Wednesday, June 2, 2010

குழந்தைமை

30.05.2010 மாலை திரு. பாஸ்கரன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் எழுத்தாளர் திரு.எஸ்.ரஞ்சகுமார் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அம்பி உணவகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.மெல்போர்னில் நடைபெற்ற (22.05.2010) எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டவர் இவர் என்பதும் கோசலை,மோகவாசல் என்ற கதைகள் மூலமாக ஈழத்து மக்களுக்குப் பரீட்சியமானவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அவரிடம் கொடுத்தனுப்பப் பட்டிருந்த எழுத்தாளர் விழாவில் வெளியிடப் பட்ட 'பூமராங்'என்ற புத்தகத்தை சகோதரன்.கானா.பிரபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.அடுத்தநாள் காலை தந்தையோடு வைத்திய நிலையத்தில் வைத்தியருக்காகக் காத்திருந்த நிமிடங்களில் வாசித்து முடித்த கதை ஆழியாள் எழுதிய 'ஒரு குட்டி இளவரசியுடனான வானவில் நாட்கள்'அதனைக் கதை என்று சொல்வதை விட ஒரு அனுபவப் பகிர்வென்றே சொல்லலாம்.

குழந்தைகளுடனான அனுபவங்கள் எப்போதும் சுவாரிஸமானவை.ரம்யமானவை.வியக்கவைக்கும் கற்பனைகள் நிரம்பியவை.அழகுவாய்ந்தவை.ஆழியாள் அக்கதையை இவ்வாறு முடிக்கிறார்.ஒரு குழந்தையுடனான அவரின் உரையாடல் இவ்வாறு தொடர்கிறது.

'....உனக்கு எந்த மாதிரியான நாள் பிடித்தமானது என்று கேட்கிறேன்.நீலமாய் ஆகாயம் தெரியும் நாட்களில் உனக்கு விருப்பம் என்கிறாய்.அதனால் தான் உன் சாப்பாட்டுத் தட்டத்திலும் அந்த நிறம் இருக்கிறது என்கிறாய். பிறகு நீல வானத்தை விடவும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாள் தான் உனக்கு விருப்பம் என்கிறாய்.அப்படியான வானத்தை நீ பார்த்திருக்கிறாயா என்று என்னிடம் கேட்கிறாய்.இது வரை நான் பார்க்கவில்லை.உன்னைப் போலவே நானும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாளைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் என்றேன்.நீ சிரிக்கிறாய்.சில வாய்கள் மேலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சிரிக்கிறாய்.இரவுகளில் நித்திரை கொள்ளப் போகும் போது கடும் நாவல் நிற வானையும் ஒளிரும் நட்சத்திரங்களையும் நினைத்துக் கொண்டு தூங்கினால் கனவில் அவை வந்து எம்மைக் குஷிப்படுத்தும். கனவில் தான் அது நடக்கும். உண்மையில் அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை என்றாய்.ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றேன்.அப்படிக் காத்திருப்பவர்கள் முட்டாள்கள் என்றும் அதனால் தான் அவர்கள் தலையில் வெள்ளிகள் தோன்றி கண்கள் பூஞ்சையாகிப் போகின்றன என்றும் என் நரைத்த தலையைப் பார்த்துச் சொன்னாய்.'

எவ்வளவு அழகாயிருக்கிறது இந்தக் குழந்தைகள் உலகம் என்று பாருங்கள். இப்படித்தான் சுமார் 3 வருடங்களின் முன்னால் ஆண்டு 4 வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவ்வகுப்பு ஆசிரியர் விடுமுறையில் போனதால் எனக்கு வாய்த்தது.ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தமான விடயம் பற்றி 10 வசனங்கள் எழுதுமாறு கேட்டேன்.ஒரு சிறுவன் எழுதியிருந்தார்.இப்படி,

எனக்கு சித்திரம் விருப்பம்.
எனக்கு மிருகம் கீற விருப்பம்.
எனக்கு விருப்பமான மிருகம் முதளை.
எனக்கு முதளையின்ர பல் விருப்பம்.
நான் இப்ப பல்லி கீறினனான்.
இந்தப் படத்தில ஒரு பல்லி நடக்குது.
பல்லிக்குப் பசிக்குது.
அது பூச்சி தேடுது.
பூச்சி புல்லுக்கை இருக்குது.
பிறகு நான் படம் கீறுற ஆளா வரப் போறன்.'

இது போல யுகமாயினியில் எழுதும் இரா. எட்வினை எனக்கு நிரம்பப் பிடிக்கும். கடசியாக நான் பார்த்த கடந்த மாதச் சஞ்சிகையில் பல மாதங்களின் பின் அவரின் எழுத்தைக் காண முடிந்தது.பத்துக் கிலோ ஞானம் என்ற தலைப்பில் குழந்தைகளைப் பற்றிய அவர் அனுபவத்தை எழுதியிருந்தார்.அந்த உரையாடல் இப்படித் தொடர்கிறது.பேருந்தில் பக்கத்து சீட் குழந்தை அவள்.

'மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ளே?
ஆமாண்டா
உங்களுக்கு மந்திரம் தெரியுமா?
தெரியுமே..
அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்னை அந்தக் கோழிப் படமா மாத்துங்க பிளீஸ்?
எதுக்குடா கோழிப்படமா மாத்திட்டு கோழியாவே மாத்திடறேனே?
வேணாம் லூசு மாதிரிப் பேசாம என்னக் கோழிப்படமா மாத்துங்க.
ஏண்டா கோழியாவே மாத்திடறேனே?
மக்கு.. மக்கு.. கோழியா மாறினா.. அறுத்துருவாங்கல்லே?

அவளது ஞானம் அது.

வேண்டாத மனிதர்களையும் வேண்டாத பொருட்களையும் வைத்து விளையாடுபவர்கள் குழந்தைகள் என்றும் எங்கோ பார்த்தேன்.அதனால் தான் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள் போலும்.அவர்களது உலகில் கோபம் இல்லை,பொறாமை இல்லை,எரிச்சல் இல்லை,எதையும் ஒழித்து வைத்து நடக்கும் தன்மை இல்லை,குரூரம் இல்லை,கவலை இல்லை. எவ்வளவு ரம்யமானதாகவும் பரிசுத்தமானதாகவும் அது இருக்கிறது.

அதே கட்டுரையில் எட்வின் எழுதும் போது ஒரு பஸ் பயணத்தின் போது கிராமத்துக் கிழவியில் உரத்த குரலினாலான முறைப்பாடுகள் பஸ்ஸுக்குள் இருந்த எல்லோரையும் எரிச்சல் படுத்தியதால் அம்மூதாட்டி இறங்கும் போது எல்லோரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட வேளையில் ஒரு குழந்தை மட்டும் "நீ பயப்படாம போ பாட்டி.குச்சி எடுத்து வந்து உனக்குச் சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளு என்று வெளுக்கிறேன்" என்று சொன்னதாக எழுதியிருந்தார்.

சிந்திக்க வேண்டிய கேள்விகளைப் போகிற போக்கில் சிந்தி விட்டு விட்டுப் போகின்றன குழந்தைகள்.எங்களைச் சிந்திக்கச் சொல்லி.
அவ்வளவு அழகும் பரிசுத்தமுமாக இருந்த அவர்களின் உலகம் எப்படிப் பிறகு தடம் புரண்டு போகிறது? எங்கு அந்த மாற்றம் நிகழ்கிறது? சமூகமும் குடும்பமும் சூழலும் குழந்தைகளிடம் எத்தகைய மாற்றங்களைச் யாரும் காணாத ஒரு பொழுதுகளில் செலுத்தி விடுகிறது. அவைகளில் எவை சரி எவை பிழை?அவர்களின் சுயாதீனமான சிந்தனைகளை எக் காரணிகள் தடைப் படுத்துகின்றன? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.வானொலியில் கேட்ட ஒரு கோமல் சுவாமி நாதனின் நகைச்சுவை ஒன்று ஞாபகம் வந்து போகிறது. அது இது தான்.

ஒரு சிறு வயதுக் குழந்தையின் முன்னால் ஒரு கிலுகிலுப்பையைக் காட்டுங்கள். அது என்னமாய் சிரிக்கிறது. அதையே ஒரு 80 வயதுத் தாத்தாவுக்கு முன்னால் காட்டிப் பாருங்க.அவருக்கு என்னமாய் கோபம் வருகிறது? எப்படி இருந்த தாத்தா எப்படி ஆகிட்டார் பாத்தீங்களா?

No comments:

Post a Comment