Monday, August 8, 2011

புலமையும் நட்பும்



அது ஒரு காலம்!

புலமையும் நட்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்!!மகாகவி,நீலாவாணன்,முருகையன்,நுஃமான்...என்று நீண்டு செல்லும் புலமையும் நட்பும் கொண்ட பாரம்பரியம் அது.

ஓலை என்ற சிறு சஞ்சிகையில் (ஜூன் 2003) வந்திருக்கின்ற பல ஆக்கங்கள் இதுவரை கண்டெடுக்கப் படாத பல புதிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது.இரவல் புத்தகம் ; கொடுக்கவேண்டி இருப்பதால் பிடித்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியும் பகிர்ந்து கொள்ள வேண்டியும் அவற்றில் ஒன்றைத் தருகிறேன்.

”.....
இந் நாள் எல்லாம் எங்கள் வீட்டுப்
பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்!
முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்
‘கொல்’லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள்’
அல்லவோ?....” - என்றும்

”....பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூறாதோ? - என்றும்
....”

”நல்லவர்களுக்கிது தான் நாடு - பொய்
நாகரிகத்துக்கப்பால் ஓடு!
முல்லை நாடு! பக்கத்தில்
மூன்றறைகளோடு சிறு வீடு போதும்! எடு ஏடு!!”

என்றும் தன் ஊரைப் பாடிய மகாகவிக்கும் இன்று இலங்கையின் வானொலி உலகில் பிரபலமாக இருக்கும் எழில் வேந்தனின் தந்தையார் நீலாவாணன் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பொன்றைப் பற்றி ’ஓலை’ஜூன் 2003 இதழில் எழில் வேந்தன் எழுதி இருக்கிறார். அதில் நீலாவாணன் தன் டயறியில் எழுதி இருந்த இது வரை வெளிவந்திராத கவிதை ஒன்றை அதில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

புலமையும் நட்பும் நடைபோடும் அக் கவிதையையும் அதற்கு எழில் வேந்தன் கொடுத்திருக்கின்ற குறிப்பையும் கீழே தருகிறேன்.

“மகாகவியின் மரணச் செய்தி வானொலியில் வந்த போது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.செய்தியைக் கேட்டதும் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்தார்.மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டுமென எத்தனையோ முயற்சிகள் செய்தும் முடியாது போய் விட்டது.அப்போது ஜே.வீ.பி.கிளர்ச்சி முடிந்து நாடு பழைய படி வழமைக்குத் திரும்பாத நேரம்.நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது.எப்படியோ ஓடித் திரிந்து கூடிய விரைவில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விமானத்தில் நாம் யாழ்ப்பாணம் போனோம்.எங்களது முதலாவது விமானப் பயணமும் என் தந்தையாரின் ஒரே ஒரு விமானப் பயணமும் அது தான்......

மாமா இறந்து கிட்டத் தட்ட 3 தசாப்தங்கள்.அண்மையில் அப்பாவின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது அவரது பழைய டயறிகளையும் ஆராய்ந்தோம்.அப்போது மகாகவி மாமாவின் மரணச் செய்தி கேட்டு அப்பா எழுதி இருந்த கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது.அது பற்றி அம்மா உட்பட யாருக்குமே அது வரை தெரியாதிருந்தது.அந்தக் கவிதை இது தான்” - எழில் வேந்தன் -

இதயம் இருந்ததடா! எண்ணங்கள் பொங்கின
இதயம் இருந்துமென்ன ஏக்கம் பிறந்துமென்ன
இறக்கை இரண்டிருக்கவில்லையடா என்னிடத்தில்
இறக்கை இரண்டிருந்தால்...
எப்படியோ கண்டிருப்பேன்
இந் நேரம் வந்திருப்பேன் எப்படியும் கண்டிருப்பேன்

இதயம் இருந்ததடா!
இறக்கை இருக்கவில்லை

வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்
ஊனுருகி, உள்ளம் உருகி, விழி பெருகி
நானழவும் நண்பர் நமரழவும் நாடழவும்
வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்!

இதயம் இருந்ததடா
இறக்கை இருக்கவில்லை!

‘புள்ளி அளவிலொரு பூச்சி’மடிந்த கதை
சொல்லி அழுகின்ற சோக நிறை செய்தியல்ல!
அன்னியர்தம் ஆட்சி அருங் ‘கோடை’ வேக்காட்டின்
பின்னணியில்,இந்நாட்டு மன்னவர்கள் தம்முடைய
காதலும் பண்பும் கலையும் தமிழ் வாழ்வும்
சாதலைக் கண்டு சலிப்புற்ற செய்தியல்ல!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்.

முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை
அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி
படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்
பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்

‘சேரன் பிறந்த செருக்கடா என்னுடய
பேரன்பா’ என்ற பெருமை மிகு செய்தியல்ல
‘நாளை கடிதம் எழுதுகிறேன் இங்கு புதுச்
சோழனும் தாயும் சுகம்’என்ற செய்தியல்ல.

உண்ட செயல் நின்ற உதிரம் உறைந்ததடா
கண்கள் துயரக் கனியைப் பிளிந்தன ஆ...
என்னவாம் அந்த இழவறையும் வானொலியில்
உண்மையா? உன்னை உலகம் இழந்ததுவா!

என்னருமை நண்பா இறுதியாய் உன் மனையில்
உன்னை நான் கண்டு உரையாடி உண்கையில்
தென்னிலங்கை போகிறேன் தேடியங்கும் வாருங்கள்
சொன்னாய்; அதிலிருந்த சூக்குமத்தை நானறியேன்

மூன்று திங்கள் ஆகவில்லை மூச்சு நின்றதென்கின்றார்
நானெந்த வாறிதனை நம்பிடுவேன் நண்பா ஓ....
ஏனிந்த வாறு எமை ஏமாற்றிப் போயினை யோ!
வானத்தன் ஆனான் மகாகவி என்றந்த
வானத் தொலியாகி வந்ததடா கேட்டிருந்தேன்.

பாண்டியனுக்கென்ன பகர்ந்தாய் இனியாளை
வேண்டும் வரையளவும் விட்டுப் பிரிந்தாயோ?
சேரன் ஒளைவை சோழனுக்கு செப்பியது தானெதுவோ?

வாரம் முடிவோ இவ் வையப் பெருவாழ்வு?

2 comments:

  1. நல்ல பகிர்வு....
    கவிதை படிக்கும் போதே மனசு கனக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி குமார்.வந்து சென்றமைக்கும் சேர்த்து.

    இந்தக் கவிதையில் ஒரு நயம் இருக்கிறது.

    //முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை
    அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி
    படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்
    பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!//

    இதில் முடிவேந்தர் முட்டுதலும் என்று சொன்னது மகாகவியின் பிள்ளைகளை.சேரன்,சோழன்,பாண்டியன் என்று 3 மகன்மார்.மகள் பெயர் ஒளைவை.படியென்றால் மட்டும் படியார்;படுத்துகிறார் என்பது பிள்ளைகளைப் பற்றிய முறைப்பாடு. பொடி= பிள்ளைகள்.

    ’கோடை’ வேக்காடு என்று கவிஞர் சொல்வது அரசியல் பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு பா நாடகம்.

    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

    ReplyDelete