Saturday, September 27, 2025

ஒரு காலை விழாவும் பள்ளி வளவும்

 

ஒரு காலை விழா


பாதையில் தெரியும் வீட்டு மருங்குகளில்

கொள்ளையாகப் பூத்திருக்கின்றன டெய்சி மலர்கள்.

வீதியோரத்து மின்கம்பத்தில் 

குந்தியிருக்கும் மக்பைகளுக்கு 

கண்கள் பூச்சிகளிலா? பூக்களிலா? 


கொக்கட்டூக்களுக்குப் 

பெரிய சாரீரம். 

கர்னகடூரமாய் சப்திக்கின்றன


அவ்வப்போது மனிதர்களைப் போலவே

கொக்கட்டமிட்டுச் சிரிக்கின்றன 

மரக்கிளைகளில் குந்தியிருக்கும்

சில கொக்குபாராக்கள்.


குருவிகளுக்கு என்னவோ

காலையில் தான் பலத்த உரையாடல்கள்....


அவரவர்க்கு இருக்கின்றன போலும் அவரவர்க்கான

பிரச்சினைகள், புலம்பல்கள்.


இந்தச் சத்தக் காலையில் 

சூரியன் வேறு சுளீரென்று.


வீதி சமிக்ஞைகளில்

தாமதிப்பின் சத்தமும் சேர்ந்து கொள்ள 

ஒரே ஆரவாரக் காலை.


பேரப்பிள்ளையைக் கூட்டி நடக்கிறாள்

அண்மையில் தான் வந்ததான பாவனையில் ஒரு மூதாட்டி.


பள்ளிச் சீருடையில்

சில செல்லச் சிரிப்பொலிகள்

ஹெட்போன் மாட்டியபடி

நடக்கும் சில

இருகால் இயந்திரங்கள்


பாதையில் நிற்கும் பொட்டில்பிரஷ் 

மரத்தில் தான் எத்தனை சிவப்பரும்புகள்.


அரும்புகளென சில குழந்தைகளும் 

நடைபோடுகின்றன பள்ளிக்கு......

....................


பள்ளி வளவுக்குள். .....


திறந்து திறந்து 

பிள்ளையை பத்திரமாய் உள்வாங்கி

மூடிக்கொள்கிறது பள்ளியின் திட்டிவாயில்.


 கட்டிடங்களின் கூட்டம் மட்டுமா உள்ளே? .


சீமாட்டியென நிமிர்ந்து நிற்கிறது

மைதான பூமியை முன்னே கொண்டிருக்கும்

முன்கட்டிடம். 


அந்த விளையாட்டுத் திடலில்

கூடிக் களிக்கின்றன குழந்தைகள்.


எத்தனை பிள்ளைகளின் களிப்பை கண்ணீரை 

விம்மலை வெப்பியாரத்தை

கனவுகளை அடிபிடியை 

 பிரிவை, பிரச்சினையை

கண்டிருக்கக் கூடும் இந்த மைதானம்?


இன்றும் யூதக்குழந்தையும் காசா குழந்தையும்

சேர்ந்தே விளையாடுகிறது முற்றத்தில்....

கைகோர்த்து நடக்கின்றன 

பால்பாகுபாடறியா

பாலக நெஞ்சம்.

நீலக் கண்களும் பச்சைக் கண்களும் 

கறுப்புக் கண்களும் மண்ணிறக் கண்களும்

ஒன்றையே காண்கின்றன

ஒன்றையே கற்கின்றன.


இருந்தும் எங்கிருந்து முளைகொள்கின்றன

பிரிவினைகளின் பெருவிருட்சங்கள்? 

துவேசத்தின் விஷத் துளிகளை

இந்தப் பாலக நெஞ்சங்களில் தூவியது யார்?

பொறாமையின் முட்செடிகள் முளை கொண்ட

மார்க்கம் என்ன?

எங்ஙனம் மனங்கள் நஞ்சுண்டன? 


ஆங்காங்கே சிந்திக்கிடக்கும்

சிரிப்பொலிகளிலும்

துள்ளி நடந்த கால் தடங்களிலும் 

உருண்டு பிரண்ட சண்டைகளிலும் 

மேலும்,

உதிர்த்த சில கண்ணீர் துளிகளிலும் 

விதையென விழுந்து முளைகொள்ளக் கூடும்

சில வாழ்நாள் சினேகங்கள்.


கொஞ்சம் துவேசத்தின் விஷ விருட்சங்களும்!

No comments:

Post a Comment