Sunday, May 4, 2025

இலையுதிர்காலத்து வண்ணங்கள்

 இன்று தேர்தல். 

இப்பொழுது நேரம் 3.5.1025 சனிக்கிழமை இரவு 10.45.

தொழில்கட்சி மீண்டும் பெரும்பாண்மை வாக்குகளோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. சற்று முன்னர் நடைபெற்ற தேர்தல் வெற்றிப் பேச்சையும் எதிர்கட்சியான லிபரல் கட்சித்தலைவர் பீற்ரர் டட்டன் தன் தொகுதி இருக்கையையும் இழந்து போய் தன் ஆதரவாளர்களுக்கு முன் பேசிய பேச்சையும் தேசிய தொலைக்காட்சி சற்ரு முன் ஒளிபரப்புச் செய்திருந்தது.

என்ன ஒரு கண்ணியமான மரியாதையான நாகரிகமான பேச்சாக அது இருந்தது!

படு தோல்வியைச் சந்தித்திருந்த பீற்றரை நினைவுகூர்ந்து அவரது 25 வருடங்களுக்கு மேலான உழைப்பை வியந்து பாராட்டிய அல்போவும் பெரும்பானை வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வந்த அல்போவுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தன் பாராட்டுக்களைத் தனிப்பட்ட முரையில் தெரிவித்ததோடு தன் ஆதரவாலர்கலுக்கு முன்னாலும் தெரிவித்த அரசியல் பண்பாடும் வியந்து போற்றக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

இன்று மதியத்துக்குப் பின்னரான ஓய்வுப் பொழுதொன்றில் வாக்களிக்க அருகில் இருந்த நிலையத்துக்குப் போயிருந்த போது எனக்கு முன்னால் ஒருவரும் என்னோடு ஒருவரும் தான் நின்றிருந்தோம். தேர்தல் என்பதற்கான அத்தாட்சியாக இரு கட்சியின் ஆதரவாளர்கள் 3, 4 பேர் வாசலில் விளம்பரப் பத்திரிகைகளை வைத்துக் கொண்டு நின்றதைத் தவிர வேறெந்த ஆரவாரங்களும் இருக்கவில்லை.

அழகிய ஜனநாயக நாகரிகம் மிக்க நாடு!

அது நிற்க,

இன்று இங்கு மீண்டும் வந்ததற்குக் காரணம் வாக்களித்துவிட்டுத் திரும்பி நடந்து வரும் போது கண்ட இலையுதிர்காலத்துக் காட்சிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தான்.

இங்கு சிட்னியில் இப்போது இலையுதிர்காலம். ஏப்பிரல், மே, ஜூன் மாதங்கள் இலையுதிர்காலத்துக்குரியவை. பச்சையாக இருந்த இலைகள் எல்லாம் நிறம் மாறி மஞ்சளில் இருந்து சிவப்பு மற்றும் பிறவுனுக்கு இடையில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் காட்சியளிக்கும். பச்சை இலைகளும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. குளிரோடும் மழையோடும் இந்த மூன்று மாதங்களும் மெல்ல மெல்ல குளிர்காலத்துக்கு தன்னை உருமாற்ற ஆரம்பிக்கும்.

நேரம் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப் பட்டு எமக்கு ஒருமணி நேரம் அதிகப்படியாகக் கிடைக்கும். காலை ஆறு மணிக்கும் இருள் விலகாதிருக்கும். மாலை விரைவில் இருண்டும் விடும். மாலை ஆறு மணிக்கு முன்னரே  இருள் முழுவதுமாகச் சூழ்ந்து விடும். 

அதுவே  மீண்டும் கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் முன் நகர்த்தப் பட்டு பகல் நேரத்தை அதிகரித்துத் தரச் செய்யும்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் பார்த்த ஆச்சரியங்களுக்குள் எனக்கு இன்றும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு விடயம் இந்த நிறம் மாறும் பச்சை இலைகள் தான். சிறு வயதில் இலை பச்சை நிறம் என்று படித்ததை பொய்யாக்கும் வகையில் எத்தனை எத்தனை வண்ணங்கள்...சரி, நீட்டி முழங்கி என் பிரஸ்தாபங்களை இங்கே சொல்வதை விட வழியில் பொறுக்கிய சில இலைகளை இங்கே கடை பரப்புகிறேன். பிறகொரு நாளில் படம்பிடித்தால் அதனை வேறொரு பதிவாக பின்னர் தருகிறேன்.









நிலத்தில் கிடந்த இலைகள் இவை, பொறுக்கி வந்து செய்தவை கீழே வருகின்றன. இந்த நிறங்களைக் கமறா சரியாகப் பதிவு செய்ததா என்று தெரியவில்லை. நேரே பார்க்கும் போது இலையில் நிறமும் அதன் பளபளப்பும் மினுக்கமும் சத்து நிறைந்து கிடக்கும் அதன் மலர்வான செழுமையும் என்னை சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாத்துவிட முடியாதென்ற போதும் முடிந்த சிலவற்றையேனும் என் ஆசைக்காகப் பாதுகாக்க எடுத்த முயற்கிகள் கீழே வருவன.







சும்மா இவைகளை என் கொப்பி ஒன்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். அவ்வலவு தான். வேறு என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்? லெமெனேற் செய்யலாம் என்றால் என்னிடம் அந்த இயந்திரம் தற்போது கைவசமில்லை.

இவைகள் தான் இந்த நிறங்களில் காட்சியளிக்கின்றனவென்றால் என் வேலைத் தலத்தில் Bottle brush என்ற ஒரு காட்டுத் தாவரம் பூத்திருக்கிற விதத்தைப் பாருங்கள். அது கூட மஞ்சளும் ஒறேஞ்சும் கலந்த ஒரு நூதன நிறத்தில் பூத்திருக்கிறது. எங்கள் கட்டிடத்தின் நிறத்தின் சாயலை ஒத்ததாக அதனை நாட்டியவரின் தூர நோக்குப் பார்வையையும் அந்த நேரத்தில் நான் வியக்காமல் இல்லை. 
அழகாக இருக்கிறது என்று கடந்த வியாழக் கிழமை 2.5.25 அன்று சும்மா என் கை தொலைபேசியில் எடுத்த அந்தப் பூக்கள் இன்று உங்கள் பார்வைக்காகவும்....






இந்தக் காட்டுப் பூக்கள் பல நிறங்களில் பல திணுசுகளில் மலர்வன.  எங்கள் மலர்களின் காதலி கீதமஞ்சரி வந்தால் இது பற்றி நிறைய வியங்களைச் சொல்லுவார். எனக்கு இந்தப் பூ நிறையத் தேனைக் கொண்டிருக்கும் என்பதும் அதன் காரணமாக அதனைப் பருக பஞ்சவர்ணக் கிளிகள் அடிக்கடி வந்து பூக்களில் அமர்ந்து தேனுண்ணும் என்பது மட்டும் தான் நான் கண்டு அறிந்து கொண்டது.

அட, பூக்கள் மட்டும் தான் இந்த நிறங்கள் என்றால் கனிகளும் கூடவா?  ஒரேஞ், அதன் சின்ன குழந்தை போல இருக்கும் மண்டரின் என்று சொல்லப்படும் பழம் - இவைகள் இனி அடிக்கடி மலிவு விலைகளுக்கு சந்தையில் கிடைக்கும். அது நமக்குத் தெரிந்தது தான். அவைகள் காய்க்கிற பருவம் இப்போது. அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால் பியேர்ஸ் பழங்களை சிவப்பும் ஒரேஞ்சும் கலந்த வண்ணத்தில் கண்டிருக்கிறீர்களா? அந்த ஆச்சரியத்தையும் கடந்தவார இறுதியில் என் வேலைத்தலத்துத் தோழி ஒருத்தி எனக்குக் காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். அதனை உங்களுக்கும் காட்டுகிறேன். பாருங்கள்! சிவப்பு நிற பியேர்ஸ் பழம்!








இலையுதிர் காலத்து வண்ணங்களை என்னவென்று சொல்வது? இயற்கை பெரிய பெரிய ஆச்சரியங்களை எல்லாம் தனக்குள் பொத்தி வைத்திருக்கிறது. அவற்றை கண்டு புளகாங்கிதம் அடைய எனக்குக் கொடுப்பனையும் வாய்த்திருக்கிறது. அதனை என்னவென்று சொல்வது.....

வேண்டத்தக்கதறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
யானும் அதுவே வேண்டினேன் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்றுண்டெனில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!


2 comments:

  1. இயற்கையை ஊன்றிக் கவனித்தால் அழகு மாத்திரமல்ல, வாழ்க்கையின் அரிய தத்துவங்களையும் அது பேசுவதைக் கேட்கலாம்.

    இலையுதிர்வது பழையன கழிந்தால் தான் புதியன துளிர்க்கும் என்பதை சொல்கிறது, நதி ஓடிக்கொண்டிருப்பது மனிதர்களும் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது, பருவநிலை மாற்றங்கள் வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும் என்பதை சொல்கிறது. இரவு பகல் கூட அப்படித்தான்.

    இப்படியாக எத்தனையோ விடயங்களை அது பேசிக்கொண்டே இருக்கிறது...காது கொடுத்துக் கேட்டால் இலைகள் கூட பேசுவதைக் கேட்கலாம்.

    ReplyDelete
  2. ஓர் இலை மரத்திலிருந்து உதிர்வதைப் போல என் மரணம் நிகழ வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டது நினைவுக்கு வருகிறது.
    தண்ணீரின் இன்னொரு அழகிய இயல்பு என்னவென்றால் அது தான் ஓடிக்கொண்டிருக்கும் பாதையில் ஒரு தடைக்கல்லைக் கண்டால் அங்கேயே அது தேங்கி நின்று விடுவதில்லை. அது அந்தத் தடைக்கல்லுக்கு எந்தவிதமான சேதமும் செய்யாமல் தனக்கான பாதையை அது கண்டடைந்து தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் என்றொரு பாட்டு இருப்பதும் நினைவுக்கு வருகிறது.
    அத்துடன் யோகாசனத்தின் சில ஆசனங்கள் கூட இயற்கையை அவதானித்ததன் வழி பிறந்ததே என்றும் அறிந்தது நினைவுக்கு வருகிறது..
    விருட்ச்சனா, தண்டாசனா என்பவை மரத்தைப் பார்த்தும்; பூனை, பாம்பு,முயல் போன்ற விலங்குகளைப் பார்த்து சில ஆசனங்களும் வடிவமைக்கப் பட்டதாக எங்கோ படித்த நினைவு...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete