Sunday, July 12, 2020

நம்ம தமிழ் - 1 - SBS வானொலிக்காக.26.1.2020

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து SBS என்ற அரச வானொலி ஊடகத்தின் தமிழ் சேவையில் மாதம் ஒரு தடவை வரும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில்  ’தமிழ் அணிகள்’ குறித்து சில நிமிடங்கள் சொல்லி வருகிறேன்.

அதனை அவ்வப்போது இங்கு பதிந்து வைக்க விருப்பம் கொண்டிருந்த போதும் இப்போது சுமார் 6 மாதங்கள் கடந்த பின்னர் தான் சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒலிபரப்புக் குறித்தும் அதில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்யவேண்டி இருந்தால் அவை குறித்தும் எனக்கு எடுத்துச் சொன்னால் அது என் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும்.

கீழே உள்ள இனைப்பை அழுத்தி ஒலிபரப்பைக் கேட்கலாம். வாசிப்பது தான் வசதி என்பவர்கள் வாசித்தும் அறிந்து கொள்ளலாம். எனினும் வானொலிக்காக நிகழ்ச்சியினைத் தயாரிக்கும் போது அதில் பல மாற்றங்களைச் செய்யவேண்டி இருப்பதோடு பல பாடல் வசீகரங்களை இணைக்கும் வசதி இருப்பது கேட்க இதமளிக்கும். ஆகையால் அதில் சில மாற்றங்கள் உண்டு என்பதியும் உங்கள் கவனத்துக்கு வைத்து விடைபெறுகிறேன்.
நன்றி.

                    
SBS வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்தவும்

தமிழ்!

அதீத கற்பிதங்களாலும் உணர்வுக் குவியல்களாலும் அபரீதமான உணர்ச்சிப் பெருக்காலும் இன மொழிப் பற்றினாலும் கட்டமைக்கப்பட்டு கருத்துருவாக்கம் பெற்ற மொழி அல்ல;

மாறாக அது தன் அறிவின் கொள்ளளவால் அறத்தின் சாரத்தால் வாழ்வியல் நெறிகளால் பண்பாட்டின் விழுமியங்களால் அதன் தொன்மையால் உலக ஒப்புரவால் இலக்கிய வளமைகளால் நிலைத்து வாழும் தன்மையால் ஒரு பண்பாட்டின் அக்ஷ்யபாத்திரமாய் விளங்கும் தன்மையால் மேன்மை பெற்றது.
காலவெள்ளத்தால் காலாவதியாகாது இன்று உலகெங்கும் பரந்து பரவி வியாபித்து விளங்கி நிற்பது.

2003ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுப் பிரிவு – யுனெஸ்கோ - ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சுமார் 6700 மொழிகள் பேசப்படும் இந்த உலகில், ஒரு மொழி செம்மொழியாகிய அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால் அது தொன்மை, தனித்தன்மை பொதுமைப்பண்பு நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாடு, கலை, பட்டறிவு அனுபவ வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்வான சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி இன்று உலகில் 8 மொழிகள் செம்மொழி அந்தஸ்தினைப் பெற்றுள்ளன.

அவை, கிரேக்கம், இலத்தீன், ஹிப்ரூ, அரபு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம், தமிழ், என்பனவாகும்.

கிரேக்க மொழி சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்ற அறிஞரின் சிந்தனைக் கருத்துக்களால் வளம் பெற்றது.

இலத்தீன் மொழி கி.மு. 100 – கி.பி. 100க்குமிடையிலேயே வளம்பெற்ற செம்மொழியாகி விட்டது. ரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்ததோடு இன்று, கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வத்திகான் நகரத்தின் ஆட்சி மொழியாகவும் திகழ்ந்து செழிப்புற்றது.

அராபிய மொழி உலகுக்கு சிறந்த வாழ்க்கைக் கருவூலமான குர்ரானைத் தந்த வகையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.

சீன மொழி இலக்கியம் 5000 ஆண்டுப் பாரம்பரியம் மிக்கது. அதில் கி.மு.600 காலப் பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவுட்சு (Laotse) என்போரின் இலக்கியத் தொகுப்புகளும் வாழ்க்கை நெறிமுறைகளும் சீன இலக்கியம் செம்மொழி அந்தஸ்தைப் பெற உதவின.

ஹீப்ரு மொழிக்கு கி.மு.12-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையிலான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. பைபிளின் பழைய ஏற்பாடு ஹீப்ரூ மொழியினாலானது. அதில் செம்மொழிக்காலம் அல்லது விவிலிய காலம் என்பது கி.மு.3-ஆம் நூற்றாண்டு வரையானது. பைபிளின் பழைய ஏற்பாட்டை தந்து பெருமை பெற்றது ஹிப்ரூ.

பாரசீகம்,என்றழைக்கப்படும் பேர்ஸியன் மொழி ஈரான் நாட்டின் ஆட்சிமொழி ஆகும். இன்றைய உலக நாகரிகங்கள், அறிவியல் முதலிவற்றிற்குத் தக்க கொடைகளை வழங்கிய நாடு பண்டைய பாரசீகம். இன்று உலகம் முழுவதிலும் வழக்கத்தில் உள்ள எண்களை உலகிற்கு கொடையாக வழங்கியதும் இம்மொழிதான்.

சமஸ்கிருதம் என்றழைக்கப்படும் வடமொழி இலக்கியத்தை இரு பிரிவுகளாக காணலாம் இருக்கு யசுர் சாமம் அதர்வனம்,உபநிடதங்கள் முதலாய வேதகால இலக்கியம் கி.மு.1500 முதல் கி.மு.200 வரையானது. மகாபாரதம் இராமாயணம் போன்ற செம்மொழி கால இலக்கியம் கி.மு.500 முதல் கி.பி.1000. வரையானதாகும்.இந்த தத்துவார்த்த வாழ்வியல் இலக்கிய செல்வங்கள் வடமொழியை செம்மொழியாக்கியது.

தமிழ்
எப்படி ஆரியம் சார்ந்த இந்தியப் பண்பாட்டிற்கு வடமொழி கொள்கலனாக (Container) விளங்குகிறதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் மூத்ததும், ஏறத்தாழ 2500 ஆண்டு இலக்கிய பாரம்பரியம் கொண்டதுமான தமிழ் மொழி கொள்கலன் ஆகும். தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் திருக்குறளும் காப்பியங்களும் அவை சொல்லும் வாழ்க்கை விழுமியங்களும் தமிழ் செம்மொழியாக பெரும் பங்காற்றின.

சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழியாக  தமிழ் அமைந்தது. அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்திருவருட்பா பனுவல்கள், பெரிய புராணம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள்; வாழ்வியல் செல்வங்க:ள் தமிழ் மொழியிலே பிறந்தன.

அதே நேரம், தமிழ்மொழி சகலமக்களுக்கும் உரிய மொழியாக விளங்கியது. பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில் சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார். ( தமிழ்தூது பக் 32)

தமிழரின் ’யாதும் ஊரே என்ற உலகளாவிய தத்துவம் இப்படித்தான் பின்நாளில்  பல்வேறு சமயம் சார்ந்த காவியங்களிலும் சமய அற நூல்களிலும்  காப்புச் செய்யுளில் ‘உலகெலாம்’ எனத் தொடங்கியது. அதனாலேயே தமிழ் பக்தியின் மொழியாகப் பரினமித்தது. தமிழினதும் தமிழனதும் உலகு தழுவிய சிந்தனை அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு என்றும்; தென்னாடுடய சிவனே போற்ரி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும்; மேன்மைகொள் சைவ நீதீ விளங்குக உலகமெல்லாம் என்றும்; யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும்; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும்;(திருமந்திரம்),வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றும்; காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும்; வாசலில் அரிசிமாக்கோலம் போட்டு உயிகளுக்கு பகிர்ந்துண்டும்; உழவுக்கு வந்தனை செய்து மாட்டுக்கு பொங்கலிட்டும்; வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்றும்; பாடியும் பகிர்ந்துண்டும் பரந்தசிந்தனையோடு வாழ்வாங்கும் வாழ்ந்தவன் தமிழன்.’உலகம் யாவையும் தாமுழவாக்கலும்; ஆழிசூழ் உலகு என்றும் மானுடம் வென்றதம்மா என்றும் உலக நோக்கில் ஒப்புயர்வற்ரு விளங்கியவன் தமிழன்.

மேலைத்தேயத்தவர் வீட்டுக்கு காவலாக நாயைக் கட்டி வளர்த்த போது தமிழன் திண்ணை கட்டி வருவோரை வரவேற்று இருத்தியவன்.


சமூக நெறிமுறைகளை அறம், பொருள், இன்பம் என மூன்றாக பகுத்துக் கூறுவது பண்டைத் தமிழ் மரபு. இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பத்தை வேண்டுவன. இன்ப நுகர்ச்சிக்குத் தேவைப்படுவது பொருள். அப்பொருள் அறவழியில் வரவேண்டும் என்பதே பண்டைத் தமிழரின் வாழ்வியல் அறநெறியாகும்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுடன் வீடு என்ற ஒன்றையும் சேர்த்து உறுதிப் பொருள்களை நான்கு என்றது பின்னை வழக்கு, இவ்விரிவாக்கம் பக்தி நெறிக் காலத்தில் உருவானது.

அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை பற்றிய சிறப்புக் குறிப்புகள் திருக்குறள் என்னும் நூலில் திருவள்ளுவர் சுட்டும் வாழ்வியல் அறநெறிகள் ஆகும்.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழ் சொல்லும் பண்புநலம்.
இவைகளை உள்ளடக்கி இருக்கும் தமிழ் மொழி அவற்றைச் சொல்லும் விதத்திலும் வசீகரத்தைக் கொண்டிருக்கிறது.

அழகியல் என்பது தமிழின் ஒவ்வொரு அம்சத்திலும் மிளிர்வது. அதற்கு அது எடுத்துக் கொண்ட ஓர் உத்தி அணி என்பதாகும். அணி என்றால் அழகு என்று பொருள். அணியின் இலக்கணம் கூறும் நூல் தண்டி அலங்காரம் ஆகும். மொழியை; அதன் உள்ளடக்கத்தை அழகுபடுத்தும் அணிகளைப் பற்றி அது பேசுகிறது.

நாம் கடற்கரையின் ஓரத்தில் நின்று சிப்பிகளைப் பொறுக்கும் ஒரு முயற்சியாக மாதம் ஒருதடவை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அணிகளின் தமிழ் அழகுகளை காண்போம்.

2 comments:

  1. அருமையான தகவல்கள். SBS வானொலியை இனி உங்களுக்காகவும் தமிழுக்காவும் தொடர்ந்து கேட்க விழைகிறேன்.

    ReplyDelete
  2. நன்றி; அத்தோடு அன்பும் மகிழ்ச்சியும்.

    ReplyDelete