Wednesday, August 11, 2010

ஒரு பயணக் குறிப்பு


கடந்த ஒரு வாரமாக இது வரை தோன்றியிராத ஓர் உருப்படியான கேள்வி எனக்குத் தோன்றியது.அது உணவுண்ணும் போதும் தனியாக வேலை செய்கின்ற போதும் உறக்கத்துக்குப் போகும் போதும் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கேள்வி இது தான்.

நான் ஏன் எழுதுகிறேன்?

ஒரு விதமான தேடலா என்று கேட்டால் அதற்கு இல்லை என்றே பதில். ஏனென்றால் ஓர் அசாதாரணமான வடிவத்தில் வர்ணப் பேனாவோடு தனியாக ஒரு கொப்பி இருக்கிறது பிடித்தவற்றை எல்லாம் எங்கெல்லாம் காண்கிறேனோ அப்பப்போது இதில் மறக்காமல் பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.பேப்பர் கட்டிங்குகள் என்று வேறு தனியாக இருக்கிறது.தவிரவும் மற்றவர்கள் பார்வைக்குக் கிட்டாத வகையில் ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறேன். கட் அண்ட் பேஸ்ட் பண்ணிப் பத்திரப் படுத்த.ஆதலால் தேடலுக்கு இல்லை என்பதே பதில்.

எல்லோரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேனா என்று கேட்டால் அதற்கும் ம்......இல்லை என்றே பதில்.ஆனால் எனக்குப் பிடித்த பதிவர்கள் பின்னூட்டினால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

பொழுது போக்க? ம்கூம்.அவசரமான பல வேலைகளைக் கூட ஆறப் போட்டுவிட்டு இதற்குள் இருந்திருக்கிறேன்.முடிந்தவரை ஒவ்வொரு புதனும் பதிவு போட வேண்டும் என்று முனைப்பாக ரொம்பப் பொறுப்பாக இருந்திருக்கிறேன்.

வேற......தெரியேல்ல.

இதுவும் ஒரு விதமான பனிக்குணமாக இருக்கலாம்.

இது வரை அதற்குப் பதிலே கிடைக்கவில்லை.இந்த யோசனைக்குத் தொடரும்... போட்டு விட்டிருக்கிறேன்.

சரி போகட்டும்.என்னுடைய பதிவுகள் சராசரியாக எப்படி இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை ஒரு சித்தாந்த தத்துவார்த்தமானவையாக இருக்கின்றன.ஆனால் எனக்குப் பிடிப்பவை எது என்று கேட்டால் தங்களைத் தாங்கள் யார் என்று வெளிப்படுத்துபவையாக இருக்கின்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கின்றன.எனக்குப் பிடிக்கின்ற பதிவுகளுக்கும் என்னுடய பதிவுகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இருப்பது அப்போது புலப்பட்டது.என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது.நான் சற்று மாற வேண்டி இருக்கிறதோ என்று தோன்றுகிறது.விருட்சமாய் வளர்ந்து நிற்கிற நான் ஐ பிடிங்கி வேறொரு விதமாய் நட்டு விட முடியுமா என்று உள்ளே ஒரு அசரீரி கீட்கிறது:)ஓம் ஓம் என்கிறது மனம்.

ஆனாலும் சற்றே இலகுவாக ஏதாவது இன்று எழுதலாம் என்று மனதுக்கும் எனக்கும் ஒரு உடன்பாடு தோன்றி இருக்கிறது இன்று.

நேற்றய தினம் வேலையால் வரும் போது மழைத் தூறலும் இருட்டுமாக இருந்தது.90 zoon இல் 4 லேன்களில் போய்க் கொண்டிருந்த வாகனங்களும் அதே வேகத்தில் வந்து கொண்டிருந்த 4 லேன்களின் வாகனங்களும் ஓரே சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன.எதிர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்களில் சில தம் ஹெட் லைட்டினால் சிக்னல் போட்டுக் காட்டிக் கொண்டு போயின.அது ஒரு வித வாகனப் பண்பாடு. வீதிப் பண்பாடு என்று சொல்வது கூடுதல் பொருத்தம்.ட்றைவர்களுக்கு மட்டுமே தெரிந்த பாஷை அது. 'வாகனப் பொலிஸார் எங்கேயோ நிற்கிறார்கள் கவனம்' என்பது அதன் அர்த்தம்.என் வேகத்தைப் பார்த்தேன் சராசரியாக 90ல் இருந்ததில் மகிழ்ச்சி.

(ஒரு முறை இப்படித்தான் தமிழர் ஒருவர் வாகனப் பொலிசார் நிற்கிறார்கள் என்று எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு லைட்டினால் சைகை காட்டினாராம் பகல் பொழுது அது.அவர் சைகை காட்டிய வாகனம் மப்டியில் வந்து கொண்டிருந்த பொலிஸ் வாகனமாம்.அதனால் பொலிஸ் அவரை நிறுத்தி ஏன் லைட் சைகை காட்டினாய் என்று கேட்க இவர் ஒரு மாதிரியாகச் சமாளிக்க அது நல்ல வேடிக்கையாக இருந்தது என்றார்.)

நினைத்தது போல் கிட்டத் தட்ட 10 மைல் தள்ளி இருட்டுக்குள் சிவப்பு நீல வெளிச்சம் தெரிந்தது.மிகவும் மறைவான இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த காரில் இருந்து அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.அருகை நெருங்கிய போது பிடிபட்டிருந்த ஒரு காரும் நீலச் சீருடைப் பொலிஸாரும் தெரிந்தனர்.பிடி பட்டிருந்த மனிதர் 3 பொயிண்ட்ஸ் ஐயும் 350 டொலர்களையும் இழந்ததுடன் சற்றே தன் வேலைக் களைப்போடு நின்மதியையும் தொலைத்திருப்பார் என்று தோன்றியது.வோனிங் சைன் தந்த வாகனங்களை - அதன் டைறைவர்களை நன்றி சொல்லத் தோன்றியது இப்போது எனக்கு.மொத்தமாக எல்லோருக்கும் இருக்கின்ற 11 பொயின்ஸ்சும் இழக்கப் படாதிருந்த 350 டொலர்களையும் நினைத்துப் பார்த்தேன்.நின்மதியாக இருந்தது.

நின்மதியை எது எது எல்லாம் தீர்மானிக்கிறது பாருங்கள்!

2 comments:

  1. ஏனெழுதுகிறேன் என்ற உங்கள் முன்னோட்டம் பின்னால் வந்த அனுபவக் குறிப்பு நன்றாக இருந்தது.நான் என்பதை மாற்றாமல் புதியவற்றை உள் வாங்கி எங்களைப் புடம் போட்டுக் கொள்வதனால் தான் 'நானை'உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.அல்லது 'நான்' அற்ற 'நானுடன்' வாழ வேண்டிய துர்பாக்கியம் வந்து விடும்.

    பிற் குறிப்பு; டென்மார்க்கில் உள்ள பொலிஸ்காரர்கள் மிக நல்லவர்கள்.

    1.முதல் தடவை லைசன்ஸ் எடுக்கப் போன போது பதட்டத்தில் சிவப்பு விளக்கில் காரை எடுத்து விட்டேன்.தானே பிறேக்கைப் போட்டு விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தார்.

    இரண்டாம் தடவையில் தான் சித்தியடைந்தேன்.

    2.அண்மையில் கைத்தொலை பேசியில் கதைத்துக் கொண்டு போன போது பிடிபட்டேன்.

    பொலிஸ்:காலை வணக்கம்.

    நான்: காலை வணக்கம்.

    பொலிஸ்:தங்களுக்குக் கார் ஓடும் போது கைத் தொலைபேசியில் கதைக்க ஏதாவது விஷேட அனுமதி உண்டா?

    நான்: (அசடு வழிய)இல்லை.

    பொலிஸ்:நன்றி,போய்வாருங்கள்.Have a nice day.

    நான்:Same to you.

    அடுத்த சனி 500 குறோனுக்கு தண்டம் வந்திருந்தது.மனைவிக்குத் தெரியாமல் அதைச் செலுத்தி விட்டு 'கம்' என்று இருந்து விட்டேன்.- ஆண் டெனிஸ் பொலிஸ்காரர் எவ்வளவோ மேல் என்பது என் அனுபவக் குறிப்பேட்டில் இருக்கிறது.
    -ஜீவ குமாரன்-

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜீவகுமாரன்.மகிழ்ச்சியாக இருக்கிறது.சிட்னிப் பொலிஸ்காரர்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவு போடலாம்.:) அடுத்த வாரம் எதிர் பாருங்கள்.

    வரவுக்கும் அபிப்பிராயப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete