Wednesday, April 29, 2020

கவிதை யாதெனில்...


கவிதை ஒரு சங்கீதம்
கவிதை ஒரு முரசொலி
கவிதை ஒரு பீரங்கி
பூ அம்பு
காலம் தீட்டும் ஓவியம்
இருட்டின் கண்
சூரியச் சிறகு.

உணர்வுகளின் சிரஞ்சீவிதம்
உயிரின் வியாபகம்
ஒரு குழந்தையின் அழுகுரல்
ஊமை தேக்கி வைத்த சொற்தொகுதி!.
மேலும் அது ஒரு பெருமூச்சு.

கவிஞனுக்கோ அது
துன்பத்தைக் கடக்கும் படகு
அவ்வப்போது
பாரத்தை இறக்கி வைக்கும்
சுமைதாங்கி
மேலும்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டை
சிலநேரம் குருடனுக்குக்
கிட்டிய கைத்தடி
போல்வதுமாகும்.

அபூர்வ சந்தப்பங்களில்
கவிஞன் யாவனெனில்
பிரபஞ்ச ரகசியம் ஒன்று
தன்னை வெளிப்படுத்த
தெரிவு செய்த
வரம் பெற்ற தாய்!

கண்ணுக்குத் தென்படாத
எழுத்துத் தேவதை
கொடுக்கும் ஒரு
வாஞ்சை மிக்க முத்தம்
கவிதை!

அது ஒரு குட்டிக் குழந்தை
அன்று பிறந்த
கோழிக்குஞ்சு
கடவுளின் பரிவட்டம்
இரங்கி தாய் கொடுத்த பால்.
தெரியாதவரையும் பார்த்து
புன்னகைக்கும் ஒரு
மழலை போல்வது.

தன்னைக் காட்டும் கண்ணாடி
மனசின் மொழிவடிவம்
சும்மா போகுமொரு
நிர்வாணம்.
மனுக்குல உணர்வுகளின்
வெளிச்சப்புள்ளி.
வழிப்போக்கனின் நாட்குறிப்பு.

உண்மையின் பிரகாசம்
பிரபஞ்சத்தின் சாயல்
அறத்தின்; தர்மத்தின்
நெற்றிக் கண்.
அவ்வப்போது
சீற்றத்தின் கூர் வாள்.

கோபம் போர்த்த
கவிதை ஒன்றைப்
போட்டுடைத்தால் அது
அன்பின் துகளெனவே
நொருங்கிச் சிதறும்.

அழும் கவிதை ஒன்றை
உடைத்துப் பாருங்கள்
அதுவும் அன்பென்றே
பெருகும்...

கடவுச்சீட்டின்றி பயணித்து
யாரோ ஒருவருக்கு
கொடுக்கும்
ஜீவித முத்தம் கவிதை.

இறுதியாகக் கவிதை என்பது
உயிர் உயிரோடு பேசும்
மொழிவடிவம்.
உயிர் தான் எழுதும்
 ஒரு சுயசரிதை
என்றும் சொல்லலாம்.

- யசோதா.பத்மநாதன்.-
29.4.2020.

( அண்மையில் சில கவிதைகளோடு உறவாட முடிந்தது. அதன் விளைவாக எழுந்தது இது.)

4 comments:

  1. நல்லதொரு கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அப்படியா வெங்கட்? உண்மையாகவா? இதுவும் கவிதையா? எனக்கு கவிதையும் எழுத வருமா?...
    இது சும்மா நான் எழுதிய ஒரு சிறு கிறுக்கல் ப்பா...

    ReplyDelete
  3. கவிதைக்கு இவ்வளவு அர்த்தங்கள் ....
    மனதின் எண்ணங்களை கிறுக்கினால் அவை கவிதையே

    ReplyDelete
  4. சரியா சொன்னீங்க புத்தன்.
    மன எண்ணங்களின் கிறுக்கல்கள் தான்...
    நன்றி; உங்கள் வரவுக்கும் பகிவுக்கும்.

    ReplyDelete