது!

அண்மையில் சென்று பார்க்கக் கிட்டிய அதன் பின்பான இன்னொரு பேச்சுப்போட்டியின் போது 3 நடுவர்களில் இரு நடுவர்கள் மாணவர்கள் பேசுகின்ற போது  பேசும் மாணவரைப் பார்க்காது தமக்கு வழங்கப்பட்ட தாளினையே முற்றுமுழுதாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இவர்களிடம் இருந்து வருவது எத்தகையதான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்ற ஒரு தர்மாவேசம் ஏற்பட்டதை தவிர்க்க முடியாதிருந்தது. இயற்கலை குறித்த எந்த ஒரு தார்ப்பரியங்களும் அறியாத நடுவர்களால் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது என்ற நிகழ்ச்சி நடத்துவோரின் வாதங்கள் மேலும் சகிக்கவொண்ணாததாக இருந்தது.

ஒரு பேச்சுக்கலை என்பது கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது. ஏற்ற இறக்கங்களின் வழி மொழியின் அழகு மிளிர்வது, அறிவால் உணர்வது. உணர்வில் செறிவது. 70% nonverbal communication ஆல் சென்றடயும் ஒரு விடயம் அது! நிமிர்ந்து பிள்ளையைப் பார்க்கவே பார்க்காத நடுவர்களால் எவ்வாறான தீர்ப்பினை வழங்கி இருக்க முடியும்?

ஒரு குழந்தை போற்றப்படலாம். போஷிக்கப் படலாம்; பாராட்டப் படலாம். அது வேண்டியதே. ஆனால் ஒரு போற்றலுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரு குழந்தை புறக்கணிக்கப்படக் கூடாது.

தொடர்ந்து செல்ல வேண்டிய ஒரு வசனத்துக்கான முற்றுப் புள்ளியாக இந்தப் போட்டிகள் ஒரு பிள்ளைக்கு அமைந்து விடக்கூடாது. அவ்வாறு அது நடக்குமெனில்; ஒரு கரிசனை உள்ள சமூகப் பிரஜையாக அதை இலகுவாகக் கடந்து விட முடியாது என்பதைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்!

 இவை தட்டியும் அதட்டியும் கேட்கப்பட வேண்டியவை!

நன்மை செய்யாது விடினும் தீமை செய்யாதிருக்கக் கடவீர்!


தமிழ்திருவடி சரணம்


42 comments:

 1. நல்ல பகிர்வு. பள்ளியில் படிக்கும்போது கலந்து கொண்ட பேச்சுப் போட்டிகள் நினைவில்.... தலைப்பு கொடுத்த பத்து நிமிடத்தில் பேச வேண்டிய போட்டிகள் அவை....

  ReplyDelete
 2. ஆஹா! அப்படி இருக்க வேணும் போட்டி!!

  ReplyDelete
 3. Replies
  1. மிக்க நன்றி.
   நீங்களும் வாசித்திருக்கிறீர்கள் என்பதறிந்து மிக மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. நன்றி. சில விடயங்கள் கேள்விக்குரியன. தொழில்நுட்பம் அறிந்த பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைக்கு உதவி செய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வசதி இல்லாத பிள்ளைகளின் நிலை என்ன? இந்த இரண்டு வகை மாணவர்களை எப்படி ஒரே போட்டியில் பங்குபற்றவைக்க இயலும். கட்டுரையில் குறிப்பிடும் முறை சிறந்ததுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், பெற்றோரின் உதவியின்றி மாணவர் அவராகவே உரையைத் தயாரித்தார் என்று எப்படி அறிய முடியும். பெற்றாரின் போக்கை சில போட்டிகளில் நான் அவதானித்திருக்கிறேன். தங்கள் பிள்ளைக்காக விதிகளையும் மீறி சில பெற்றார் போட்டியின்போது உதவ முயற்சிப்பதைப் பல முறை தடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களை சந்தித்திருக்கிறேன். தன் பிள்ளைக்கு உதவுவதன் மூலம் மற்ற பிள்ளைக்கு அநீதி இழைப்பதை அவர்கள் உணருவதில்லை.

  ReplyDelete
 5. உங்கள் வருகைக்கும் மனமார்ந்த உங்கள் கருத்துக்களுக்கும் முதற்கண் என் நன்றி.

  நாம் ஒரு போட்டியினை எதற்காகச் செய்கிறோம்? ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி ஒரு பிள்ளை அறிந்து நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தானே! அது குறித்து நாம் இப்போது என்ன செய்கிறோம் என்றால் நாமே பேச்சினை எழுதி மாணவர் பாடமாக்கி ஒப்புவிக்கக் கொடுக்கிறோம். இங்கேயே சிந்தனைக்கு முட்டுக் கட்டை போட்டு விடுகிறோம். இங்கே பிள்ளையின் சிந்தனைக்கோ அபிப்பிராயத்துக்கோ இடமில்லை!

  ஒரு பிள்ளையின் சிந்தனைத் திறனை நாம் அத்தனை மட்டமாக எடைபோட்டு விட முடியாது. அது ஒரு சுய சிந்தனை உள்ள உயிரி.
  ஒரு பேச்சினை உருவாக்க பெற்றோர் உதவட்டும். ஒரு பெற்றோரை விட வேறு யார் தன் பிள்ளை மீது அதிக அக்கறை செலுத்த முடியும்? அவர்களின் மூலமாக; அது போல பல பெற்றோர்களின் மூலமாக வரும் ஒரு பேச்சின் சாராம்சம், தொழில் நுட்ப உத்தி என எத்தனை பல விடயங்களை போட்டியின் போது கொண்டுவந்து சேர்க்கும்! அது கேட்கும், பார்க்கும் பலருக்கும்,ஓ.. இதை இப்படியும் செய்யலாம்; இப்படியும் பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தைத் தூண்டி விடும். தவிரவும், போட்டியில் நிபந்தனைகள் நேரக்கட்டுப்பாடும் தலைப்பும் மாத்திரமாகத் தானே இருக்கப் போகிறது! பிள்ளை எவ்வாறு தான் உணர்ந்து கொண்டதை சபைக்கு வெளிப்படுத்துகிறது; மற்றும், அதைத் தான் எவ்வாறு உணர்ந்து கொண்டுள்ளது; அது குறித்த அவரின் முடிவு/ அபிப்பிராயம் என்னவாக இருக்கிறது போன்றவை தான் பரீட்சிக்கப்பட வேண்டும்.

  பெற்றோர் போட்டியின் போது தலையிடுவது நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மற்றுக் கருத்து இல்லை.

  மற்றும் தொழில்நுட்ப உதவி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று பிரதான பாடசாலையில் தொழில் நுட்பம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களை விட அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள்; மேலும் சிறந்த ஆழுமையோடு அவற்றைக் கையாளப் பழகியும் உள்ளார்கள்.

  அவை பாடமாக்கிப் பேசும் நம் பழைய வழக்கங்களில் இருந்து பலவிதங்களில் முன்னேற்றகரமானதாகவும் எளிதாக சபைக்கு புரியும் வகையில் மாணவருக்கு அதைப் பாவிக்க எளிமையாகவும்; தன்னம்பிக்கையை ஊட்ட வல்லதாகவும் இருக்கிறது...

  கரிசனையோடு கருத்தூன்றிப் படித்து பின்னூட்டம் தந்தமைக்கு மீண்டும் என் அன்பும் நன்றியும்.

  உங்கள் கருத்துக்கள் என்னையும் இந்தக் கட்டுரையையும் மீளவும் சரி பார்க்கவும் சமூகத்துக்கு சிறந்த பாதையைக் காட்டவும் நிச்சயம் உதவும்.

  ReplyDelete
 6. தமிழ்ப்போட்டிகள் இன்னமும் நம் தாயகத்தில் இருப்பதைப் போலவே இருக்கிறது என்பதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து வருந்துகிறேன். மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்பது காலப்போக்கில் மறந்துபோகும். சுய சிந்தனையும் செயற்பாடுமே என்றென்றும் நிலைத்திருக்கும். மாணவர்களை சுய சிந்தனையோடு எளிய வார்த்தைகளைக் கொண்டு கவிதைகள் எழுத ஊக்குவிக்கலாம். கட்டுரைகள் எழுத பயிற்றுவிக்கலாம். இது முன்னிலும் அவர்தம் திறமையை மேம்படுத்த உதவக்கூடும்.
  ஆஸ்திரேலியப் பள்ளிகள் குறித்த என் தொடரில் மாணவர்களின் பேச்சுத்திறன் பற்றி எழுதியதை இங்கேயும் பகிர விரும்புகிறேன்.
  \\ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வாரமொரு முறை show and tell என்ற வகுப்பு உண்டு. பிள்ளைகள் தங்கள் வகுப்பு மாணவர்களின் முன், தங்கள் கையில் வைத்திருக்கும் ஏதேனுமொரு பொருளைப்பற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பேச வேண்டும். அது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் பொம்மைகள் அல்லது விளையாட்டுப்பொருட்கள் அல்லது ஏதேனும் பரிசுப்பொருட்கள் இவற்றையே எடுத்துச் செல்ல விரும்புவர். அந்த வகுப்பின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளின் மேடைப்பயம், தயக்கம், கூச்ச சுபாவம் போன்றவற்றை நீக்குதலும், கற்பனைத்திறன் மற்றும் பேச்சுத்திறனை வளர்ப்பதும் ஆகும். சுயமாய் தாங்களே சிந்தித்து வார்த்தைகளைக் கோத்து வகைப்படுத்தி, சபையில் பேசும் கலையை சிறுவயதிலிருந்தே கொண்டுவரும் நல்ல முயற்சி அது. \\
  இப்படியான பேச்சுப்பயிற்சி வகுப்புகள் தமிழ் மாணவர்களுக்கும் அமைந்தால் அவர்களும் சுயமாகப் பேசவும் சிந்திக்கவுமான வாய்ப்புகள் உருவாகும். எந்தத் தலைப்பிலும் தயக்கமின்றிப் பேசக்கூடிய திறம் வளரும்.
  \\பேச்சுப்போட்டியின் போது 3 நடுவர்களில் இரு நடுவர்கள் மாணவர்கள் பேசுகின்ற போது பேசும் மாணவரைப் பார்க்காது தமக்கு வழங்கப்பட்ட தாளினையே முற்றுமுழுதாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.\\
  இது பெரிதும் தவிர்க்கப்படவேண்டியது. மாணவர்களின் பேச்சுத்திறன் மட்டுமல்லாது அவர்களுடைய உடல்மொழி, கண்களைப் பார்த்து பேசுதல், முகபாவம் அனைத்தும் நடுவர்களால் கவனத்திற்கொள்ளப்படவேண்டியது அவசியம். பள்ளிகளில் அதற்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. எதிரிலிருப்பவர்களின் கண்களை சந்திக்கும் துணிவற்று என்னதான் சிறப்பாகப் பேசினாலும் மதிப்பெண் குறைக்கப்படுகிறது.
  நல்ல பேச்சுவன்மை என்பது தான் நன்றாகப் பேசுவதில் மட்டுமல்ல, எதிரிலிருப்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுதலும், தன் பேச்சாலும் உடல்மொழியாலும் தன்பால் ஈர்த்து இறுதிவரை அவர்களை தன்வசம் வைத்திருப்பதுமாகும். அந்த வகையில் நம் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றே தோன்றுகிறது.
  சிந்திக்கத்தூண்டும் ஆழமான பதிவு. உள்ளிருக்கும் நோக்கம் உணரப்பட்டால் சீர்திருத்தங்கள் சாத்தியமே.

  ReplyDelete
 7. மிக்க நன்றி கீதா.
  மிக உபயோகமான உங்கள் பின்னூட்டம் இந்தப் பதிவின் நீட்சியாகவும் வாசிக்கப் படவேண்டும் என்பது என் ஆவல்.

  உங்கள் வருகைக்கும் சிரத்தையான உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க அன்பும் நன்றியும்.

  ReplyDelete
 8. சில உண்மைகளை சொல்லும் போது பிறர் மனம் புண்பட்டு விடுமோ என்று எல்லை மீறி அஞ்சுவது இன்று பெரும்பாலோரிடம் உள்ள சிக்கல்.அந்த தயக்கத்தில் சிதைவது உண்மைகளே.துணிவோடு தன் கருத்துக்களை வெளிப்படுத்திய மணிமேகலாவுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு. சாந்த மூர்த்தி அவர்களே!

  இப்படி நான் ‘அடித்துச்’ சொல்லி இருக்கக் கூடாதோ என்ற உறுத்தல் எனக்குச் சற்று உண்டு தான்.

  என்றாலும் தமிழ் போட்டிகளைச்
  செய்யும் ஏற்பாட்டாளர்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஒன்றைச் செய்யும் போது எவ்வளவு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் இல்லையா?

  செய்வது எதுவாக இருந்தாலும் அதில் ஒரு திருத்தமும், தெளிந்த பார்வையும், தூர நோக்கும், அதனைச் செவ்வனே செய்யும் ஆற்றலும் இருக்க வேண்டும்.

  இது தான் என் ஆதங்கம், கோபமும்...

  உங்கள் வருகைக்கும் சிரத்தையான இந்தப் பின்னூட்டத்திற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

  இந்த நிமிடம் வரை 1066 பேர் எந்தவித சொந்த விளம்பரங்களுமின்றி இந்தப் பதிவைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது....

  நாங்கள் கண்னகிக்குச் சிலை எழுப்பி,’அவள் அடங்கி இருக்கவேண்டிய இடத்தில் அடங்கி இருந்தாள்; பொங்கி எழ வேண்டிய இடத்தில் பொங்கி எழுந்தாள்’ என்று பேச்சுக்களை எழுதி மனனம் செய்யக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு 5 வயதுப் பெண் குழந்தை கண்ணகி பற்றிய நாடகத்தைப் பார்த்துவிட்டு தந்தையிடம், ‘ஏன் அவ அழுகிறா’ என்று கேட்டாளாம். தந்தை, ’அவள் கணவன் அவவை விட்டு விட்டு போய் விட்டார், அதனால் தான் அழுகிறாள்’ என்றாராம். அதற்கு அக் குழந்தை, ‘அதுக்கு அவ ஏன் அழ வேணும்? அவவும் வேற ஆரையும் தனக்கு பிடிச்ச மாதிரி பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாமே’ என்று கேட்டாளாம்.

  பாருங்கள் அவர்களின் சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை...

  ReplyDelete
 10. I used to be able to find good information from your
  content.

  ReplyDelete
 11. Thank you.

  I like to see a critical feedback too....They may have their own reason for their actions. I respect that'all coins have two sides'.

  It would be very beneficial if they can give their own point of view.

  But i did not receive any negative feed back...

  Anyway Thank you so much for your time & leave this feed back.

  ReplyDelete
 12. தமிழ்ப்போட்டிகள் தொடர்பான உங்களின் சில கருத்துக்களை முகம் தெரியாத நபர் ஒரு நண்பர் ஒரு குழுவினூடு பகிர்வு செய்திருந்ததை, முகநூலின் வழியாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தமிழோடு விளையாடியிருந்த உங்களின் பாங்கைக் கொண்டு அறியக் கூடியதாயிருந்தது. இளம் பெற்றோர்கள் பலரைக் கொண்ட ஒரு குழுவினூடு உங்களின் கருத்துப் பகிரப் பட்டிருந்தமையால், அது தமிழின் எதிர்காலத்தோடும் விளையாடி விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்னும் அச்சம் தமிழார்வலராக மட்டுமல்லாமல் ஒரு பெற்றோராகவும் இருக்கும் எனக்குள் உருவாகியது. உங்களின் புலமையும் ஆற்றலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதை விடுத்து, குற்றம் கூறுவதை மட்டுமே நோக்காகக் கொண்டிருந்தால் அது மிகவும் மனவருத்தத்துக்கு உரியது என்பதால் எனது கருத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன்.
  எனது இரு பிள்ளைகளும் கடந்த ஒன்பது ஆண்டு காலங்களாக இந்தத் தமிழ்ப்போட்டிகளில் ஒருவர் பின் ஒருவராக பங்கு பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வயதிலேயே மழலைத் தமிழ் மாறமுன்னர் நாம் சொல்லிக்கொடுத்ததை தனது சின்னக்கைகளையும் தலையையும் ஆட்டி, என் தாய்மொழியான அழகுத்தமிழ்மொழியில் பாப்பாப் பாடலை ஒப்புவித்தபோது அந்நிய மண்ணிலும் என் அன்னைத்தமிழ் வாழும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஊட்டி, என்னை அழகு பார்த்து ரசிக்க வைத்தவள் எனது அன்பு மகள். அது முடிந்ததும் வாய்மொழித் தொடர்பாற்றலில் காண்பிக்கப்பட்ட மாம்பழப்படத்தைப் பார்த்து, ஊருக்குச் சென்ற கதையையும் அம்மம்மா, அப்பப்பா ஆட்டுவிக்க மாமர ஊஞ்சலில் ஆடியதையும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு விதையை ஊன்றினால் மீண்டும் மரமாகும் என்ற உண்மையையும் சேர்த்துச் சொன்னபோது எனக்கே தெரியாத அந்தச் சம்பவத்தை அவளின் தமிழில் சொன்ன ஆற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன்.கேட்கப்போகும் கேள்விகள் எமக்கே தெரியாது என்பதால், நாங்கள் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கூட்டிச்செல்ல முடியாது. கேட்ட கேள்விகளுக்கு சின்னக் குழந்தைகள் தங்கள் அனுபவத்துடன் கற்பனையையும் கலந்து, தம் உள்ளத்தில் இருப்பதை கள்ளங்கபடமற்று அப்படியே பதிலாக்கும் அழகை ரசிப்பதற்காகவே முதற்போட்டியாளருடன் சென்று அமர்ந்திருந்து முடிவு வரை பார்த்து ரசிக்கும் பெற்றோர் எம்முள் அதிகம்.
  ஆங்கிலப்பாடசாலையில் ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்குத் தமது திறமைகளை வெளிக்காட்டக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசும் குழந்தைகளே முன்னால் சென்று பேசத்தயங்கும் போது எமது குழந்தைகள் அந்த மேடைப் பயமோ அல்லது பார்வையாளர் பற்றிய அச்சமோ இன்றி தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசும் போது அதற்கெல்லாம் அடிபோட்டுக் கொடுத்தது, சிறுவயதிலேயே பேசும் வாய்ப்பைக் கொடுத்த இப்படியான தமிழ்ப் போட்டிகள்தான் என்பதை எத்தனையோ பெற்றோர் பாராட்டிச் சொல்ல கேட்டது மட்டுமல்லாமல் நானும் கூட அதனை நிறையத் தடவைகள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
  தமிழ்மொழியில் கல்வி கற்று தமிழைச் சுவாசித்து தமிழோடு வளர்ந்த புலம் பெயர் பெற்றோர்களுக்குத் தமிழில் எழுதுவதோ அல்லது தம் குழந்தைகளைப் போட்டிக்கு தயார் படுத்துவதோ மிகவும் சிரமமாக இருக்காது. ஆனால் புலம் பெயர்ந்து இரண்டாவது சந்ததியினரான பல இளம் பெற்றோருக்குத் தம் குழந்தைகளுக்கு தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறையவே இருக்கிறது. ஆனால் தம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்குப் பேச முடியுமே தவிர எழுதவோ அல்லது சில கடினமான சொற்களின் பொருளையோ கூட விளங்கிக் கொள்ள முடியாதவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளால் தமக்கான பேச்சையோ, கவிதையயோ தாமாகவே தயார் செய்து கொள்ள முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த வெளிப்படையான உண்மை. இந்த நிலைமையில் பேச்சுக்கான ஆக்கத்தை வழங்காமல், தலைப்பை மட்டும் வழங்கினால் அது தமிழ் புலமை வாய்ந்த பெற்றோருக்கான போட்டிகளாகவே முடியுமே தவிர அது தமிழ்ப்புலமை இல்லாதவர்களுக்கானதாக நிச்சயமாக அமையாது. முடியாத பெற்றோர் குழந்தைகளுடன் தாமாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள். புலம் பெயர் மண்ணில் வருங்கால சந்ததியினருக்கு எமது தாய்மொழியைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையான நோக்கத்துடனும், தணியாத தாகத்துடனும் இயங்கி வரும் இப்படியான போட்டிகளுக்கு எந்த அர்த்தமுமே கிடைக்காமல் போய் விடுவது மட்டுமல்லாமல் தமிழின் இருக்கை பற்றிய பலரது கனவுகளும் கலைந்து போய் விடும்.

  ReplyDelete
 13. குழந்தைகள் தவழ்ந்து, எழுந்து நின்று, பின்னர்தான் நடக்கத் தொடங்க வேண்டும். அதற்கு முன் தாவிக் குதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதன் கால்கள்தான் நிரந்தரமாக ஒடிக்கப்படுமே தவிர ஆக்கபூர்வமான எந்த விளைவுகளும் பலனாகாது. மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது எவ்வளவுதான் பெற்றோர் சொல்லிக் கொடுத்தாலும் அதனை வெளிப்படுத்தும் பாங்கு குழந்தைக்குக் குழந்தை வேறுபடுவது அவர்களது தனிப்பட்ட ஆளுமையிலும், உள்வாங்கிக் கொள்ளும் தன்மையிலும் தான் தங்கியிருக்கிறது. இவை பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறதே தவிர, எந்த வகையிலும் முளையிலேயே கிள்ளி விடும் செயலைச் செய்வதில்லை என்பது ஒரு பெற்றோராக எனது கருத்து.
  பிள்ளைகள் வளர, எழுத்துக்கள் தெரிய வர அவர்களால் வாசிக்க முடியும் என்ற நிலையில் தான் அவர்களின் தமிழ் அறிவும் தமிழார்வமும் வளர்கின்றன. இந்த நிலையில் அவர்களின் தமிழ் புலமையை பரீட்சிக்கவும் அவர்களின் கற்பனை வளத்தையும் ஊக்குவிக்கும் வகையில் எழுத்துப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. செந்தமிழின் அழகைப் புரிய வைக்க பொய்யுரையாமை, நட்பு போன்ற வாழ்வின் அர்த்தத்தை சொல்லும் திருக்குறள் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. முத்தமிழில் ஒன்றான நாடகக்கலையையும் தமிழுடன் கலந்து தெவிட்டாமல் கொடுக்க தனி நபர் நடிப்புப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு அவர்களின் தமிழ் திறமைக்கேற்றாற் போன்று தலைப்புக் கொடுக்கப்பட்டு, 20 நிமிடங்களுள் தாமாகவே தயார் செய்து பேச வேண்டிய உடனடிப்பேச்சுப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பட்டிமன்ற தலைப்புக்கு ஏற்றாற் போன்று பேச்சைத் தயார் செய்தால் கூட, எதிரணியின் கருத்தைப் புரிந்து கொண்டு, அதற்கான எதிர்வாதம் செய்வது கூட அந்த நிமிடத் தயாரிப்புத்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. தாம் கற்ற தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இளைஞர்கள், இந்தப் போட்டிகளுக்குத் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்வதில் இருந்து இந்தப் போட்டிகள் அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
  நடுவர்களைப் பற்றிய உங்களின் கருத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதுடன் கடினமான இந்த தமிழ்ப்பணியை நடு நிலைமையுடனும் தமிழ் ஆர்வத்துடனும் பணியாற்றும் அனைத்து நடுவர்களையும் குற்றம் சாட்டுவதன் மூலம், அவர்கள் அனைவருமே அவமதிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதனைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவிப்பதன் மூலமோ அல்லது ஆலோசனைகளை வழங்குவதன் மூலமோ அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதுடன் அது தமிழன்னைக்கு எம்மாலான ஒரு சிறு பங்களிப்பாகவே இருக்கும் என்பது எனது கருத்து.
  சபையோரை விளித்துப் பேசத் தொடங்கும் அறிமுகஉரை கூடப் பெற்றோரால் தான் எழுதித் தரப்படுகிறது எனும் போது மீண்டும் இங்கே எழுத முடியாத அல்லது அந்தத் திறமையில்லாதவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடும். நடுவர்களுக்கான விதிமுறையில் அதற்காக எந்தப் புள்ளிகளும் மேலதிகமாக வழங்கப்பட மாட்டாது என்ற போதும், பிள்ளைகள் அழகுதமிழையும் சபையோரையும் ஆராதித்து தொடங்கும் போது ஆரம்பத்திலேயே நடுவர்களைத் தம் பக்கம் திசை திருப்பி விடுகிறார்கள் என்பதுடன் அது ஏதோவொரு வகையில் மாணவர்களின் இறுதிப்புள்ளியில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தான் சபையோரை விளிக்கும் உரையைக் கூட மாற்றவேண்டாம் என்ற அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
  ஊர் கூடித் தான் தேர் இழுத்தாக வேண்டும். பிள்ளைகளுக்கு தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தி சந்ததிகள் தாண்டியும் தமிழ் மொழியை இங்கு வாழ வைக்க வேண்டும் என்பது எமது பேரவா. தமிழார்வலர்களினது பங்களிப்பின்றி, அது அத்தனை இலகுவில் ஈடேறப்போவதில்லை. பின்னூட்டல்களும் ஆக்கபூர்வமான கருத்துகளும் தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமே தவிர அதில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களை நோகடிக்கக் கூடாது. அவை சம்பந்தப்பட்டவர்களைச் சரியாகச் சென்றடையுமாயின், அவர்களும் அதை நிச்சயமாக உள்வாங்கிக் கொள்வார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பரந்து பட்டவர்களைச் சென்றடையும் வகையில் பரப்பப்படும் இப்படியான ஒருதலைப் பட்சமான கருத்துக்கள் தமிழைக் கற்பிக்க நினைக்கும் பெற்றோரின் எண்ணத்தில் ஊற்றப்பட்ட கொதி நீராகவே அமையும் என்பது எம் போன்றவர்களின் வேதனையான கருத்தாகும். இப்போதுள்ள தொழினுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நச்சுக் கருத்துக்கள் பல்வேறு நபர்களையும் நொடிப்பொழுதில் சென்றடைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நீங்கள் அறியாததல்ல. மாற்று எண்ணங்களைக் களைந்து, தமிழுக்காக என்ற ஒரே உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்ப்புலமையாளர்கள் அனைவரும் இணைந்து கரங் கொடுப்பார்களானால் அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையளிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

  ReplyDelete
 14. குழந்தைகள் தவழ்ந்து, எழுந்து நின்று, பின்னர்தான் நடக்கத் தொடங்க வேண்டும். அதற்கு முன் தாவிக் குதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதன் கால்கள்தான் நிரந்தரமாக ஒடிக்கப்படுமே தவிர ஆக்கபூர்வமான எந்த விளைவுகளும் பலனாகாது. மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது எவ்வளவுதான் பெற்றோர் சொல்லிக் கொடுத்தாலும் அதனை வெளிப்படுத்தும் பாங்கு குழந்தைக்குக் குழந்தை வேறுபடுவது அவர்களது தனிப்பட்ட ஆளுமையிலும், உள்வாங்கிக் கொள்ளும் தன்மையிலும் தான் தங்கியிருக்கிறது. இவை பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறதே தவிர, எந்த வகையிலும் முளையிலேயே கிள்ளி விடும் செயலைச் செய்வதில்லை என்பது ஒரு பெற்றோராக எனது கருத்து.
  பிள்ளைகள் வளர, எழுத்துக்கள் தெரிய வர அவர்களால் வாசிக்க முடியும் என்ற நிலையில் தான் அவர்களின் தமிழ் அறிவும் தமிழார்வமும் வளர்கின்றன. இந்த நிலையில் அவர்களின் தமிழ் புலமையை பரீட்சிக்கவும் அவர்களின் கற்பனை வளத்தையும் ஊக்குவிக்கும் வகையில் எழுத்துப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. செந்தமிழின் அழகைப் புரிய வைக்க பொய்யுரையாமை, நட்பு போன்ற வாழ்வின் அர்த்தத்தை சொல்லும் திருக்குறள் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. முத்தமிழில் ஒன்றான நாடகக்கலையையும் தமிழுடன் கலந்து தெவிட்டாமல் கொடுக்க தனி நபர் நடிப்புப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு அவர்களின் தமிழ் திறமைக்கேற்றாற் போன்று தலைப்புக் கொடுக்கப்பட்டு, 20 நிமிடங்களுள் தாமாகவே தயார் செய்து பேச வேண்டிய உடனடிப்பேச்சுப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பட்டிமன்ற தலைப்புக்கு ஏற்றாற் போன்று பேச்சைத் தயார் செய்தால் கூட, எதிரணியின் கருத்தைப் புரிந்து கொண்டு, அதற்கான எதிர்வாதம் செய்வது கூட அந்த நிமிடத் தயாரிப்புத்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. தாம் கற்ற தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இளைஞர்கள், இந்தப் போட்டிகளுக்குத் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்வதில் இருந்து இந்தப் போட்டிகள் அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
  நடுவர்களைப் பற்றிய உங்களின் கருத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதுடன் கடினமான இந்த தமிழ்ப்பணியை நடு நிலைமையுடனும் தமிழ் ஆர்வத்துடனும் பணியாற்றும் அனைத்து நடுவர்களையும் குற்றம் சாட்டுவதன் மூலம், அவர்கள் அனைவருமே அவமதிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதனைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவிப்பதன் மூலமோ அல்லது ஆலோசனைகளை வழங்குவதன் மூலமோ அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதுடன் அது தமிழன்னைக்கு எம்மாலான ஒரு சிறு பங்களிப்பாகவே இருக்கும் என்பது எனது கருத்து.
  சபையோரை விளித்துப் பேசத் தொடங்கும் அறிமுகஉரை கூடப் பெற்றோரால் தான் எழுதித் தரப்படுகிறது எனும் போது மீண்டும் இங்கே எழுத முடியாத அல்லது அந்தத் திறமையில்லாதவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடும். நடுவர்களுக்கான விதிமுறையில் அதற்காக எந்தப் புள்ளிகளும் மேலதிகமாக வழங்கப்பட மாட்டாது என்ற போதும், பிள்ளைகள் அழகுதமிழையும் சபையோரையும் ஆராதித்து தொடங்கும் போது ஆரம்பத்திலேயே நடுவர்களைத் தம் பக்கம் திசை திருப்பி விடுகிறார்கள் என்பதுடன் அது ஏதோவொரு வகையில் மாணவர்களின் இறுதிப்புள்ளியில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தான் சபையோரை விளிக்கும் உரையைக் கூட மாற்றவேண்டாம் என்ற அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
  ஊர் கூடித் தான் தேர் இழுத்தாக வேண்டும். பிள்ளைகளுக்கு தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தி சந்ததிகள் தாண்டியும் தமிழ் மொழியை இங்கு வாழ வைக்க வேண்டும் என்பது எமது பேரவா. தமிழார்வலர்களினது பங்களிப்பின்றி, அது அத்தனை இலகுவில் ஈடேறப்போவதில்லை. பின்னூட்டல்களும் ஆக்கபூர்வமான கருத்துகளும் தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமே தவிர அதில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களை நோகடிக்கக் கூடாது. அவை சம்பந்தப்பட்டவர்களைச் சரியாகச் சென்றடையுமாயின், அவர்களும் அதை நிச்சயமாக உள்வாங்கிக் கொள்வார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பரந்து பட்டவர்களைச் சென்றடையும் வகையில் பரப்பப்படும் இப்படியான ஒருதலைப் பட்சமான கருத்துக்கள் தமிழைக் கற்பிக்க நினைக்கும் பெற்றோரின் எண்ணத்தில் ஊற்றப்பட்ட கொதி நீராகவே அமையும் என்பது எம் போன்றவர்களின் வேதனையான கருத்தாகும். இப்போதுள்ள தொழினுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நச்சுக் கருத்துக்கள் பல்வேறு நபர்களையும் நொடிப்பொழுதில் சென்றடைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நீங்கள் அறியாததல்ல. மாற்று எண்ணங்களைக் களைந்து, தமிழுக்காக என்ற ஒரே உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்ப்புலமையாளர்கள் அனைவரும் இணைந்து கரங் கொடுப்பார்களானால் அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையளிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

  ReplyDelete
 15. முதலில் உங்களுடய விரிவான கருத்துக்களுக்கு நன்றி.

  இவற்றின் சாராம்சம்
  1.நான் எழுதிய பதிவின் கருத்து தமிழின் எதிர்காலத்தோடு விளையாடி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
  2.குற்றம் கூறுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறது.
  3.ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பப் பள்ளியில் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் இல்லாத போது இப் பேச்சுப் போட்டிகளே பிள்ளைகளை நம்பிக்கையோடு பேசக் கற்றுக் கொடுத்துள்ளன.
  4.இரண்டாம் தலைமுறைப் பெற்றோருக்கு தமிழில் பேச்சினைத் தயார் படுத்துவது கஸ்ரமாக இருக்கும்.
  5.இளைஞர்கள் யுவதிகளிடம் இருக்கும் திறமை இப்போட்டிகளில் பங்குபற்றியதின் மூலமே வந்திருக்கிறது.
  6.அனைத்து நடுவர்களையும் குற்றம் சாட்டி அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். ஆலோசனைகளைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்க வேண்டும்.
  7.மனனம் செய்து ஒப்புவிக்கும் போது பிள்ளையின் ஆழுமையும் தன்னம்பிக்கையும் வளர்கிறது.
  8.சபையோரை விழிப்பதில் ஏற்படும் மாற்றம் அவர்களின் புள்ளியில் மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.
  9.ஒருதலைப்பட்சமாகப் பரப்பப்படும் இக் கருத்துக்கள் நம்மை நோகடிக்கின்றன.

  10.தொழில்நுட்பங்கள் நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்றன; அதனால் மாற்று எண்ணங்களைக் களைய வேண்டும்.

  உங்களுடய கருத்தினை நான் சரியாக விளங்கிக் கொண்டுள்ளேனா என்பதை அறிவதற்காகவும் என் அபிப்பிராயத்தைத் தருவதற்காகவும் அதனை கேள்விகளாகச் சுருக்கி இருக்கிறேன். நான் ஏதேனும் தவறாக விளங்கி இருந்தால் தயவு கூர்ந்து அறியத் தாருங்கள். பதில் தரத் தயாராக இருக்கிறேன். பதில்களை வரிசைப்படி தருகிறேன். மீண்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மனந்திரந்த உரையாடல்கள் வழியாகவே நாம் சரியான இலக்கினை சென்றடையலாம்.

  ReplyDelete
 16. 1.தமிழின் எதிர்காலத்தோடு விளையாடி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது:

  எதனை அடிப்படையாக வைத்து இந்தக் கருத்தினைச் சொல்கிறீர்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை சகோதரி. நாங்கள் மிக ஆரம்பகாலத்தில் மனனம் செய்து வாய்மொழியாக அடுத்த சந்ததிக்கு வாழ்வனுபவங்களைக் கையளித்தோம். பிறகு ஏட்டில் எழுதினோம். பிறகு திண்ணைப்பள்ளிகள் போய் பாடசாலைகள் பிறந்த போது சிலேட்டில் எழுதினோம். பின்னர் தாளில் எழுதினோம். பிறகு தட்டச்சத் தொடங்கினோம். இப்போது தொழில் நுட்பம் இன்னும் வளர்ந்து படங்கள், வீடியோக்கள் மூலமாக / powerpoint இல் இன்னும் சிறப்பாக மொழி புரியாதவர்களும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக தகவல்களைப் பரிமாறுகிறோம்.

  நான் சொல்வதெல்லாம் பிள்ளைகளுக்கு தெரிந்ததாகவும் இலகுவாகவும் கிடைக்கும் வளங்களைப் பயன் படுத்தி உச்ச பயனை அடையலாம் என்பது தான். இதில் எங்கே சகோதரி தமிழின் எதிர்காலத்தோடு விளையாடி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது?

  மாற்றங்களுக்கேற்ப நாம் மாறாவிடின் மாத்திரமே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

  ReplyDelete
 17. 2.குற்றம் கூறுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறது:

  எவர் ஒருவரும் தனிப்பட்ட முறையில் எதையும் மற்றவருக்கு பாதிப்பில்லாத வகையில் செய்து விட்டுப் போகலாம். எனக்கு அதில் எந்த விதமான அக்கறையும் கிடையாது. ஆனால், எவர் ஒருவர் சமூகத்துக்கும் தமிழுக்கும் நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பொறுப்பற்ற விதமாக நடந்து கொண்டாலும் என் எழுத்துக்கள் அதைத் தட்டிக் கேட்கவே செய்யும்.

  சமூகத்துக்காக ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது அதன் சரி பிழைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதல்லவோ முறை! அதை விடுத்து ‘நீ யார் என்னை குற்றம் சொல்ல’ என்று கேட்பது சர்வாதிகாரமெல்லோ? உங்கள் வீட்டு குடும்பப் பிரச்சினையிலா நான் கேள்வி கேட்டேன்? பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் கண்டேன். நானும் ஒரு சமூக ஆர்வலராக நீதி கேட்டேன்! இனியும் கேட்பேன். அதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ’ரெளத்ரம் பழகு’! சகோதரி.பிழை கண்டால் பொங்கி எழு!

  ReplyDelete
  Replies
  1. How can I contact with you? இதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்!. இந்த தவறுகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது! இது பற்றிய உங்கள் எழுத்துகள் தொடர வேண்டும்! தவறுகளை தட்டி கேட்க வேண்டும்!

   Delete
 18. 3. இப்போட்டிகள் தன்னம்பிக்கையோடு பேசக் கற்றுக் கொடுத்திருக்கின்றன:

  எப்படி? எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு குட்டியா ஒரு உண்மைக் கதை சொல்லுறன்..
  3 வயசு குழந்தை. அப்பா அவளுக்கு ஞானசம்பந்தர் அழுத போது உமா தேவியார் வந்து பாலூட்டினார் என்றும்; சம்பந்தர் அதனால் தோடுடய செவியன் என்று தேவாரம் பாடினார் என்றும் சொல்லிக் கொடுத்தார். பிள்ளை கேட்டாளாம். ‘உமாதேவியார் தானே பால் கொடுத்தார்! அவர் ஏன் சிவபெருமானைப் பாடினார்?’

  நானும் நீங்களும் எம் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை கேட்டு ஏன் என்று கேள்வி கேட்காமல் வளர்ந்தோம். ஆனால் இன்றய பிள்ளைகளின் உலகமும் சிந்திக்கும் ஆற்றலும் வேற லெவல். அதனைக் குறைவாக எடைபோட்டு விடாதீர்கள்.

  எந்த விதத்தில் நீங்கள் தயாரித்துக் கொடுக்கும் பேச்சுப்போட்டிகள் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை....

  ReplyDelete
 19. 4. இரண்டாம் தலைமுறை பெற்ரோருக்கு தமிழில் பேச்சினைத் தயார் படுத்துவது கஸ்ரமாக இருக்கும்:
  உண்மைதான். அவர்கள் அதற்கு மாற்று வழியைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் தொழில் நுட்ப அறிவை அவர்கள் அதற்குப் பயன் படுத்த வேண்டும். பாடசாலைக்குப் போகும் பிள்ளைக்கு அது எல்லாம் இலகுவாகக் கைவரும். பாடசாலையில் கொடுக்கப்படும் assignment களைப் பிள்ளைகள் net இல் தான் தேடிக் கண்டடைகிறார்கள். அதற்கெல்லாம் பெற்றோர்கள் உதவுவதில்லை. பிள்ளைகளின் ஆராயும் அறிவும் முடிவெடுக்கும் தெளிவும் அதனால் வளரும்.

  ReplyDelete
 20. 5. sorry to say. அது பேச்சுப் போட்டியால் வளரவில்லை; மாறாக அது தமிழ் பாடசாலைகளாலும் சினிமாக்களாலும் அதில் வரும் பாடல்களாலும் மேலும், கம்பன் கழகம் போன்ற சிறப்பான தன்னலமற்ற இலக்கியப் பணிகளினாலும் வளர்கிறது.

  ReplyDelete
 21. 6. நான் நிச்சயமாக ஒட்டுமொத்த நடுவர்களையும் குற்றம் சாட்டவில்லை; அவ்வாறு அது எந்த இடத்திலும் தொனிக்கவில்லை என்பது என் நம்பிக்கை. அதே நேரம் தனிப்பட்ட முறையில் ஒருவரைச் சுட்டிக் காட்டுவதும் நாகரிகமில்லை என்பது என் கருத்து. அதனை நான் பகீரங்கமாக ஒரு போதும் செய்யமாட்டேன்.

  இதனை எல்லோரும் வாசித்திருப்பார்கள்; நிச்சயமாக! இப்போது வரை 1456 பேர் இந்தப் பதிவை வாசித்திருக்கிறார்கள். ‘தொப்பி அளவானவர்கள்’ அதனை நிச்சயம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

  ஆனால், நிச்சயமாக நான் எல்லா நடுவர்களையும் குற்றம் சாட்டவில்லை. சிறந்த நடுவர்கள் இருக்கவே செய்கிறார்கள்!

  ReplyDelete
 22. 7. எப்படி? எந்த வகையில்?

  ReplyDelete
 23. 8. பேச்சின் வீரியமும் வசியமும் அங்கிருந்து தொடங்குகிறது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தனித்தன்மை/ தனி அடையாளம்/ தனித்திறமையின் ஆரம்பம் அது!

  ReplyDelete
 24. 9. உங்களை அது நோகடித்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். நோகடித்ததற்காக என்னை மன்னியுங்கள்.

  என்னுடய சொற்கள் சில சாட்டையாக அமைந்து விட்டது என்னவோ உண்மை தான். அது நான் சார்ந்த சமூகத்தின் மீதும் நம் எதிர்காலக் குழந்தைகள் மீதும் ’சிலர்’ பொறுப்பற்ற தனமாக நடந்ததன் எதிர்வினையாகும். இனி அவ்வாறு நடக்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் அதில் உண்டு.

  இருந்த போதும், என்னை மன்னித்தருள்க!

  ReplyDelete
 25. 10.உங்களுக்கு நல்வாழ்த்துக்களைச் சொல்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

  உங்கள் கருத்துக்களுக்கு இயன்றவரை என் கருத்துக்களைத் தந்திருக்கிறேன் என நம்புகிறேன். நான் ஏதேனும் தவறாக விளங்கி பிழையான தகவல்களைத் தந்திருந்தால் மீண்டும் தயவு கூர்ந்து வாருங்கள். உரையாடுவதன் மூலமும் கருத்துக்களைப் பரிமாறுவதன் மூலமுமே நான் சரியான இலக்கினை அடைய முடியும்.

  உங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் என் நன்றி.

  ReplyDelete
 26. மீண்டும் உங்கள் 4 வது கருத்துக்கு வருகிறேன். SBS வைக்கிற; தற்போது நடந்து கொண்டிருக்கிற மொழி அறிவுப்போட்டி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் மனனம் செய்து ஒப்புவிக்க போட்டி வைக்கவில்லை. சிறுவயதுப் பிள்ளைகளுக்கு படம் வரைந்து அனுப்பக் கோருகிறார்கள். அந்தந்த வயதுப் பிள்ளையின் சைக்கோலஜி தெரிந்து; ஆழுமை புரிந்து அதற்கேற்ப வைக்கிற போட்டி அது!

  நான் சொல்வதெல்லாம் கண்ணைத் திறந்து வெளியே பாருங்கள்! Think out of the bix!

  ReplyDelete
 27. எனது பதிவின் உட்பொருளையும் உண்மையான ஆதங்கத்தையும் புரிந்து கொண்டு பதிலளித்த உங்கள் பண்புக்கு முதலில் எனது நன்றிகள்.
  யாருடைய மனதையும் புண்படுத்தாமலும், வரம்பெல்லையைத் தாண்டாத வகையிலும் ஆரோக்கியமான கருத்துகளை, சமூகத்துக்கு நலம் தரக்கூடிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தீங்குமில்லை என்ற கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
  ஆனாலும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தையால் தனக்கான பேச்சை ஒரு பெரியவரின் உதவியில்லாமல் தொழில் நுட்ப உதவியின் மூலம் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்துடன் பேச்சுக்கான மதிப்பீட்டை வழங்கும் போது, பேச்சின் உள்ளடக்கமும் தரமும் வேறுபட்ட நிலையில் அதை ஒரே தராசில் வைத்து தரவரிசையைத் தீர்மானிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
  தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் இங்கு ஒரே நோக்கம். வேறு திறமைகளான ஓவியப்போட்டி போன்றன எந்த வகையிலும் மொழி வளர்ச்சிக்கு உதவாது என்பது எனது கருத்து. கருத்தை வாசித்துப் புரிந்து கொண்டு அதற்கான படம் வரைவது என்றால் கூட அதற்கு ஒரு வயது எல்லை வேண்டுமல்லவா? நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கும் போது மூன்று வயதுக் குழந்தையின் தமிழ் உச்சரிப்பையும் அதன் நாவளத்தையும் சிறுவயதிலேயே எம்மால் சீராக்கிக் கொள்ள முடியும் – தமிழ் மொழியின் அழகே ல. ள, ழ தான். அதை ஐந்திலே வளைக்க முயற்சி எடுக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? இப்போது பெரியோரான நாமே அவற்றைச் சரியாகப் பாவிக்க முடியாமல் தடுமாறுகிறோம்.
  எப்போதும் எமது பிள்ளைகளே திறமையாகச் செய்துள்ளார்கள் அல்லது எம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளைகளே திறமையாகச் செய்துள்ளார்கள் என்பது எப்போதும் எமது எண்ணம். சில வேளைகளில் நடுவரினது தீர்ப்பு பிழையாக இருக்கலாம், ஆனால் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதாலும், வாழ்க்கைக்கு பெரிதும் தேவையான பாடமான வெற்றி தோல்விகளைச் சமனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலும் அதை மதித்து ஏற்றுக் கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன. தேவையான கருத்துக்களைச் சரியான சமயங்களில் உரியவர்களிடம் சொல்வதன் மூலம் அந்தத் தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்த்துக் கொள்ளலாமல்லவா?
  நீங்கள் சொல்வதைப் போல சினிமாவால் தமிழ் வளர்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், எமது சமூகம் எங்கு நோக்கிப் போகின்றது என்ற கேள்வி என்னுள் எழுகின்றது. சிறுவர்கள் பார்க்கக் கூடியதான படங்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன? அத்துடன் எல்லா மாநிலத்திலும் கம்பன் கழகம் போன்ற அமைப்புக்கள் இயங்குவதில்லை. இயங்குகின்ற அமைப்புகளும், பெரியவர்களுக்கும், தமிழ் புலமை வாய்ந்த சிறுவர்களுக்கும் மட்டுமே களம் அமைத்துக் கொடுக்கின்றனவே தவிர எல்லோரையும் இணைத்துக் கொள்ளவில்லை என்பது எனது கருத்து. எனவே தம் குடும்ப நேரத்தை ஒதுக்கி தமிழ் வளர்ச்சிக்காக உழைப்பவர்களைத் தட்டிக் கொடுப்போம். தவறாயின் தட்டியும் கேட்போம். அழிப்பது எப்போதுமே எளிது. அந்த வரலாற்றுத் தவறுகள் எமது சமுதாயத்தில் மீண்டும் நிகழ்ந்து விட வேண்டாமே.
  மீண்டும் உங்கள் பதிவுக்கும் பதிலுக்கும் நன்றி. உங்கள் புலமையை எங்கள் மொழியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு முடிக்கின்றேன்.

  ReplyDelete
 28. உடனடியான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.அன்பும்.
  1.’ஒரு பிள்ளைக்கு பெரியவர்களின் உதவி இல்லாமல் பேச்சைத் தயாரிப்பது கடினம்’ என்று கூறி இருந்தீர்கள். உண்மை தான். அவற்றைத் தெரிந்தவர்களிடம்/ பெற்றோரிடம்/ தமிழ் பாடசாலையில் / மற்றும் தானாகத் தேடிக் கண்டடையட்டும். நான் சொல்வதெல்லாம் தானாகக் கண்டடைந்து, சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, சரிபிழைகளை அறிந்து தன் சொந்த முடிவுகளுக்கு அவர்கள் வரட்டும். கேள்விகல் கேட்கட்டும். அவர்கள் சிந்தனைக்கு நாம் இடம் கொடுக்க வேண்டுமே தவிர நம் சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்கக் கூடாது. நம் ’முடிந்த முடிபுகள்’ நம்முடய அபிப்பிராயங்கள் மட்டுமே! நம் முடிவுகளை நாம் அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறத்திற்கு / முடிவெடுக்கும் ஆற்றலுக்கு / தேடுகைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறோம் என்பது தான் என் கருத்தின் சாராம்சம்.

  ReplyDelete
 29. 2.’பேச்சின் தரமும் சாராம்சமும் வேறுபட்ட தரத்தில் இருக்கும் போது அதற்கு எப்படி தீர்ப்பினை வழங்க முடியும்?’

  அதற்குத் தான் புலமை வாய்ந்த நடுவர்கள் தேவை என்று கூறி இருந்தேன். பிள்ளைகள் கொண்டுவரும் கருத்துக்களையும் சாராம்சங்களையும் கேட்டு சீர்தூக்கிப் பார்த்து, முடிவுகளைச் சொல்ல, அதை விட மேலான அறிவும் ஆற்றலும், புலமையும், பக்குவமும் கொண்ட புலமையாளர்கள் தேவை.

  அதில் நமக்குப் பற்ராக்குறை நிலவுகிறது; மேலும் நல்ல சில புலமையாளர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்;அவர்கள் இவற்றுக்கு அழைக்கப்படுவதில்லை.

  ReplyDelete
 30. 3. ’தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம்’
  இல்லை சகோதரி. நாம் மொழியையும் அது தாங்கி நிற்கிற பண்பாட்டையும் அடுத்த சந்ததிக்குக் அதன் அத்தனை உன்னதங்களோடும் விழுமியங்களோடும் கையளிக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.

  ஒரு தமிழ் குழந்தை தான் உன்னதமான தமிழ் பண்பாட்டுக்கு உரியவன் என்பதை தன் நடை உடை பாவனை; சொல் செயல் மற்றும் வாழ்வு முறை மூலமும்; மேலும், தான் தனித்திருக்கும் போதும் தன் குடும்ப உறவுகளோடு சேர்ந்திருக்கும் போதும் ஏனைய இனங்களோடு சேர்ந்திருக்கும் போதும் வெளிப்படும் விதமாகவும் ஒரு ஆளுமை உள்ள; நான் தமிழன் என்று பெருமை கொள்ளும் விதமாக அதன் ஆழ அகலங்கள் அறிந்த குழந்தையாக அவனை வளர்த்தெடுத்து விட வேண்டும். அது தான் நோக்கம்.

  ReplyDelete
 31. 4. ’சினிமாவால் தமிழ் வளர்கிறது’ - என்று சொன்னேன்.

  ஆம் சொன்னேன். ஆனால் அது சரி என்று ஒரு போதும் சொல்லவில்லை.

  விருப்பமோ விருப்பமில்லையோ அது நடக்கிறது. அந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் அவ்வாறு நடக்கிறது தெரியுமா? அதன் காட்சி ஊடகம்; பேச்சு மொழி நடை,கவர்ச்சிகரமான தோற்றங்களும் கதைகளும்; ஆடலுடன் பாடல்.. இவைகள் தான். மேலும் இலகுவான பொழுது போக்காக அது அமைந்து விடுவது; எங்கும் எப்போதும் பார்த்துவிட கூடிய அதன் இலகுத்தன்மை.

  இதனால் தான் தொழில் நுட்பங்களைப் பாவித்து நாமும் அந்த உத்தியினூடு தமிழைக் கவர்ச்சியாகக் கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  கடந்த வார இறுதியில் பல்கலைக்கழக தமிழ் சங்கம் ஒன்றின் தமிழ் விழா ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அது, முழுக்க முழுக்க சினிமா செல்வாக்குக்கு உட்பட்ட முழு திரைப்படப்பாணியிலான கதையும் ஆடலும் பாடலும் கொண்ட நிகழ்ச்சியாகவே இருந்தது. செல்வாக்கு எங்குவரை செல்கிறது பாருங்கள்!

  அவர்கள் தமிழை அழகாக உச்சரித்தார்கள்; பேசினார்கள்; சேர்த்த பணத்தை தங்கள் சகோதர உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்; அது சிறந்ததொரு வேறு கதை.

  மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகள் அதில் எந்தவிதத்திலும் பங்களிப்புச் செலுத்தி இருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் இவ்வாறு நிகழும் போட்டிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதனைச் சரியாகச் செய்வதன் மூலம் சிரப்பான காத்திரமான உள்ளடக்கங்களை பிள்ளைகளுக்கு வழங்கலாம். ஆனால் அதில் ஒரு நேர்மை அவசியம்! பொறுப்புணர்வு மிக அவசியம்!!தூரநோக்கு மிக மிகத் தேவை!!

  ReplyDelete
 32. 5.’வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும்’

  அது நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் பட்சத்தில் மாத்திரம்!

  மற்றும் சரியான புலமையாளர்களால் சரியான முறையில் வழங்கப்படும் போதும் மாத்திரமே!!

  நான் ஒரு மூன்றாம் நபராகவே பார்க்கச் சென்றிருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியான பதில். இங்கு நடைபெறும் போட்டிகளுக்கு தமிழ்ப்புலமை மிக்க நடுவர்கள் எல்லா நேரமும் இருப்பதில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில் அழைக்கப்படும் நடுவர்களால் தவறான முடிவுகள் வழங்கப்படுகிறது. அதனை தட்டி கேட்கும் போது உரிய பதில்களும் கிடைப்பதில்லை என்பது மனவருத்தத்திற்குரியது!

   Delete
 33. 6. /தேவையான கருத்துக்களைச் சரியான சமயங்களில் உரியவர்களிடம் சொல்வதன் மூலம் அந்தத் தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்த்துக் கொள்ளலாமல்லவா?/

  செய்தாகி விட்டது சகோதரி. முதலில் செய்தது அது தான்.

  அதே நேரம் சமூகத்திற்கு அறியச் செய்ய வேண்டிய அவசியமும் இருந்தது.

  ReplyDelete
 34. மிக்க நன்றி வனிதா!
  தமிழால் இணைந்திருப்போம்!!

  ReplyDelete
 35. ருக்மணிOctober 23, 2022 at 12:17 PM

  2018ல் தங்கள் பதிவை வாசித்து மனதிற்குள் பாராட்டி பலருக்கு பகிர்ந்த நான் இன்று 2022ல் மீண்டும் வாசித்து கருத்து பதிவிட வேண்டிய ஒரு மனோ நிலை ்அல்லது ஆதங்கத்தில் உள்ளேன். ஆம் அண்மையில் நடந்து முடிந்த தமிழ் ஊக்குவிப்பு தேசிய மட்ட போட்டி முடிவுகளால் நேரடியாக எனது குடும்பமும் என்னை சார்ந்வர்களும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டோம். இந்த போட்டிகளில் கலந்து கொள்வது இது முதற்தடவை அல்ல எமக்கு. உங்கள் பதிவு நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. தகுதியற்ற நடுவர்களின் தவறான தீர்ப்பினால் மிக திறமையான தகுதியான குழந்தை புறக்கணிக்கப்பட்டது மிக வேதனைக்குரியது. அவர்களின் விதிமுறைகளுக்குட்பட்டு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உச்சரிப்பு தெளிவு சிரித்தமுகத்துடன் முக பாவனைகளுடன் confident ஆக பேசியது மட்டுமல்லாது பார்வையாளர்கள் பங்குபற்றியவர்கள் என அனைவராலும் பாராட்டை பெற்று முதலிடத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட குழந்தை முதல் மூன்று இடத்திற்குள் கூட வராமல் போனது மிக ஏமாற்றமளித்தது. மாறாக தவறாக பேசிய பிள்ளைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது நடுவர்கள் மீதான நம்பகத்தன்மை மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கு தீர்வுதான் என்ன? மிக தகுதியான பிள்ளைக்கு முதல் மூன்று இடங்களும் வழங்கப்படாத இடத்து அதற்கான சரியான காரணம் கேட்கப்பட்டது, அதாவது நடுவர்கால் எழுதப்படும் feedbacks, comets. இதுவரை வழங்கப்படவில்லை! இந்த குழந்தை என்ன தவறு விட்டது? எங்கே திருத்தப்பட வேண்டும்? என தெரிந்தால் தான் எதிர்காலத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆனால் சம்பந்தப்பட்வர்களால் சரியான பதில் வரங்கப்படாமல் மழுப்பலான பதில்கள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் தங்களை தாங்கள் நிறுவ முற்பட்டது விசனத்திற்குரியது!. இது போல் தொடருமானால் எதிர்கால நம் சந்ததியினரின் நிலை என்ன?

  ReplyDelete
 36. வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும்’

  அது நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் பட்சத்தில் மாத்திரம்!

  மற்றும் சரியான புலமையாளர்களால் சரியான முறையில் வழங்கப்படும் போதும் மாத்திரமே!
  மிகச்சரி👌

  ReplyDelete
 37. Same issues even now 😞

  ReplyDelete
 38. சமூகத்துக்காக ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது அதன் சரி பிழைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதல்லவோ முறை! அதை விடுத்து ‘நீ யார் என்னை குற்றம் சொல்ல’ என்று கேட்பது சர்வாதிகாரமெல்லோ? உங்கள் வீட்டு குடும்பப் பிரச்சினையிலா நான் கேள்வி கேட்டேன்? பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் கண்டேன். நானும் ஒரு சமூக ஆர்வலராக நீதி கேட்டேன்! இனியும் கேட்பேன். அதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ’ரெளத்ரம் பழகு’! சகோதரி.பிழை கண்டால் பொங்கி எழு!

  ReplyDelete
 39. வணக்கம் சகோதரிக்கும் ஏனைய கருத்துரைத்தவர்களுக்கும். உங்கள் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில குழறுபடிகள் நடந்திருப்பதை நானும் அறிந்திருந்தேன். என்ன செய்யலாம் என்ற கேள்விக்குத் தான் பதில் இல்லை.
  எங்கள் பிள்ளைகள் எப்படிச் செய்தார்கள் என்பது நமக்குத் தெரியும் அல்லவா? அந்த மனநிறைவு நமக்கு இருக்கட்டும். அது போதும்!
  வெளியுலகு கொடுக்கும் விருதுகளின் ஆயுள் சொற்பம். சொந்த மனநிறைவொன்றே சொர்க்கம்!!
  விட்டுத் தள்ளுங்கள் சகோதரி! ஒரு பெரிய விரிந்த உலகு நம் பிள்ளைகளுக்கு ’வெளியே’ காத்திருக்கிறது. உண்மையும் திறமையும் ஒருநாள் வெல்லும். அதனை யாரும் தடுத்து வைக்க முடியாது!!
  ’நீ நதி போல ஓடிக்கொண்டிரு’

  ReplyDelete