Sunday, August 16, 2020

கால வங்கி ( Time bank )


சுமார் 9 வருடங்களுக்கு முன்னால் சுவிற்சிலாந்து தேசத்திற்கு என் தங்கையை பார்ப்பதற்காக முதன் முதலாகச் சென்றிருந்தேன்.

அவர்கள் கிராமங்களின் காதலர்கள். நகரில் இருந்து ஒரு மணி நேர அப்பாலில் உள்ள எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் குடியிருக்கிறார்கள். பச்சைப் புல்வெளிகள், நீல ஏரி ஒன்று, சுற்றிவர மலைகள், அதன் அருகாக ஓடும் வெள்ளி நிற நீரோடை, பூரண அமைதியும் மழை கழுவி விடும் சுத்தமுமாக  சுற்றுப்புறங்கள்,  பாதையோரமாக காய்த்து விழுந்து கிடக்கும் அப்பிள் பழங்கள், தாத்தா பாட்டிமார்களின் பூந்தோட்டங்களோடு கூடிய குட்டி குட்டி வீடுகள் அவர்கள் வளர்க்கும் பூனை, நாய், முயல் போன்ற பிராணிகள், வீதிகளில் நடந்தால் டொச் மொழியில் நலம் விசாரிக்கும் தோல் சுருங்கியும் புன்னகை சுருங்கி விடாத மனிதர்கள்.....

குட்டி மலை ஒன்றில் இவர்களின் வீடு. மலையை உடைத்து அதன் இயல்பை சிதைத்து விடாத வாறு அந்த மலையின் இயல்பான அம்சத்தை உள்வாங்கி அதன் இயல்பு சிதையாத விதத்தில் கவனமாகத் திட்டமிட்டு  ஓரமாக கட்டப்பட்ட மூன்று அடுக்கில் அமையப்பெற்ற வீடு ஒரு தனி அழகு. காதலனுக்கருகே வெட்கப் புன்னகையோடு ஒட்டிக்கொண்டு நிற்கும் ஒரு காதலியைப் போல....

அப்போது என் பெறாமகள் 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நடந்து செல்லும் தூரத்தில் பாடசாலை. 5ம் வகுப்பு வரையுமான அந்தப் பாடசாலையில் ஒரே ஒரு ஆசிரியர். மற்றும் ஒரே ஒரு நாய். பெரியவகுப்பு மாணவர்கள் தான் சிறியவகுப்பு மாணவர்களுக்குப் பொறுப்பு. அவர்களிடம் ஏற்படும் சின்னச் சின்ன பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு பெரிய வகுப்பு மாணவர்களுக்குரியது.

நாய் பாடசாலைக்குச் சொந்தமானது. ஆசிரியர் எந்த வகுப்புக்குப் போகிறாரோ அந்த வகுப்புக்கு அதுவும் போகும். அங்கு போகும் போது அந்த நாய் அந்த வகுப்பு மாணவர்களின் பராமரிப்பில் இருக்கும். அப்போ மாலையில் நாய்க்கு என்ன ஆகும்? மற்றும் விடுமுறை காலங்களில் அது எங்கு தங்கும்? ஏற்கனவே மாணவர்கள் தம் பெயரைப் பதிந்து வைத்திருக்கும் வரிசைக்கேற்ற படி அவர்களுடய வீடுகளுக்கு அது செல்லும். ஏனைய உயிரினங்களையும் மதிக்க; நேசிக்கக் கற்றுக் கொடுப்பதற்காக இந்த ஏற்பாடாம்.

பாடசாலைக்கு போக தனியாக சீருடை எதுவும் இல்லை. விரும்பிய ஆடையில் போகலாம். எல்லோரும் நடையாகவோ அல்லது ஈருருளியிலோ போகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன சமயம் படிக்கிறார்கள் என்றறிய ஆவல் ஏற்பட்ட நாள் ஒன்றில் அது பற்றி விசாரித்தேன். அவர்கள் எல்லோரும் எல்லா சமயமும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். சமய ஆசிரியர் ஒருவர் தான். அவர் எல்லா சமயங்களையும் கற்றுத் தேர்ந்தவராகவும் அவை எல்லாவற்றையும் அவைகளின் தத்துவார்த்த கருத்துக்களையும் பேதமின்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

அப்போ இந்து சமயமும் படித்தாயா என்று கேட்டேன். ஆம், தான் அதுவும் படித்ததாகவும் ஒரு முறை மாணவர்கள் எல்லோரும் தன் வீட்டுக்கு வந்து தங்கள் சுவாமி அறையையும் அதன் பரிவார தெய்வ விக்கிரகங்கள், படங்கள் மற்றும் பூசை புனக்காரங்கள் போடப்படும் வாசனைகள் போன்ற இத்யாதிகளையும் வணக்க முறைகளையும் தெரிந்து கொண்டு போனார்கள் என்ற தகவலையும்  தெரிவித்திருந்தாள். 

இவ்வாறான சமய கற்பித்தல் முறையில் இரு ஆதாயங்கள் உள்ளன.

1. சமய சமரசம் வளருவதோடு தனக்கு பிடித்த ஒரு தத்துவார்த்த நெறியை / நம்பிக்கையை பின்பற்ற மாணவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

2. பெற்றோர் பின்பற்றும் சமயத்தை; நம்பிக்கையைத் தான் பிள்ளையும் பின்பற்ற வேண்டும் என்ற  ஒரு தொடர் சங்கிலி அறுகிற அதே நேரம் ஏனைய சமயங்களையும் பிள்ளை அறிந்து கொள்ளவும் மதிக்கவும் கற்றுக் கொள்கிறது.

இத்தனை விஷயங்களும் எனக்கு மீண்டும் நினைவுக்கு வரக் காரணமாக இருந்தது அண்மையில் வட்ஸப் மூலம் கிடைத்த இன்னொரு சுவிற்சிலாந்து பற்றிய செய்தி தான்.

நாம் பொதுவாக நேரம் போனால் வராது என்று பொதுவாக நம்புகிறோம். அதனால் காலத்தைச் சரியாகச் செலவு செய்யவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும் செய்கிறோம். ஆனால் சுவிஸ் நாட்டில் நேரத்தைச் சேமிக்க ஒரு வங்கி இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம், நேர வங்கி!

காலத்தைச் சேர்த்து வைக்கும் வங்கி.

இப்படி ஒன்று அங்கிருக்கிறது என்ற தகவலை என் வட்ஸப்பில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதனை சுருக்கமாக  உங்களுக்கு தருகிறேன்.

“ சுவிஸ் பாங்கில் பணம் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுவிஸ் தேசத்தில் காலத்தையும் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம், சுவிஸ் தேசத்தில் ‘time bank' என்று ஒரு முதியோர் ஓய்வு ஊதியத் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.( Swiss Federal Ministry of Social Security) 

இந்தக் கால வங்கியில் நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது நம்முடய நேரத்தை இங்கு சேமிப்புச் செய்து கொள்ளலாம்.

எப்படி?

நாம் சுகதேகிகளாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Security யில் கணக்கு ஆரம்பித்து, நம்முடய ஓய்வு நேரத்தை இங்கு சேமித்துக் கொள்ளலாம். பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேரத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி?

இதனை ஒருவர் இப்படிச் சொல்கிறார்.

நான் சுவிற்சிலாந்தில் தங்கி இருந்த போது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் கிறிஸ்டியானா 67 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை. தேவையான அளவுக்கு ஓய்வூதியம் பெறுபவர். 

அதற்கு மேல் நான் கொடுக்கும் வாடகை வேறு வருகிறது. இவற்றை வைத்துக் கொண்டு அவர் வசதியான வாழ்க்கையினை வாழ முடியும்.

ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வேலை செய்கிறார். அவருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து அவரோடு உரையாடி வருகிறார். அவருக்குத் தேவைப்படும் போது மருத்துவர்களோடு தொடர்பு கொள்ளவும் மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால் தினமும் இரண்டு மணி நேரம் அந்த முதியவர் வீட்டில் இவ்வாறாக அவர் வேலை செய்து வருகிறார். 

நான் கிறிஸ்டியானாவிடம், அந்த முதியவர் உங்களுக்கு உறவினரா அல்லது பணத்திற்காக அங்கு வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன். இரண்டுமில்லை; என்று சொல்லி விட்டு மேலும் விளக்கினார். ‘நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் இப்போது இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய முடிகிறது. எனவே இந்தமாதிரி வேலைகளைச் செய்து என்னுடய நேரத்தைச் சேமித்து வருகிறேன்.

நாளை எனக்கு இந்த ‘நேரம்’ தேவைப்படும் போது எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வேன். நான் Swiss Federal Ministry of Social Security யில் என்னைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அந்த முதியவருக்கும் செலவிடும் என்னுடய நேரங்கள் என்னுடய நேரப் பதிவேட்டில் வரவு வைத்துக் கொள்ளப்படும். 

எப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போது நான் அதனை  Swiss Federal Ministry of Social Security க்குத் தெரிவித்தால் அவர்கள் யாரையாவது ஒருவரை உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள ‘நேரத்தை’ செலவு செய்வார்கள். என்று விளக்கமளித்தார்.

அவர் மேலும் இதுபற்றிச் சொல்லும் போது ‘இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் சேவை மனப்பாண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தினமும் உதவி தேவைப்படும் முதியவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனப்பாண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இப்படியாக அவர்கள் செலவிடும் ’நேரம்’ அரசு பரிபாலித்து வரும் அவர்களுடய நேர வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த நேர வங்கி எத்தனை மணி நேரம் அவர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு நேர சேமிப்பு அட்டை ஒன்றை அவர்களுக்கு வழங்கும்.( Time bank card)

பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேர சேமிப்பு அட்டையைப் பயன்படுத்தி நம்முடய நேரத்தை நாம் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.அப்படி நாம் நம்முடய நேரத்தை மீளப் பெற்றுக் கொள்ள நாம் விண்ணப்பிக்கும் போது அவர்கள் நமக்கு உதவி செய்ய ‘ நேர சேமிப்பாளர்கள்’களில் ஒருவரை அனுப்புவார்கள்.

இது தான் அந்தத் திட்டம் என்றார்.

இந்த உரையாடல் நடந்த சில நாட்களில் கிறிஸ்டியானா கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டிருந்தார். மறுநாள் அவரைக் கவனித்துக் கொள்ள ஓர் இளைஞர் வந்திருப்பதை அவதானித்தேன். அவர் கணக்கில் தேவையான அளவு நேரம் வரவு வைக்கப் பட்டிருந்ததாகவும் அவர் அதைப் பயன் படுத்த விண்ணப்பித்திருந்ததால் அரசு இந்த இளஞரைத் தனக்கு உதவுவதற்காக அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்ன ஓர் அருமையான திட்டம் இல்லையா?

நாமும் ஏதோ ஒரு விதத்தைல் இதனை முயன்று பார்த்தால் என்ன?

யாருக்கும் பாரமில்லாத; யாருக்கும் நட்டமில்லாத; மகிழ்ச்சியோடு கூடிய  சுகமான திட்டம் இல்லையா?


2 comments:

  1. மிகவும் அருமையான திட்டமாகத் தெரிகிறது. நல்லதொரு தகவல் - பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆமாம் வெங்கட்.
    நல்லதொரு திட்டமாகத் தான் எனக்கும் தெரிந்தது. அரச மட்டத்தில் இல்லாவிட்டாலும் நம் சமூக மட்டத்திலாவது இதனை ஒரு பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்க்கலாம்...

    இதற்கு முதலீடாக முதலில் நம்பிக்கையான மனிதர்கள் வேண்டும்....

    ReplyDelete