நேற்றய தினம் சற்றே வெய்யில் எறித்த குளிர் காலை நேரம்.எனக்கு விடுமுறை நாள்.கொஞ்ச நாளாய் சேலைகளிலும் மப்ளர்களிலும் ஏற்பட்டிருக்கிற தீவிர ஆர்வத்தின்(!)பயனாக பேரங்காடிகளில் இருக்கும் Tree of life என்ற இந்தியக் கலைப் பொருட்கள் மற்றும் இந்தியப் பாரம்பரியப் பொருட்கள் விற்கும் கடைக்குப் போவதாகத் தீர்மானித்திருந்தேன்.அங்கு சற்று விலைகள் அதிகமே எனினும் அக்கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதமும் அங்கிருந்து வரும் இந்திய ஊதுபத்தியின் நறுமணமும் அவுஸ்திரேலியப் பெண்கள் உடுத்தியிருக்கும் இந்திய ஆடைகள், பொட்டுகள் அவர்களுக்குக் கொடுக்கின்ற அபூர்வமான அழகும் அவர்களது இந்திய உபசரிப்பும் இந்திய தத்துவ ஞானத்தையே அள்ளி வீசுவதைப் போல இருக்கும்.பேரங்காடிகளின் சலசலப்புகளுக்கு மத்தியில் அது மட்டும் தனக்குரிய அழகோடு தனித்து நிற்கும்.அது அக்கடைக்கென ஒரு தனிக் களையையே கொடுக்கும்.கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதம் கூடத் தனிச் சோபையுடன் விளங்கும்.
விரும்பிய மனதுக்குப் பிடித்த மிக அழகான $20 டொலர்களுக்கு விற்கும் மப்ளர்கள் அன்று $6.95 டொலர்களுக்கு விற்பனையானது அதிசயத்திலும் அதிசயம்.எனக்கும் அக்காவுக்கும் அம்மாவுக்கும் தோழிமாருக்கும் என வாங்கியது மனதுக்கு நிறைவைத் தந்தது.அது பெண்களுக்கே உரித்தான மகிழ்ச்சி.அது தனி!
வருகின்ற வழியில் மயூரி என்ற இந்திய உடுப்புக் கடை புதிதாகத் தென்பட்டது. சரி அங்கு என்ன தான் இருக்கிறது பார்ப்போம் என்று போனால் 25 வருடங்களுக்கு முன்னால் வந்து போன இந்திய சேலைகளின் மீள் வருகை!என்னே அதிசயம்! எனக்குப் பிடித்தமான வடிவங்கள்! வண்ணங்கள்!!சேலைகளின் தெரிவில் நான் மொடேர்ன் பெண்ணல்ல. கடைசி யாக வந்த வடிவங்கள் என்பதால் நான் சேலை வாங்குவதில்லை.பிடித்திருந்த நிறம் மற்றும் துணியின் தரம்,வடிவங்கள் என்றால் மட்டும் தான் வாங்குவதுண்டு.
1995 யாழ்ப்பாணப் புலப் பெயர்வின் போது 2 விடயங்களை விட்டு விட்டு வந்ததில் இப்போதும் வருத்தம் எனக்கு.ஒன்று சனிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருந்த திசைகள் என்றொரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த மிக அருமையான கட்டுரைகள் பலவற்றை வெட்டி ஒட்டிச் சேகரித்து வைத்திருந்தேன்.அதனை விட்டு விட்டு வந்ததும்;இந்தக் குறிப்பிட்ட ஒரு சேலையை விட்டு விட்டு வந்ததும்.இன்று அதனை விடத் தரமானதும் அழகானதுமான சேலையைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எல்லாம் வாங்கியாயிற்று.மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கைகள் நிறைந்த பொருட்களோடும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.நான் வசிக்கின்ற தொடர்மாடிக் குடியிருப்பை நெருங்கிக் கொண்டிருந்த போது வீதிப் பொலிஸார் வீதிப் போக்குவரத்தைத் துண்டித்து இருந்தார்கள்.சற்றே பதட்டம் ஏற்பட்டது.என் காரும் நிறுத்தப்பட்டது.கண்ணாடி இறக்கி என்னவென்று கேட்டபோது தென்பட்ட இலங்கை அவுஸ்திரேலியனின் பொலிஸ்முகம் மிக வசீகரமாய் இருந்தது.இள நீல சேட்டும் கடும் நீல நிற கீழாடையும் கொண்ட சீருடை பொது நிறம் கொண்ட அம்மனிதருக்கு கச்சிதமாக இருந்தது.புன்னகையோடு பின்வாங்கச் சொன்னான்.அவன் முகம் நெஞ்சில் பதியப் பின் வாங்கினேன்.
தூரத்தில் கார் நிறுத்தி அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்ற போது நம் குடியிருப்பாளர்களோடு நம் வீட்டுக்காரரும் அங்கு நின்றிருந்தனர்.விடயம் என்னவென்று கேட்டால் சமயலுக்குப் பயன்படுத்தும் உயிரியல் வாயு எங்கோ பாரதூரமாக வெளியேறுவதாகவும் அதனால் எல்லோரும் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் தகவல் கிட்டியது.
பூங்காவில் குழந்தைகள் ஓடி விளையாட ஆரம்பித்தனர். தாய்மார் துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். இளம் பெண்கள் தம் கணவர்மாருடன் தொலைபேசினர்.வயதானவர்கள் இருக்கைகளில் கவலை தோய அமர்ந்திருந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டு ஆடைகளுடன் வந்திருந்தனர்.ஓர் இளம் சிங்களப் பெண் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடியபடி இருந்தாள்.நம் வீட்டார் அவளைக் காட்டி அவள் தான் எல்லோரையும் அவரவர் வீடுகளுக்குரிய பொத்தான்களை அமத்தி எல்லோரையும் வீட்டை விட்டு வெளியேறும் படி பதட்டத்தோடு கத்தியதாகத் தெரிவித்தார்கள்.
அவளோ ஒன்றும் நடக்காதது போல உல்லாசமாக மெல்ல மெல்ல ஊஞ்சலாடி அதன் சுகத்தில் லயித்திருந்தாள். சும்மாவே உம்மணா மூஞ்சியவள். சந்திக்கின்ற பொழுதுகளிலும் சிரிக்காதவள்.இலங்கையின் கண்டி மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளாக அவள் இருக்க வேண்டும்.அழகான சிவந்த சிங்கள முகம்.செல்வத்தினதும் மகிழ்ச்சியினதும் சாயை அவளில் எப்போதும் விகசித்திருக்கும்.சந்திக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் அவள் சிரித்தால் இன்னும் அழகாயிருப்பாள் என்று தோன்றுமெனக்கு.நான் தமிழ் என்பதால் அந்தப் பாராமுகமோ என்றும் சில வேளைகளில் தோன்றுமெனக்கு. அவளது 17ம் இலக்க தபால் பெட்டிக்குள் Thank you card வாங்கிப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சில நிமிடங்களில் நீலக் கண்களைக் கொண்ட பெண் பொலிஸ் எம்மை நோக்கி வந்தார்.வாயுக் கசிவு நிறுத்தப் பட்டிருப்பதாகவும்; இன்னும் 20 நிமிடங்களில் பரவி இருக்கின்ற வாயுவின் மணம் அகன்று விடுமெனவும்; யாரோடும் தொலை பேசவேண்டுமெனில் தன்னிடம் இருக்கின்ற தொலைபேசியைப் பாவிக்கமுடியுமெனவும்; வீட்டுக்குப் போனபின் கதவு ஜன்னல்களைத் திறந்து விடுமாறும்; உங்கள் கட்டிடப் பொறுப்பாளர்களுக்கு தொலைபேசியில் நிலைமையைத் தெரிவிக்கும் படியும் கூறிப் போனாள்.
ஆயிற்று. வீடு வந்து செய்யவேண்டிய எல்லாம் செய்தாயிற்று.எழுதி வைத்திருந்த பதிவையும் பிரசுரம் செய்தாயிற்று.இன்றைய நாளைப் பதிவதா வேண்டாமா என்ற போராட்டத்தின் பின் வேண்டாம் என்று அதனைப் புறக்கணித்தேன்.மனதில் இன்னும் சொல்ல ஏதோ மிஞ்சி இருந்தது.சமையல் செய்ய முடியாது.சுடுநீர் 24 மணி நேரத்துக்கு இல்லை.
அந்த இலங்கை அவுஸ்திரேலியப் பொலிஸின் வசீகரம் காரணம் ஏதுமின்றி நெஞ்சில் நிழலாடிற்று.சினேகமான முகமது.காயங்களுக்கு மருந்திடும் கண்கள்.'எப்பிறப்பில் காண்போம் இனி'என்று தோன்றும் நினைபை அசட்டை செய்த போதும் அந்த மனிதன் இலங்கையராகவே இருக்கவேண்டும் என்று மனம் அடித்துச் சொல்லிற்று.கிட்டத் தட்ட ஒருமணி நேரம் கழிந்தது. அழைப்புமணி அடித்தது. என்னவென்று கேட்டபோது பொலிஸார் கீழே வருமாறு அழைப்பது கேட்டது.அவசரமாய் கீழே இறங்கிக் கதவைத் திறந்தபோது அதே இலங்கைப் பொலிஸ்.
பக்கத்தில் நின்ற பொலிஸைப் புறக்கணித்து இருவருக்கும் இயல்பாய் விரிந்தது புன்னகை.
பக்கத்தில் நின்ற பொலிஸ் விபரங்கள் கேட்டது.பெயர்;சொன்னேன். பிறந்த திகதி; சொன்னேன். தொலைபேசி இலக்கம்; சொன்னேன்.நீண்ட எனது பெயரைச் எழுத்து எழுத்தாகச் சொன்னபோது சரியாக அதனை மீண்டும் சொல்லி சக பொலிஸாருக்கு உதவினான்.என் பெயரை அழகாய் யஷோதா என உச்சரித்தான்.
பின் புன்னகைத்து விடைபெற்றான்.
மனம் குதூகலிக்கிறது.அன்றைய திகதி 22.06.2010.
இன்று மறுநாள் காலை.
இது பெண்மொழி;கடல் அலை ஒன்றின் மொழிபெயர்ப்பு.
No comments:
Post a Comment