Monday, August 24, 2020

பின்வருநிலையணி - 8 -

   SBS வானொலியில் நம்ம தமிழ் நிகழ்ச்சியில் ‘பின்வருநிலை அணி பற்றிக் கேட்க இங்கே அழுத்தவும்    

தமிழுக்கும் அமுதென்று பேர்…..


https://www.youtube.com/watch?v=yBjAWU6_938 


இந்தப் பாடல் தமிழ் குறித்து பாரதிதாசன் இயற்றிய கவிதையின் இசைவடிவம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான் இல்லையா? 

இதிலே பாரதி தாசன் பயன்படுத்தி இருக்கிற அணி என்ன தெரியுமா? 

அது தான் பின்வருநிலைஅணி. பின்வருநிலை அணி என்றால் என்ன? அதற்கு தண்டி அலங்காரம் என்ற இலக்கண நூல் என்ன வரைவிலக்கனம் சொல்கிறது? 

’முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்

பின்வரும் என்னில் பின்வரு நிலையே ’ 

என்று அது உரைக்கிறது. 

இந்தப் பாடலிலே தமிழ் என்ற சொல் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வந்து இருக்கிற போதும் அது தமிழ் என்ற ஒரே பொருளிலே வந்திருக்கிறதல்லவா? அது இந்த அணியின் ஒரு சிறப்பு ஆகும். அது என்ன ’ஒரு’ சிறப்பு? அப்படி என்றால் வேறு சில சிறப்புகளும் உள்ளனவா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம். வேறு சில சிறப்புகளும் அதாவது உட்பிரிவுகளும் இதற்கு உள்ளன. 

இதிலே குறிப்பாக மூன்று வகையான உட்பிரிவுகள் உள்ளன. அதிலே ஒன்று சொல்பின்வருநிலையணி, இரண்டாவது பொருள்பின்வருநிலையணி மூன்றாவது சொல்பொருள் பின்வருநிலையணி. 

என்ன? இவைகளுக்கெல்லாம் என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா? அணியினுடய பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் வேறுபாடு என்னவோ மிகத் தெளிவானதும் எளிமையானதும் தான். 

சொல் பின்வருநிலை அணி என்பது ஒரு சொல் பல இடங்களிலும் ஒரே மாதிரியாக வரும். ஆனால் அது மற்றய இடத்தில் வருகிற போது அதன் சொல் ஒன்றாக இருப்பினும் பொருள் வேறொன்றாக இருக்கும். உதாரணமாக 

`குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்’   (குறள் எண் -965)

அதாவது குன்று போல உயர்ந்தவர்கள் குறுகிய அளவு இழிசெயலைச் செய்து விட்டாலும் அவர்கள் மேன்மை குன்றி விடும் என்று குன்றுதல் என்ற சொல் முதலில்`மலை’ என்ற பொருளிலும் இன்னோர் இடத்தில் `குறைந்துவிடும்’ என்ற பொருளிலும் வள்ளுவன் அமைத்துக் காட்டிய சொல்பின்வருநிலையணியாகும். 

‘காந்தியைப் பார்த்தேன்; அவன் காந்தியைப் பார்த்தேன்’ என்று பாரதியார் தன் பாடலில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். இப்பாடல் அடியில் முதலில் வருகிற காந்தி என்ற சொல் காந்திமகானையும் அடுத்து வருகிற காந்தி என்ற சொல் வசீகரம் பொருந்திய என்ற அர்த்தம் தரும் காந்தி என்ற பொருளிலும் வந்து ஒரு சொல் இரு வேறு இடங்களில் இருவேறு அர்த்தத்துடன் வெளிப்பட்டுள்ளதல்லவா? இது சொல் பின் வரு நிலை அணியாகும். 

இப்போது கண்ணே கண்ணே என்று கலைவாணர் கூப்பிடும் இந்தப் பாடல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

தங்கமே… தங்கமே……

.தங்கமே தங்கமே பாடல்

https://www.youtube.com/watch?time_continue=2&v=aCehtFHIMak&feature=emb_logo

இசையோடு கலந்து வரும் இந்த நிலாவுக்கு எத்தனை அர்த்தங்கள்?

வான் நிலா நிலா அல்ல….

வான் நிலா நிலா அல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=uKDtXNrm8vM 

அது சொல்பின்வருநிலையணி.                                                   

அப்படி என்றால் பொருள்பின்வருநிலையணி எதுவாக இருக்கும்? பொருள் பின்வருநிலை அணி என்பது ஒரே பொருளைக் குறிக்கின்ற பல சொற்கள் தொடர்ந்து வருவது போல அமைக்கப்பட்டிருப்பது. அதாவது சொல் வேறுவேறாக இருக்கின்ற போதும் அது குறிக்கின்ற பொருள் ஒன்றாக இருப்பதாக ஒரு பாடல் புனையப்பட்டிருப்பது பொருள்பின்வருநிலையணியாகும். அதற்கு உதாரணமாக இன்னொரு பாரதியார் பாடல் பார்ப்போமா? 

 ‘கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன்’

என்றுவரும் பாரதியாரின் பாடலடியில் கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன் என்ற சொற்பதங்கள் எல்லாம் மனக்கலக்கத்தினைத் தரும் சொல்லடிகளின் வேறு வேறு மொழிவடிவங்கள் அல்லவா? அவ்வாறு ஒரு பாடலில் ஒரே பொருளைத்தரும் வேறு வேறு சொற்கள் ஒன்றாகி அமையப்பெறும் போது அதில் இடம் பெறும் அணி பொருள்பின்வருநிலை அணியாகும். 

’அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்

விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;

கொண்டன காந்தள் குலை’

என்ற தண்டியலங்கார ஆசிரியர் தரும் இந்த உதாரண பாடலில் வரும் 'அவிழ்ந்தன' அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ்விண்டன, விரிந்தன, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறதல்லவா?. ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

கேட்க இருக்கும் இந்தப் பாடலில் வரும் அன்புக்கு சமனான பொருள் தரும் பாசம் பக்தி கருணை போன்ற பதங்கள் ஒரே பாடலில் ஒரே பொருளைத் தரும் வகையில் புனையப்பட்டிருப்பது சொல்பின்வருநிலையணிக்கு  இசைவடிவிலமைந்த ஓர் உதாரணமாகும்.

அன்பு என்பதே தெய்வமானது…..

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

மூன்றாவதும் இறுதியானதுமாக அமையப்பெறுவதும்; இன்றய நிகழ்வின் முக்கிய கருவாகவும்; முகப்புப் பாடலுக்கு உதாரணமாகவும் அமையப்பெறும் அணி சொற்பொருள் பின்வருநிலையணியாகும். அதில் என்ன வேறுபாடு இருக்கக் கூடும்?  பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் அதன் பொருள் என்னவோ மிக எளிமையானது தான். கவிஞர் தான் இயற்றும் கவிதையில் ஒரே சொல் பல இடங்களிலும் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வருவது தான் அது.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ 

என்றும் 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!’

என்றவாறாக பல திருக்குறள்களை இந்த அணிக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். அதில் மேலுமொரு உதாரணமாக 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

என்று வள்ளுவர் சொல்வதில் வரும் செல்வம் என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையைக் காணலாம். 

இப்போது இந்தச் செவிச்செல்வத்தின் மூலமாக சொற்பொருள் பின்வருநிலையணியில் அமைந்த பாடல் ஒன்றை இசையோடு கேட்போமா? 

( சொன்னது நீதானா….)

சொன்னது நீதானா பாடல்

https://www.youtube.com/watch?v=-NCtHKpRP0A

0.00 – 0.29

வள்ளுவர் 5 இடத்தில் வைத்துக் காட்டிய கைவண்ணத்திற்கு கம்பர் என்ன சளைத்தவரா? அவர் தன் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 7 இடங்களில் ஏழு என்ற வார்த்தையை வைத்து  செய்த சொல் விளையாட்டு ஒன்று இந்த அணிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி

ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப-

’ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?’

என்று வருகிறது அப்பாடல். அதன் பொருள் என்னவென்றால் ஏழு கடல்களும், மேலே உயர்தனவாக உள்ள ஏழு உலகங்களும், ஏழு மலைகளும், ஏழு முனிகளும், சூரியனின் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், இந்த அம்பிற்குக் குறி என்று அஞ்சி நடுங்கினர். இது கம்பன் சொற்பொருள் பின்வருநிலையணியை தன் பாடலில் பொருத்தி செய்து காட்டிய தமிழ் வித்தை.

( நீதானா எனை அழைத்தது நீதானா எனை நினைத்தது நீதானா…)

நீதானா என்னை அழைத்தது பாடல்

https://www.youtube.com/watch?v=F_K6wytvQD4

இப்பாடலில் வரும் நீதானா என்ற சொல்

கட்டோடு குழலாட ஆட...

கட்டோடு குழலாட ஆட பாடல்

https://www.youtube.com/watch?v=9x1zk19PM1c

இதில் வரும் ஆட என்ற சொல்

பூ கொடியின் புன்னகை...

பூ கொடியின் புன்னகை பாடல்

https://www.youtube.com/watch?v=fh4OWnO2pOE&lc=UgxW2MU9Q0DF46MDdYB4AaABAg

இப்பாடலில் வரும் புன்னகை என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடலில் வரும் பூ என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=amAewEx3MmU 

( அன்பு என்பதே தெய்வமானது…..)

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

இந்தப்பாடலில் வரும் அன்பு என்ற சொல்

( நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா )

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல்

https://www.youtube.com/watch?v=b7QECUszUa8

0.0 – 0.52 

என்பதில் வரும் ராஜா என்ற சொல்

இவைகள் எல்லாம் சொற்பொருள்பின்வருநிலையணியைப் பயன்படுத்தி திரை இசை தந்த தமிழ் பாடல்களில் சில.

பாரதியார் தன் கவிதைகளில் இந்த அணியினை எப்படி எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் பாருங்களேன்! 

பாரதியார் கவிதைகள்

https://www.youtube.com/watch?v=GQtTCVIfQpM

10.7 – 10.58 /  11.11 – 12.33 / 12.43 – 13.37 / 15.7 – 16.58.

நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நேரம் நெருங்கிவிட்ட இத்தருணத்தில் சொற்பொருள்பின்வருநிலையணியில் இடம்பெற்ற இந்த நாலடியார் பாடலோடு நிகழ்ச்சியை நிறைவு செய்வோமா?

நாலடியார் பாடல்

https://www.youtube.com/watch?v=FmHol1YLrE8 

0.12 – 0.41.

இதனோடு கூடவே வர இருக்கும் இந்த நிறைவுப் பாடலும் குறுகிய நம் வாழ்வை சினிமா என்ற திரைக் கலை இசை வழியாக சொற்பொருள் பின்வருநிலையணியில் இப்படியாக ஒலிக்கிறது. 

டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி

https://sv-se.facebook.com/763611867102044/videos/812484335548130/ 


           பிரதி ஆக்கம்: யசோதா.பத்மநாதன் 5.8.2020.


Wednesday, August 19, 2020

அந்தாதி - 7 -

   
இன்று நாங்கள் பார்க்க இருப்பது சொல்லணிகளிலே ஒன்றான அந்தாதி என்பதாகும்.எழுத்துக்களின் தொகுதியை அழகுபடுத்திப் பார்க்கும் சொல்லணிகளிலே ஒருவகை இந்த அந்தாதி.

அந்தாதி என்பது பற்றி சுகி சிவம் எப்படிச் சொல்கிறார் என்று சற்றுக் கேட்போமா?

https://www.youtube.com/watch?v=w5T8GVcQSHU
0.20 – 1.42
ஆமாம். அதுதான் அந்தாதி. அதாவது
       ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்று
                ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே

என்று அந்தாதிக்கு இலக்கணம் உரைக்கிறது யாப்பெருங்கலம்.
‘ஒரு செய்யுளுள்ளே ஓரடி இறுதி மற்றையடிக்கு முதலாகத் தொடுப்பனவுமுள’ என்று தண்டியலங்காரமும் அந்தாதிக்கு விளக்கம் உரைக்கின்றது. அதனை நம்ம தமிழில் சொல்வதாக இருந்தால்

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பதற்கு தமிழில் 'முடிவு' என்று அர்த்தமாகும். ஆதி என்பது 'முதல்' என்றும் பொருள்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இப்போது. முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். அதாவது ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.

இந்தச் சினிமாப் பாடலில் அந்த அந்தாதி இப்படியாக வருகிறது.
ஆடிவெள்ளி தேடி உன்னை

https://www.youtube.com/watch?v=r6Zyo4LXxIE

 அந்தாதி என்ற சொல்லணி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே வரும்.. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம். அந்தாதி அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

இரண்டு அடிகளுக்கு இடையே வரும் அந்தாதித் தொடைக்கு இந்த நாட்டுப்புற பாடல் ஒரு சிறு உதாரணமாகும்.
                பணம் பணம்
                                பணத்திற்கு இல்லை குணம்
                                குணத்திற்கு இல்லை மணம்
                                மணம் என்றால் பூ தானே
                                பூ என்றால் கட்டுவோமே
                                கட்டுவது என்றால் பசுதானே
                                பசு என்றால் கறப்போமே
                                கறப்பது என்றால் பால் தானே
                                பால் என்றால் புளிக்குமே
                                புளிக்கும் என்றால் புளிதானே
                                புளி என்றால் தொங்குமே
                                தொங்குவது என்றால் பாம்புதானே
                                பாம்பு என்றால் கொத்துமே
                                கொத்துவது என்றால் கோழி தானே
                                கோழி என்றால் கூவுமே
                                கூவும் என்றால் நரிதானே
                                நரி என்றால் அதோடு சரி

என்ற நாட்டுப்புற பாடல் அந்தாதித்தொடை வரப் பாடியமைக்கு நல்ல சான்றாக அமைகின்றது. முதலடியில் முடியும் பணம், குணம்,மணம், பூ, கட்டுதல், பசு, கறத்தல், பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி, நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைகின்றன. இதன் காரணமாக பாடல் அந்தாதிதொடையின் அழகினைப் பெறுகின்றது.

ஒடிவது போல் இடை இருக்கும்

https://www.youtube.com/watch?v=0ckuFQssG5g

இவ்வாறாக மட்டுமன்றி அந்தாதி செய்யுள் வகைப் பாடல்கள் தமிழ் இலக்கிய பரப்பிலே நிறைய உண்டு. அதிலும் பக்தி இலக்கியப் புலவர்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான பாடல்களைப் பாடியுள்ளார்கள். சைவவைணவ போட்டிகள் மலிந்திருந்த பல்லவர்களின் ஆட்சி நடந்த காலத்தில் இவ் அந்தாதி குறித்த இந்த பாடலும் உரையாடலும் ஒரு சிறு மாறுதலுக்காக இப்போது உங்களுக்காக…


https://es-la.facebook.com/TiruchendurMuruganTempleTiruchendur/videos/1814769931917740/UzpfSTIzMjE3NDUzMDYzMTY2Mzo2MzAyMDUwNjQxNjE5Mzk/
(1.30 – 2.02 / 3.34 – 4.18 )

இருந்த போதும் சேர நாட்டு மன்னனான ‘பொன்வண்ணத்தந்தாதியைப் பாடிய சேரமான் பெருமாள்நாயனார் சேர நாட்டு மன்னன் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரின் காலம் 8ம் நூற்றாண்டு ஆகும். இந்தப் பொன்வண்ணத்தந்தாதி,

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

என்று தொடங்கி அதன் 100வது பாடலை முடிக்கும் போது பொன்வண்ணமே என்று முடித்தமையாலும் பொன்வண்ணத்தந்தாதி என்று இது பெயர் பெறும். இப்பாடல்கள் மொத்தம் 101 உண்டு.

சொல்லழகும் கருத்தழகும்  சந்தங்களும்அமையப்பெற்றிருக்கும் அப் பாடல்களில்

கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே 91

என்று 91வது பாடல் முடிய சிந்தனை என்ற சொல்லை அடுத்த அடியாகக் கொண்டு 92வது பாடல்

சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே 92

என்றவாறாக வருவது ரசித்து இன்புறத்தக்கது அல்லவா. முதல் பாடலில் ’வண்ணமும்’ அடுத்த பாடலில் ’என்றும்’ என்பதும் மூன்றாம் பாடலில் ’தேன்’ என்றும் வருவது அந்தாதி வகைக்கு அப்பால் இலக்கிய ஆர்வலர்களுக்கு மேலும் இன்பம் பயப்பது ஆகும்.

இப்போது அந்தாதி வகையில் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று கேட்போமா?

வசந்தகால நதிகளிலே

 https://www.youtube.com/watch?v=0bZL-9b-m9Y

இந்தப் பாடலை இயற்றிய கவிஞர் கண்ணதாசன் அந்தாதியில் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களைக் கூட தந்திருக்கி றார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி வந்த அந்தாதி கவிதையில் இருந்து ஒரு சிறுபகுதியை இப்போது பார்ப்போம்.

 “நாடுவதில் மிகத்தேவை
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி;
தேடுவதில் மிகத்தேவை
திட சித்தம், தேர்ந்த மனம்
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை
ஊனுருக, உடலுருகப்
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும்
கண்ணனோடு குழைவாகக்
கூடு வீரே ! ( 77 )

என்று முடியும் ஒரு பாடலின் முடிவுச் சொல்லான கூடுவீரே என்ற சொல்லில் இருந்து

கூடு வெறும் கூடாகிக்
கொள்ளியிலே வீழ்ந்து விடும்;
கொண்ட கோலம்
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும்
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை
வளைப்பீர் நீரே ! (78 )

இவ்வாறாக அந்தாதிப்பாடல்கள் பின்நாளில் பிரபலம் பெற்றன. அண்மைக்காலத்தில் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் இன்றுவரையான அந்தாதி வகைப் பாடலுக்கு ஓர் உதாரணம் தான்.

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே

இவ்வாறாக பின் நாளில் சொல்லினை அணிசெய்யும் இந்த அந்தாதிவகை பிரபலமாகு முன்னரே சங்க கால இலக்கியத்தில் ஒன்றான புறநானூற்றில் இந்த வகையில் பாடப்பட்ட பாடல் ஒன்று உண்டு.

மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு … என்று வரும் அடிகளில் அந்தாதி அமைப்பு விளங்க காணலாம்.

அது அவ்வாறு இருந்த போதும் பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர். இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். பதினோராம் திருமுறையை 'அந்தாதி மாலை' என்று கூறும் அளவிற்கு அத்திருமுறையில் எட்டு அந்தாதி இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றதாக அந்தாதி இருந்திருக்கிறது.

அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி ஆகியன உள்ளன. இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி, கலியந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியவற்றிற்கும் பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவை தவிர வேறு சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல புதிய வகை அந்தாதிகளும் காணப்படுகின்றன. செய்யுள் வகை, பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன.

இராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடகோபர் என்ற வள்ளல் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த செய்தி தான். அதனால் கம்பர்  சடகோபர் அந்தாதி என்று ஒன்றையும் பாடி இருக்கிறார். அந்தாதி வகையில் அமைந்த அப்பாடல்களில் தனக்குதவிய சடகோபரை சிறப்பித்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

’நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப் பேய்போல் திரியும் பிறிவியினேனைப்...’ என்று அதில் தன்னை சொல்லும் கம்பர் ’நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்து தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே’. (17) என்று சடகோபர் திருவந்தாதியில் உருகி

சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கொனோ மறை நேர்நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக்கனி என்கெனோ
புகலவல் என்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே. 19

என்று ஒரு அச் செய்யுளை மாலை என்று முடித்து அடுத்த செய்யுளை

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம்பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சியம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20
என்பார்.

இவ்வாறாக அந்தாதி பல பெருமக்களிடம் அன்றிலிருந்து இன்றுவரை அவர் கரங்களில் தவழ்ந்து வந்து தமிழை வாழவைத்து அழகு பார்த்திருக்கிறது. அந்தவகையில் அமைந்த இந்தப்பாடலும் அந்தாதி வழி வந்தது.

வாழநினைத்தால் வாழலாம் (1.15 – 2.32.)

https://www.youtube.com/watch?v=s6H319KzL4I

Sunday, August 16, 2020

கால வங்கி ( Time bank )


சுமார் 9 வருடங்களுக்கு முன்னால் சுவிற்சிலாந்து தேசத்திற்கு என் தங்கையை பார்ப்பதற்காக முதன் முதலாகச் சென்றிருந்தேன்.

அவர்கள் கிராமங்களின் காதலர்கள். நகரில் இருந்து ஒரு மணி நேர அப்பாலில் உள்ள எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் குடியிருக்கிறார்கள். பச்சைப் புல்வெளிகள், நீல ஏரி ஒன்று, சுற்றிவர மலைகள், அதன் அருகாக ஓடும் வெள்ளி நிற நீரோடை, பூரண அமைதியும் மழை கழுவி விடும் சுத்தமுமாக  சுற்றுப்புறங்கள்,  பாதையோரமாக காய்த்து விழுந்து கிடக்கும் அப்பிள் பழங்கள், தாத்தா பாட்டிமார்களின் பூந்தோட்டங்களோடு கூடிய குட்டி குட்டி வீடுகள் அவர்கள் வளர்க்கும் பூனை, நாய், முயல் போன்ற பிராணிகள், வீதிகளில் நடந்தால் டொச் மொழியில் நலம் விசாரிக்கும் தோல் சுருங்கியும் புன்னகை சுருங்கி விடாத மனிதர்கள்.....

குட்டி மலை ஒன்றில் இவர்களின் வீடு. மலையை உடைத்து அதன் இயல்பை சிதைத்து விடாத வாறு அந்த மலையின் இயல்பான அம்சத்தை உள்வாங்கி அதன் இயல்பு சிதையாத விதத்தில் கவனமாகத் திட்டமிட்டு  ஓரமாக கட்டப்பட்ட மூன்று அடுக்கில் அமையப்பெற்ற வீடு ஒரு தனி அழகு. காதலனுக்கருகே வெட்கப் புன்னகையோடு ஒட்டிக்கொண்டு நிற்கும் ஒரு காதலியைப் போல....

அப்போது என் பெறாமகள் 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நடந்து செல்லும் தூரத்தில் பாடசாலை. 5ம் வகுப்பு வரையுமான அந்தப் பாடசாலையில் ஒரே ஒரு ஆசிரியர். மற்றும் ஒரே ஒரு நாய். பெரியவகுப்பு மாணவர்கள் தான் சிறியவகுப்பு மாணவர்களுக்குப் பொறுப்பு. அவர்களிடம் ஏற்படும் சின்னச் சின்ன பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு பெரிய வகுப்பு மாணவர்களுக்குரியது.

நாய் பாடசாலைக்குச் சொந்தமானது. ஆசிரியர் எந்த வகுப்புக்குப் போகிறாரோ அந்த வகுப்புக்கு அதுவும் போகும். அங்கு போகும் போது அந்த நாய் அந்த வகுப்பு மாணவர்களின் பராமரிப்பில் இருக்கும். அப்போ மாலையில் நாய்க்கு என்ன ஆகும்? மற்றும் விடுமுறை காலங்களில் அது எங்கு தங்கும்? ஏற்கனவே மாணவர்கள் தம் பெயரைப் பதிந்து வைத்திருக்கும் வரிசைக்கேற்ற படி அவர்களுடய வீடுகளுக்கு அது செல்லும். ஏனைய உயிரினங்களையும் மதிக்க; நேசிக்கக் கற்றுக் கொடுப்பதற்காக இந்த ஏற்பாடாம்.

பாடசாலைக்கு போக தனியாக சீருடை எதுவும் இல்லை. விரும்பிய ஆடையில் போகலாம். எல்லோரும் நடையாகவோ அல்லது ஈருருளியிலோ போகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன சமயம் படிக்கிறார்கள் என்றறிய ஆவல் ஏற்பட்ட நாள் ஒன்றில் அது பற்றி விசாரித்தேன். அவர்கள் எல்லோரும் எல்லா சமயமும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். சமய ஆசிரியர் ஒருவர் தான். அவர் எல்லா சமயங்களையும் கற்றுத் தேர்ந்தவராகவும் அவை எல்லாவற்றையும் அவைகளின் தத்துவார்த்த கருத்துக்களையும் பேதமின்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

அப்போ இந்து சமயமும் படித்தாயா என்று கேட்டேன். ஆம், தான் அதுவும் படித்ததாகவும் ஒரு முறை மாணவர்கள் எல்லோரும் தன் வீட்டுக்கு வந்து தங்கள் சுவாமி அறையையும் அதன் பரிவார தெய்வ விக்கிரகங்கள், படங்கள் மற்றும் பூசை புனக்காரங்கள் போடப்படும் வாசனைகள் போன்ற இத்யாதிகளையும் வணக்க முறைகளையும் தெரிந்து கொண்டு போனார்கள் என்ற தகவலையும்  தெரிவித்திருந்தாள். 

இவ்வாறான சமய கற்பித்தல் முறையில் இரு ஆதாயங்கள் உள்ளன.

1. சமய சமரசம் வளருவதோடு தனக்கு பிடித்த ஒரு தத்துவார்த்த நெறியை / நம்பிக்கையை பின்பற்ற மாணவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

2. பெற்றோர் பின்பற்றும் சமயத்தை; நம்பிக்கையைத் தான் பிள்ளையும் பின்பற்ற வேண்டும் என்ற  ஒரு தொடர் சங்கிலி அறுகிற அதே நேரம் ஏனைய சமயங்களையும் பிள்ளை அறிந்து கொள்ளவும் மதிக்கவும் கற்றுக் கொள்கிறது.

இத்தனை விஷயங்களும் எனக்கு மீண்டும் நினைவுக்கு வரக் காரணமாக இருந்தது அண்மையில் வட்ஸப் மூலம் கிடைத்த இன்னொரு சுவிற்சிலாந்து பற்றிய செய்தி தான்.

நாம் பொதுவாக நேரம் போனால் வராது என்று பொதுவாக நம்புகிறோம். அதனால் காலத்தைச் சரியாகச் செலவு செய்யவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும் செய்கிறோம். ஆனால் சுவிஸ் நாட்டில் நேரத்தைச் சேமிக்க ஒரு வங்கி இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம், நேர வங்கி!

காலத்தைச் சேர்த்து வைக்கும் வங்கி.

இப்படி ஒன்று அங்கிருக்கிறது என்ற தகவலை என் வட்ஸப்பில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதனை சுருக்கமாக  உங்களுக்கு தருகிறேன்.

“ சுவிஸ் பாங்கில் பணம் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுவிஸ் தேசத்தில் காலத்தையும் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம், சுவிஸ் தேசத்தில் ‘time bank' என்று ஒரு முதியோர் ஓய்வு ஊதியத் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.( Swiss Federal Ministry of Social Security) 

இந்தக் கால வங்கியில் நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது நம்முடய நேரத்தை இங்கு சேமிப்புச் செய்து கொள்ளலாம்.

எப்படி?

நாம் சுகதேகிகளாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Security யில் கணக்கு ஆரம்பித்து, நம்முடய ஓய்வு நேரத்தை இங்கு சேமித்துக் கொள்ளலாம். பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேரத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி?

இதனை ஒருவர் இப்படிச் சொல்கிறார்.

நான் சுவிற்சிலாந்தில் தங்கி இருந்த போது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் கிறிஸ்டியானா 67 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை. தேவையான அளவுக்கு ஓய்வூதியம் பெறுபவர். 

அதற்கு மேல் நான் கொடுக்கும் வாடகை வேறு வருகிறது. இவற்றை வைத்துக் கொண்டு அவர் வசதியான வாழ்க்கையினை வாழ முடியும்.

ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வேலை செய்கிறார். அவருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து அவரோடு உரையாடி வருகிறார். அவருக்குத் தேவைப்படும் போது மருத்துவர்களோடு தொடர்பு கொள்ளவும் மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால் தினமும் இரண்டு மணி நேரம் அந்த முதியவர் வீட்டில் இவ்வாறாக அவர் வேலை செய்து வருகிறார். 

நான் கிறிஸ்டியானாவிடம், அந்த முதியவர் உங்களுக்கு உறவினரா அல்லது பணத்திற்காக அங்கு வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன். இரண்டுமில்லை; என்று சொல்லி விட்டு மேலும் விளக்கினார். ‘நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் இப்போது இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய முடிகிறது. எனவே இந்தமாதிரி வேலைகளைச் செய்து என்னுடய நேரத்தைச் சேமித்து வருகிறேன்.

நாளை எனக்கு இந்த ‘நேரம்’ தேவைப்படும் போது எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வேன். நான் Swiss Federal Ministry of Social Security யில் என்னைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அந்த முதியவருக்கும் செலவிடும் என்னுடய நேரங்கள் என்னுடய நேரப் பதிவேட்டில் வரவு வைத்துக் கொள்ளப்படும். 

எப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போது நான் அதனை  Swiss Federal Ministry of Social Security க்குத் தெரிவித்தால் அவர்கள் யாரையாவது ஒருவரை உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள ‘நேரத்தை’ செலவு செய்வார்கள். என்று விளக்கமளித்தார்.

அவர் மேலும் இதுபற்றிச் சொல்லும் போது ‘இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் சேவை மனப்பாண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தினமும் உதவி தேவைப்படும் முதியவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனப்பாண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இப்படியாக அவர்கள் செலவிடும் ’நேரம்’ அரசு பரிபாலித்து வரும் அவர்களுடய நேர வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த நேர வங்கி எத்தனை மணி நேரம் அவர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு நேர சேமிப்பு அட்டை ஒன்றை அவர்களுக்கு வழங்கும்.( Time bank card)

பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேர சேமிப்பு அட்டையைப் பயன்படுத்தி நம்முடய நேரத்தை நாம் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.அப்படி நாம் நம்முடய நேரத்தை மீளப் பெற்றுக் கொள்ள நாம் விண்ணப்பிக்கும் போது அவர்கள் நமக்கு உதவி செய்ய ‘ நேர சேமிப்பாளர்கள்’களில் ஒருவரை அனுப்புவார்கள்.

இது தான் அந்தத் திட்டம் என்றார்.

இந்த உரையாடல் நடந்த சில நாட்களில் கிறிஸ்டியானா கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டிருந்தார். மறுநாள் அவரைக் கவனித்துக் கொள்ள ஓர் இளைஞர் வந்திருப்பதை அவதானித்தேன். அவர் கணக்கில் தேவையான அளவு நேரம் வரவு வைக்கப் பட்டிருந்ததாகவும் அவர் அதைப் பயன் படுத்த விண்ணப்பித்திருந்ததால் அரசு இந்த இளஞரைத் தனக்கு உதவுவதற்காக அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்ன ஓர் அருமையான திட்டம் இல்லையா?

நாமும் ஏதோ ஒரு விதத்தைல் இதனை முயன்று பார்த்தால் என்ன?

யாருக்கும் பாரமில்லாத; யாருக்கும் நட்டமில்லாத; மகிழ்ச்சியோடு கூடிய  சுகமான திட்டம் இல்லையா?


Thursday, August 6, 2020

’நம்ம தமிழ்’ - 6 - உருவக அணி






                 
https://www.youtube.com/watch?v=JAsNURZOB04
0.00 – 0.49

காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின் 
மீதொளிர் சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந் தாமரையு, பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை
தாங்குதமிழ் நீடுவாழ்க!

என்ற இந்தப்பாடல் சுத்தானந்த பாரதியார் இயற்றியதாகும். 
ஐம்பெரும் தமிழ் இலக்கியச் செல்வங்களான குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய ஐந்தையும் கூடவே திருக்குறளையும் தமிழுக்கான அணியாக; நகைகளாக உருவகித்துப் பாடப்பட்டிருக்கின்ற இக்கவிதை உருவக அணிக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

உருவக அணி என்றால் என்ன?

உருவக அணி என்பது,’
 
‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃதுருவகமாகும்’ –

என்று தண்டி அலங்காரம் உருவக அணிக்கு இலக்கணம் கூறுகிறது. 
அதாவது உவமைக்கும் கருதும் பொருளுக்கும் வேற்றுமை தோன்றக் கூறினால் அது உவமை ஆகும். இரு பொருளையும் வேறு வேறாகக் காணாமல் ஒன்றிலே மற்றொன்றைக் காண்பது உருவக அணியாகும். 

உதாரணமாக  ’வேல் போல விழி’ என்பது உவமைஅணியாகும்.’விழிவேல்’ என்பது உருவக அணியாகும். வேலே விழியாக ஆகி விடுவது; ஒன்றில் ஒன்று மறைந்து இதுவே அதுவாக ஆகி விடுவது உருவக அணியின் சிறப்பு.
மையோ மரகதமோ மழைமுகிலோ என்று கம்பன் இராமனை வர்ணிப்பதை இன்னும் கொஞ்சம் சந்தத்தோடு இப்போது கேட்போமா?

https://soundcloud.com/kryes/kamban-kali-paa-veyyon-oli-1
0.55 – 1.20. )

இது உருவக அணியைப் பயன்படுத்தி கம்பர் செய்த வித்தை.
தமிழ் சினிமாப்பாடல்கள் பல இந்த உருவக அணியினைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. பெண்ணை வர்ணிக்கும் இந்த சினிமாப்பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும்.


மோகனப் புன்னகை ஊர்வலமே….
https://www.youtube.com/watch?v=W398ID1YRiU 

இவ்வாறு எக்கச்சக்கமான சினிமாப்பட்டல்கள் திரைவானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. அவற்றுள் மேலும் சில கீழ் வருபவை.( அநேகமானவை இணையத் தேடலில் கிட்டியவை )

மூக்குத்தி முத்தழகு
வதனமே சந்ர பிம்பமோ
அவளொரு நவரச நாடகம்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
பேசுவது கிளியா பெண்னரசி மொழியா
காலங்களில் அவள் வசந்தம்
சந்தோரதயம் ஒரு பெண்ணானதோ
மானல்லவோ கண்கள் தந்தது
பொன் என்பேன் சிறு பூ என்பேன்
விளக்கே நீ கொண்ட ஒளி 
மலருக்குத் தென்றல் பகையானால்
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
உள்ளம் என்றொரு கோயிலிலே
அண்னன் ஒரு கோயில் என்றால்
மாசிலா நிலவே நம் காதலை
பச்சைக்கிளி ஒன்று 
முத்துக்களோ கண்கள்
மலரே மலரே நீ சொல்ல
பால்வண்ணம் பருவம் கண்டு
காற்றுக்கென்ன வேலி
சின்ன சின்ன றோசாப்பூவே
குயிலப் புடிச்சு கூட்டிலடைச்சு
பூமாலையில் ஒரு மல்லிகை
மதுரையில் பறந்த மீன் கொடியை
அன்பு நடமாடும் கலைக்கூடமே
இது குழந்தை பாடும் தாலாட்டு
தங்கத்தில் நிறமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
என் ராஜாவின் றோஜா முகம்
மலரே குறிஞ்சி மலரே
நினைவோ ஒரு பறவை
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
தேனே தென் பாண்டி மீனே
ஈரமான றோஜாவே
பனி விழும் மலர் வனம்
வா வெண்ணிலா உன்னைத்தானே
தானா வந்த சந்தனமே
மன்றம் வந்த தென்றலுக்கு
நிலவே முகம் காட்டு
காதல் றோஜாவே
தாலாட்டும் பூங்காற்று
சங்கீத மேகம்
நீ காற்று நான் மரம்
வண்ணம் கொண்ட வெண்னிலவே
ஆகாய வெண்ணிலாவே தரைமீது
மலரே மெளனமா
செம்மீனா வெண்மீனா
கல்யாணத் தேன் நிலா காய்க்காத பால் நிலா
இஞ்சி இடுப்பழகி
தேன் சிந்துதே வானம்
மழை தருமோ என் மேகம்
ஊதா கலரு நிப்பன்
மூக்குத்தி முத்தழகு
ஆடி வெள்ளி தேடி உன்னை
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
கலையோ சிலையோ இது பொன்மான் நிலையோ
தலையைக் குனியும் தாமரையே
வளையாப்பட்டி தவிலே தவிலே
...............................
.............................. 
( இன்னும் பல இருக்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பாடல்கள் நினைவுக்கு வந்தால் தெரிவியுங்கள்.)

பொருளணியில் ஒன்றான இந்த உருவக அணி செய்யுள்களை அழகு படுத்தும் அணிகளிலே கருத்தின் சிறப்புக்கு முன்னுரிமை அளிப்பதால் அவை பாடல்களின் அழகுக்கும் பொருத்தப்பாட்டிற்கும் வித்துவச் சிறப்பிற்கும் கவிஞர் சொல்ல வரும் கருத்திற்கும் இலகுவாகச் சொல்ல ஏற்ற ஓர் உத்திப் பொருளாக அமைந்து விடுகிறது. அதனால் இது இன்றைக்கும் கவிஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓர் அணியாகவும் விளங்குகின்றது.

https://www.youtube.com/watch?v=Tj_5XLu4Mbw
(நிலவு ஒரு பெண்ணாகி...)

இந்தப் பாடலில் நிலவு போல பெண் என்று ஆகி விடாமல் நிலவே ஒரு பெண்ணாக ஆகி விடுவதாக அமைவது உருவகத்திற்கு இன்னொரு உதாரணமாகும்..
இந்த உருவக அணியை ஆரம்பத்தில் கையாண்டவராக திருவள்ளுவர் விளங்குகிறார். அவர் தன் திருக்குறளிலே கையாண்ட ஒரு உருவக அணியை இப்போது பார்ப்போமா?

‘முறிமேனி, முத்தம் முறுவல் வெறி, நாற்றம்
வேல், உண்கண் வேய்த் தோளவட்கு – 1113.

காமத்துப் பாலில் வள்ளுவர் எடுத்தாண்ட உருவகம் இது. அதாவது, இவள்மேனி தளிர் பல்லோ முத்து. மனமோ மலர்; கண்களோ வேல் இவள் தோளோ மூங்கில்” 

முத்துக்களோ கண்கள்


https://www.youtube.com/watch?v=e3ejWO0nMJs

இந்த உருவக அணியிலே 15 வகையான உட்பிரிவுகள் உள்ளன என தண்டியலங்காரம் விபரிக்கிறது எனினும் நாம் உதாரணத்திற்கு தொகை உருவக வகை ஒன்றை இப்போது காண்போம்.

இங்கு ஆகிய என்ற உருபு மறைந்து போல, போன்று போன்ற இணைப்புச் சொற்கள் ஏதுவுமின்றி இதுவே அதுவாக ஆகி வரும் பாடல் ஒன்று இது.

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்
மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை. 

இப்பாடலின் பொருள் என்னவென்றால், ’நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகியஅரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்த காதலுக்கு நண்பா, கரை அதாவது எல்லை ஏதாவது உலகத்தில் உண்டோ? இல்லை!' என்று தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான்.

இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்'ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' எனவந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்தொகை உருவகம் என்றழைக்கப்பட்டது

.. https://tamilmani.wordpress.com/2011/01/28/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/
தோகை இளமயில் ஆடி வருகுது..........................

அறநெறியினால் பண்பட்டது தமிழ் மொழி அல்லவா?. தமிழ் செம்மொழியாகிய அந்தஸ்தைப் பெற பக்தி இலக்கியங்களும் பெரும் தொண்டாற்றி உள்ளன. இத்தகைய பக்தி இலக்கியங்களும் இந்த உருவக அணியினைத் தம் கருத்தினைச் சொல்ல பெருமளவில் பயன்படுத்தி உள்ளன. அதற்கு உதாரணமாக கீழ் வரும் இந்த இரு தேவார பாசுரங்களைச் சொல்லலாம்.
’உள்ளம் பெரும் கோயில்; ஊனுடம்பு ஆலயம்; வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்; கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே’ என்பது திருமூலரின் திருமந்திரமாகும். 

பூதத்தாழ்வாரோ தன் இரண்டாம் திருவந்தாதியில் 

அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி
ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்கிறார்.

அது போலவே 13ம் நூற்றாண்டில் முனைப்பாடியார் பாடிய அறநெறிச் சாரத்திலும் உருவக அணி இவ்வாறாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்’

அதாவது, ’இனிமையான பேச்சை விளைநிலமாகவும் ஈதலை வித்தாகவும் கடுஞ்சொல்லாகிய களையை வெட்டி எறிந்து வாய்மையை எருவாக்கி அன்பை நீராக்கி அறமாகிய கதிரை விளைவிப்பதே பயிர்விளைச்சல்; இதனை இளமைக்காலத்திலிருந்தே செய்’ என்பது அதன் பொருளாகும்.

https://www.youtube.com/watch?v=cWsRU7xKuZg
1.20 -2.07.

கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும்….

தமிழ் எல்லா மதத்தினரும் உரிமை பாராட்டக் கூடிய மொழியுமல்லவா? கிறீஸ்தவர்கள் பெருமைப்படக் கூடிய சிறந்த இலக்கியவளம் மிக்க தமிழ் இலக்கியங்களில் ஒன்று இரட்சணியயாத்திரிகமாகும். அதன் இலக்கியச் செழுமையால் இந் நூலை இயற்றிய ஆசிரியர் கிறீஸ்தவக் கம்பர் என அழைக்கப்படுகிறார். 

அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அது முழுக்க முழுக்க உருவக அணியைப் பயன்படுத்திப் பாடப்பட்டிருப்பதாகும். வரும் பாத்திரங்களும் இடங்களும் நிகழ்ச்சிகளும் உருவகங்களே. இவ்வாறு காப்பியமே உருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு, பாடல்களிலும் உருவக அணி பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்று  கடவுளில் ஒருவரான பரிசுத்த ஆவி, உள்ளமாகிய வயலை உழுது, மெய்பக்தி  என்னும் விதை விதைத்து, நாட்டம் வைத்து, அருள் பாய்ச்சி, நலிவு என்னும் களையகற்றி, முளைத்த பயிரை வாடாமற் காத்து, நற்கதி விளைவித்து அடியார்களை வாழச் செய்பவர் என்று உருவக நிலையில் கூறியுள்ளது. உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல், காத்தல், விளைவித்தல் என்னும் உழுவுத் தொழிலை முறைமை சிறிதும் மாறாது குறிப்பிடப்பட்டுள்ள செயல் கருதற்குரியது. இவ்வுருவக நிலையை,

 “கோட்டமற்று உளம்திருத்தி குலவுமெய்ப் பக்தி வித்தி
 நாட்டம் வைத்து அருள் நீர்பாய்ச்சி நலிவெலாம் அகற்றியாதும்
 வாட்டம் இன்றாக ஒம்பி வரகதி விளைவித்து அன்பர்
 ஈட்டம் ஆர்த்து  உய்த்துப்பிக்கும் இதய நாயகனே போற்றி”

என்ற பாடல் வழி உணர முடிகின்றது.

https://www.youtube.com/watch?v=wb5FFQVGCZ0
தைமாதப் பொங்கலுக்கு…


- யசோதா.பத்மநாதன்.-
28.3.2020.

Saturday, August 1, 2020

நம்ம தமிழ் - 5 - புகழாப் புகழ்ச்சி அணி. ( நிந்தாஸ்துதி - 28.12.19 )

     


வறுமையும் புலமையுமாக ஒட்டிப்பிறந்த பிள்ளைகள் புலவர்கள். அவர்கள் எப்போதும் ஒருவித கனவுலகில் சஞ்சரிப்பவர்களாகவும் மிதமான கற்பனையிலேயே எப்போதும் உலாவுபவர்களாகவும் உழைப்புத் திறனில் அக்கறை அற்றிருப்பதாகவும் வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

அதிஸ்டவசமாக சில புலவர்கள் அரச ஆதரவோடு அரசவைப்புலவர்களாக வீற்றிருந்திருக்கிறார்கள். ஏனையவர்கள் பெரும்பாலும் பஞ்சத்திலும் பட்டினியிலும் இருந்த படி புரவலர்களைப் பாடி பரிசுபெற்று வாழ்க்கையை ஒருவாறாக ஓட்டியவர்களாகவே பெரும்பாலானோர் திகழ்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் ரோசத்திற்கும் தம் புலமை மீதான செருக்குக்கும் குறைச்சல் இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் காளமேகம். அவருக்கு தன் வாழ்க்கை மீது மட்டுமல்ல; கடவுளோடும் பிணக்குத் தான்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய்

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
அவர் இவருக்கும் மட்டும் பதிலடி கொடுக்கவில்லை; கடவுளுக்கும் அவர் அதைத் தான் செய்தார். நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து புகழாப்புகழ்ச்சி அணி வழியாக கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடம் பெற்றவை.  பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோஜிதமாக கிண்டல் செய்து பாடுவது நிந்தாஸ்துதி.தமிழில் அது புகழாப்புகழ்ச்சி!

தன் தரித்திர ஏழை வாழ்வை எவ்வாறு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கடவுளுடனான நிந்தித்து துதி செய்தபடி வாழ்வைஎப்படி எதிர் கொண்டார் என்பதையும் இன்று காண்போம்..

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவேகள் ளுண்டுபச்சை மிளகைக் கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம். (60)

இப்படியாக இருக்கிறது புலவர் வாழ்வு. அது மட்டுமல்லாமல் ஒருநாள் ஏன் தான் கடவுள் சந்நிதானத்துக்கு வந்தேன் என்று காரணமுரைக்கிறார்.

காவென்றுஞ் சிந்தாமணி யென்றுஞ் சொல்லி யென்கையில் அள்ளித்
தாவென்று கேட்கத் தரித்திரம் பின்னின்று தள்ளி யென்னைப்
போவென் றுரைக்கவு நாணமங்கே யென்ன போவதிங்கு
வாவென் றிழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே.

என்றபடிக்கு கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாம் இவர்கள் எல்லோருமே நோய்வாய் பட்ட குடும்பத்தவர்களாக இருக்கிறார்களே! இவர்கள் தங்கள் நோயையே எப்ப தீர்ப்பது என்று தெரியாமல் இருக்கிறார்களே! இவர்கள் எப்ப என் நோயைத் தீர்க்கப் போகிறார்கள்? என்றவர், இப்படியாக ஒரு போக்கிடமற்றவரே உமக்கேன் ராஜாங்கம் என்று இப்படியாகக் கேட்கிறார்.

நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சதமாங்
காளனேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராசாங்க மேன் .(65)

 என்னவோ எப்படியோ நீ இருந்திட்டுப் போ ஆனா என்னையும் கொஞ்சம் காப்பாத்துப்பா என்கிறார் இப்படியாக,

நீறாவாய் நெற்றிநெருப் பாவா யங்கமிரு
கூறாவாய் மேனிகொளுந் துவாய் – மாறாத
நட்டமாவாய் சொறுநஞ்சாவாய் நாயேனை
இட்டமாய் காப்பா யினி . (61 )

என்று கட்டளையிடுகிறார். ஆனால் கடவுளோ செவிசாய்க்கவில்லை. ஆற்றமை புலவருக்கு, பின்னும் அவர் பாடல் பிறக்கிறது,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிதே பார் .

என்று நையாண்டி பண்ணுகிறார். பின்னும்

அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை .

என்னவாமெனில், இவன் அப்பன் சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவன். இவன் தாய் பார்வதி மலையில் பிறந்த பேய்.இவன் அண்ணன் ஆனைமுகன் சப்பைக்காலன், பெரிய வயிற்றிறினை உடையவன் ஆறுமுகத்தானுக்கு நாம் எண்ணிப் பார்க்கும் பெருமைகள் இவை. மேலும் இந்தக் கடவுள் எங்க இனி நமக்கு உதவப்போகிறான் என்றவுடன் அடுத்த பாடல் இப்படியாகப் பிறக்கிறது,

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வற்றிருந்தக் கால் .(72)

காலனையும் காமனையும் காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் கொன்ற பழி போமோ?சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் என்கிறார் செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது 

மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார்.சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார்.
திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் (செங்காடு என்னும் சுடுகாட்டில்) குடிகொண்டிருந்தால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா?

கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணெயுண்ட மாயனார் – எண்ணும்
சிரக்கொப் பரையேந்திச் செங்காட்டி லீசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று .(125)

கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் எண்ணும் சிரக் கொப்பரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்றுரைக்கிரார் வேறொரு இடத்தில்.

காளமேகப் புலவர் திருக்கண்ணபுரம் கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவை அடைத்துவிட்டனர். அவர்கள் கோயில் கதவை அடைத்ததற்குக் காரணம் இது என்று வேடிக்கையாகப் பாடிய பாடல் இது.

வெண்ணெய் உண்ட மாயன் மண்ணை உண்டான். செங்காடு என்னும் ஊரில் (சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்துத் தந்த ஊர்) ஈசன் தலைக்கொப்பரை (தலைமண்டைத் திருவோடு) ஏந்தி இரக்கப் (பிச்சை எடுக்கப்) புறப்பட்டார் என்றெல்லாம் வருந்திக் கோவில் கதவை அடைத்துவிட்டார்களாம். – இப்படி ஒரு தற்குறிப்பேற்ற அணி.

பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றிநம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாரா கேள் | வேளை யென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேல் ஆயிற்று என் தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளை இனி யார் சுமப்பார் என்னாளும் உன் கோயில் நாசந்தானே .(157)

கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்தாய். நாளைக்கு உன்னை யார் சும்பபார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும் என்பது இன்னொரு புகழாப்புகழ்ச்சி!

இந்த வறுமையும் புலமையும் அன்று மட்டுமா? இன்று அவை சினிமாப்பாடல்களிலும் படங்களிலும் மிளிரக் காண்கிறோம். திருவிளையாடல் திரைப்படத்துத் தருமியை நாம் பார்த்ததுண்டு தானே!


எனினும் இன்று நாம் கேட்க இருக்கும் தந்தை தாயிருந்தால்....என்று அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது .



https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..



https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

தந்தை தாய் இருந்தால்…


https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE

.............................................................

( சுருக்கமான வானொலி நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் இது! )

அணிகளின் வரிசையிலே இன்று நாம் காண இருப்பது ‘புகழாப்புகழ்ச்சி அணி’. 
புகழாப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?

புகழாப்புகழ்ச்சி அணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்று குறிப்பிடும் விடயத்தின் மேன்மையை புகழ்ந்து கூறுவதாகும். இதனை, ’பழிப்பது போலும் பான்மையின் மேன்மை  புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி’ என்று தண்டியலங்காரம் இலக்கணம் கூறுகிறது.--(தண்டியலங்காரம், 84)

இவ்வாறாகப் புகழாமல் புகழும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணிக்கு 
’போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் - நீர்நாடன்
 தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
  ஓரடிக்கீழ் வைத்த உலகு ’ 

என்று தண்டியலங்காரம் மேற்கோள் பாடல் ஒன்றை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது. 

இந்தப் பாடலின் சுருக்கமான பொருள் என்னவென்றால்,சோழன் வேலால் வென்றும், புகழால் போர்த்தும், புயத்தால் தாங்கியும் உலகத்தைக் காக்கின்றான். அவன் இவ்வளவு முயன்று தாங்கும் உலகு, திருமால் தன் ஒரு பாதத்தில் அடக்கிய உலகாகும். இது சோழனின் தன்மையைப் பழிப்பதுபோல் உள்ளது. எனினும் திருமாலுக்கு நிகராக உலகம் முழுவதும் காக்கிறான், என உண்மையில் சோழனைப் புகழ்தலே அதன் நோக்கமாகும். ஆதலின் இது புகழாப் புகழ்ச்சி எனப்படல் ஆயிற்று.

இது போன்ற இகழ்வது போல புகழ் பாடும் பாடல்களை பாடுவதில் அதாவது நிந்தாஸ்துதிகளுக்கு பேர் போன புலவர் காளமேகம். அவர் நினைத்தவுடனேயே பாடல் பாடவல்ல ஆசுகவியுமாவார்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து 
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே 

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் 

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
 அப்படிப்பட்டவர் கவி காளமேகம்!.

நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு அவர் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. . பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோசிதமாக கிண்டல் செய்து மேன்மையினைக் கொண்டாடுவது அவர் பாணி.

ஒரு நாள் கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார் .

என்று நையாண்டி பண்ணும் பாணியில் புகழ்கிறார்.. இறைவனாகிய பெருமாள் நல்லவர்; அவருடய திருநாளும் நல்லது. அந் நன் நாளில் அவர் பருந்து வாகனத்தில் பவனி வருகிற மேன்மையை நையாண்டியாக ‘நல்லதொரு நாளில் பெருமாளை பருந்து எடுத்துக் கொண்டு போகுது பார்’ என்று நிந்தித்து துதி செய்கிறார். பின்னும் 

’அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை’ . 

சிவபெருமான் பிச்சை எடுத்துண்ணும் பிட்சாடனராகத் திருவிளையாடல் புரிந்தவனல்லவா? அன்னை உமையவளோ நீலவண்ணம் கொண்டவள்; தாய்மாமனாகிய கிருஷ்ணனோ இளம்வயதில் ஆய்ப்பாடியில் வெண்ணெய் திருடி உண்டு விளையாடல்கள் புரிந்தவன்’ இந்தப் பெருமைகளை எல்லாம் சொல்லவந்தவர் அதனை நையாண்டி பாணியில் சொல்லி இருப்பது ரசிக்கத்தக்கதல்லவா?

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வந்திருந்தக் கால் .(72)

என்று செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது இப்படியாக மேலும் நிந்தாஸ்துதி செய்வது இலக்கிய உலகில் ’புகழாப்புகழ்ச்சி அணிக்கு’ மேலும் அழகு சேர்ப்பது. மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார். சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார். திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் வந்து இருந்து விட்டால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா? என்பது பாடலின் பொருள். திருச்செங்காடங்குடியில் குடி இருக்கும் சிவனாரின் பெருமையினை புலவர் இவ்வாறாகக் காண்கிறார்.

https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..

’கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார் மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - என்னும் சிரக்கப் பரையேந்திச் செங்காட்டி லீசர் இரக்கப் புறப்பட்டா ரென்று’. (135) என்று வேறொரு பாடல் புகழாப்புகழ்ச்சி அணிக்கு அழகு சேர்க்கிறது.

திருச்செங்கோட்டிலே கோயில் கொண்டிருக்கும் ஈசனாகிய சிவபெருமான், மதிக்கத்தக்க தலையோடாகிய பிட்சாபாத்திரத்தை ஏந்தியவராகப் பிச்சை ஏற்று உண்பதற்குப் புறப்பட்டுவிட்டார்’ என்று அறிந்த கண்ணபுரத்துக் கோயிலார்கள், திருமாலும் சிவனைத் தொடர்ந்து போய்விடக் கூடாதே என்று பயந்து, திருக்கோயிற் கதவை அடைத்துத் தாழும் இட்டுவிட்டார்கள். அதனாலே, வெண்ணையுண்ட மாயனார், அது கிடையாமல் மண்ணைத் தின்பவரானார்! 
தாம் தரிசிக்கச் சென்றபோது திருக்கோயிற் கதவினைக் கோயிலார் அடைத்துத் தாழிடக் கண்டவர், இப்படிப் பாடி அவர்கள் செயலைப் பழித்தவாறாக பாடல் அமைந்த போதும் சிவன் உணவேதும் கிடையாமல், பிச்சை எடுக்கப் போய்விட்டான் எனப் பிட்சாடன் மூர்த்தத்தையும், வெண்ணை யுண்ட மாயன் மண்ணையுண்டான் எனத் திருமாலின் சிறப்பையும் பாடிய நயத்தினை அறிந்து இன்புறுக 

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி….


https://www.youtube.com/watch?v=XdPvopk3VrY 

. இனி, மேலுமொரு எடுத்துக் காட்டு பார்ப்போமா?
பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றி நம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

என்பது புலவரின் பாடல். கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் இப்போது 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்து விட்டாய். நாளைக்கு உன்னை யார் சுமப்பார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும். என்று நிந்தனையில் உரிமையோடு துதிக்கிறார் புலவர்.

எப்படி இருக்கிறது இந்த நிந்திப்பது போல துதி செய்யும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணி? 

இனி நிந்தாஸ்துதி பாடல் ஒன்று.!

https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது ..
 

தந்தை தாய் இருந்தால் என்று வசந்தகோகிலத்தில் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் பொன்னையாப் பிள்ளை இயற்றியது.…

https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE 

உருவாக்கம்: யசோதா.பத்மநாதன்.
19.3.2020.