Tuesday, August 2, 2011

தபாலட்டைக் கவிதைகள்


கொழும்பு தமிழ் சங்கத்தில் இருந்து பிரசுரமாகும் ’ஓலை’ என்ற மாதாந்த மடல் ஒன்றை (ஜூன் 2003)காவலூர்.ராசதுரை ஐயாவிடம் சென்ற போது காணக்கிடைத்தது.வீட்டு உடையுடன் அவசரத்துக்கு ஓடிப் போய் புத்தகம் கேட்கிற அளவில் ஒரு கலைஞன் - அதுவும் வெளிநாட்டில்- இருக்கக் கிடைத்திருப்பது ஒர் அலாதியான ஆத்மானுபவம்.

பேச முடியாத நிலையும்; வயோதிபமும் தள்ளாட்டமும் இருந்த போதும்; முகத்தில் பூத்த புன் முறுவலும் புத்தகங்களை எடுத்துத் தரும் முக மலர்ச்சியும் என்னை மிகப் பெருமளவு நேரம் சஞ்சலத்துக்குள்ளாக்கின.

சென்ற நூற்றாண்டின் மனித இயல்பு!

மனைவியாரின் விசனங்களும் எந்தக் கலைஞர்களும் அவரை வந்து பார்த்தோ தொலைபேசியிலோ நலம் விசாரிப்பதில்லை என்ற ஆதங்கம் கலந்த மனத்தாங்கலும் 54 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்ததன் உண்மையான நேசத்தை எனக்கு உணர்த்துவதாயிருந்தது.

புலம் பெயர்ந்த நாட்டில் அது ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவம்.

நான் சென்று பார்க்கவோ உதவவோ முடியாத குற்ற உணர்வும் வாழ்வியல் ஓட்டம் சொல்லும் இயலாமையும் இரட்டைக் கலாசாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் இரண்டாம் தலை முறையினரின் வாழ்வியல் அனுபவம்.

இரண்டும் ஒரு முறை சந்தித்து மீண்டன.

அதன் அதிர்வுகள் கவலையின் அலைகளாய்; இயலாமையின் அலைவுகளாய் சுற்றாடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்; இரு தலைமுறையிடமும். இருந்தது.

*** *** ***

அவரிடம் தான் இந்தச் சஞ்சிகையைக் காணக்கிடைத்தது.

அதில் அரிதாக இது வரை வெளிவந்திராத மகாகவியின் தபாலட்டைக் கவிதைகள் சிலவற்றைக் காணக்கிடைத்தது.அதிலிருந்ததை அப்படியே தருகிறேன்.

”தபாலட்டைகளில் சிறு சிறு கவிதைகளாகவே கடிதங்களை அனுப்புவதில் மகாகவி, முருகையன்,நீலாவாணன்,நுஃமான்,போன்றோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை ஒரு சுவாரிஷமான செய்தியாகும்.தபால் அட்டைகளில் தான் எழுதி அனுப்பிய சிறு கவிதைகளை - சுவை மிக்க வெண்பாக்களை - மகாகவி நாட்குறிப்பு ஒன்றில் பிரதி பண்னி வைத்திருந்தார்.அந் நாட்குறிப்பில் இருந்து சில வெண்பாக்களை இங்கே தருகிறோம்.வெண்பாக்களோடு உள்ள குறிப்புக்களும் மகாகவியினுடயவை.” என்ற விபரங்களோடு தபாலட்டைக் கவிதைகளை அது பிரசுரித்திருக்கிறது.

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூடச் சித்தரிப்பனவாக அவை இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

*** *** *** *** ***

14 comments:

  1. அற்புத‌மான‌ பாட‌ல்க‌ள் இன்று அக்ஷ‌ய‌ பாத்திர‌த்தில்! காவ‌லூர் ராச‌துரை ஐயாவிற்கும், த‌ங்க‌ளுக்கும் ந‌ன்றி கூறுகிறேன். ம‌காக‌வி என‌க் குறிப்பிட‌ப் ப‌டுப‌வ‌ர் ப‌ற்றிய‌ விப‌ர‌ம‌றியேன். எங்க‌ ஊர் ம‌காக‌வி சுப்ர‌ம‌ணிய‌ பார‌தியார் போன்றொருவ‌ர் போலும்!

    ReplyDelete
  2. ரஞ்சகுமார்August 2, 2011 at 11:08 PM

    மகாகவி பலருக்கும் வாழ்த்துப் பா எழுதுவார். ஆனால் இரங்கற் பா எழுதுவதே இல்லை. ஒரே ஒருவருக்கு மட்டும் இரங்கற் பா எழுதினார். பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு தான் அவர். அவரை அவ்வாறு வேண்டி எழுத வைத்தவர் பேராசிரியர்.. ஆனால் மகாகவிக்கும் நீலாவணனுக்கும் உரிய அங்கீகாரத்தை அவரும் கைலாசபதியும் எப்போதுமே வழங்கவில்லை.

    ReplyDelete
  3. மிக அருமையான பெறுமதிமிக்க ஒரு பதிவு..இதை படித்த போது தபால் அட்டை என்பது சமானியமான ஒரு பொருள் அல்ல என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.. ஒரு சிறைக்கைதி வக்கீல் வைத்துக் கொள்ளப் பணம் இல்லாத காரணத்தால் தனது நிலையை விளக்கி ஒரு தபால் அட்டையை இந்திய உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார். அந்த தபால் அட்டையை ஒரு ரிட் மனுவாக ஏற்றுக் கொண்டு அவரது வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அனுமதி வழங்கினார் நீதியரசர் பி. என். பகவதி. இது நீதி நிர்வாகத்தின் வரலாற்றிலேயே ஒரு புரட்சிகரமான முடிவாக கருதப் பட்டது.. எம்மவர்கள் தபால் அட்டையில் கவிதை தான் எழுதினார்கள்..

    ReplyDelete
  4. நிலா,அவருடய கவிதைகள் மிக ரசிக்கத் தக்கவை.

    உறக்கத்தைப் பற்றிச் சொல்ல ‘மரணத்தின் துளி போல துயில்’ என்பார்.

    தன் குறும்பாக்களைப் பற்றிச் சொல்லும் போது,

    சுவைஞரே என்ற தலைப்பில் இவ்வாறு சொல்கிறார்.

    கவிதை உலகளவு பரந்து
    பல்வேறு பட்டது.

    கடவுளையும் காதலியையும் போற்றுவது
    மட்டும் அன்று அதன் பணி

    கட்டித்த சிந்தனை உடைய
    பண்டிதர்களும்,
    கோட்பாடுகளை விழுங்கி விட்டுச்
    செமித்துக் கொள்ள முடியாதவர்களும்,
    மோப்பதற்கும்,
    மோந்து முணுமுணுப்பதற்குமாக
    எழுதப் படுவதன்று கவிதை.

    அது சாதாரண மனிதனின்
    பழுது படா உள்ளத்திற் பாயப்
    பிறப்பது.

    ஓய்வுக் கடமையின் ஒரு கூறே ஆகும்.

    எனது குறும்பாக்கள் முற்றும்
    ஓய்வுக்குரியனவும் அன்று.

    என்பார்.(17.02.1966 ஆண்டு)உதாரணத்துக்கு ஒரு குறும்பா.

    ”சொந்தத்திற் கார்,கொழும்பிற் காணி
    சோக்கான வீடு,வயல்,காணி
    இந்தளவும் கொண்டுவரின்,
    இக்கணமே வாணியின் பாற்
    சிந்தை இழப்பான் தண்டபாணி”

    என்று சீதன நடைமுறையை தனக்குரிய பாணியில் இப்படிப் பாடிவிட்டுப் போனார்.44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தார்.(09.01.1927 - 20.06.1971)

    ஆனால் பாரதியாரோடு ஒப்பிடுவது சற்று மிகை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  5. அங்கீகாரங்களுக்காக எழுதினால் அவர்கள் கலைஞர்கள் அல்லவே! உங்கள் கருத்துரையைப் பார்த்த போது நீலாவாணனின் ’துயில்’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.அதனை இங்கு பதியாமல் இருக்க முடியவில்லை.

    ‘இந்த உலகில்
    இருந்த சில நாழிகையில்
    எந்தச் சிறிய உயிரும்
    என் ஹிம்சையினால்
    நொந்தறியா...
    யாதும் எனை நொந்ததில்லை’என்கின்ற
    அந்த இனிய நினைவாம்..
    அத் தாலாட்டுக்கு என் இதயம் தந்து
    ......
    தாலாட்டில் மாலாகி
    எனை மறந்து துயில்கையில்...வீண்
    ஒப்பாரி வைத்திங்கு
    உலகத்தைக் கூட்டாதே!

    அப்பால் நடப்பை அறிவேன்
    அதை ரசிக்க
    இப்பயலை மீண்டும்
    எழுப்பித் தொலைக்காதே!
    .......

    என்பார்.என்ன ஒரு திட சித்தம்! ஓர்மம்!! பாருங்கள்.

    ReplyDelete
  6. எத்தனை மாற்றங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம் ஜெயன்?

    எழுத்தின் வரலாற்றில் கல்,தகடு,ஓலை,தாள், மின் தபால் என்றும்; உளி,ஆணி,எழுத்தாணி,மைப்பேனா,(குமிழ் முனைப்பேனாவும்)விசைப்பலகை என்றும் எத்தனை மாற்றங்கள்!

    இந்த மாற்றங்களூடாக மறைந்து போனவை சில பாரம்பரியங்களும் தான்.

    இவற்றை வளர்ச்சி என்பதா? மாற்றம் என்பதா?காலத்தின் கட்டாயம் என்பதா?

    ReplyDelete
  7. ரஞ்சகுமார்August 4, 2011 at 11:54 PM

    அங்கீகாரம் தேவையானது அவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் பின்னால் வந்த எம் போன்றவர்களுக்கு தகுந்த ஆளுமைகளை உரிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும். பொருத்தமானவர்களை புறக்கணித்து பொருத்தமற்றவர்களை முன்நிறுத்தக் கூடாது. பேராசிரியர்கள் தூக்கிப் பிடித்த வரட்டுவாதிகளுக்கும் அவர்களது சிஷ்யகோடிகளுக்கும் நாங்களும் “காக்கா” பிடித்திருந்தால் எங்கள் கதி அதோகதிதான். சரியான காலஓட்டத்தை காண்பிப்பதற்குப் பதிலாக கைலாசபதி செய்தது என்ன தெரியுமா...? “இவங்கள் கூட்டத்துக்கு வந்தால் நான் வர மாட்டேன்” என்று கார்ச்சாவியை வீசி எறிந்தது தான். அவ்வளவு பயம்....!
    ஆனால் பினவந்த தலைமுறை கொடுத்த இடையறாத அழுத்தத்தின் பின்னால் சிவத்தம்பி பலமுறை பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டார்.. ஆனால் எழுத்துருவில் அல்ல. மேடைப்பேச்சுகளில் மட்டும்.
    ஆமா....அது சரி... நீங்கள் குறிப்பிட்ட நீலாவணன் கவிதைக்கும் எனது கருத்துக்கும் என்ன சம்பந்தம். எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை. ஆனால் மகாகவியின் கூற்றுக்களும் கவியும் ஐயாமாருக்கு அச்சாவாகப் பொருந்துவது நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete
  8. என்னுடய பதிவிலிருந்து உங்கள் சர்ச்சை வேறொரு பாதை நோக்கிச் செல்கின்றது என்று நினைக்கிறேன்.

    உங்கள் ஆதங்கம் புரிகிறது ரஞ்சகுமார்.

    என்றாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.பொருத்தமும் பொருத்தமின்மையும் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதும் அவரவர் உரிமை சுதந்திரம் அல்லவா?அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்!’தர்மம்’என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாகத் தோன்றக் கூடும்.

    உண்மையின் இயல்பு ஒளிர்ந்த படி இருப்பது.அதை யாரும் ஒழித்து வைக்க முடியாது.பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் கிடைத்திருந்ததா என்ன?

    இந்தக் கவிதையை இங்கு சொன்னதற்குக் காரணம் முதலில் மனிதனாகவும் பின்னர் கவிஞனாகவும் இருந்த அந்த ‘மன ஆரோக்கியம்’.எது அவருக்கு தாலாட்டான உறக்கத்தைத் தருகின்றது என்று பாருங்கள்!

    ஈழத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரே! அது போதாதா?

    நொந்து போயிருக்கிற மனதுக்கு ஆறுதல் தரும் வசனம் ஒன்றிருக்கிறது கீதையில்.அது,’கடைமையைச் செய்;பலனை எதிர்பாராதே”.

    சிலவற்றுக்கான பதிலை காலத்திடம் விட்டு விடுங்கள் கலைஞரே.

    ReplyDelete
  9. ஈழத்து ம‌ஹாக‌வி ப‌ற்றி அறிய‌த்த‌ந்த‌மைக்கு ந‌ன்றி தோழி! என‌து இப்போதைய‌ ப‌திவில்(ம‌ன‌ங்க‌வ‌ர் முன்னுரைக‌ள்...3‍மீரா) கூட‌ ஈழ‌த்து ம‌ஹாக‌வி ப‌ற்றி க‌விஞ‌ர் மீரா த‌ன‌து குக்கூ க‌விதைநூலில் குறிப்பிட்ட‌தை எடுத்தாண்டுள்ளேன்.

    ReplyDelete
  10. ரஞ்சகுமார்August 6, 2011 at 10:51 PM

    ஓஹோ.... கதை அப்பிடிப் போகுதா...? காலம் என்ன செய்யும் என்று இருந்து பார்ப்போம்.... நான் நினைக்கிறேன் காலத்தை வெல்பவன்தான் கலைஞன் என்று..

    ReplyDelete
  11. ரஞ்சகுமார்August 6, 2011 at 11:26 PM

    ஓஹோ.. கதை அப்பிடிப் போகுதா... நான் நினைக்கிறேன் காலத்த வெலபவன் தான் கலைஞன் என்று... ஐஸ் வைத்து பிரயோசனமில்லை... நான் சரியான சுடுதண்ணி

    ReplyDelete
  12. ரஞ்சகுமார்August 6, 2011 at 11:50 PM

    ஓஹோ.. கதை அப்பிடிப் போகுதோ..!

    ReplyDelete
  13. நன்று நிலா.சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  14. ரஞ்சகுமார்,காலத்தை வெல்லும் அந்த சூட்சுமம் பற்றி அறிய ஆவல்.எனக்கும் பலருக்கும் அது பயனுடயதாக இருக்கும்.

    மற்றம்படி நீங்கள் சுடுதண்ணி என்று நான் நினைக்கவில்லை.அதனை வேண்டுமென்றால் சிவனிடம் நியாயம் கேட்ட முருகனின் வெப்பியாரம் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாமோ?

    ReplyDelete