15.09.2011 புதன் கிழமை.
பதினெட்டாம் திகதி சுவிற்சிலாந்து நாட்டில் வசிக்கும் என் சகோதரி வீட்டு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்கு நாம் போயாக வேண்டும்.கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே எங்களுடய விடுமுறைகள் எல்லாம் கவனத்துக்கு எடுக்கப் பட்டு குறிக்கப் பட்டிருந்த திகதி. விடுமுறையும் திட்டமிட்டு எடுக்கப் பட்டாகி விட்டது.
பிரச்சினை என்னவென்றால் என் தாயாருக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை 14ம் திகதி இரவு ஏழு மணிக்குத் தான் கிடைத்தது.15ம் திகதி கடவுச் சீட்டைப் பெற்று 16 ம் திகதி விமானப் பயணச் சீட்டைப் பெற்று அன்றே புறப்பட்டால் தான் நேர வேறுபாட்டை முறியடித்து சரியான நேரத்துக்கு நாம் அங்கு சென்று சேரலாம்.
ஏற்கனவே ஒரே நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கடவுச் சீட்டு எடுக்கும் நடைமுறை இங்கிருப்பதால் சற்றே ஆறுதல்.ஆனாலும் முன்னேற்பாடாய் என் நண்பி லோகாவின் கணவரும் என் நண்பனுமான ரொஷானின் சகோதரியான (கடவுச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்) ராஜியக்காவோடும் பேசி 15ம் திகதி காலை முதல் ஆளாய் அங்கு ஆஜரானோம்.
சொல்லி வைத்தது போலவே தேவைப் பட்ட படிவங்கள் மற்றும் பணம் எல்லாவற்றையும் ராஜியக்காவின் உதவியோடு கொடுக்க வேண்டிய அலுவலரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 10.30.
ராஜியக்கா அது கைக்கு வந்ததும் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொள்வதாகவும் உங்களுக்கு வேறு அலுவல்கள் இருந்தால் செய்யுமாறும் கூறினார். குறைந்த பட்சம் 3 மணித்தியாலங்களும் அதிக பட்சம் 8 மணித்தியாலங்களும் ஆகலாம் என்பது அவரது அனுமானமாக இருந்தது.
பாவம் என் தாயார். மிகுந்த எதிர்பார்போடும் இயலாமையோடும் இருந்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. காலையில் சாப்பிடாமல் வேறு வந்திருந்தார். மற்றும் அங்கிருந்து ஆகப் போவதும் எதுவும் இல்லை.வீட்டுக்கு வந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் போய் பெற்றுக் கொள்ளும் அளவிலும் நம் வீடு இருக்கவில்லை.அதனால் என் தாயாரை வீட்டுக்குச் செல்லுமாறும் நான் அழைப்பு வரும் வரை நகர் புறத்தில் நின்று விட்டு வருவதாகவும் ஏற்பாடாகி மைத்துணரோடு அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
இப்போது எனக்கு முன்னால் இருந்த பெருங் கேள்வி இந்த இடைப்பட்ட நேரத்தை எப்படிக் கழிப்பது என்பது தான்.இந்தக் கேள்வியோடு என் கையில் இருந்தது அம்மா ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்திருந்த சண்ட்விட்சுகளும் தேனீரும்.கையில் கொஞ்சக் காசும்.
பல வேலைகள் செய்வதற்காக வீட்டில் காத்த படி இருக்க, வெட்டியாய் சில பொழுதைச் city யில் கழிக்க நேர்ந்தமை ஒரு தவிர்க்க முடியா இருப்பாய் - முந்திக் கொண்டு நிற்கிற விதியில் இயல்பாய் - முன்னாடி புன்னகைத்தபடி!
City கடைகள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்தேன்.விலையும் வடிவங்களும் எனக்குத் தோதுப் படாதவை. கைத் தொலைபேசியைப் பார்த்தேன்.அது வேறு மெளனமாய் நல்ல பிள்ளையாய் இருந்தது. கையில் வேறு சாப்பாட்டுச் சுமை. பையைப் பார்த்ததும் பசித்தது.
இப்போது பல வருடங்களுக்கு முன்னர் நான் வேலைபார்த்த இடமும் அதற்குப் போவதற்காக நான் தினம் கடந்து போன பூங்காவும் நினைவுக்கு வந்தது.அழகும் நிழலும் குளிர்மையும் நிறைந்த அப் பூங்கா மிக அமைதியானது. அதிக தூரமும் இல்லை.அங்கு இருப்பதற்கான இருக்கைகளும் இருந்தன. நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கும் பழக்கமும் அம் மக்களுக்குக் கிடையாது.சாப்பிடுவதற்கும் புதினம் பார்ப்பதற்கும் இருப்பதற்கும் அதுவே இப்போதைக்குத் தோதான இடம்.
மற்றும் என் வேலைத் தலம் அதன் தற்போதய மாற்றங்கள் இவற்றையும் பார்க்கலாம். அதனால் அந்த இடம் நோக்கிப் பயணப் பட்டேன்.அப்போது மழை சாதுவாகத் தூறத் தொடங்கியிருந்தது.
பூங்காவை வந்து சேர்ந்த போது அங்கே தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! பூங்காவுக்கு குறுக்கே போன நடை பாதை இப்போது தார் வீதியாக மாறி இருந்தது. சைக்கிள் ஓடுவோர், நடந்து செல்வோர், தாய்சீ உடற்பயிற்சி செய்வோர், கவுன்சில் வாகனத்தோடு வந்திருந்து பென்ஞ்சுக்கு பெயிண்ட் அடிப்போர் எனக் களை கட்டியிருந்தது பூங்கா.
ஓரமாய் உட்காரப் பிடித்திருந்தது.மெல்லியதான தூறல் போய் இப்போது சற்றே சுடத் தக்கதாய் வெய்யில்.பச்சைப் புல் வெளி நடுவே மழை கொண்டு கழுவிவிடப் பட்ட கறுப்பு வீதிகள்,ஓங்கி உயர்ந்து கிளை பரப்பி நிற்கும் பெரு மரங்கள்.அவற்றில் சுதந்திரமாய் பேசிக் களித்த படி பெயர் தெரியாப் பல இனப் பறவைகள். மற்றும் புறாக்கள். இவற்றுக்கிடையே உரிமைப் பிரச்சினைகள், தனி நாட்டுக் கோரிக்கைகள் எதுவும் இருக்காதோ? வந்தால் அவற்றை அவைகள் எப்படித் தீர்த்துக் கொள்ளும்?
தெரியவில்லை.
ஆனாலும் இவற்றுக் கிடையே எதையோ தேடி ஆரவாரமாய் அவசர அவசரமாய் நடந்து செல்லும் மனிதர்கள்!
இந்த மனிதர்களிடம் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் வரலாறுகள், வாழ்க்கைப் பாடங்கள் ஒளிர்ந்திருக்க, - ஒழிந்திருக்கக் கூடும்! ஒருவர் முகம் மாதிரியாகவா இன்னொருவர் முகம் இருக்கிறது! சற்று நேரம் வேடிக்கை பார்த்திருக்கப் பிடித்திருந்தது.
கைத் தொலைபேசியைப் பார்த்தேன். அது இப்போதும் மெளனமாக இருந்தது.
உணவுப் பொதியை எடுத்து விரித்த போது எங்கிருந்தோ புறாக்கள் பல பறந்து வந்தன.அவற்றுக்குச் சில பாண் துண்டுகளைப் பிரியத்துடன் பிய்த்துப் போட்டேன். அவை மிகுந்த ஆர்வமாகவும் மிகப் பழக்கப் பட்ட பாங்கிலும் சாப்பிடத் தொடங்கிய போது அவற்றில் ஒரு புறாவைக் கவனித்தேன்.அதன் கால்கள் இரண்டும் பலமான நூல்களுக்குள் சிக்குண்டு இருந்தன.அதனால் கால்களை அகட்டி வைத்து சுதந்திரமாக நடமாட முடியவில்லை.அது மற்றய புறாக்களைப் போல நடந்து வந்து உணவைப் பெற்றுக் கொள்ள இயலாமையினால் சற்று அப்பாலே நின்ற படி சாப்பிட எத்தனித்துக் கொண்டிருந்தது.
இப்போது அப் புறாவினை நோக்கிச் சில பாண் துண்டங்களை வீசினேன்.அதன் மீது ஒரு வித வாஞ்சையும் எதுவும் செய்ய முடியாத துன்பமுமாக ஒரு வித உணர்வு நிலைக்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருந்த போதும் அது அவசரமாகப் பாண் துண்டுகளைப் பற்றிக் கொள்வதை மனத் திருப்தியோடு கவனித்தேன்.
தவிர்க்க முடியாமல் எதன் மீதோ யார் மீதோ கோபம் வந்தது. மனிதர்கள் செய்கின்ற பாவங்களில் இந்த வாய் பேசாப் பிராணிகளின் மேல் - அப்பாவி உயிரினங்களின் மேல் அவர்கள் செய்கின்ற உதாசீனங்கள் உபத்திரவங்கள் சொல்லி மாளாதவை. சிறுவர்கள் எவரேனும் வளர்க்கின்ற ஆசையில் பிடித்துக் கட்டி வைத்து விட அது எப்படியோ தப்பித்து வந்திருக்கக் கூடுமோ? அப்பாவி உயிரினம் எப்படி மனிதர்களின் தான் தோன்றித் தனங்களினால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு விடுகின்றன! வண்ணாத்திப் பூச்சி பிடிப்பது. தும்பிகளுக்கு நூல் கட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது,பொன் வண்டு பிடித்து பெட்டியில் அடைப்பது,குருவிகளைப் பிடித்து கூட்டில் அடைப்பது…. இப்படிப் பல… இதில் என்ன இன்பம் இருக்கக் கூடும் அப்படி? இது ஒரு விதமான வக்கிர குணமல்லவா? மனிதக் குழந்தைகளிடம் எப்படி இப்படியான எண்ணங்கள் தொற்றிக் கொள்கின்றன எனத் தெரிவதில்லை.
இந்தப் நீல நிறப் பூமிப் பந்தில் வசிக்கின்ற உயிரினங்களுக்குள் மிகப் பயங்கரமான உயிரினம் ஆறு அறிவோடு இருக்கின்ற மனித மிருகம் தான்.இந்தப் பூமிப் பந்தை ஏன் ஏனைய உயிரினங்களோடு நாம் பகிர்ந்து கொள்ள மறுக்கிறோம்? - இதன் மீது தான் எத்தனை எதோச்சதிகாரம்! ஏகபோக உரிமை நமக்கு!!
இப்போது 2,3, புறாக்கள் நான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் வந்திருந்து உரிமையோடு பாண் துண்டுகளைக் கேட்டன.மேலும் சிலவற்றை அவற்றுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்த போது திடீரெனக் கால்கள் கட்டுண்ட புறா அந்த இருக்கை அருகே பறந்து வந்தது.அவை பறந்தோ பயந்தோ போய் விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். பாண் துண்டுகளைச் சற்று எட்டவாகப் போட்ட போது அவற்றை லாவகமாக அவை பெற்றுக் கொண்டன. சற்றே எனக்கருகாகப் போட்ட போது உரிமையோடு அருகில் வந்தன.
இப்போது கால்கள் கட்டுண்ட புறா எனக்கு மிக அருகில். கைகளில் பாணை வைத்து அதன் அருகில் நீட்டினேன். பயமோ தயக்கமோ அற்று அது அதனைப் பெற்றுக் கொண்டது. எனக்கு இன்னும் அதன் மீது ஆதூரம் கூடிற்று.அதன் கால்களின் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும் என்ற இயல்பான உத்துதல் மீதுர அதன் முதுகுப் புறமாகக் கைகளைக் கொண்டு சென்று அதனைப் மெதுவாகப் பற்றினேன்.
அது அதனை மிக எதிர்பார்த்ததைப் போல எந்த வித பதட்டமோ எதிர்ப்போ காட்டாது அப்படியே இருந்தது.என் கண்கள் பனிக்க அதனை ஆதரவோடு மனதோடு அணைத்துக் கொண்டேன். சாதுவான பறவையாய் எதிர்ப்பெதுவும் காட்டாது கட்டுண்டு அது இருந்தது.
உடனடியாக அதன் கால்களைப் பரிசீலித்தேன். அது நாட்பட்ட சிக்காக இருந்தது.அதன் கால் விரல்களை நூல் புண்னாக்கி இருந்தது. அது விரல்களை வலி நிமித்தம் அல்லது பயம் நிமித்தம் கால்களை மிகவும் சுருக்கி வைத்துக் கொண்டிந்தது.
இப்போது என் முன்னால் ஒரு பெரும் பொறுப்பு! கைகளில் அதன் விடுதலைக்கான எந்த விதமான ஆயுதங்களும் இல்லை.ஆனாலும் உடனடியாக இரண்டு கால்களுக்கும் இடையே இருந்த நூலினை பற்களால் அறுத்து விட்டேன்.இனி இதன் கால் விரல்களுக்குள் அகப்பட்டிருக்கும் நூலை கூரான ஆயுதம் ஏதேனும் கொண்டு அதன் கால்களுக்கு – விரல்களுக்கு எந்த விதமான பங்கமோ தீங்கோ நேர்ந்து விடாத படிக்கு மிக அவதானமாக நூலினை அப்புறப் படுத்தியாக வேண்டும். அதற்குரிய பொருட்கள் என்னிடம் இருந்தாலும் ஒரு கையால் அதனைப் பிடித்த படி மறுகையால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். யாரும் உதவினால் தான் உண்டு.
அவசர அவசரமாக தத்தம் அலுவல்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் இவர்களில் யார் இந்த உதவிக்கு வரக் கூடும்? சில நிமிடங்கள் காத்திருந்தேன். சிலர் கடந்து சென்றனர். சிலர் புதினமாய் என்னைப் பார்த்த படியும் சென்றனர். நான் ஒரு விசித்திர பிராணியாய் அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
சில நிமிடங்களின் பின்னர் ஒரு முக ஒப்பனைகள் அதிகம் செய்த ஒரு பெண்மணி வந்தார்.அவரிடம் விடயத்தைச் சொல்லி கத்தரிக் கோலைப் போல ஏதேனும் கூரான ஆயுதம் இருக்கிறதா எனக் கேட்டேன்.முதலில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல தன் கைப்பையைத் திறந்து பொருட்கள் ஒவ்வொன்றாய் வெளியே எடுக்க ஆரம்பித்தார்.
எனக்கு நம்பிக்கை வளர ஆரம்பித்தது.
பெண்களிடம் இருக்கின்ற கைப்பைக்குள் தான் எத்தனை எத்தனை பொருட்கள்!! எத்தனை எத்தனை தேவைகள்!! ஒவ்வொரு பெண்களிடமும் இருக்கின்ற கைப் பைகளையும் சோதித்தால் ஒவ்வொரு பெண்களினதும் சுபாவங்களும் குண இயல்புகளும் கூடத் தெரிய வரக் கூடும்.
அவர் இறுதியாகத் தன்னிடம் அவ்வாறு எதுவும் இல்லை எனக் கைவிரித்த போது சற்றே ஏமாற்றமாக இருந்தது. புறாவைப் பார்த்தேன் அது சாதுவாக கைகளுக்குள் அமைதியாகவும் இயல்பாகவும் இருந்தது. இப்போது அதனை ஏனோ கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அது பயந்து விடக் கூடாது என்பதால் சற்றே என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நாயோடு நடந்து வந்து கொண்டிருந்த மற்றுமொருவரை வழி மறித்தேன். அவரும் தன்னிடம் எதுவும் இல்லை எனக் கூறி வழி நடந்தார்.இனி சற்றே ஆறுதலாக நடந்து வரும் ஒருவருக்காக காத்திருக்க வேண்டியது தான்.
இப்போது முதலிலே போன பெண்மணி திரும்பி வந்தார்.விரைவாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு 5 நிமிட நடை தூரத்தில் பூக்கள் விற்கும் கடை ஒன்றிருப்பதாகவும் அவர்களிடம் பூக்களின் காம்புகளை வெட்டும் கூராயுதங்கள் இருக்கக் கூடும் எனவும் தன்னோடு வந்தால் வழி காட்டுவதாகவும் கூறினாள்.
எனக்கு அவள் வழி காட்டி விட்டு தன் பாதையில் அவள் திரும்பிச் சென்ற போது ஏனோ அவளைப் பிரிவது எனக்குக் கஸ்டமாக இருந்தது.
பூக்கடையை நெருங்கிய போது புன்னகையோ சினேகமோ அற்ற இறுகிப் போன அந்த முகங்கள் அப்போது தான் ஏதோ பிணக்குப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்லிய வண்ணமாக இருந்தது.யாருடய கஸ்ட காலமோ! வலிந்து ஒரு புன்னகையை வரவளைத்துக் கொண்டு ஆணைத் தாண்டி அப்பால் நின்ற பெண்மணியிடம் விடயத்தைச் சொன்னேன்.
அவள் தன் கணவனைப் போல இருந்த ஆணிடம் நூல்களை வெட்டி விடப் பணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.அந்த இறுகிப் போயிருந்த ஆண்மகனிடத்தே எந்த வித முக மாற்றங்களும் இல்லை.
வழிப் போக்கர் சிலர் பூக்களைப் பார்ப்பதும் விலை பேசுவதும் சிலவற்றை வாங்குவதுமாகப் போய்க் கொண்டிருந்தனர். இந்த ஆண்மகன் ஒரு வித அசட்டையீனத்தோடு சில இடத்து மெளனமாகவும் சிலருக்கு மாத்திரம் ஓரிரண்டு சொற்களை உதிர்ப்பவனாகவும் காணப்பட்டான். பூக்களை விற்பவன் கொஞ்சம் புன்னகைக்கக் கூடாதா எனத் தோன்றிற்று.
பொருத்தமற்ற சில இணைப்புகள் ஏன் நடக்கின்றன?
இப்போது அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்காது அருகிலிருந்த உயரமான முக்காலி மீது கால்களை நிலத்தில் ஊன்றி உட்கார்ந்தான். புறாவைக் கொண்டு முன்னே வரப் பணித்தான். பவ்வியமாக முன்னே சென்று குழந்தைக்கு ஊசி போட வைத்தியத் தாதி முன்னே நிற்கும் தாயைப் போல அப்போது என் நிலைமை இருந்தது. மூக்குக் கண்ணாடியைப் போட்ட வண்ணம் மிக அவதானமாக அதன் விரல்களையும் கால்களையும் பரிசீலித்தான்.உள்ளே சென்று சில கூரான ஆயுதங்களை எடுத்து வந்தான்.
ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்குக் இருக்கக் கூடிய அத்தனை குணாம்சங்களோடும் செய்நேர்த்தியோடும் அவற்றுக்குச் சற்றும் குறையாத கவனத்தோடும் மிகச் சுத்தமாய் முழு நூல்களையும் அவன் அப்புறப் படுத்தி இருந்த போது முழுவதுமாக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகி இருந்தன.
புறா ஓரிரு தடவைகள் கால்களை இழுத்துக் கொண்டதைத் தவிர முழுவதுமாக ஒத்துழைத்தது.
அது வரை அந்தப் பெண்மணி வெளியே வரவில்லை.இவனும் வந்த எந்த ஒரு வியாபார விசாரணைகளுக்கும் பதிலளிக்கவோ வியாபாரம் செய்யவோ இல்லை.100% முழுமையான கருத்தொருமைப் பாட்டோடு அவன் அதனைச் செய்து முடித்து விட்டு தலை நிமிர்ந்த போது புறா தன் கால்களை சில தடவைகள் சுருக்கி சுருக்கி விரித்தது.
அதுவே அவனுக்கான விலை நிர்ணயிக்க முடியாத பரிசென நான் நினைத்துக் கொண்டேன்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியாத திண்டாத்ததிற்கும் தள்ளாட்டத்துக்கும் நடுவே இந்தப் புறா உன்னை ஒரு போதும் மறக்காது நண்பனே! உன் நாட்கள் இனியவையாகட்டும் எனச் சொன்ன போது அவன் உள்ளே போயிருந்தான்.
நான் மிகுந்த பெருமிதத்தோடு திரும்பி அதனுடய நண்பர் குளாத்தோடு சேர்க்கச் சென்ற போது அது தன்னை விடுவிக்கக் கோரி கைகளுக்குள் அது செய்த புரளி இருக்கிறதே! அது என்னை மிகுந்த ஆச்சரியப் படுத்தியது.
மரத்தடி சென்று கைகளை அகல விரித்தேன். அது சுதந்திரமாகப் பறந்து போனது.
வாழ்க்கையில் பல மறக்க முடியாத தருணங்களைப் பெருமிதங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.ஆனால் இதனைப் போன்ற ஒரு பெருமிதத்தை இதற்கு முன் நான் ஒரு போதும் அடைந்ததில்லை.
ஒரு புறாவின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன் என்பதும்; எப்படியோ அதன் நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்பதும்;அதற்குரிய சுதந்திரத்தை அதற்கு என்னால் கொடுக்க இயலுமாக இருந்தது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏதோ ஒரு வாழ்க்கையின் ரகசியம் புரிந்தது போலவும் இருந்தது.
சற்று நேரத்தில் கடவுச் சீட்டைப் பெற்றுத் தொடரூந்தில் பயணிக்கையில் சொர்க்கத்துக்கான கடவுச் சீட்டையே உண்மையில் நான் பெற்றிருந்தேன்.
நான் பாராட்டுவதில் பெரும் கஞ்சன். ஏனெனில் அது ஒரு சிலரை (உங்களை அல்ல) தலை வீங்கச் செய்து சோம்பேறிகளாக்குவதுடன் தேடுதல் அற்றவர்களாக்கி விடும். எனினும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இது நல்லதொரு கதைக்கான ஒரு அருமையான முதல் வரைவு. நீங்கள் கதைகள் எழுதலாம். நீங்கள் எழுதிய இதையே சுந்தரராமசாமி போன்றவர்களாக இருந்தால் வேறு உச்ச தளங்களுக்கு கொண்டு செல்வார்கள். அ. முத்துலிங்கம் போன்றவர்கள் சிறந்த நடைச்சித்திரமாக்குவார்கள். முயற்சியுங்கள். பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. இங்கு சித்திரிக்கப்படும் “நான்” என்பதைக் கடந்து செல்லுங்கள். விஷயம் அவ்வளவு தான். வலு சிம்பிள்
ReplyDeleteஎழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்களே! உங்கள் வரவும் வரைவும் என்னை மிகவும் பெருமைப் படுத்துகிறது. உண்மையாக!
ReplyDeleteஇந்த அனுபவம் கடலின் அடி ஆழத்து முத்தாய் மன அலைகளின் போது என்னை அலைக்கழித்த படி இருந்தது. இதை ஒரு அனுபவப் பகிர்வாய் சொன்னால் நல்லதாகத் தோன்றிற்று.
இப்படி நேரடியாகச் சொல்லுகின்ற பொழுதிலும் கூட இந்த அனுபவத்தைச் சரியாக என்னால் மொழி பெயர்க்க முடியவில்லை. நிகழ்வு முன்னிலைப் படாமல் நான் முன்னிலைப் பட்டிருக்கிறது.
உண்மையைச் சொல்வதானால் இப்படி அமைவது என் விருப்பமாக இருக்கவில்லை.
அது தவிர இந் நிகழ்வு சொல்லுகின்ற செய்தி ஒன்றிருக்கிறது. இன்னும் அது எதுவென புரியவில்லை. இப்படி பல குழப்பம்.
அப்படி இருக்க கதை எழுதுவதெல்லாம் எனக்குத் தோதுப் படும் என்று தோன்றவில்லை.இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டு விட வேண்டும்.
உங்கள் வரவுக்கும் வரைவுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
என் வரவைக் கண்டு ஒதுங்கி ஒளிபவர்களும் இருக்கிறார்கள். உங்களைப்போல பெருமைப்படுபவர்களும் இருக்கிறார்கள். எனனதான் நடக்குது உலகத்திலே... ஒண்ணுமே புரியல்லே! ஆனால் இனி எழுத்தாளர் அவர்களே என்று சொன்னீர்களாயின் நானும் ஓடி ஒளித்து விடுவேன். இந்த அப்பிராணி மனிதனை மோசமாக கிண்டல் பண்ணுகிறீர்கள்...!
ReplyDelete//ஆறு அறிவோடு இருக்கின்ற மனித மிருகம் தான்.இந்தப் பூமிப் பந்தை ஏன் ஏனைய உயிரினங்களோடு நாம் பகிர்ந்து கொள்ள மறுக்கிறோம்? - இதன் மீது தான் எத்தனை எதோச்சதிகாரம்! ஏகபோக உரிமை நமக்கு!!//
ReplyDelete//பொருத்தமற்ற சில இணைப்புகள் ஏன் நடக்கின்றன?//
//முழுமையான கருத்தொருமைப் பாட்டோடு அவன் அதனைச் செய்து முடித்து விட்டு தலை நிமிர்ந்த போது புறா தன் கால்களை சில தடவைகள் சுருக்கி சுருக்கி விரித்தது.
அதுவே அவனுக்கான விலை நிர்ணயிக்க முடியாத பரிசென நான் நினைத்துக் கொண்டேன்.//
//ஒரு புறாவின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன் என்பதும்; எப்படியோ அதன் நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்பதும்;அதற்குரிய சுதந்திரத்தை அதற்கு என்னால் கொடுக்க இயலுமாக இருந்தது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏதோ ஒரு வாழ்க்கையின் ரகசியம் புரிந்தது போலவும் இருந்தது.
சற்று நேரத்தில் கடவுச் சீட்டைப் பெற்றுத் தொடரூந்தில் பயணிக்கையில் சொர்க்கத்துக்கான கடவுச் சீட்டையே உண்மையில் நான் பெற்றிருந்தேன்.//
வாழ்தலின் ஆயாசப் பொழுதுகளிலெல்லாம் உடனெடுத்துச் சென்று தொய்வுற்ற மனசை தூக்கி நிறுத்தும் அழகிய அனுபவப் பகிர்வு இது தோழி!
இப்படியான ஈர நெஞ்சங்களும் மிஞ்சியிருக்கவே இவ்வுலகம் உயிர்த்திருக்கிறதோ... அந்தப் பூக்கடைக்காரருக்குள்ளும் கருணை ஊற்றுக்கண் இருந்திருக்கிறது பாருங்கள்! போய்த் திரும்பி வந்த வழிப்போக்கருக்கும் அப்படியே. கால அவகாசமற்றிருந்தால் நீங்களும் கடந்து போயிருக்கக் கூடும். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றி விடுகிறான் எப்படியேனும்! கருவியாகவேனும் இருப்போம்... கடவுளாக முடியாவிட்டாலும்!
ரஞ்சகுமார், ஓர் உதடு பிரியா புன்னகையை விட்டுச் செல்கிறது உங்கள் பின்னூட்டம்.
ReplyDeleteஅவர்களே என்ற அடை மொழி உங்களுக்கானதல்ல; மாறாக எழுத்தாளருக்கானது. இரண்டும் வேறு வேறு.குழப்பிக் கொள்ளாதீர்கள்.
என் நிலாத் தோழிக்கு.
ReplyDelete//வாழ்தலின் ஆயாசப் பொழுதுகளிலெல்லாம் உடனெடுத்துச் சென்று தொய்வுற்ற மனசை தூக்கி நிறுத்தும் அழகிய அனுபவப் பகிர்வு //
என்ன ஒரு அழகாய் சொல்லி விட்டீர்கள் தோழி! அந்தப் பூக்கடைக் காரரையும் வழிகாட்டிய பெண்மணியையும் என்னையும் இணைத்து நடந்த அந் நிகழ்வு ஓர் அதிசயமாய் மனதை நிறைத்திருக்கிறது.
உண்மையில் கருவிகள் தான் நாம் எல்லோரும்.
உங்கள் அணில் பதிவும் நினைவுக்கு வந்து போகிறது.முழுவதுமாக வாசித்து அதற்குள்ளால் பயணித்து அக்கறையோடு பகிர்வையும் தந்து போகும் உங்கள் மனம் மிக அழகுடையது.மன நிறைவைத் தரக் கூடியது.
மகிழ்ச்சி நிலா!
ஏன் இந்த உதடு பிரியாத புன்னகை?
ReplyDeleteநன்றாக முப்பத்தியிரண்டு மைனஸ் கழட்டின பல்லு எல்லாத்தையும் காட்டிச் சிரிக்கலாம்.
உதட்டுக்குள் சிரிக்கும் நமுட்டுச் சிரிப்பை எனக்கு மட்டும் விட்டுடுங்கோ.
நாம் முதன்முதலில் சந்தித்த சந்திப்பு ஞாபகம் இருக்கா?
ஆஹா.... என்ன ஒரு நாடகம் அது!
ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஓர் அபத்த நாடகத்தின் ஓரங்கம்
ஒப்பனைகள்... அவற்றுக்கும் மேலாக கனத்த பல முகமூடிகள்
நினைத்தால் இப்போ நமுட்டுச் சிரிப்பாக இருக்கிறது.