SBS அரச வானொலியில் கடந்த வருடம் மாதம் ஒருதடவை ஒலிபரப்பாகி வந்த நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - நிகழ்ச்சியில் கடந்த டிசெம்பர் மாதம் நிகழ்ந்த இறுதி நிகழ்ச்சி இது. கீழ்வரும் link ஐ அழுத்துவதன் மூலம் அதன் ஒலிபரப்பை கேட்கலாம்.
sbs வானொலியில் தன்மை நவிற்சி அணி
அப்படிக் கேட்க விரும்பாதவர்கள் விரும்பினால் கீழே உள்ள எழுத்துவடிவத்தை வாசிக்கலாம்.
......................................
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…..
https://www.youtube.com/watch?v=g5rxdBRSik8
இப்பாடலை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம் இல்லையா? இந்தப் பாடலுக்கும் நிகழ்ச்சியில் பேச இருக்கும் தன்மை நவிற்சி அணிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சம்பந்தம் இருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்வது தன்மை நவிற்சி அணி. அதாவது, எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு அதன் இயல்புத்தன்மை மாறாதவாறு பாடப்படுவன தன்மைநவிற்சி அணியின் ஆகும்.
‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மையாகும்’
என்பது தண்டியாசிரியர் இவ்வணிக்குத் தரும் விளக்கமாகும். பொருளின் இயல்பை நேரில் பார்த்தது போல தோன்றுமாறு உள்ளதை உள்ளபடி விளங்கச் சொல்வது இவ் அணியில் சிறப்பான இயல்பு.
இப்போது இவ்வணியில் வெளிவந்த சில சினிமாப்பாடல்களைக் கேட்போமா?
1.இன்னும் கொஞ்சநேரம் இருந்தாத்தான் என்ன…
https://www.youtube.com/watch?v=I8UrKhurkuk
2.கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி….
https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4
3.உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு..
https://www.youtube.com/watch?v=wqSYBDggWis
4. கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு...
https://www.youtube.com/watch?v=Cj2XKo7zodA
5. ஊர்வசி ஊர்வசி….(4.20 -4.40)
https://www.youtube.com/watch?v=2lRX7zNSgX4
இப்பாடல்களில் எல்லாம் கவிஞர் தான் சொல்லவரும் கருத்தை எந்த விதமான மேற்கோள்களும் இல்லாமல் இருப்பதை இருந்தவாறாக காட்டியிருக்கும் பாங்கு எளிமையான இந்த அணிக்கு சில சினிமாப்பாடல் உதாரணங்கள்.
பொருளணியிலே தண்டியாசிரியர் குறிப்பிடும் இந்த தன்மை நவிற்சி அணியிலே பொருள் நவிற்சி அணி, குண நவிற்சி அணி, இன நவிற்சி அணி, தொழில் நவிற்சி அணி என விரிவான சில உட்கட்டமைப்புகளும் உள்ளன.
பொருள் நவிற்சி அணி என்பது ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் தெரியும் தன்மையை விபரிப்பது. அதாவது வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தை அதன் இயல்பு மாறாது சொல்லுதல் பொருள்நவிற்சி அணியாகும்.
உதாரணமாக சிவனின் புற உருவத்தை கூறும்
நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன்.... என்ற இப்பாடல் அடிகள் அதற்கு
ஓர் உதாரணமாகும்.
பொட்டுவைத்த முகமோ….
https://www.youtube.com/watch?v=Wem89JUffyE
குணத்தன்மையணி என்பது ஒரு பொருளினுடய உள் இயல்பினை விளக்குவதாகும். உதாரணமாக, உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்து, நுரையும் தள்ள, விழி நீர்அரும்பத், தன்மறந்தாள்…என்று வரும் பாடலடியில் ஒருவருடய குண இயல்பு - உள்ளார்ந்த குணாம்சம் ஒன்று உள்ளவாறு சொல்லப்படுகிறதல்லவா? அது குணத்தன்மையணியாகும். இந்த சினிமாப்பாடல் அதற்கு சொல்லக்கூடிய ஒரு நவீன உதாரணம்.
.குமாரி என் நெஞ்சு விம்மி பம்மி நிக்குது குமாரி…
https://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U&lc=UgjIubfiFAFzm3gCoAEC
அடுத்தது இனத்தன்மையணி. இனத்தன்மை என்பது தனக்கேயான இனத்தின் இயல்பை விளக்குவது. உதாரணமாக பாம்பு ஒன்றின் இயல்பை இப்படியாக ஒருபாடல் விளக்குகிறது.
பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி.
இதில் பாம்பு இனத்தினுடய இயல்பு விபரிக்கப்படுகிறது. அதாவது, ஒழுங்குற அமைந்த கோடுகள் கொண்ட வயிற்றினை உடையன.நஞ்சு நிறைந்ததால் கரிய கழுத்தை உடையன.விரிந்த படத்தில் பிறையை ஒத்த புள்ளிகளை பெற்ரவை.மேலும், இரண்டாகப் பிளவுபட்ட நாக்கை உடையன. நஞ்சை பிற உயிர்கள் மீது செலுத்தவல்ல நுண்ணிய துளைகொண்ட பற்களைக் கொண்டவை என்பது இப்பாடலின் பொருளாகும்
பெண் இனத்தினுடய இயல்பை வேடிக்கையாக விபரிக்கும் இந்த சினிமாப்பாடலும் கூட அதற்கு ஒரு உதாரணம் தான்.
பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே….( 1.25 - 3.03)…
https://www.youtube.com/watch?v=_VLmEIsvVHE
தொழில் தன்மையணி என்பது தொழிலைப் பேசுவது.
சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்
தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் –
என்ற இந்தப் பாடலடியில் வண்டினுடய தொழில் சொல்லப்படுகிறது. விவசாயத் தொழிலின் மேன்மையை சொல்லும் இப்பாடல் அதற்கு இன்னொரு உதாரணம்.
விவசாயி… விவசாயி… 0.39 – 1.15.
https://www.youtube.com/watch?v=bewqv9G6YX0
உள்ளதை உள்ளவாறாக விபரித்த இந்த தன்மைநவிற்சி அணியோடு நிறைவுக்கு வரும் அணிகள் குறித்த இந் நிகழ்ச்சியினை நிறைவு செய்யும் முன்பாக இதுவரை காலமும் இந் நிகழ்ச்சிக்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் பல்வேறு விதங்களில் உதவியையும் ஒத்தாசையையும் தந்து நிகழ்ச்சியினை மெருகு படுத்தி குரல் வெற்றிடங்களைச் சொல்லுக்குச் சொல் சரிபார்த்து பாடல்களை தோதான இடங்களில் இணைத்து அதனை நிறைவான நிகழ்ச்சியாக்கி நேயர்களுக்கு வழங்கியதில் எஸ்பிஏஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் றைசெல் அவர்களுக்கு ஒரு பாரிய பங்குண்டு. அவருடய உழைப்புக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த அவருடய தொழில் நிபுணத்துவத்துக்கும் நம்மதமிழ் ஊடாக என் மனமார்ந்த நன்றி
இந் நிகழ்ச்சியை இதுவரைக் கேட்ட எஸ்பிஏஸ் நேயர்கள் அனைவருக்கும் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்....
https://www.youtube.com/watch?v=1LrOTWoh7vs