Wednesday, October 7, 2020

அதிசய அணி – 9 - ( 02.10.20 )

 வழக்கமாக SBS வானொலியில் மாதத்தின் 4 வது ஞாயிறுகளில் 5 நிமிடங்கள் இடம் பெறும் தமிழ் அணிகள் பற்றிய அறிமுக  நிகழ்ச்சி, தம் குரலால் எம்மை வசப்படுத்தி வைத்திருந்த SPB அவர்களின்   மறைவை ஒட்டி அந்நிகழ்வு அடுத்து வந்த வெள்ளிக்கிழமை ( 2.10.2020 ) அன்று ஒலிபரப்பாகியது.    அதன் இணைப்பை வழக்கமாக இங்கு பதிவது வழக்கம். இம்முறை சில பல நிகழ்வுகளால் அதனை உடனேயே பதிவேற்ற முடியாது போயிற்று.  

குரலால் நம்மை வசமாக்கிய பெரும் பாடகர் S.B. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த மலரஞ்சலிகள்.🌹 அவர் ஆத்மா ஷாந்தி அடைவதாக!!

................................

இப்போது அணி பற்றிய வானொலி  இணைப்புக்குச் செல்ல கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்..

அதிசய அணி - 9 - SBS ( 2.10.2020)

 .............................

அதன் விரிவான எழுத்து வடிவம் கீழே:

கம்பராமாயணத்து நாடுகாண் காதையில் இலங்கையை காண்கிறான் கம்பன்.

கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு செய்து மாடி வீடுகள், அதாவது மேல் உள்ள மாடங்களின் உட் பரிகைகளில் வீழ்ந்து கிடக்கின்ற பூக்களின் மகரந்தத் துகள்களை பெருக்குகின்றார்கள் பெண்கள்.  அதனை இப்படியாக உரைப்பான்.

மாகாரின் மின்கொடி மடக்கினர்; அடுக்கி,

மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்

பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்!   


இன்றய நவீன பாடல் கூட https://www.youtube.com/watch?v=DXhoUscjoTM  2.19 – 2,35

தங்கைக்காக விண்மீன்களை பரித்து தருவார்கள் வானவில்லை கேட்டால் ஒடித்து ஒடித்து தருவார்கள் என்று சொல்கிறதே....

இவ்வாறெல்லாம் நிகழ்தல் சாத்தியமா? கவிஞர்களுக்கு மட்டும் அது சாத்தியம். இப்படியாக விரிகிற இந்தக் காட்சியைப் பார்க்க அதிசயமாக இருக்கிறதல்லவா ? அது தான் அதிசய அணி. இன்றைக்கு நாங்கள் பார்க்க இருக்கிற அணி.

இந்த அதிசய அணி பற்றி தண்டி அலங்கார இலக்கணம் என்ன சொல்கிறது ?

கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது சொல்லும் போது, உலக இயல்பில் இருந்து மீறாத படி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசய அணி என்கிறது. 

     மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி

     உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி

     ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்

                                  

இது எப்படி இருக்கும் என்று விளக்குவதற்கு தண்டி ஆசிரியர் ஒரு உதாரண வெண்பா ஒன்று தருகிறார்.

"திங்கள் சொரி நிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்

பைங்கிள்ளை பாலென்று வாய் மடுக்கும் - அங்கயலே

காந்தர் முயக் கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்

ஏந்திழையார் பூந்துகிலா மென்று''

முழுநிலா முற்றம். அங்கே கிளிகள் வெற்றுக் கிண்ணங்களைப் பார்த்து அதிலே பாலிருக்கின்றது என்றெண்ணி பாலை அருந்த முனைகின்றன; பிறகு தான் தெரிகிறது அது பாலில்லை; பால்வண்ண நிலவு என்று. அப்பாலே கணவனும் மனைவியுமாக இருவர். இன்பத்தின் இறுதியில் பெண் தன் துகிலை எடுக்க அந்த துகிலோ கைக்கு அகப்படவில்லை. ஏனென்றால் அது துகிலல்ல அது நிலவின் ஒளி. இவ்வாறு அஃறினை உயர்திணை என பாகுபாடின்றி நிலவின் ஒளி எல்லோருக்கும் மயக்கத்தைக் கொடுக்கிறதாம். நிலவின் ஒளியைப்பாட வந்த புலவர் என்ன ஒரு அதிசயமான காட்சியை புனைந்து விட்டார் பாருங்கள்? இது தண்டி அலங்கார இலக்கண ஆசிரியர் சொல்லும் அதிசய அணிக்கான உதாரணம்.

இதே காட்சியினை கலிங்கத்துப் பரணியிலும் கூட காணலாம். அதில் இதே காட்சி இப்படியாக வருகிறது,

கலவி களியின் மயக்கத்தால்

கலை போய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்

நீள்பொன் கபாடம் திறமினோ!

இந்த அதிசய அணி இதே உதாரணத்தோடு இந்தப் பாடல் காட்சியில் இப்படியாக மலர்கிறது.

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்.....https://www.youtube.com/watch?v=Y6YtvVqk03I 

( 2.33 – 3.15 )

பாண்டிய மன்னனின் நாட்டில் அதிசய அணியில் ஒன்று முத்தொள்ளாயிரத்தில்  இப்படி ஜொலிக்கிறது.

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம்

நறுமணம் கொண்ட,நல்ல  நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மேலே நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, ஏன்? கூரான வேலை ஏந்திய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த, விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்ட, பாண்டியனின் மார்பைச் சென்று அடையத்தானே இப்படித் தவம் இருக்கிறாய்? என்பது அதன் பொருள்.

இது இன்றய திரைத்தமிழில் இப்படியாக ஒலிக்கிறது.எனக்கே எனக்கா..... (ஜீன்ஸ்)

Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

(4.50 – 5.00 )

இதனைப் போல கவிஞர் வைரமுத்து இப்படியாக ஒரு பாடல் தருகிறார்.வெள்ளி மலரே... வெள்ளி மலரே...1.16 - 1.35

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளி மலரே...

இந்த மலர் என்று சொன்னவுடன் கண்ணதாசனின் அதிசய அணியில் மிளிரும் இந்தப்பாடலை கடந்து போவிட முடியுமா என்ன?https://www.youtube.com/watch?v=2z8mTWg9vZw

2.10 – 2.48

நளவெண்பா அதை இப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 

‘மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்

காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து.

அதாவது மலர் கொய்து கொண்டிருக்கிற பெண்ணொருத்தி அவள். அவள் முகத்தை தாமரை என்று எண்ணி மொய்க்கிறது வண்டு. அவளோ பயந்து கைகளால் முகத்தை மூட வண்டு அவள் கரங்களைத் காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்க அவளுக்கு பயத்தால் வியர்க்கிறதாம்.

இவைகள் எல்லாம் உயர்வு நவிற்சி அணி என்றும் அதிசய அணி என்றும் சொல்லப்படும் அணியைப் பயன் படுத்தி கவிஞர்கள் புனைந்த அழகிய சொல் ஓவியங்கள்.https://www.youtube.com/watch?v=NDIXSHmHRS8

1.30 – 1.54

என்ற இந்த வரிகளை நாம் சினிமாப்பாடலாக பல தடவைகள் கேட்டிருக்கிறோம் அல்லவா? கொடி இடை எப்படி படை கொண்டு வரும்? அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது நளவெண்பா. அங்கு தமயந்தி. படையோடு போகிறாள் எது படை?

நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

ஆளுமே பெண்மை அரசு!

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய 4 குனங்களும் அவளுக்கு நாற்படை. மெய்வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களும் அவளுக்கு நல்ல அமைச்சர்கள், சிலம்பொலி அவளது முரசொலி, வேற்படையும் வாளும் அவள் கண்கள், நிலவு முகம் வெண்கொற்றக் குடையாக அவளுடய பெண்மை அரசை ஆழுகிறது என்பது அதிசய அணியை பயன்படுத்தி புலவர் காட்டும் காட்சி.

பெண்ணின் கண்களை வர்ணிக்காதவர் யார் இருக்கக் கூடும்? வள்ளுவர் கூட அதற்கு விதிவிலக்கல்ல.அவர்,

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

என்கிறார். அதாவது இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்கள் என்பது அவர் கணிப்பு. 

இந்த சினிமா இசை அதனை இப்படியாக அழகியலோடு உரைக்கிறது.https://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM

2.08 – 2.37

இந்தப் பெண்ணுக்கோ காதல் நோயை சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அது  இன்றய பாடல் ஒன்றில் சொப்பனம் காண வழியே இல்லை என்று இப்படியகப் புலம்புகிறது https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE 

( 2.05 – 2.30 )

 இந்த முத்தொள்ளாயிரப்  பெண்ணுக்குத் தன் கண் மீது கோபம். தோழிக்கு அவள் இந்த வருத்தத்தை இப்படியாகச் சொல்கிறாள். கனவிலே தைரியமாகக் காண முடிகிற காதலன் பாண்டியனை நேரில் காணும் போது எங்கிருந்தோ இந்த நாணம் வந்து இந்தக் கண்கள் தாழ்ந்து போய் விடுகிறதே. அது தான் அவள் மீதே அவளுக்கு கோபம்.

கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,

நனவில் எதிர்விழிக்க நாணும்  

என்பது அவளின் பெண்ணின் முறைப்பாடு. அதனால் அவள் இன்றைக்கு கண் விழிப்பதாக இல்லை. கண்ணைத் திறந்தால் கண்ணுக்குள் தான் சிறைவைத்த காதலன் பாண்டியன் தப்பி விடுவான். அதனால் நான் கண்களைத் திறக்கவே மாட்டேன் என்கிறாள் மகள்.

தளைஅவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி

களையினும்என் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம்

வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து

என்கண் புகுந்தான் இரா.

பாண்டிய மன்னனின் புகழையும் பெருமையையும் கூற வந்த புலவர் எத்தனை நயத்தோடும் அழகோடும் அதிசய அணியில் அசத்தி விட்டார் பார்த்தீர்களா. 

திருக்குறளில் வளையல் ஒன்று படுகிற பாடு இது!

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

தலைவன் பிரிந்த செய்தியை பிரிவுத்துயரினால் மெலிந்த தலைவியின்  முன் கை மூட்டில் இருந்து களன்று விழும் வளையல் ஊராருக்கு தெரிவித்து விடுமே என்ற கவலை இந்தப் பெண்ணுக்கு! 

இறுதியாக இன்றய பிரிவுத்துயர் கொண்ட பெண்ணுக்கு மோதிரமொன்று வளையலாகி பிறகு அதுவே ஒட்டியாணமாய் ஆகும் திரைப்பாடல் அதிசயத்தோடு இன்றய அதிசய அணி பற்றிய நிகழ்வு நிறைவுக்கு வருகிறது.

செளக்கியமா கண்ணே செளக்கியமா…. ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்…..


 https://www.youtube.com/watch?v=yXCQ1BSpgfQ&feature=emb_logo

No comments:

Post a Comment