Tuesday, August 23, 2011

பெண்ணம்சம்


இன்று சற்றே வேலைத் தலைவலி.ஏதாவது ஒரு மாற்றுத் தேவை.வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அதனை மறக்க மது,புகைத்தலைப் போல போதையைத் தரும் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள் புகுந்து கொண்டேன்.

அவற்றை வாசித்து முடித்த பின் அதனை இங்கு பகிராமல்,பதியாமல் இருக்க முடியவில்லை.

கைக்குக் கிட்டிய இன்றய பத்திரிகை ஞாயிறு தினக்குரல்.இலங்கையில் இருந்து வெளிவருவது.மறு நாளே இங்கு வாசிக்கக் கிட்டுவது.அதில் அ.முத்துலிங்கம் அவர்களுடய ஆக்கம் ஒன்று கண்ணில் பட்டது.(21.08.2011.பக் 31 பனுவல்)அது இப்படி ஆரம்பிக்கிறது.

”எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் கச்சிதத்தோடும் நேர்த்தியோடும் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும்.இவர்கள் வேலை செய்யும் போது பாடிக்கொண்டே செய்வார்கள்.அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை அது.பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் போலவே இருக்கும்.அதில் ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்”

தொடர்ந்து அவற்றுக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.எஸ்.ராமகிருஸ்னனின் துயில் என்ற நாவலில் வரும் ஓரிடம்.‘என்னை ஞாபகம் வச்சிருக்கிற ஆளு கூட இருக்காங்களா’ என்று கேட்கும் பெண்பாத்திர வார்ப்புப் பற்றி கூறி, அந்த ஆதங்கத்தில் அவளுடய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரே வசனத்தில் கொண்டு வந்திருப்பார் ஆசிரியர் என்று வியந்திருந்தார் அதில்.

அது போல குறுந்தொகையில் இருந்தும் ஒரு காட்சியைக் கூறியிருந்தார்.தலைவி தோழியிடம் சொல்கிறாள்.’பார் என் நிலைமையை.அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்து விட்டுப் போய் விட்டார்.நான் இப்படி ஆகி விட்டேன்.யானை முறித்த கிளையைப் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறேன்.மரக்கிளை முன்பு போல இல்லை.முறிந்து நிலத்திலும் விழவில்லை.அது போல நானும் பாதி உயிரோடு அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்’(குறுந்தொகை - 112) என்று சொல்வதை கச்சிதமான விளக்கத்துக்கு உதாரணமாகக் காட்டியிருந்தார்.

அது போல வீரியத்தோடு மனதில் இறங்கும் ஒரு உணர்வின் இயல்பைச் சொல்ல அவர் எடுத்தாண்ட உதாரணத்தை அப்படியே தருகிறேன்.’சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதிய ,’For the love of Shakespeare' என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது.நண்பர் தன்னுடய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது....அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும் போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும்.Tempest நாடகத்தில் ஓரிடம்.புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்து விட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான்.அவளால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி அடைகிறாள்.your tail,sir,would cure deafness' ’உங்களுடய கதை,ஐயா!செவிட்டுத் தன்மையைக் குணமாக்கும்’ என்ன ஒரு சொல்லாட்சி என்று வியக்கிறார்.

எல்லாவற்றிலுமே நேர்த்தியையும் அழகையும் காணும் அ. முத்துலிங்கம் அவர்கள் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கு நியதியின் பிரகாரமே இயங்குகின்றது என்பார்.பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான் என்பது அவரது ஆதங்கமாக இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் Liverpool என்ற இடத்திற்குச் பரிசுச் சேலைகள் சில வாங்கச் சென்றிருந்தேன். அநேக இந்தியப் புடவைக் கடைகள் அங்கு இருக்கின்றன.மேலைத்தேய நாகரிகங்களோடு போட்டி போடும் நவீன ரகப் புடவைகள் அங்கு ஏராளம்.உயர் விலைகள்,பட்டு ரகம்,அண்மைய வெளியீடு,வசீகர நிறம் என்று அநேகம் இருந்தாலும் மிகக் குறைந்த விலையில் இருக்கும் பருத்திச் சேலைகளின் மீதான மோகம் என்னை விட்டு அகன்று போகும் பாடாய் இல்லை.இது ஒரு நோயைப் போல என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது.’இங்க எல்லாரும் நல்ல கிறாண்டா நல்ல பட்டுச் சீலையள் தான் உடுத்திறது.சும்மா ஒரு கொட்டன் சீலையை எடுத்துக் கொண்டு வராதைங்கோ’ என்று என் தங்கை ஏற்கனவே என்னை எச்சரித்தும் விட்டிருந்தாள்.

’ஓடுக!ஊரோடுமாறு’என்று என் பாடசாலைப் பிரிவின் போது என் ஓட்டோகிறாவ்பில் என் பள்ளித் தோழி ஒருத்தி எழுதி இருந்தது இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

அத்தனை களைப்பு! வாழ்க்கைமீது!! :)

’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’என்று ராஜு முருகன் எழுதிய வரி ஒன்று வந்து போகிறது மனதில்.(ஆனந்த விகடன்;24.08.2011; ப்க்;63 -66)

சரி, அதை விட்டு விடயத்துக்கு வருவோம்.கடையில்,வழமை போலவே வாங்க வேண்டயவற்றை எல்லாம் வாங்கி விட்டு எனக்கே எனக்காக ஆரம்பத்திலேயே என் கண்ணில் பட்டும் புறந்தள்ளிக் கொண்டிருந்த சேலையை மீண்டும் எடுத்து வாங்குவதா விடுவதா என்ற தீர்மானத்துக்கு வர முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தேன்.மெல்லிய உடல்வாகு உள்ளவர்களுக்கே பருத்திப் புடவை அழகு என்பது தற்போதய என் சமாதானத் தீர்மானம். அதுவே என்னை வாங்கும் ஆசையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த குஜராத்திப் பெண்ணொருத்தி - அந்தக் கடைப் பெண்மணி - அண்மையிலேயே அவள் இந் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் - அருகில் வந்தாள்.அதில் ஒரு சிநேகம் இருந்தது. எனக்கும் பருத்திச் சேலைகள் மிகவும் பிடிக்கும் என்றாள். அதில் உடனடியாகவே என்னை மீறிய ஒரு நெருக்கமான இதத்தை உணர முடிந்தது.

எனக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தச் சேலையில் ஒரு கண் இருக்கிறது என்று விட்டு ஏன் வாங்கத் தயக்கம் என்று கேட்டாள். நான் காரணத்தைச் சொன்ன போது புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.எத்தனை எத்தனை பட்டுச் சேலைகள் வாங்கினாலும் ஒரு பருத்திச் சேலையை உடுத்தி அதன் எளிய இயல்பில் நடந்து போகும் சுகம் இருக்கே! அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.அது நீ குண்டம்மா என்பதையும் கடந்தது.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.

அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்!

’...சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை!’என்றொரு ஆறாம் நூற்றாண்டுப் பக்திப் பாசுரம் பேசும்.ஆறாம் நூற்றாண்டுத் தமிழின் வீரியம் அது!

சித்தம் அழகியர்!!

இந்தப் பெண்னையும் எனக்கு அப்படித்தான் பார்க்கத் தோன்றியது.

இந்தக் குணாம்சத்தினால் தான் பாரதத்துப் பெண்கள் அத்தனை அழகோ?



6 comments:

  1. ///’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!///

    இந்த வரிகள் மிக உண்மையானவை. அதேபோல ஆண் மனதிலும் ஒரு அக உலகு உண்டு.அதை உணரவும் வெளிப்படுத்தவும் பெரும்பாலான ஆண்களுக்கு அவகாசம் இல்லை. அவர்களை பொருளாலும் அதிகாரத்தாலும் மட்டும் அடையாளம் காணும் உலகில் அவர்கள் அவசரமான, மொழியற்ற இயந்திரங்களாகி விட்டார்கள். தன்னையே வெளிப்படுத்த முடியாத ஆண் ஒரு பெண்ணின் அக உலகை எங்கே உற்று நோக்கப் போகிறான்? பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி உண்மையான இன்பம் கிடைப்பதே இல்லை.

    ReplyDelete
  2. தபாற்காரரே மிக முக்கியமான விடயம் ஒன்றை மிகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள்.

    அண்மையில் தொழில் தொடர்பான தமிழர் ஒன்று கூடல் ஒன்றில் கிட்டத்தட்ட இதனைப் போன்ற கருத்துப் பகிர்வொன்று இடம் பெற்றது.அதில் ஒரு இளைஞன் கூறிய கருத்து என்னவென்றால் ஒரு குடும்ப அமைப்பில் ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இருக்கின்ற உறவு முறையைப் போல ஒரு நெருக்கத்தை ஏன் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையில் நாம் வளர்த்தெடுப்பதில்லை என்பது தான்.

    நம்மிடம் தாய் தந்தை,கணவன் மனைவி என்ற பாத்திர வார்ப்பு தொடர்பாக அழுத்தமான கோடுகள் உள்ளன. அவற்றை நாம் கேள்விகேட்கவோ மாற்றியமைக்கவோ முன்வருவதில்லை.

    சமூகம்,பண்பாடு,பயம் என்று அவற்றுக்குப் பல சுமைகள் காரணங்களாக இருக்கலாம்.பரஸ்பர புரிந்துணர்வு, family dynamic போன்ற விடயங்கள் சிந்தனைக்குரியன.

    ஆணின் அகஉலகு பற்றிய பிரக்ஞையை எனக்குத் தந்தது உங்கள் கருத்துரை.அது காற்று வரும் வாசல் ஒன்றை மனதில் திறந்து சென்றிருக்கிறது. நன்றி தபாற்காரரே!

    ReplyDelete
  3. மணிமேகலா அவர்களே! கடிதங்கள் பற்றி 'மறக்க முடியாத நினைவுகள்' என்ற வலைப்பதிவை சமீபத்தில் தொடங்கியிருக்கிறேன். என் தளத்திற்கு வந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    உங்கள் வலைத் தளத்தை இன்றுதான் கண்டேன். வாசித்துவிட்டு கருத்தைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள்//

    //பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான்//

    //’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’//

    //சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக //

    ர‌சித்து மாள‌வில்லை தோழி! எங்க‌ள் ம‌னசையும் த‌ள‌ர்த்தி ஆசுவாச‌ப்ப‌டுத்திவிட்ட‌து ப‌திவு. எத‌னோடு எதையெல்லாம் கோர்க்கிறீர்க‌ள்! முடிப்பில் சிந்தை நிறைக்கும் சுக‌ந்த‌ ம‌ண‌ம் வீச‌ ப‌திவின் ம‌ண‌ம் ம‌ன‌ம் விட்ட‌க‌லாம‌ல்...

    த‌பால்கார‌ரின் க‌ருத்துரையும் த‌ங்க‌ள் ப‌திலுரையும் கூட‌ ப‌திவின் நீட்சியாய்... விருந்துக்குப் பின்னான‌ தாம்பூல‌த் த‌ரிப்பாய்...

    ReplyDelete
  5. .புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.

    அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்! /

    மிக அழகாக வசீகரித்துவிட்டீர்கள் பகிர்வில்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கவிப்பிரியன்,நிலா, ராஜராஜேஸ்வரி எல்லோருக்கும் நன்றி.

    நீண்ட விடுமுறையை கழித்து விட்டும் களித்து விட்டும் வந்திருக்கிறேன். நிறைய நிறைய அனுபவங்கள். அவை ஏனோ மெளனத்தை எனக்குப் பரிசளித்திருக்கின்றன. செரித்துக் கொள்ளவும் அனுபவ சாரம் என்னில் சுவறிக் கொள்ளவும் சற்றே அவகாசம் தேவையோ என்னவோ!!

    ஆனால் விரைவில் வருவேன். உண்மையாக!அதுவரை உங்களை எல்லாம் வந்து பார்த்த படியும் என்னை வளர்த்த படியும் இருப்பேன்.

    எல்லோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

    ReplyDelete