Saturday, July 1, 2023

தெருவோரம் அந்தச் சிறு மரம்



 சூரியன் தொட்டணைக்க மழைத்துளி பட்டணைக்க

முளை விட்ட அந்தச் சிறு செடி நாளை

விருட்சமாகுமோ? சிறு செடியென்றே ஆகுமோ?

பூடாகுமோ? விலங்குகளுக் கிரையாகுமோ?


பூக்குமோ? பூவோடு கனி தருமோ?

தேன் தருமோ? தேனோடு, வந்தமர கிளை தருமோ?

மனிதா! நீ வெட்டிச் செல்ல வழிவிட்டே மெல்ல சருகாகுமோ?

திருவுளமே! பெருநிலமே! அது வளர சம்மதமோ?


தளிர் விடுமோ? தனிமரமாய் இலங்கிடுமோ? 

கிளை விடுமோ? கிளைகளில் கிள்ளைகள் தங்கிடுமோ?

பழமரமோ? விதை தருமோ? தேன்பூக்களும் அங்குள லாகுமோ?

காற்று தருமோ அன்றேல் காற்றே முறித்து சாய்த்திடுமோ?


நடந்து செல்கிறாள் நிறைமாதத் தாயொருத்தி

பக்கத்தில் சிறு பிள்ளை கை பிடித்து போகிறது

திரும்பிப் பார்க்கிறேன் பெரு விருட்ச நிழலிலே

சிறு செடி அதுவும் தாயோடு நிற்கிறது.


துளிர் விடுவாய் சிறு மரமே! மகிழ்ந்திருப்பாய் பொறு மனமே!

குழந்தை நாளை பெரிதாகும்; களித்து நிழலில் கதை பேசும்

நீயும் நாளை மரமாக பழங்கள் நாளும் பழுத்து வரும்.

மரமும் மனிதனும் ஒன்றாகும் நாளும் அன்று வந்தணையும்.


மழையும் வெயிலும் மண் தரையும்

மகிழ்வாய் உதிக்கும் மரமனைத்தும்

உனதோ எனதோ என்றெண்ணா

எல்லாம் உயிரே என்றெண்ணி

மனசைக் கொஞ்சம் பெரிதாக்கி

இறைக்கும் கொஞ்சம் இடமொதுக்கி

கருணை உள்ள பெருந் தாயை

பணிந்தே போற்றி இரு மனமே!


ஆக்கம்: யசோதா.பத்மநாதன்

01.07.2023


No comments:

Post a Comment