கென்ற வாரம் கவிதாவின் 'என் எதேன் தோட்டம்' என்ற கவிதை நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்கம் பரிசு வழங்கி இருக்கிறது என்ற செய்தி கிட்டிற்று.தமிழ் நாட்டில் அத்தகைய பரிசு வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்துப் பெண்ணுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவரது கவிதைகள் சிலவற்றை யுகமாயினி சஞ்சிகையில் முன்னர் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.வீரியமான சிந்தனை வீச்சுக்கள் கொண்ட கவிதைகள் அவை.உதாரணத்துக்கு அவரது இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சுயம் இழந்து வாழும் ஒரு பெண்ணைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்.
மூலைகள்
இது எனது வீடு
இந்த வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என்னுடையவை.
ஒவ்வொரு மூலையும் தனித்துவமானவை.
இதோ
இந்த மூலையில்
இரண்டு பாத்திரம்,நாலு கரண்டி
ஒரு அடுப்பு
எல்லாம் எனது.
எதிர் மூலையில்
எனக்கென்று வாங்கித் தந்த
பெரும் இயந்திரங்கள்
துணிகள் துவைக்கவும்
காயப் போடவும்.
ஒவ்வொரு அறையிலும்
பெரிய அலுமாரிகள்
காய்ந்ததை அடுக்கவென்று.
வலப் பக்கம்
இருக்கும் மூலையில் தான்
படுக்கையறை
படுக்கவும்...
கலைக்கவும்...
பின் விரிக்கவும்!
அதன் இடப்புறமும்
எனது மூலைதான்
ஒரு தொட்டில்
பால் போத்தல்கள்
பொம்மைகள்
அழுக்குத் துணிகள்
டீ.வி
மேசை
இருக்கைகள்.
அதன் மேல் எறியப் பட்ட
பொருட்கள்.
அடுக்கவும் துடைக்கவும்
சாப்பாட்டு மேசை.
தூசி தட்ட பலவித பொருட்கள்.
எல்லாம்
என்னுடையவை தாம்.
என் சுயவாழ்வு தவிர.
அவரது இன்னொரு கவிதை இப்படிப் பேசுகிறது.அக்கவிதையின் தலைப்பு
நான்,எனது மகள்
அவர்கள் இவர்கள் என்று
எல்லோருமாய்
உருவகித்த என்னில்
இப்போதெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கேயாவது மிச்சமிருக்கிறதா
நான்?
மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேட மாட்டாள்
அவளை
அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்
காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்கவென்று!
நன்றி; யுகமாயினி இதழ் 17.
வாழ்த்துக்கள் கவிதா!
No comments:
Post a Comment