Monday, June 12, 2023

இலையுதிர் காலத்தில் நடு நின்ற நெடுமரம்

 


கூரைமீதேறி நின்று
கூவி ஊரெழுப்பும் ஒரு 
செந்நிறச் சேவலைப் போலவும்
சந்தியா காலத்தில் நேரும் ஒரு
சூரியத் தூரிகை தீட்டும்
வண்ணத்து ஜாலம் போலவும்
சடையோடு கூடிய 
சிங்கம் ஒன்றின் 
கம்பீர நடை போலவும்
தோகை கொண்ட பெருமையோடு 
கழுத்துயர்த்தி நடக்கும் ஒரு 
நீலவண்ண மயில் போலவும்
இராச்சிய பாரத்தை ஏற்று நின்று
படையணியைப் பார்வையிடும் ஒரு
முடிக்குரிய ராஜா போலவும்
இலையுதிர் காலத்திலும் 
நிற்கிறதந்த 
இலையுதிர் காலத்து நெடுமரம்!




தென்றல் மெதுவாய் வருகிறது
இளவெய்யில் தானாய் காய்கிறது
மெல்ல இலைகள் உதிர்கின்றன
அடியில் அதுவாய் விழுகின்றன

போவோர் வருவோர் எல்லாம்
பேசிய படியே போகின்றார்
பார்க்க யார்க்கும் தோன்றாமல்
பாதை எங்கும் திரிகின்றார்

உதிரும் போதும் அழகாக
சிவந்த போதும் செழிப்பாக
சிரிக்கும் அந்தப் நெடுமரம்
இயற்கை தந்த பெரு வரம்!


வழியோரம் நிற்கிறது 
ஓர் இலையுதிர்காலத்து நெடுமரம்
செந்நிற இலைகளை வேருக்கு உரமாக்கி
பச்சை நிற மரங்களுக்கு மத்தியில்
நெடுத்துயர்ந்து தனியாக நிற்குமந்த 
கம்பீரத் தனிமரம்
நினைவுறுத்திப் போகிறது
சுயத்தோடு நிற்குமொரு 
விவாகரத்துப் பெற்ற பெண்ணை!

வேரில் விழுந்த செவ்விலைகள்
வேர்க்கு நல்ல உரமாக
நாளை அரும்பும் புது இலைகள்
சொல்லி நிற்கும் அவள் இருப்பை!
உண்மையான வாழ்வின் பொருளை!



படப்பிடிப்பும் கவிதை வரியும் : யசோதா.பத்மநாதன்
11.06.2023
( Targo road, Toongabbie)

No comments:

Post a Comment