Wednesday, August 19, 2020

அந்தாதி - 7 -

   
இன்று நாங்கள் பார்க்க இருப்பது சொல்லணிகளிலே ஒன்றான அந்தாதி என்பதாகும்.எழுத்துக்களின் தொகுதியை அழகுபடுத்திப் பார்க்கும் சொல்லணிகளிலே ஒருவகை இந்த அந்தாதி.

அந்தாதி என்பது பற்றி சுகி சிவம் எப்படிச் சொல்கிறார் என்று சற்றுக் கேட்போமா?

https://www.youtube.com/watch?v=w5T8GVcQSHU
0.20 – 1.42
ஆமாம். அதுதான் அந்தாதி. அதாவது
       ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்று
                ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே

என்று அந்தாதிக்கு இலக்கணம் உரைக்கிறது யாப்பெருங்கலம்.
‘ஒரு செய்யுளுள்ளே ஓரடி இறுதி மற்றையடிக்கு முதலாகத் தொடுப்பனவுமுள’ என்று தண்டியலங்காரமும் அந்தாதிக்கு விளக்கம் உரைக்கின்றது. அதனை நம்ம தமிழில் சொல்வதாக இருந்தால்

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பதற்கு தமிழில் 'முடிவு' என்று அர்த்தமாகும். ஆதி என்பது 'முதல்' என்றும் பொருள்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இப்போது. முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். அதாவது ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.

இந்தச் சினிமாப் பாடலில் அந்த அந்தாதி இப்படியாக வருகிறது.
ஆடிவெள்ளி தேடி உன்னை

https://www.youtube.com/watch?v=r6Zyo4LXxIE

 அந்தாதி என்ற சொல்லணி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே வரும்.. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம். அந்தாதி அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

இரண்டு அடிகளுக்கு இடையே வரும் அந்தாதித் தொடைக்கு இந்த நாட்டுப்புற பாடல் ஒரு சிறு உதாரணமாகும்.
                பணம் பணம்
                                பணத்திற்கு இல்லை குணம்
                                குணத்திற்கு இல்லை மணம்
                                மணம் என்றால் பூ தானே
                                பூ என்றால் கட்டுவோமே
                                கட்டுவது என்றால் பசுதானே
                                பசு என்றால் கறப்போமே
                                கறப்பது என்றால் பால் தானே
                                பால் என்றால் புளிக்குமே
                                புளிக்கும் என்றால் புளிதானே
                                புளி என்றால் தொங்குமே
                                தொங்குவது என்றால் பாம்புதானே
                                பாம்பு என்றால் கொத்துமே
                                கொத்துவது என்றால் கோழி தானே
                                கோழி என்றால் கூவுமே
                                கூவும் என்றால் நரிதானே
                                நரி என்றால் அதோடு சரி

என்ற நாட்டுப்புற பாடல் அந்தாதித்தொடை வரப் பாடியமைக்கு நல்ல சான்றாக அமைகின்றது. முதலடியில் முடியும் பணம், குணம்,மணம், பூ, கட்டுதல், பசு, கறத்தல், பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி, நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைகின்றன. இதன் காரணமாக பாடல் அந்தாதிதொடையின் அழகினைப் பெறுகின்றது.

ஒடிவது போல் இடை இருக்கும்

https://www.youtube.com/watch?v=0ckuFQssG5g

இவ்வாறாக மட்டுமன்றி அந்தாதி செய்யுள் வகைப் பாடல்கள் தமிழ் இலக்கிய பரப்பிலே நிறைய உண்டு. அதிலும் பக்தி இலக்கியப் புலவர்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான பாடல்களைப் பாடியுள்ளார்கள். சைவவைணவ போட்டிகள் மலிந்திருந்த பல்லவர்களின் ஆட்சி நடந்த காலத்தில் இவ் அந்தாதி குறித்த இந்த பாடலும் உரையாடலும் ஒரு சிறு மாறுதலுக்காக இப்போது உங்களுக்காக…


https://es-la.facebook.com/TiruchendurMuruganTempleTiruchendur/videos/1814769931917740/UzpfSTIzMjE3NDUzMDYzMTY2Mzo2MzAyMDUwNjQxNjE5Mzk/
(1.30 – 2.02 / 3.34 – 4.18 )

இருந்த போதும் சேர நாட்டு மன்னனான ‘பொன்வண்ணத்தந்தாதியைப் பாடிய சேரமான் பெருமாள்நாயனார் சேர நாட்டு மன்னன் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரின் காலம் 8ம் நூற்றாண்டு ஆகும். இந்தப் பொன்வண்ணத்தந்தாதி,

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

என்று தொடங்கி அதன் 100வது பாடலை முடிக்கும் போது பொன்வண்ணமே என்று முடித்தமையாலும் பொன்வண்ணத்தந்தாதி என்று இது பெயர் பெறும். இப்பாடல்கள் மொத்தம் 101 உண்டு.

சொல்லழகும் கருத்தழகும்  சந்தங்களும்அமையப்பெற்றிருக்கும் அப் பாடல்களில்

கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே 91

என்று 91வது பாடல் முடிய சிந்தனை என்ற சொல்லை அடுத்த அடியாகக் கொண்டு 92வது பாடல்

சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே 92

என்றவாறாக வருவது ரசித்து இன்புறத்தக்கது அல்லவா. முதல் பாடலில் ’வண்ணமும்’ அடுத்த பாடலில் ’என்றும்’ என்பதும் மூன்றாம் பாடலில் ’தேன்’ என்றும் வருவது அந்தாதி வகைக்கு அப்பால் இலக்கிய ஆர்வலர்களுக்கு மேலும் இன்பம் பயப்பது ஆகும்.

இப்போது அந்தாதி வகையில் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று கேட்போமா?

வசந்தகால நதிகளிலே

 https://www.youtube.com/watch?v=0bZL-9b-m9Y

இந்தப் பாடலை இயற்றிய கவிஞர் கண்ணதாசன் அந்தாதியில் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களைக் கூட தந்திருக்கி றார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி வந்த அந்தாதி கவிதையில் இருந்து ஒரு சிறுபகுதியை இப்போது பார்ப்போம்.

 “நாடுவதில் மிகத்தேவை
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி;
தேடுவதில் மிகத்தேவை
திட சித்தம், தேர்ந்த மனம்
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை
ஊனுருக, உடலுருகப்
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும்
கண்ணனோடு குழைவாகக்
கூடு வீரே ! ( 77 )

என்று முடியும் ஒரு பாடலின் முடிவுச் சொல்லான கூடுவீரே என்ற சொல்லில் இருந்து

கூடு வெறும் கூடாகிக்
கொள்ளியிலே வீழ்ந்து விடும்;
கொண்ட கோலம்
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும்
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை
வளைப்பீர் நீரே ! (78 )

இவ்வாறாக அந்தாதிப்பாடல்கள் பின்நாளில் பிரபலம் பெற்றன. அண்மைக்காலத்தில் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் இன்றுவரையான அந்தாதி வகைப் பாடலுக்கு ஓர் உதாரணம் தான்.

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே

இவ்வாறாக பின் நாளில் சொல்லினை அணிசெய்யும் இந்த அந்தாதிவகை பிரபலமாகு முன்னரே சங்க கால இலக்கியத்தில் ஒன்றான புறநானூற்றில் இந்த வகையில் பாடப்பட்ட பாடல் ஒன்று உண்டு.

மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு … என்று வரும் அடிகளில் அந்தாதி அமைப்பு விளங்க காணலாம்.

அது அவ்வாறு இருந்த போதும் பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர். இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். பதினோராம் திருமுறையை 'அந்தாதி மாலை' என்று கூறும் அளவிற்கு அத்திருமுறையில் எட்டு அந்தாதி இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றதாக அந்தாதி இருந்திருக்கிறது.

அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி ஆகியன உள்ளன. இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி, கலியந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியவற்றிற்கும் பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவை தவிர வேறு சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல புதிய வகை அந்தாதிகளும் காணப்படுகின்றன. செய்யுள் வகை, பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன.

இராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடகோபர் என்ற வள்ளல் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த செய்தி தான். அதனால் கம்பர்  சடகோபர் அந்தாதி என்று ஒன்றையும் பாடி இருக்கிறார். அந்தாதி வகையில் அமைந்த அப்பாடல்களில் தனக்குதவிய சடகோபரை சிறப்பித்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

’நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப் பேய்போல் திரியும் பிறிவியினேனைப்...’ என்று அதில் தன்னை சொல்லும் கம்பர் ’நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்து தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே’. (17) என்று சடகோபர் திருவந்தாதியில் உருகி

சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கொனோ மறை நேர்நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக்கனி என்கெனோ
புகலவல் என்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே. 19

என்று ஒரு அச் செய்யுளை மாலை என்று முடித்து அடுத்த செய்யுளை

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம்பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சியம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20
என்பார்.

இவ்வாறாக அந்தாதி பல பெருமக்களிடம் அன்றிலிருந்து இன்றுவரை அவர் கரங்களில் தவழ்ந்து வந்து தமிழை வாழவைத்து அழகு பார்த்திருக்கிறது. அந்தவகையில் அமைந்த இந்தப்பாடலும் அந்தாதி வழி வந்தது.

வாழநினைத்தால் வாழலாம் (1.15 – 2.32.)

https://www.youtube.com/watch?v=s6H319KzL4I

2 comments:

  1. அருமையான பதிவு சினிமா பாடல்கள் ஊடாக விளக்களித்தமையால் மிகவும் இலகுவாக புரிந்து கொள்ளகூடியதாக இருக்கின்றது

    ReplyDelete
  2. மிக்க நன்றி புத்தன்.
    எங்கே உங்கள் சிறுகதைகளைக் காணோம்...கொரோனா ஒரு கதைகளையும் தரவில்லையோ....

    ReplyDelete