இலங்கையின் வரலாற்று நூல் மகாவம்சம்.அது புராணங்களை ஒத்த கதைகள் பல நிரம்பியது. ஆனாலும், அது அரசியல் வரலாற்றை; பெளத்த சங்கங்களின் உருவாக்கங்களை; மன்னர்கள் பெளத்த சங்கங்களுக்கு அளித்த தானங்களைப் பற்றியும் கூறுகின்றது. பெளத்த துறவி ஒருவரால் எழுதப் பட்டதால் அது பெளத்தம் சார்ந்த விடயங்களுக்கும் அவற்றுக்கு ஆதரவளித்த அரசர்களைப் பற்றிப் போற்றிக் கூறுவதும் தவிர்க்க முடியாதது.அவற்றை எல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும் சிங்கள இனத்தவர் பெருமை கொள்ளும் விதமாக ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை அது அவர்களுக்கு வழங்குகிறது.
அதில் எல்லாளன் துட்டகைமுணு போர் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது.எல்லாளன் தமிழன். வயதான அரசன்.துட்டகைமுனு சிங்ள தேசத்தவன்; இளமைத் துடிப்புள்ள இளைஞன்.துட்டகமுணுவின் மனம் முழுக்க இருந்த ஆசை இலங்கையை ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்பதே. ஒரு தடவை அவன் கால்களைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த போது துட்டகைமுனுவின் தாய் விக்கிரமாதேவி தன் மகனை நோக்கி, ’ஏன் இவ்வாறு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய் மகனே! நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாமே’ என்று கேட்டாள். அதற்கு வீரனான துட்டகைமுனு, ‘ஒரு புறம் தமிழர்களும் மறு புறம் கடலும் இருக்கும் போது நான் எவ்வாறு தாயே காலை நீட்டிப் படுத்துறங்க முடியும் என்று கேட்டான்.
அத்தனை பிரமாண்டம் அவன்!அவன் உள்ளத்தின் நீள அகலம் அது.
அது போல பொன்னியின் செல்வனில் ஓரிடம் வருகிறது.அது பெருங்கிள்ளி வளவன் என்ற மன்னனைப் பற்றியது. அவனிடம் யானை ஒன்றிருந்தது. அது நடந்து வருகின்றது. எப்படித் தெரியுமா?
“கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த்தண் தஞ்சை தான் மிதியா - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு”
அதாவது,யானை வருகிறது. அது சோழ நாட்டு யானை.அது வரும் போது ஒருகால் காஞ்சி மாநகரில் இருக்கிறது.மற்றய காலைத் தஞ்சை மாநகரில் ஊன்றுகிறது.மூன்றாவது கால் ஈழ நாட்டில் ஊன்றப் படுகிறது நாலாம் கால் உறையூரில் ஊன்றப்பட்டவாறு மெல்ல அசைந்து வருகிறது.சோழ நாட்டின் ஆதிக்கப் பரம்பலை யானையில் ஏற்றி வைத்துப் பாடிய பாடல் அது.
அத்தனை பிரமாண்டம் அந்த யானை!சோழ தேசப் பரப்பும்.
இனியொரு புராணக் கதையின் பால் நகருவோம். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த மேருமலையை மத்தாகவும் வாசுகியை பாம்பாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு.இந்தக் கற்பனை எத்தனை பிரமாண்டம் என்று பாருங்கள்.உலகின் 70% கடல். உலகின் மிகப் பெரியமலை இமையமலை. கயிறைப் போன்ற நீளமும் பெருப்பமும் உடையது மலைப்பாம்பு.தேவர்களும் அசுரர்களும் இவ்வுலகுக்கே அப்பாற்பட்டவர்கள்.இவற்றை உள்ளடக்கி விரிந்த இக் கற்பனை எத்தனை பிரமாண்டம் பார்த்தீர்களா? உலகத்தில் எல்லாவற்றையும் விட எல்லோரையும் விட உயர்ந்தது உயர்ந்தவர் சைவம்;முழுமுதற்கடவுளான திருநீலகண்டர் என்று சொல்ல இதை விட ஒரு பிரமாண்டமான கற்பனையைச் செய்ய முடியுமா?
ஆனால், செய்திருக்கிறார்கள். சங்க காலத்துப் புலவர்களுக்கு அது முற்றிலுமாகக் கைவந்திருக்கிரது.அவர்களுக்கு அது இயலுமாக இருந்திருக்கிறது.அரசனுடய திறத்தை அவர்கள் அவ்வாறு எல்லாம் பாடியிருக்கிறார்கள்.
புறநானூறில் இரண்டாவது பாடல் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அப்பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடி இருக்கிறார்.
“மண் தின்ற நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார் பொறுத்தலும்,சூழ்ச்சியது அகலமும்
வரலும் தெறலும் அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
.....”
என்றவாறு தொடங்குகின்றது அந்தப் பாடல்.அதாவது,மண் நிறைந்து காணப்படுகின்ற இந்த நிலமும், அதற்கு மேலாகக் கானப்படுகின்ற வானும், அதனோடு சேர்ந்திருக்கின்ற காற்றும், காற்றினுடய இயல்பினால் பெருகும் நெருப்பும், அவ்வாறான நெருப்புக்கு முரண்பட்டு விளங்குகின்ற நீருமான, இவ் ஐம்பெரும் பூதங்களான இயற்கையைப் போல விளங்குகின்ற தலைவனே!நீ உன்னைப் போற்றாதவர்களைப் பற்றி நீ சிறிதும் எண்ணினாய் இல்லை;அவர்களிடத்து நீ மிகப் பெரும் பொறுமை காட்டுகிறாய்;நன்கு ஆராய்ந்து அறிவதில் சிறந்த ஞானமும் பகைவரை அடக்குவதில் உன்னுடய பேராற்றலையும் காட்டுகிறவன் நீ!அதே நேரம் உன்னுடய குடிமக்களிடம் பெரும் அன்பும் கொண்டிருக்கிறாய்.உன்னுடய ஆட்சி உரிமை காணப்படுகின்ற கிழக்குக் கடலில் இருந்து தோன்றும் சூரியன் மீண்டும் உன் ஆட்சி உரிமைக்குரிய மேற்குக் கடலிலே சென்று நீராடும்.....என்றவாறு தொடரும் அப்பாடல்.
இது எத்தகைய பிரமாண்டம்!தெய்வ சமானம் அந்த விசாலம்!
மீண்டும் இப்போது அந்த முதலாவது பிரமாண்டத்துக்குப் போவோம்.துட்டகைமுனு தன்னால் கால் நீட்டிப் படுக்க முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னான் அல்லவா? பின்னொரு முறை அவனுக்குக் கால் நீட்டிப் படுக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவன் எல்லாளனோடு மேற்கொண்ட போரில் எல்லாளனை வென்று நாட்டை ஒரு குடைக்கீழ் ஆளுகின்ற சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது.ஆனாலும் அவன் தான் தமிழரையும் ஆளவேண்டி இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அதனால் அநுராதபுரத்தில் எல்லாளன் உயிர் துறந்த இடத்தில் போரிட்டு உயிர் துறந்த எல்லாள மன்னனுக்கு அவ்விடத்தில் நினைவு ஸ்தூபி ஒன்றை எழுப்பி அதனைத் தாண்டிப் போகும் எல்லோரும் அந்த இடத்தை வனங்கிச் செல்ல வேண்டும் என்று ஆணையிட்டான் என்று மகாவம்சம் கூறுகிறது.
அவ்வாறு அவன் தமிழர்களை வெற்றி கொண்டான்.
வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது இப்போது.
அண்மையில் அமெரிக்காவில் இலங்கை நாட்டின் அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷவுக்கு நாடு தமிழர்களிடம் இருந்து வெற்றி கொளளப் பட்டதன் பின்னால் ஒரு வரவேற்புபசாரம் நடைபெற்றது. அங்கு அமெரிக்கத் தலைவரான பராக் ஒபாமாவுக்கு தென் ஆசியப் பிராந்தியத்துக்கான அரசியல் ஆலோசகராக விளங்குகிறார் ஒரு யாழ்ப்பாணத் தமிழன்.அவர் அந்த வரவேற்புரையில் ஒரு உரையினை ஆற்றுகிறார்.சற்றே பொறுமையோடு கேட்டுப் பாருங்கள்.
15 நிமிடங்கள் சற்றே அதிகமெனினும் முழுவதையும் தயவு கூர்ந்து பொறுமையோடு கேட்டு விட்டுச் செல்லுங்கள். ஏனென்றால் அவை எங்கள் இதயத்தின் குரல்,கைவிடப் பட்ட தமிழ் மனங்களின் அபிலாஷைகள்.
மகாவம்சத்தையும் , பொன்னியின் செல்வனையும், புறநாநூற்றையும் ஊடாடி வந்த பிரம்மாண்டம் வியக்கச் செய்தது. காணொளி தான் தடைபட்டு தடைபட்டு புரிந்து கொள்ள சிரமப் படுத்தியது தோழி... உரையை கேட்க இயலாமை வருந்தச் செய்கிறது.
ReplyDeleteஉங்களைக் கண்டதே மகிழ்ச்சி!
ReplyDeleteஉரையினைச் சரிப்படுத்த முயற்சிக்கிறேன் நிலா.தெரியப் படுத்தியமைக்கு நன்றி.