அண்மையில் ஓர் அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. கொரோனாக் காலம் வேறு. அதனால் தங்கியிருப்போர் தொகை கனிசமான அளவு குறைந்திருந்தது. யாரும் யாரையும் பார்க்க வரமுடியாத நிலை. அது தாதியர்களுக்கு சற்ரு செளகரிகத்தைக் கொடுத்திருந்தது. வளாகம் அமைதியில் நிரம்பிப் போய் இருந்தது. அதனால் தாதியர்களுக்குப் போதுமான நேரம் இருந்ததோடு பணிச்சுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு குறைந்திருந்தது. எல்லோரும் நோயாளிகளோடு அன்புறவோடு பழகினார்கள். அக்கறையோடு இருந்தார்கள்.
வாழ்க்கை பல நேரங்களில் அனுபவங்களூடாக பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனை ஏற்று நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளும் போது நாம் இன்னும் நல்ல மனிதர்களாக மாற சந்தர்ப்பம் கிடைக்கிறது.
சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் நாம் பின்னாளில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது.
எது வாழ்க்கையில் முக்கியம் என்பதும்; நாம் வீணாக்கிய நேரங்களும்; ஆரோக்கியத்தின் முக்கியத்துவமும் புரியும் இடமாக ஆஸ்பத்திரியும் அனுபவங்களும் அமைந்து விடுகிறது.
‘ஏணி; தோணி; வாத்தியார்’ என்று ஒரு சொற்கூட்டை முன்நாளில் நம் சிறுவர்களாக இருந்த போது சொல்வது வழக்கம். ஏணி ஏற்றி விட்டு தன் இடத்தில் இருக்கும். தோணி ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு தண்ணீருக்குள் இருக்கும். வாத்தியார்களும் அப்படித்தான். என்பதால் அதனை சேர்த்து அப்படிச் சொல்வது வழக்கம்.
இவர்களுக்குள் வைத்தியர்களையும் தாதியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தைப் பழுத்து பார்ப்பவர்களையும் இதற்குள் சேர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.
பழுதுபட்டிருப்பவற்றைச் செப்பனாக்கித் தந்து விட்டு தம் இடத்தில் இருப்பவர்கள்.
கூடவே மனநிறைவு தந்த ஒரு விடயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். என் குடும்பவைத்தியர் ஒரு தமிழர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அவர் தான் எங்கள் குடும்ப வைத்தியர். சுகவீனமுற்றுப் போன போது அவர் பரிந்துரைத்த சிறப்பு நிபுணர் ஒரு தமிழர். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த போது என்னைப் பார்த்துக் கொண்டவர் - என்னை மாத்திரமல்ல - அந்த தங்கு விடுதியை கவனித்துக் கொண்ட வைத்தியர் புதிதாக கற்றுத் தேறி தொழில்பார்க்க வந்திருக்கும் ஒரு இளம் தமிழ் வைத்தியர். டொக்டர். துஷ்யந்தி என்பது அவர் பெயர். துஷ்யந்தி என்ற அந்த இளம் வைத்தியர் - அவரிடம் இருந்த அன்பு, அக்கறை, கவனிப்பு, அவதானம், அர்ப்பணிப்பு, அன்பு, தாய்மைப் பண்பு நிறைந்த ஒருவித மென்மை, வேலை மீது அவர் கொண்டிருக்கும் நேசம்,.... ஆஹா... அது தான் எத்தனை அழகு! டொக்டர் துஷ்யந்தி என்பது அவர் பெயர். நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தை தாயே!
சரி இவர்கள் தான் தமிழர்கள் என்று பார்த்தால் எனக்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஒரு தமிழர். அது குறித்தும்; எவ்வாறெல்லாம் அறுவை சிகிச்சை நடைபெறப்போகிறது என்பதையும்; அதில் தன் பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதையும் அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று வாசலில் வைத்து எனக்கு விளக்கிக் கூறி புன்னகையோடு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று இன்முகத்தோடு சொன்னவர் இன்னொரு இளம்தமிழ் வைத்தியர் டொக்டர். காயத்திரி. நான் வீடு வரும் வரை தினம் தோறும் வந்து பார்த்து என் தேறுதல் பார்த்து மகிழ்ந்து என்னை விடையனுப்பி வைத்தவர்.
இவ்வாறாக வீடு வரும்வைரை தமிழர்களாலே அன்னியநாடொன்றில் நான் சூழப்பட்டிருந்தேன்; கவனிக்கப் பட்டிருந்தேன் என்பது ஓர் ஆசீர்வாதம் தான் இல்லையா?
எல்லா வைத்தியர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள் என்ற போதும் தமிழன் கையால் அன்னிய இடத்தில் ஒரு சிறந்த சேவையைப் பெறும் சுகம் சற்று வித்தியாசமானது.
இந்த இளம் வைத்தியர்கள் துஷ்யந்தியும் காயத்திரியும் என் பிள்ளை வயதொத்தவர்கள். சிட்னியில் வாழும் இந்த சிறு தமிழ் சமூகத்தில் நான் முன்னெப்போதும் கண்டறிந்திராதவர்கள்.
எதிர்பாராத, மிக வேண்டப்படும், இவ்வாறான தருணங்களில் மிக தற்செயலாக அமைந்து விட்ட இப்படியானவர்களின் பிரசன்னமும் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் அவர்களின் உயர்வும் பண்பும் என இவற்றை எல்லாம் காணவும் அனுபவிக்கவும் கிடைத்தது இறைவனின் பெருங்கருணையின்றி வெறென்னவென்று நான் சொல்ல!
என் வாழ்வில் இடம்பெற்ற இந்த முதலாவது அறுவை சிகிச்சை பலவிதங்களில் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தந்து போயிருக்கிறது. அவைகளை எண்ணிப் பார்க்கிற போது இந்த இளம் வைத்தியர்களும் அவர்களின் மனதுக்கிதமான சேவையும் கூடவே வந்து செல்லும். இவர்களை எல்லாம் இப்போதைக்கு மறக்க முடியும் என்று தோன்றவில்லை.
வாழ்க்கையை இன்னும் சரியாக செப்பனிட்டுக் கொள்ளத்தக்க வாய்ப்புகளையும் அனுபவங்களையும் இந்த அறுவை சிகிச்சை எனக்கு வழங்கி இருக்கிறது.
அன்பே சிவம்! கொடுப்பதனால் குறைவு படாதது அன்பு. தேவைப்படுமிடத்து இலவசமாக வழங்கத்தக்கது அன்பு.
இந்த இளம் வைத்தியர்களும் தாதியர்களும் அதையே எதிர்பார்ப்பின்றி புலமையோடு நமக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.
பிறகு அடுத்து வருபவருக்குக் கொடுக்க தயார் நிலையில் அங்கேயே நிற்கிறார்கள். அவர்களை நடமாடும் கடவுள்கள் என்பது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் கடவுளால் தன் தொழிலைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
அதில் வேறொரு மொழிபேசும் தேசமொன்றில் முன் பின் தெரியாத தமிழர்கள் கையால் அந்தச் சேவையைப் பெறுவதென்பது கொஞ்சம் விஷேசம்.
இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது......
No comments:
Post a Comment